தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாற்று நிகழ்வுகள்

01.03.1924: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் சிவன் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்களையும் புலை யர்களையும் அத் தெருக்களில் தடையை மீறி அழைத்துச் செல்லும் திட்டத்தை கேரள காங்கிரசுக் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவித்தார்.

13.03.1924: கே.பி.கேசவமேனன் காந்தியாருக்கு சத்தியாக்கிரக போராட்டம் பற்றி விரிவான கடிதம் அனுப்பினார். 

30.03.1924: கேரள காங்கிரசுக் கமிட்டியின் ஆதரவோடு தீண்டாமை விலக்கக் குழு முன்னெடுத்த சத்தியாகிரகம் வைக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு துவங்கியது. போராட்டத்தில் கலந்து கொண்டு தடை செய்யப்பட்ட தெருவுக்குள் நுழைந்த புலையர், ஈழவர் மற்றும் நாயர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். 

01.04.1924: வைக்கம் போராட்டம் விறுவிறுப்பாக நடந்த சூழலில் அதைத் தடுத்துவிட காந்தியாரிடம் வைக்கம் வைதிகர்கள் தூது சென்றனர். மும்பை அந்தேரியிலிருந்து காந்தியார் கே.பி.கேசவ மேனனுக்கு எழுதிய கடிதத்தில் சத்தியாக்கிரகத்தை சிறிது காலம் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

04.04.1924: கேரள காங்கிரசுக் கமிட்டி தலைவர் ஜார்ஜ் ஜோசப் திறந்த வெளி அரங்கில் சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதின் காரணம் பற்றி மக்களிடையே உரையாற்றினார். சத்தியாகிரக நோக்கம், மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் தடை, இளைய ராணி கோவிலுக்கு வந்தபோது சத்தியாகிரகத்தை தற்காலிகமாக நிறுத்தியது போன்றவற்றைப் பற்றி ஜார்ஜ் ஜோசப் தன் விளக்கத்தை அப்பேச்சில் அளித்தார்.

07.04.1924: இரண்டு நாள் நடந்து 6 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு துவங்கிய போராட்டத்தில் கே.பி. கேசவமேனனும் தேசாபிமானி டி.கே. மாதவனும் கலந்து கொண்டு கோயிலைச் சுற்றியுள்ள தடுக்கப்பட்ட சாலைகள் வழியாக ஜாதி இந்துக்கள் அல்லாதவர்கள் நடந்து செல்லும்படி குறிப்பிட்ட இருவரும் தூண்டியதாகவும் அரசுத் தரப்பு வாதிட்டனர். மாஜிஸ்டிரேட் விதித்த ரூபாய் 500 பிணையை செலுத்த மறுத்ததால் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

11.04.1924: காங்கிரசு கட்சி அலுவலகத்திலிருந்த ஜார்ஜ ஜோசப்.செபாஸ்டியன் மற்றும் கே.ஜி. ராய் நாயர் ஆகிய தலைவர்களை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

13.04.1924 - முதல் பயணம்:

சத்தியாகிரகி குரூர் நீலகண்ட நம்பூதிரி அனுப்பிய தந்தியில் பெரியாரை உடனே புறப்பட்டு வரும்படி கேட்டுக் கொண்டார். குளித்தலை மாநாட்டுக்கு செல்ல வேண்டியிருப்பதால் நான் அங்கு வந்துதான் தீர வேண்டுமா என்று கேட்டு பெரியார் பதில் அனுப்பினார். நீலகண்டன் நம்பூதிரி தந்தி மூலம் பெரியார் வந்து தான் தீர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தந்தை பெரியார் கேரள காங்கிரசு கமிட்டி தலைவர்களின் தீவிர அழைப்பினை ஏற்று வைக்கத்திற்கு வந்தார். அரசரின் விருந்தினராக தங்கும்படி வந்த அழைப்பை நிராகரித்து போராட்டக் களத்திலேயே தங்கினார்.

16.04.1924: வைக்கம் போராட்டத்திற்கு பணம் திரட்டவும், தன்னார்வலர்களை ஒருங்கு திரட்டவும் சேர்த்தலையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்பு நடைபெற்ற காங்கிரசு தீண்டாமை விலக்குக் குழு கூட்டத்தில் தந்தை பெரியார் சத்தியாக்கிரகத்தின் வரலாற்றையும் அது வைக்கத்தில் எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றிய நீண்ட விளக்க உரையாற்றினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  நிறுவப்படுவதற்கு முதலில் தீண்டாமைக்கும் அணுகாமைக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார். அன்றைய கூட்டத்தில் 100 பெண் தொண்டர்கள் சத்தியாகிரகத்தில் இணைந்தனர்.

23.04.1924: வைக்கம் போராட்டத்திற்கு பணமும் தொண்டர்களும்  சேர்ப்பதற்காக தந்தை பெரியார் அங்குள்ள முக்கிய பிரமுகர்களுடன் தென் திருவாங்கூருக்கு சென்றார்.

01.05.1924: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் உரையாற்றினார். இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுகின்றவர்கள் அதிகளவில் வேறு மதங்களில் சேர்வதால் இந்து மதம் அழிவை நோக்கி செல்கிறது என்று குறிப்பிட்டார்.

03.05.1924: இன்று கொங்கணாச்சேரியில் தடை உத்தரவு இல்லாததால் தந்தை பெரியார் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்பு பெரியார் வைக்கத்திலிருந்து ஈரோட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

15.05.1924 - இரண்டாவது பயணம்:

தந்தை பெரியார் தனது மனைவி நாகம்மையாருடன் மீண்டும் வைக்கம் வந்தார். இக்னேஷியர் என்ற கிறிஸ்துவரும் அவர்களுடன் வந்தார். கிறிஸ்தவரும் முகம்மதியரும் இந்த இயக்கத்தில் கலந்து கொள்வதில் தவறில்லை என்று பெரியார் கூறினார்.

15.05.1924: பெரியார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு சத்தியாக் கிரகத்திற்கு வலிமை சேர்த்தார். பெரியார் மீதான விசாரணை தொடங்கியது. பெரியார் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை மாத்திரம் அளித்தார். இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை. விசாரணை வெறும் வேஷம்.  நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது என்றும் கூறி சமாதானம் உண்டு பண்ணவே தாம் வைக்கத்திற்கு வந்ததாயும் எவ்விதமான தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும் அவர் சொன்னார்.

22.05.1924: பெரியார் மீதான வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டு ஒரு  மாத கால வெறுங் காவல் தண்டனை வழங்கப்பட்டது. பெரியாரின் மனைவி நாகம்மையார் கோவிந்தன்  சாணாரின் மனைவியை தடுக்கப்பட்ட சாலையில் பிடிவாதமாக அழைத்துச்  செல்ல எத்தனித்த  போது ஒரு பிராமணர் கோபத்துடன் அம் மாதிரி உத்தரவை மீறக்கூடாது என்று கண்டித்தார். கனத்த மழை பெய்தும் பெண்கள் தங்கள் இடத்தை விட்டு அசையாமல் சத்தியாக்கிரகம் செய்தனர்.

23.05.1924: பெரியாரின் துணைவி நாகம்மையார் நான்கு பெண்களுடன் சத்தியாகிரக கிளர்ச்சியில் பங்கு கொண்டு அங்கு வந்த போலீஸ்காரர்களிடம் துணிச்சலுடன் வாதிட்டார். கிளர்ச்சியில் முதன்முதலில் பங்கு கொண்டது தந்தை பெரியார் குடும்பத்து பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

05.06.1924: திருமதி நாகம்மையார் உட்பட ஆறு பெண்கள் மழையில் நனைந்தபடி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். அநீதி உத்தரவுகளை மீறி தடுக்கப்பட்டசாலைகளில் நடக்க வேண்டும் என்றும்வைக்கத்திலுள்ள கோவில்களில் பிரவேசிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அடியோ அவமானமோ எதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியாகிரகி நாராயண குரு கூறினார்.

10.06.1924 - சுவையான செய்தி:

ஜாதி இந்துக்கள் வைக்கம் கோவிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை  ரோட்டில் நடக்க விடலாமா என்று பூக்கட்டி வைத்து சாமியிடம் உத்தரவு கேட்டார்கள். அதற்கு ரோட்டில் விடலாம் என்று உத்தரவு கொடுத்தது. உடனே பிராமணர்கள் சாமிக்கு சக்தி குறைந்து விட்டது என கூக்குரலிட்டனர். மேலும் சத்தியாகிரகிகளை நாசமாக்க வேண்டி பிராமணர்களும் நாயர்களும் கூடி ‘சத்துரு சங்கார யாகம்’ நடத்தினார்கள்.

22.06.1924 - மூன்றாவது பயணம்:

தந்தை பெரியார் அருவிகுத்தி சிறையிலிருந்து விடுதலையானார். பெரியார் படகுத்துறையிலிருந்து தன்னார்வலர்களின் பெரிய ஊர்வலமாக ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்டார். வைக்கம் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரியார் இரண்டாம் தடவையாக மாவட்ட மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக விசாரிக்கப்பட்டு நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

16.07.1924: பெரியார் இரண்டாம் தடவையாக மாவட்ட மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக விசாரிக்கப்பட்டு நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.

19.07.1924: கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் கோட்டயம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 43 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். கடுங்காவல் தண்டனை  வழங்கப்பட்ட ஒரே வைக்கம் சத்தியாகிரகி பெரியார் மட்டும் தான். இந்த போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 114 நாட்களில் 74 நாட்கள் அவர் சிறையில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்.

(தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் மரணம் அடைய வேண்டும் என்று கேரள மன்னரின் உத்தரவின் பேரில் அரண்மணையில் யாகம் நடத்தப்பட்டது. இறுதியில் மன்னர் தான் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

27.08.1924 - இராஜாஜி அறிக்கை:

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிறையில் சிறை உடை அணிகின்றார்: இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச்சிறையில் வைக்கப் பட்டிருக்கின்றார். இருந்தும் தளராத உற்சாகத்துடன் இருக்கின்றார். செல்வ வளத்தின் மகிழ்ச்சியையும் பதவிகளையும் விடுத்து கடினமான பாதையை தேர்ந்தெடுக்கின்றார்.

29.08.1924 - ‘நவசக்தி’ இதழ் பாராட்டு:

செல்வத்திற் சிறந்த சீமான்; செழிய நிலையில் வாழ்க்கை நடத்தியவர். தேசத்தின் பொருட்டு எல்லாவற்றையும் தியாகம் செய்து மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு தேச சேவை செய்து வந்தார்.

30.08.1924 தண்டனைக் காலம் முடியும் முன்னரே பெரியார் உட்பட சிறை சென்ற தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

31.08.1924 - நான்காவது பயணம்:

பெரியார் விடுதலையாகி நேராக  வீட்டிற்கு செல்லாமல் இம்முறை திருவாங்கூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

22.12.1924 - அய்ந்தாவது பயணம்:

தந்தை பெரியார் உட்பட நால்வர் அடங்கிய சத்தியாக்கிரகிகள் குழு பெல்காமில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் பங்கேற்க சென்றது. பின்பு மீண்டும் வைக்கம் வந்தனர்.

12.03.1925: ஆறாவது பயணம்:

இரு நாள்கள் தந்தை பெரியார் காந்தியுடன் திருவனந்தபுரத்தில் தங்கினார். பெரியாரை கலந்தாலோசித்த காந்தி அரசியாரை சந்தித்து கோவில் நுழைப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது என்று கூறினார்.

23.04.1925: பெரியார் மீது விதிக்கப்பட்டிருந்த போராட்டக் கள பிரவேசத் தடை உத்தரவை அரசு விலக்கிக் கொண்டது.

27.11.1925: நீண்ட நாள் உறுதியுடன் நடந்த சத்தியாகிரக போராட்டம் முழுவெற்றி பெற்றது. கோவிலைச் சுற்றியுள்ள எல்லா பாதைகளும் அனைத்து ஜாதியினருக்கும் திறந்து விடப்பட்டது

29.11.1925 - ஏழாவது பயணம்:

வைக்கம் வெற்றி விழாவில் துணைவி நாகம்மையாருடன் கலந்து கொண்ட தந்தை பெரியார் நமது நோக்கம் அனைத்து ஜாதியினரும் சாலைகளில் நடக்க உரிமை பெறுவது  மட்டுமல்ல அனைவரும் கோவில்களில் நுழைய உரிமை பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். 


No comments:

Post a Comment