கருநாடகாவில் போட்டியிடும் பா.ஜ.க. ஊழல் பெருச்சாளிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

கருநாடகாவில் போட்டியிடும் பா.ஜ.க. ஊழல் பெருச்சாளிகள்!

தமிழ்நாட்டில் பேசு பொருளாகிவிட்ட  நிறுவனமான ஆருத்ரா போன்றே பெங்களூருவில் அய்.எம்.ஏ. என்ற நிறுவனமும் சுமார் 5000 (அய்ந்தாயிரம்) கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தை மோசடி செய்து ஏமாற்றி உள்ளது, இந்த வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிக்கு துமகுரு தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. தலைமை வாய்ப்பு கொடுத்துள்ளது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி  சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் ,மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஊழல் குறித்து விசாரணை நடத்திய கருநாடகா நிர்வாக சேவைகள் (கேஏஎஸ்) மேனாள் அதிகாரி எல்.சி. நாகராஜ்,  பா.ஜ.க. வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருந்தார்.சமீபத்தில் பாஜகவில் இணைந்த 55 வயதான எல்.சி. நாகராஜ் துமகுருவில் உள்ள மதுகிரி தொகுதியில் ஆளும் பா.ஜ.க. கட்சியின் வேட்பாளராக உள்ளார். 

தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவருக்கு நெருக்கமான பா.ஜ.க. பிரமுகர் நடத்திய மோசடி நிறுவனமான ஆருத்ரா போன்றே,  பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலித்ததாக அய்.எம்.ஏ. நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புலம்புகின்றனர். அய்.எம்.ஏ. நிறுவனம்  மீது 41,000 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார்களை அளித்தனர். இதனை விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு  உருவாக்கப்பட்டது. பெங்களூரு வடக்கு உதவி ஆணையராக இருந்த நாகராஜ், அய்.எம்.ஏ. குழுமத்தின் நிறுவனருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 50 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த ஊழலில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக நாகராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஒன்றிய புலனாய்வுத் துறையிடம் (சிபிஅய்) ஒப்படைக்கப்பட்டது. 

நாகராஜ் பதவியில் இருந்தபோதே, கட்டுமானத் தொழிலிலும், தனது மனைவியின் உறவினர் பெயரில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

 நவம்பர் 2021இல், நாகராஜின் சொத்துகளில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) சோதனை நடத்தியது. அய்.எம்.ஏ. வழக்கில் அவர்மீதான விசாரணை இன்னும் உள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் இந்த, வழக்கை ரத்து செய்யுமாறு அவர் பின்னர் கருநாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் கருநாடக உயரிநீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது  

இந்த நிலையில் நாகராஜ் பதவி விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மீது ரூ.4000 கோடி ஊழல் வழக்கும் 50 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கிய வழக்கும் ஒன்றிய புலனாய்வுத்துறையிடம் இருக்கும் போதே, தற்போது பா.ஜ.க. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் எம்.ஜி. மகேஷ் பேசுகையில், நாகராஜ் எதிர்கொள்ளும் நீதிமன்ற வழக்குகளில் கட்சி தலையிடாது என்றும், அவர் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், “நாகராஜ் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள் கிறார். ஆனால் இன்னும் அவர் தண்டிக்கப்படவில்லை. ஊழலுக்கு எங்களிடம் சகிப்புத்தன்மை இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர் இன்னும் குற்றமற்றவர். அவருக்கு எதிராக ஏதாவது நிரூபிக்கப்பட்டால், அவர் பதவி விலகிவிடுவார் என்று சமாளித்தார்.

சமீபத்தில்   அலுவலகம் மற்றும் வீட்டு படுக்கை அறையில், குளிர்சாதனக் கருவியில்  இருந்தும் பல கோடி ரூபாய்கள் பிடிபட்ட வழக்கில், சிக்கிய மடல் விருபஷக்காவின் பெயர் மூன்றாவது பட்டியலில் வர வாய்ப்புள்ளதாக அக்கட்சி மாநில தலைமை கூறுகிறது. இவரது படுக்கையறை கட்டிலில் இருந்து மட்டுமே 8 கோடி ரூபாய் ரொக்கம் கத்தை கத்தையாக அடுக்கி எண்ணியது - நாளிதழ்களில் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி ஊழல் குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுப்பதால் கட்சியின் மரியாதையைக் கெடுக்காதா என்ற கேள்விக்கு - இவர்கள் குற்றவாளி என்று இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், உள்ளூர் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் சீட்டுகள் வழங்கப்பட்டன என்று மாநில பா.ஜ.க. தலைவர் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது - சந்தி சிரிக்கிறது என்பதற்கு அண்டைய மாநிலமான கருநாடாவில் அரங்கேறும் ஊழல் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

இந்த வெட்கக்கேட்டில் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஊழல்பற்றி காட்டும் வாய் நீளமோ கொஞ்ச நஞ்சமல்ல! வரும் தேர்தலில் கருநாடகத்தில் பா.ஜ.க.வுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

No comments:

Post a Comment