அகில இந்திய சமூகநீதி மாநாடு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

அகில இந்திய சமூகநீதி மாநாடு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

 சமூகநீதியில் முதன்மையானது தந்தை பெரியாரின் சமூகநீதி மண்!

அரசியல் ஒருமைப்பாட்டைவிட - சமூகநீதி ஒருமைப்பாடுதான் முதன்மையானது!

'திராவிட மாடல்' ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சமூகநீதிப் போரில் வெல்லுவோம்!

உரிய நேரத்தில் இம்மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்கும் - பங்கேற்றவர்களுக்கும் பாராட்டும், நன்றியும்!

சென்னை, ஏப்.6 அரசியல் ஒருமைப்பாட்டைவிட சமூகநீதி ஒருமைப்பாடு மிகவும் முக்கியம். தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் இதற்கு முன்னோட்ட மண்! உரிய நேரத்தில் இந்த மாநாடு கூட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் நன்றி, பாராட்டுகள்! தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி தலைமையில் சமூகநீதிப் போரில் வென்றே தீருவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

கடந்த 3.4.2023 அன்று மாலை அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் டில்லியில் அகில இந்திய சமூகநீதி மாநாடு நடைபெற்றது. அதில், காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு: 

சமூகநீதி லட்சியத்தின் பெரும் தளபதியாக இந்த இயக்கத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு சென் றிருக்கும் தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே! இந்த சமூகநீதி மாநாட்டில் பங்கேற்றுள்ள அன்பிற்கும், மாண்பிற்கும் உரிய தலை வர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!

சமூகநீதி உருவான பெரியார் மண்ணிலிருந்து உங்கள்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொளுகிறோம். 

இட ஒதுக்கீட்டில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தது 

பெரியார் மண் தமிழ்நாடு!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம், 76ஆவது திருத்தம் மற்றும் 93 ஆம் திருத்தம் ஆகிய சமூகநீதியின் சாதனைக் கட்டங் களை உருவாக்கிய தமிழ்நாட்டிலிருந்து, பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறோம். தமிழ்நாடு  சமூக நீதிக்காக வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி நாடு தழுவிய அளவில் சமூகநீதிச் சாதனைகளைப் படைத்திட இதுதான் சரியான தருணம். அதற்கான வழிமுறைகளை வடித்திட சக மனிதரை மனிதத்தன்மையற்றவர் களாக (De-humanise)  நடத்திய நிலையிலிருந்து மீண்டும் ‘மனிதராக' (Re-humanise) நடத்தப்படும் நிலைக்கு மாற்றிட சமூகநீதி அறப்போரே சரியான அணுகுமுறையாகும். அதற்காகத்தான் இந்த மாநாடு!

துரோணாச்சாரி- ஏகலைவன் 

காலம் அல்ல இது!

ஜாதி அடுக்கு முறை நம் மக்களுக்கு -  நமது மண்ணிற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஒடுக்குமுறையாகும். ஆனால், இன்றைக்கு அந்த ஜாதி அமைப்பு இங்கிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர் களுடன் சேர்ந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது. இது வெட்கப்படத்தக்க ஒரு அவமானகரமான  செய லாகும். இதனைக் களைவதற்கு சமூகநீதி ஒன்றே தீர்வாக அமைய முடியும். வெகு தொலைவிலும் வாழும் நமது மக்களையும் ‘முழு மனிதர்களாக' மாற்றிட வழி ஏற்படுத்திடும் மாநாடு இது. குரலற்றவர்களின் குரல் கேட்கப்படும் காலமிது. 

துரோணாச்சாரியார்களின் காலம் - ஏகலைவர்களின் காலம் இப்போது முடிந்து விட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் கேட்பது உரிமையே; பிச்சையல்ல; நாம் போர்க்களத்தில் போர் வீரர்களாக முன்னணியில் நிற்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டவர்களாகிய நாம் எழுந்து நிற்கிறோம். அதற்காகத்தான் இன்றைய இந்த மாநாடு. வெறும் மாநாடு வெறும் பேச்சோடு மட்டும் முடிந்து விடக் கூடியது அல்ல; இது சமூகநீதிக்கான அறப்போர்; கருத்துத் தீ பற்றி எரியக் கூடிய அறப்போர். ஆம் இது அதிகார மாற்றத்திற்கான அறப்போர். தந்தை பெரியார் நமது உரிமைக்கான தலைவர் கூறுகிறார். ‘‘அதிகாரம் எனப்படுவது இரண்டு வகைப்படும்; ஒன்று அரசியல் அதிகார மாற்றம் (Transfer of Political Power). இது முழுமையான மாற்றம் அல்ல; சமூக அதிகாரத்துவ மாற்றம்  (Social Transformation)  என்பதுதான் முழு மாற்றத்தை ஏற்படுத்திடவல்லது.'' 

நாம் அனைவரும் ஒன்றுபடுவதில், ஒற்றுமையாக நம்மை அடக்கும் சக்திகளை நேர் கொள்வதில்தான் இந்த மாற்றம் ஏற்படும். அதற்கான வழிமுறையாகத்தான் இந்த சமூகநீதி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மாநாட்டை கூட்டியுள்ள சமூகநீதிப் போராளிகளைப் பெரிதும் பாராட்டுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்று சேர்வதுதான் முக்கியமானது!

நாம் அனைவரும் ஒருங்கிணைந்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம்  இயக்கங் களிடையே அரசியல் ரீதியாக மாறுபாடுகள் நிலவிடலாம்; பாகுபாடும் இருக்கலாம். இவை  அனைத்தையும் ஒதுக்கி விட்டு - அவற்றைப் பொருட்படுத்தாமல் இணைய வேண்டிய மிக முக்கியமான தருணம் இது. தமிழ்நாட்டில், தந்தை பெரியார் வலியுறுத்திய திராவிடச் சிந்தனைகளின் சாரம் ‘அனைத்தும் அனைவருக்கும்' என்பதே.

சமூக நீதியை எப்படி வென்றெடுப்பது; வெறும் வார்த்தைகளால் வெற்றி கிட்டாது; செயல்பாட்டில் முனைப்புக் காட்ட வேண்டும்; களத்தில் இறங்கிப் பணியாற்றிட வேண்டும்.

1921 ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு!

களத்தில் இறங்கியதால்தான் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் அன்றைய சென்னை ராஜதானியில் 1921, 1922 அடுத்து 1928 இல் நீதிக்கட்சியின் முயற்சியில் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் இடைவிடாத சமூகநீதிப் போராட்டப் பயணத்தால் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கக் கூடிய நிலைமைகள் உருவாகி உள்ளன. மற்ற மாநிலங்களில் இத்தகைய தொடர் வளர்ச்சி நிலைகளைக் காண முடியாது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு வெறும் அளவில் மட்டும் கூடுதல் அல்ல; அதனைப் பாதுகாத்திட அதற்குரிய சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் இப்படிப்பட்ட சமூகநீதிக்கான பாதுகாப்பு நிலைமைகள் உள்ளன. இது மிகவும் அரிதான நிலை; இந்த நிலையினை எட்டிட  எண்ணற்ற போராளிகள் தங்களது அளப்பரிய பங்கினை, தியாகங்களை ஆற்றியுள்ளனர். அதைப் போன்றே இயக்கங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் நாடு தழுவிய அளவில். 

அரசியல் ஒருமைப்பாடும் - 

சமூக ஒருமைப்பாடும்!

பொது வெளியில் மக்களின் ஒத்த கருத்து திரட்டப்பட வேண்டும்; பலப்படுத்தப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு வேண்டும் என்கிறார்கள்; (National Integration)  அது அரசியல் தளத்தின் பாற்பட்டது. மக்களிடையே சமூக ஒருமைப்பாடுதான் (Social Integration)  முக்கியமானது; அத்தகைய ஒருமைப்பாடு தான் சமூகநீதி அறப்போருக்கான அச்சாரமாக அமையும். அதற்கு இந்த இணைய வழி மாநாடு பெரும் துணையாக அமையும்.

மனம் திறந்து பெரிதும் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்; இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கும் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கி றோம்.

நம்மையெல்லாம் ஒன்றிணைப்பது எப்படி? நமது நாடு பல தரப்பட்ட மக்களைக் கொண்டது; வேறுபட்ட - மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்டது. ‘வேற்றுமை யில் ஒற்றுமை' (Unity in Diversity) காண்பதன் மூலம்தான் சமூகநீதி அறப்போரை வென்றெடுக்க முடியும். இது எப்படி சாத்தியம். நம் தலைவர் தந்தை பெரியார் அதற்கும் வழிகாட்டியுள்ளார்!

"எது நம்மை இணைக்கிறதோ அதனை விரிவு படுத்துவோம்." (Enlarge our area of agreement).

"எது நம்மை பிரிக்கிறதோ, அதனை அலட்சியப் படுத்துவோம்."  (Discard our area of disagreement).

சமூகநீதி அறப்போரைத் தொடங்குவோம்!

இந்தக் கொள்கையின்படி நாம் ஒன்றிணைய வேண்டும்- சமூகநீதி, மதச் சார்பின்மை கருத்துகள் தழைத்து பலப்பட அதுவே அடிப்படையாகும். மனித உயிர்களுக்குத் தேவை சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவு அணுகுமுறையும். உலகில் பிற உயிரினங்களுக்கு இல்லாத இயற்கைப் பண்புகளுமாகும் இவை. இத்தகைய சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வுகளுடன் சமூகநீதி அறப் போரைத் தொடங்க வேண்டும்.

முன்பு பேசிய அறிஞர்கள் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி வலியுறுத்தினார்கள்; அவசியம் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய கோரிக்கை அது. உடனே சமூகநீதி எதிர்ப்பாளர்கள் 'ஜாதியை வலியுறுத்துவதா?' என்கிறார்கள். 

'ஜாதி' என்பது நம் நாட்டிலிருந்து அழிக்கப்பட்டு விட்டதா? கணக்கெடுப்பில் மட்டுமே உள்ளதா? உண்மை நிலை என்ன? நமது அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் 'ஜாதி' எனும் சொல் அதன் உண்மையான பொருளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மறுக்க முடியுமா? 

'தீண்டாமை' மட்டும் ஒழிக்கப்படுவதாக சட்டம் கூறுகிறது. (அரசமைப்புச் சட்டப்பிரிவு 17) ஜாதியை பாதுகாக்கிறது, அரசமைப்புச் சட்டம். 'ஜாதி' எனும் சொல்லை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கிட திருத்தம் கொண்டு வருவார்களா ஆட்சியாளர்கள்? திருத்தம் கொண்டு வரட்டும். இன்றைய ஆட்சியாளர்கள் எதிலும் ஒற்றை நிலைமையை வலியுறுத்துகிறார்கள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என கூப்பாடு போடு கிறார்கள். 'ஒரே ஜாதி' என சொல்ல முன் வருவார்களா? அனைத்து வகை மக்களுக்கும் 'ஒரே சுடுகாடு' என துணிந்து சொல்வார்களா?

அரசமைப்புச் சட்டம் சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality), சகோதரத்துவம் (Fraternity) என்பதை வலியுறுத்துகிறது. இவற்றைச் சொன்னாலே சமூகநீதி வழங்கப்படுவதன் மூலம்தான் அவை சாத்தியப்படும். 

தமிழ்நாடு முதலமைச்சர் 

தளபதி தலைமையில் 

சமூகநீதிப் போரைத் தொடருவோம்!

சமூகநீதி என்பது வெறும் கோட்பாடு அல்ல; சமூகநீதி என்பது ஒரு வாழ்க்கை நெறியாகும். அதனை வென்றெடுக்கும் பணியில் நாமனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். கடந்த காலங்களில் பல போர்க் களங்களில் (Battles) நாம் வென்றிருக்கலாம்; சில களங்களில் தோல்வியைச் சந்தித்திருக்கலாம். களங்கள் பல கண்டுள்ளோம். ஆனால் சமூகநீதி அறப்போர் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ‘இறுதி போரில்' (War) நாம் வெற்றி பெற வேண்டும். அத்தகைய போருக்கு நம்மை வழி நடத்திடும் சிறப்பிற்குரிய முதலமைச்சர் - திராவிட மாடல் ஆட்சி நடத்தி வழிகாட்டுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது முன்னெடுப்பில் - அந்த போர்த் தளபதியின் தலைமையில் நாம் சமூகநீதிப் போரை வெல்வோம். 

நன்றி! வணக்கம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். 

No comments:

Post a Comment