அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வுத் தாள் மதிப்பெண் குறைக்கப்படுகிறதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வுத் தாள் மதிப்பெண் குறைக்கப்படுகிறதா?

கள்ளக்குறிச்சி, ஏப். 29- பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது அரசுப் பள்ளி மாணவர் களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பெண்களை குறைத்து வழங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மய்யங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாரபட்சமாக செயல்படுவதாகவும், அர சுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களுக்கு குறைத்து மதிப்பெண் தருவதாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாரபட்சத்தோடு தான் செயல்படுகின்றனர். விடைத்தாள் திருத்தும் போது ‘கீ வேர்டு’ விடைகளுக்கு முழு மதிப்பெண் அளிக்கலாம். ஆனால், முழு மதிப்பெண்ணை அவர்கள் தருவதில்லை. அதேபோல், கணிதப் பாடத்தில் விடை சரியாக இருப்பின் முழு மதிப்பெண் அளிக்க முடியும்.

அதிலும் அவர்கள் குறைத்தே மதிப்பெண் அளிக் கின்றனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’ என்றார்.

ஆசிரியர் கூட்டமைப்பினர்

இதுபற்றி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மான்ட் கூறியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் தமிழிலும், தனியார் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் ஆங்கி லத்திலும் இருக்கும். இதைவைத்து திருத்துதல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் விடைத்தாள்களை அடையாளம் காண முடியும். அரசுப் பள்ளி மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் குறைத்துதான் மதிப்பெண் வழங்குகின்றனர். 

கடந்தாண்டு திண்டுக்கல் மாவட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் நாமக்கல் மாவட்டத்தில் திருத்தப்பட்டது. அதில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 13 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. நாமக்கல் மாவட் டத்தில் தனியார் பள்ளிகளே அதிகம். இதன்மூலமே அவர்கள் விடைத்தாள்களை எப்படி திருத்தியிருப்பார்கள் என அறியமுடியும்.

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை பொறுத்தவரை, ஒரு மாணவர் 33 மதிப்பெண் பெற்றிருந்தால் கூட, கீ வேர்டு விடைகளுக்கு முழு மதிப்பெண் அளித்து, அவர் களை தேர்ச்சி பெற வைப்பர். ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதுபோல் செய்வதில்லை. இதனால் தோல்வி பெறும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

உதவியாளர் கூறுகையில்...

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மேல்நிலைப் பள்ளி உதவியாளர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘எந்தவொரு ஒரு ஆசிரி யரும் தனது விருப்பு வெறுப்பு அடிப்படையில் விடைத் தாள்களை திருத்த இயலாது. அரசு விடைத்தாள் திருத்து வதற்கு விதிமுறைகள் வகுத்து, கீ வேர்டு வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி விடை அளித்திருந்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆசிரியர் மதிப்பெண் திருத்தி முடித்தபின், அந்த விடைத்தாளை 2 மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வர். அப்போது ஆசிரியர்கள் தவறு செய்திருந்தால் கண்டுபிடித்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர். எனவே மதிப்பெண்களை குறைத்தோ, அதிகரித்தோ வழங்க வாய்ப்பில்லை” என்றார்.

அதிகாரிகள் கூற்று

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘பொதுவாக தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் முறை சற்று கண்டிப்புடனே இருக்கும். சரியான பதில்கள் இருந்தால் மட்டுமே முழுமதிப்பெண் வழங்குவர். மற்றபடி திட்ட மிட்டு மதிப்பெண்களை குறைத்து வழங்க முடியாது. ஏனெனில், விடைத்தாள் திருத்தும் மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பில் அரசுப்பள்ளி ஆசிரியர் களே இருப்பதால் தவறுநடக்க வாய்ப்பில்லை” என்றனர்.


No comments:

Post a Comment