99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்: சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்: சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்

 


முதலமைச்சரின் உரையை எடுத்துக்காட்டி ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமான் தொடக்கவுரை

சென்னை, ஏப்.30  99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டம்; ‘‘சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்'' முதல மைச்சரின் உரையை எடுத்துக்காட்டி உரையாற்றினார் ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமான் அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக?

கடந்த 10.4.2023 ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவின் முதல் நாள் கூட்டத்தில், ‘‘வைக்கம் போராட்டம்‘’ நூலாசிரியர் பழ.அதியமான் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.

அவரது தொடக்கவுரை வருமாறு:

பெரியார் திடலிலேயே நடைபெறுவது என்பது பொருத்தமானது!

எல்லோருக்கும் வணக்கம்!

வைக்கம் போரட்டத்தினுடைய நூற் றாண்டு விழா தொடங்கியிருக்கிறது. மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவை - வைக்கம்பற்றிய இரண்டாவது உரையை நான் நடத்துகின்றேன். இரண்டு பேச்சுமே பெரியார் திடலிலேயே நடைபெறுவது என்பது பொருத்தமானது.

மிழ்நாட்டில் நிகழ்ந்த முதல் 

நூற்றாண்டு உரை

‘புதுமை இலக்கியத் தென்ற'லில், கடந்த 27 ஆம் தேதி ‘‘வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா''வின் தொடக்க உரையை நான் நிகழ்த்தினேன். அநேகமாக, தமிழ்நாட்டில் நிகழ்ந்த முதல் நூற்றாண்டு உரை அதுவாகத்தான் இருக்கும்.

மார்ச் 30 ஆம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை முதல மைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற் காக? என்ற தலைப்பில் தொடர் பேருரைகளை ஆற்ற விருக்கின்ற நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

கவிஞர் அவர்களுக்கும் வணக்கம். இங்கே திரளாகக் கூடியிருக்கின்ற தோழர்கள் அனைவருக்கும் என்னு டைய மாலை வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

மூன்று நாட்கள் இந்தத் தொடர் பேருரை நிகழ விருக்கின்றது என்பதை அழைப்பிதழில் நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கலாம்.

99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த 

ஒரு போராட்டம்

சென்னையிலிருந்து 712 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் ஊரில், ஏறக்குறைய 13 மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஓர் ஊரில், 99 ஆண்டுகளுக்குமுன்பு நடந்த ஒரு போராட்டத்தை, நாம் இன்று நினைவுகூர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம் என்றால், அந்த நிகழ்ச்சியினுடைய முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் என்கிற ஒரு பெரிய கிராமத்தில் உள்ள சிவன் கோவி லைச் சுற்றி உள்ள தெருக்களில் ஈழவர்கள் என்ற பிற்படுத்தப்பட்டவர்கள், புலையர்கள் என்ற தாழ்த்தப் பட்டவர்கள் நடக்க அனுமதியில்லாமல் இருந்தது. அந்த அனுமதியைப் பெற நடந்த உரிமைப் போராட்டம்தான் வைக்கம் சத்தியாகிரகம் - வைக்கம் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.

604 நாள்கள் நடைபெற்ற போராட்டம்

மார்ச் 30 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டு தொடங்கி, நவம்பர் 23, 1925 ஆம் ஆண்டு ஆக மொத்தம் 604 நாள்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, சென்ற மாதம் 30 ஆம் தேதி நூற்றாண்டு பிறந்தது.

அன்றைய தினமே, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் வைக்கம் நூற்றாண்டு விழா தொடக் கத்தினை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

1924-1925 ஆம் ஆண்டுகளில் நடந்த வைக்கம் போராட்டம் என்பது இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது.

சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது வைக்கம் போராட்டம்

இந்தியாவில், கோவில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது. ஒடுக்கப் பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற் படியாக அமைந்தது என்று வைக்கம் போராட்டத் தைப்பற்றி முதலமைச்சர் அவர்களுடைய உரையில் குறிப்பிட்டார்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசு ஓராண்டு முழுவதும் நடத்தும்!

அவருடைய உரையில், தந்தை பெரியாருடைய பங்கினையும் வெகுவாகச் சிறப்பித்துப் பேசினார். எல்லைகளைக் கடந்து சென்று போராடி, வரலாற்றில் புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட வைக்கம் வீரர் பெரியாரின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசு ஓராண்டு முழுவதும் நடத்தும் என்றும் முதலமைச்சர் அவர்களுடைய உரையில் தெரிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புகள்!

வைக்கத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்துவது தொடங்கி, நான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம்'' நூல் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில், மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்கின்ற அறிவிப்பு உள்ளிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளன்று எல்லை கடந்து ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்குப் பாடுபடும் ஆளுமை அல்லது நிறுவனங்களுக்கு ‘‘வைக்கம் விருது'' வழங்கப்படும் என்கிற ஓர் அறி விப்பையும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.

இதுதவிர, பெரியார் கேரளத்தில் சிறையிலிருந்த அருவிக்குத்து  கிராமத்தில், ‘‘பெரியார் நினைவிடம்'' அமைக்க முயற்சி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நினைவு அஞ்சல் தலை வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் கருத்தரங்குகள் நடத்தப்படும் எனவும், தமிழ்நாடு அரசு மலர் ஒன்றைத் தயாரிக்கும் என்றும், வைக்கம் போராட்டம் குறித்து குறுநூல் ஒன்று வெளியிடப்படும் என்றும் அடுக்கடுக் கான அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்தார்.

இத்தகைய பதினோரு முன்னெடுப்புகளை முதல மைச்சர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

மார்ச் 30 ஆம் தேதி சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் இது நடைபெற்றது.

கேரளாவில் ‘‘வைக்கம் நூற்றாண்டு 

தொடக்க விழா!’’

அடுத்து. 1.4.2023 ஆம் தேதியன்று கேரள அரசு வைக்கத்தில் நடத்திய ‘‘வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழா''வில் சிறப்பு அழைப்பாளராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டார்.

அந்தக் கூட்டத்தில், தமிழும், மலையாளமும் இணைந்து நமது முதலமைச்சர் அவர்கள் பேசிய பேச்சு, பெரும் ஆரவாரமான வரவேற்பு பெற்றதை நாங்கள் எல்லாம் கண்ணாரப் பார்த்து ரசித்தோம்.

அங்கே ‘‘வைக்கம் போராட்டம்'' நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. மலையாளப் பேராசிரியர் ஷூஜூ அவர்களால் மொழி பெயர்க்கப் பட்டு, கேரளத்தின் முன்னணி பதிப்பகமான டி.சி. புக்ஸ் அந்த நூலைப் பதிப்பித்துள்ளது.

‘திசைதோறும் திராவிடம்‘ என்கின்ற 

தமிழ்நாட்டு அரசின் திட்டத்தின்கீழ்...

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் இணை வெளியீடு அது. ‘திசைதோறும் திராவிடம்' என்கின்ற தமிழ்நாட்டு அரசின் திட்டத்தின்கீழ் இந்த வெளியீட்டு முயற்சிகளை சில ஆண்டுகாலம் தமிழ்நாடு அரசு செய்துவருவது உங்களுக்குத் தெரியும். அந்தப் பணியின் ஓர் அங்கமாகத்தான் வைக்கம் போராட்டம் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு இப்பொழுது வெளி வந்துள்ளது.

தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஆங்கில மொழி பெயர்ப்புகளும் வரவிருக்கின்றது என்பதை முதல மைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்கள். அதை நான் இங்கே மறுபடியும் குறிப்பிட விரும்பு கின்றேன்.

தமிழ்நாட்டில் ஓர் அமைதியான புரட்சி நடந்துகொண்டிருக்கின்றது!

இந்த நூல் வெளியீட்டின்மூலமாக, இந்த நூல் மட்டுமல்ல, ‘திசைதோறும் திராவிடம்' என்கிற ஒரு பெருந்திட்டத்தின் செயல்பாடின் காரணமாக, தமிழ் நாட்டில் ஒரு பெரிய கலாச்சார செயல்பாடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனுடைய விளைவு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், நமது நோக்கம் போலவே, அந்த செயல்பாடு இருக்கும்பட்சத்தில், தமிழ்நாட்டில் ஓர் அமைதியான புரட்சி நடந்துகொண்டிருக்கின்றது என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

நூற்றாண்டு விழாவினையொட்டி, 

‘‘பெரியார் நினைவகம்''

அருவிக்குத்துவில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினையொட்டி, ‘‘பெரியார் நினைவகம்'' அமைக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்கிற எண்ணத்தை - கேரள முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் தலைவர்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிரம்பிய அரங்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளிப்படுத்தினார்.

இத்தகைய பெரும் கொண்டாட்டங்களோடு வேறு சிறிய முயற்சிகளும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடக்கத்தில் நடைபெற்று வருகின்றன.

பத்திரிகைகள் வெகுவிமரிசையாக விவாதங்கள்மூலம் முன்னெடுத்து வருகின்றன

பெரியார் திடலில் இயக்கும் ‘புதுமை இலக்கியத் தென்றல்', 27.3.2023 அன்று வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி ஒரு நிகழ்வை நடத்தியது. 

‘தமிழ் இந்து' இதழ், 30.3.2023 அன்று ‘‘கடவுளின் தேசத்தில் சமூகநீதிப் போர்'' என்கிற தலைப்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

‘தி இந்து' ஆங்கில இதழ், 31.3.2023 அன்று வைக்கம் சத்தியாக்கிரகத்தை நினைவூட்டும் கட்டுரையை வெளியிட்டது.

அன்றே, ‘ப்ரண்ட் லைன்' இதழும் வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது.

இதுதவிர ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 26.3.2023 அன்றும், ‘டெலிகிராப்', 29.3.2023 அன்றும், ‘மின்னம்பலம்' 3.4.2023 அன்றும் வைக்கம் நூற்றாண்டை நினைவு கூர்ந்துள்ளன.

இதுதவிர, 30.3.2023 அன்று கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பெரியார் குறித்த பாடலை இசையமைத்துப் பாடி வெளியிட்டார். இது இச்சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

30.3.2023 ஆம் தேதியன்று, முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து, பல தொலைக்காட்சிகளும், யூடியூ பர்களும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வெகுவிமரிசையாக விவாதங்கள்மூலம் முன்னெடுத்து வருகின்றன.

இத்தகைய வைக்கம் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் ஏன் நிகழவேண்டும்? எதற்காக அவற்றை நாம் நிகழ்த்தவேண்டும் என்பது குறித்து இப்பொழுது ஆசிரியர் அவர்கள் உரையாற்ற உள்ளார்.

ஏப்ரல் 10, 11 மற்றும் 

13 ஆம் நாள்களில்...

பெரியார் திடலில், ஏப்ரல் 10, 11 மற்றும் 13 ஆம் நாள்களில் மாலையில் இந்தத் தொடர் பேருரைகள் நிகழவிருக்கின்றன. திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய கிழமைகளில் நடைபெறவிருக்கும் இந்தத் தொடர்ச் சொற்பொழிவின் முதல் நாள் நானும், இரண் டாம் நாளில், பேராசிரியர் கருணானந்தம் அவர்களும் முன்னுரை போன்று சில செய்திகளைச் சொல்ல ஆசிரியர் விரும்பினார்.

மூன்றாம் நாளும்-நிறைவு நாளுமான ஏப்ரல் 13 ஆம் நாள் தொடக்க விழா சொற்பொழிவினை கவிஞர் அவர்கள் நிகழ்த்துவார்.

1924 ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 ஆம் தேதியன்றுதான் பெரியார் அவர்கள் வைக்கம் சென்று, காலடி வைத்தார். அந்த நாளில், தொடர் சொற்பொழிவு நடைபெறுவது பொருத்தமானது. அதைவிட மிகவும் பொருத்தமானது கவிஞர் தொடக்கவுரையாற்றுவது. ஏனெனில், பல் லாண்டு காலமாக கவிஞர் அவர்களின் தொலைப் பேசியின் ரிங்டோனாக இருந்தது வைக்கம்பற்றிய பாடல்தான்.

‘‘பன்றிகளும், நாய்களும் நடக்கும் தெருக்களில், மனிதர்கள் நடக்கக்கூடாதா?'' என்று பொருள்படும் படியான பாடல் ஒலிக்கும். கவிஞரை அழைக்கும் பொழுதெல்லாம் அந்தப் பாடலும், வைக்கமும் நம் நினைவிற்கு வரும். வைக்கம் செய்தியை பல்லாண்டு காலமாகப் பரப்பிவரும் கவிஞர் அவர்கள், ஏப்ரல் 

13 ஆம் தேதியன்று தொடக்கவுரை ஆற்றுவது பொருத்தமானதாகும்.

சொற்பொழிவுகள் பின்னாளில் நூலானதுபோல, இந்தத் தொடர் சொற்பொழிவும் நிச்சயமாக நூலாகும்

தொடர் சொற்பொழிவுகளுக்குப் பெயர் பெற்றவர் ஆசிரியர். ‘‘கீதையின் மறுபக்கம்'' பற்றிய தொடர் சொற்பொழிவும், பி.ராமமூர்த்தி எழுதிய நூல் பற்றிய சொற்பொழிவும் உடனடியாக என் நினைவிற்குவரும் தொடர் சொற்பொழிவுகள். அதில் ஒரு சிலவற்றை நானும் இங்கே அமர்ந்து கேட்டிருக்கின்றேன்.

இப்பொழுது, வைக்கம்பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழவிருக்கிறது. அந்த சொற்பொழிவுகள் பின்னாளில் நூலானதுபோல, இந்தத் தொடர் சொற்பொழிவும் நிச்சயமாக நூலாகும்.

அப்பொழுதெல்லாம் வலையொளி வசதி கிடையாது. இப்பொழுது பேசும்போதே உலகத்தில் உள்ளோர் கேட்கும் வசதியும், வாய்ப்பும் வந்துவிட்டது.

ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்க ஆவலாக வந்துள்ள உங்களையெல்லாம் இனியும் சோதிப்பது நியாயமல்ல - ஆசிரியரின் ஆதரவு இருந்தாலும்.

நான் ஒரு சிறு ஆய்வாளன்; நான் படிப்பதற்காகத் தரவுகளைத் தேடுபவன்; மற்றவர்களும் படிக்கட்டுமே என்று அந்தத் தரவுகளைப் புத்தகமாகத் தருபவன். எல்லாம் இங்கே இருப்பவைதான். இல்லாதததைக் கண்டுபிடிக்கும் அறிவியல் ஆய்வாளன் அல்ல நான். இருப்பதைத் தேடித்தரும் மானுடவியல் ஆய்வாளன் நான். செயல்படும் போராளி அல்ல நான், உங்களைப் போல; இன்னும் இருக்கின்ற பல தோழர்களைப்போல, நான் செயல்படும் போராளி அல்ல. களத்தில் இறங்கிச் செயல்படும் போராளி அல்ல நான். அவர்களைப் போல உயர்ந்தவனும் அல்ல நான்.

நான் ஒரு சிறு ஆய்வாளன்; என்னை எதற்கு ஆசிரியர் அழைத்தார் என்று தெரியவில்லை.

அவருக்கும், இயக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்!

சிறு பணியையாவது சொல்லிக் கொள்ளும்படி செய்ய முயலுங்கள்

நூற்றாண்டில் ஏதாவது ஒரு சிறு பணியையாவது சொல்லிக் கொள்ளும்படி செய்ய முயலுங்கள் என்ற சிறிய வேண்டுகோளுடன் என்னுடைய தொடக்க வுரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமான் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

No comments:

Post a Comment