இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

மாவீரன் பகத்சிங் நினைவு நாளான இன்று (23.3.2023) இளைஞர்கள் எடுக்கவேண்டிய சூளுரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (23.3.2023) மாவீரன் - இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், எடுத்துக்காட்டாகவும், என்றும் வர லாற்று பக்கங்களின் வைரமாக ஜொலித்துக் கொண்டு, மறைந்தும் மறையாமல் வாழும் லட்சியத்தின் அடை யாளமாக உள்ள பகத்சிங்கின் 92 ஆவது நினைவு நாள்!

வெறும் 24 ஆண்டுகள்தான் பகத்சிங்கின் வாழ்வு என்ற உடல்வாழ்வு; ஆனால், அவரது கொள்கை லட்சிய வாழ்வு வரலாற்றில் நிரந்தர வாழ்வு, கோழை களுக்கும், கொள்கையற்று சந்தர்ப்பவாத வித்தைக்காரர் களாகவும் பொதுவாழ்வைப் பயன்படுத்துவோருக்கும் ஓர் எச்சரிக்கை மணி!

பகத்சிங்கின் உடல் வாழ்வு 24 ஆண்டுகளே - ஆனால், கொள்கை வாழ்வோ நிரந்தரமானது!

‘‘என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். அது இன்னும் மகிழ்ச்சி தரும்'' என்று முழங்கிய ஓர் ஒப்புவமை சொல்ல முடியாத புரட்சித் தீ அவர்!

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சிறையிலிருந்த போது உலகுக்கு அளித்த உன்னத லட்சிய விளக்கம்-

‘‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'' என்ற அரிய சிந்தனை உலைக்கூடம்; பாசறைப் பட்டறைப் பகலவனின் ஒளிமுத்து!

இந்திய நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் குன்றா ஒளியுடன் உள்ள தன்னல மறுப்பாளர்கள் - இளைஞர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் என்று முப்பெரும் கொள்கைத் ‘‘திரிசூலங்கள்!''

நாட்டுக்காக, மக்களின் உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மரணத்தை மகிழ்ச்சியுடன் ஆரத் தழுவிய ஒப்பிலா மணிகள்!

மறைக்கப்பட்ட வ.உ.சி.யின் தியாகம்!

அதுபோலவே, வயதில் மூத்த ஒப்பற்ற தியாகச் சுடர் வ.உ.சி. தியாகத்தில் வெந்து நொந்தாலும் புடம்போட்ட தங்கம் -வரலாறு அவருக்குத் தரவேண்டிய தக்கதோர் இடத்தைத் தர இன்னமும் தயங்குகிறது; காரணம், அவர் தனது இறுதிக் காலத்தில் ‘சமூகநீதியையே தனது பிரச்சாரக் களமாக்கிக்' கொண்டதுதான்!

பகத்சிங் என்ற அந்தப் புரட்சியாளர் நமக்குப் போதித்த பாடங்களை நினைவூட்டிக் கொள்ளுதலும், அதற்கான தூய பொதுவாழ்க்கை, லட்சியத்தை அடைய - ‘‘கொண்ட கொள்கைக்காக - எந்த விலையையும் மகிழ்ச்சியுடன் கொடுக்கவேண்டும்'' என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து இலக்கியத்திற்கே மாவீரன் பகத்சிங் ஓர் இலக்கணமாகவே என்றும் திகழுகிறார்!

இளைஞர்களே, வெறும் கேளிக்கையல்ல பொதுவாழ்க்கை என்பது!

இளைஞர்களே, வெறும் பதவி அரசியல், கேளிக்கை, பொதுவாழ்க்கை இந்த வாணவேடிக்கை வெளிச்சத்தால் மயங்கி வாழாதீர்கள், அது அற்ப வாழ்க்கை! தற்காலிக போலிப் புகழ் வாழ்க்கை!

லட்சியத்தோடு ஒரு மனிதன் 24 வயதுவரை வாழ்ந்த நிலையிலும்கூட, பல நூற்றாண்டுகள் மட்டுமல்ல; காலத்தை வென்ற அவரின் வீர வரலாற்றை - ஒரு புரட்சி சரித்திரம் படைக்க, கொண்ட கொள்கையை மலர்ப் படுக்கையாக எதிர்நோக்காமல், முள்ளும், முரண் பட்ட மேடுகளும், பள்ளங்களும், உயிர்க்கொல்லி அனுப வங்களும் அச்சுறுத்தினாலும், துணிவுடன் எதிர்கொள் ளும் தூய பொதுவாழ்வின் அடையாளமாகக்கொண்டு வாழ்வோம் என்று உறுதியுடன் சூளுரை ஏற்றுக் கொள்ளுங்கள்!

'இன்குலாப் ஜிந்தாபாத்!'

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் நேரம் முன்புவரை கையில் வைத்திருந்த புத்தகத்தைப் படித்துக்கொண்டே இருந்தவர் என்றால், அவருக்குத் தான் எத்தகைய பாறை நெஞ்சம்! முடிவில் உறுதியான நிலைப்பாடு, தண்டனையாகக் கருதாமல் லட்சியத்தைப் பெற-கொடுக்கும் விலையே தன்னுயிர் என்று உலகுக் குப் பறைசாற்றிய பகுத்தறிவுவாதி - புரட்சியின் வடிவம்!

‘‘இன்குலாப் ஜிந்தாபாத்!''

‘‘புரட்சி வெல்லட்டும்!''

மாவீரன் - புரட்சியாளன் பகத்சிங் கேட்ட கேள்விகள்.

சனாதனத்திடமிருந்து இன்றுவரை பதில்கள் கிடைக் காத கேள்விகள் இதோ!

கடவுளைப்பற்றி மாவீரன் பகத்சிங்கின் அழுத்தமான கருத்து!

‘‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் ஏன் இந்த உலகத்தைப் படைத்தார்?

இன்பமும், துன்பமும் கொண்ட இவ்வுலகில் முழுமை யாக திருப்தியடைந்த ஒரு மனிதனாவது இருப்பானா?

இன்று கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் முற்பிறவி யில் பாவம் செய்தவர்கள்தானா?

உலகிலேயே மிகப்பெரிய பாவம் ஏழையாக இருப்பதுதான். வறுமை என்பது பாவம். அது ஒரு தண்டனை. அதையெல்லாம் அந்தக் கடவுள் யோசிக்க மாட்டாரா?

ஒரு மனிதனைப் பொறுத்தவரை, சுயநலம்மிக்க தரந்தாழ்ந்த செயலாக நான் கருதும் கடவுள் நம்பிக் கையும், தினசரி பிரார்த்தனைகளும் என் விஷயத்தில் உதவிகரமானதாக இருக்கப் போகிறதா? அல்லது நிலைமையை மோசமாக்கப் போகிறதா என்பது எனக்குத் தெரியாது.

இன்னல்கள் அனைத்தையும் அதிகபட்சத் துணி வுடன் எதிர்கொண்ட நாத்திகவாதிகளை நான் படித் திருக்கிறேன். எனவே,நானும் எனது கடைசி மூச்சிருக் கும்வரை, தூக்குமேடையிலும்கூட தலைநிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இதனை எவ்வாறு நிறைவேற்றுகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நண்பர், என்னைப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

என்னுடைய நாத்திகத்தைப்பற்றி சொன்னபோது, அவர் சொன்னார், ‘‘உன்னுடைய கடைசி நாள்களில் நீ கடவுளை நம்பத் தொடங்கிவிடுவாய்'' என்று.

நான் சொன்னேன், ‘‘இல்லை, எனதருமைக்குரியவரே, அப்படி ஒரு நாளும் நடக்காது. அவ்வாறு செய்வது என் தரப்பில் மன உறுதிக் குலைவான, தரம் தாழ்ந்த செயல் என்றே நான் நினைப்பேன்.''

பகத்சிங் வெறும் படமல்ல - பின்பற்றத்தக்கது!

சுயநல நோக்கம் கருதியே நான் கடவுளைப் பிரார்த்தனை செய்யப் போவதில்லை.''

வாசகர்களே, நண்பர்களே, இது என்ன ‘‘ஆணவமா?''

அது ஆணவம்தான் என்றால், அந்த ஆணவத்தை நான் உறுதியாகப் பற்றிக் கொள்கிறேன்.

நாத்திகன் பகத்சிங் குறித்து தந்தை பெரியார் ‘குடிஅரசில்' (29.3.1931) பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘‘பகத்சிங் இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சுதந்திரமும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாக தனது உயிரைவிட நேர்ந்தது.

சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்.''

- தந்தை பெரியார்,  ‘குடிஅரசு', 29.3.1931

தோழர்களே, பகத்சிங் படத்தை - படமாகப் பார்த்து வெறும் வாடும் மாலைப் போடாதீர்கள்; பாடமாகப் படித்து, வாழ்க்கையில் அவரின் வாடாத, வற்றாத உறுதியைப் பின்பற்ற முயலுங்கள்!

அது உங்களை ‘‘சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்.

பகத்சிங் வாழ்க! வாழ்க!!

திராவிடர் இயக்கம் வெறும் மணல் வீடல்ல - 
பாறைகளால் கட்டப்பட்ட கொள்கைக்  கோட்டை!
சுமார் 90 ஆண்டுகளுக்குமுன் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' நூலை - தோழர் ப.ஜீவானந்தத்தைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் வெளியிட்டார். அந்நூலை பிரிட்டிஷ் அரசு தடை விதித்து, தண்டனையும் அளித்தது. அதற்காக 'குடிஅரசு' இதழின் ஆசிரியராக இருந்த ஈ.வெ.கிருஷ்ணசாமியும், சுயமரியாதை சோசலிச வீரர் ப.ஜீவானந்தமும் கைது செய்யப்பட்டனர் என்பது வரலாறு!
அறிவுப் புரட்சியில் அய்யா பெரியாரின் அருந்தொண்டல்லவா இந்த அந்நாளைய அடக்குமுறையை எதிர்கொண்டது!
இளைஞர்களே, இப்போது புரிந்துகொள்வீர்,  திராவிடர் இயக்கம் வெறும் மணல் வீடல்ல - பாறைகளால் கட்டப்பட்ட  கொள்கைக் கோட்டை என்பதை!
காலம் கற்றுத்தரும் பாடம் இது, அறிந்துகொள்ளத் தவறாதீர்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.3.2023

No comments:

Post a Comment