எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 23, 2023

எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு!

திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; 

அது வென்றே தீரும் - வரலாற்றில் நிலைக்கும்!

தஞ்சை, மார்ச் 23 மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு. எனவேதான், பொதுத் தொண்டு என்பது தொண்டறத்திற்காகவே என்பதை இந்தப் படம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது,  உபயதுல்லாக்களாக நாம், நம்முடைய வாழ்க்கையில் முடிந்த அளவிற்கு வாழ்ந்துகாட்டுவோம்; திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும்; அது ஒன்றே சொல்லும்; வரலாற்றில் நிலைக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

படத்திறப்பு - நினைவேந்தல்

கடந்த 11.3.2023 அன்று காலை தஞ்சையில் நடை பெற்ற மறைந்த மேனாள் அமைச்சர், இலக்கியச் செல்வர், தி.மு.க. வர்த்தகர் அணியின் தலைவருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சி.பி.அய். மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் திம்ம பாண்டியன் அவர்களே, வெற்றி தமிழர் பேரவையின் மாநில துணை செயலாளர் தோழர் செழியன் அவர்களே,

கம்பன் கழகத் துணைத் தலைவர் புலவர் மா.கலியபெருமாள் அவர்களே, தஞ்சை முத்தமிழ் மன்றத் தைச் சார்ந்த அல்லிராணி அவர்களே,

தஞ்சை தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் மாறவர்மன் அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயனுலாப்தீன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக் கூடிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே,

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் அவர்களே, காப்பாளர் ஜெயராமன் அவர்களே, மாவட்டச் செயலாளர் அருணகிரி அவர்களே, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் புலவர் கந்தசாமி அவர்களே, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அவர்களே, 

தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை டேவிட் அவர் களே, திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களே, நன்றியுரை கூறவிருக்கக் கூடிய மாநகர தலைவர் ராஜன் அவர்களே,

தமிழ் உணர்வாளர்களே, 

திராவிட இயக்கச் செம்மல்களே!

நமக்கெல்லாம் எஸ்.என்.எம். அவர்களுடைய மறைவு, இழப்பு பேரிழிப்பு என்ற உணர்வு இருந்தாலும், நேரிடையாக அதனுடைய தாக்கத்திற்கு ஆளாகி, இன்னமும் அந்தத் துயரத்திலிருந்து, துன்பத்திலிருந்து வர இயலாத சூழலில் இருக்கக்கூடிய அவருடைய அருமை குருதிக் குடும்பத்தவரான  அவருடைய மருமகன் திரு.எம்.மீரா உசேன் அவர்களே, மகள் பரீதா பேகம் அவர்களே, பேரன் எம்.ராஜாக்கனி மஸ்வீன் ஆரா அவர்களே, பேத்தி ஆயுஸாகனி பெரோஸ்கான் அவர்களே, தங்கையினுடைய கணவர் திரு.முகமது ஹாசிம் அவர்களே, தம்பியினுடைய பிள்ளைகள் ஷாகுல் அமீது, ஷேக் அப்துல்லா, நாகூர்கனி ஆகிய நண்பர்களே, திரண்டிருக்கக் கூடிய வணிகப் பெரு மக்களே, பொதுநல அன்பர்களே, தமிழ் உணர்வாளர் களே, திராவிட இயக்கச் செம்மல்களே, ஊடகவிய லாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நண்பர்கள் தாய்க்கழகத்திற்கு நன்றி சொன் னார்கள்; அதற்காகத்தான் நான் சற்று சங்கடப்பட்டேன். தாய்க் கழகம் என்று சொன்னாலே, தாய்க்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்க முடியும் என்கிற உணர் வினாலேதான் - இதை இயல்பாகச் செய்யவேண்டும் என்று நினைத்து அதன்படி இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அய்யா எஸ்.என்.எம்.உபயதுல்லா போன்ற ஒரு மாமனிதரை எளிதில் பொதுவாழ்க்கையாளர்கள் கண்டு பிடிக்க முடியாது. பொதுவாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் சந்திக்கின்றோம்; அவர்கள் பதவியாளர் களாக இருக்கிறார்கள்; பலர் கொள்கையாளர்களாக இருப்பதில்லை. கொள்கையாளர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் பதவியாளர்களாக இருக்க வாய்ப்பில்லை.

மனிதத்தைத் தாண்டி, மாமனிதர்களாக...

அதேபோல, கொள்கையாளர்களாக, பதவியாளர் களாக இருப்பவர்கள்; ஆனால், செல்வம் உள்ளவர்களாக இருப்பதில்லை. அப்படியே செல்வம் உள்ளவர்களாக இருந்தாலும், உதவும் உள்ளம் உள்ளவர்களாக இருப்ப தில்லை. அது வேதனையான ஒரு சூழல்.

இவ்வளவும் இருந்தாலும், மனிதநேயத்தோடு இருக் கக் கூடியவர்கள் இருக்கிறார்களா? 

மனிதத்தை வென்றவர்கள் இருக்கிறார்களா?

மனிதத்தைத் தாண்டி, மாமனிதர்களாக ஆகக் கூடிய அளவிற்கு இருக்கிறார்களா என்று சொல்லும்பொழுது, ஒரே ஒருவரை  தஞ்சையில் நாம் கண்டுபிடிக்கிறோம் என்று சொன்னால், மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவ தில்லை. பொதுவாழ்க்கையினுடைய தன்மையும்; ஏற்பட்ட சூழலும் அதற்கு மிகப்பெரிய காரணங்களாகும்.

தஞ்சையில் நண்பர்கள் சொன்னார்கள்; நம்முடைய சட்டப் பேரவை உறுப்பினரும் சொன்னார்.

கழகப் பொருளாளர் 

அய்யா தஞ்சை கா.மா.குப்புசாமி

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வேறு அல்ல. அண்ணா அவர்கள் சொன்னதுபோன்று, இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லும்பொழுது, தாய்க்கழகம் என்று சொல்லும்பொழுது, அவரிடத்தில் நாங்கள் வைத்திருக்கின்ற அன்பு இப்பொழுது அல்ல - மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந் திருக்கின்ற எங்கள் பொருளாளர் அய்யா தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் ஒரு பெரிய வணிகர்.

எஸ்.என்.எம்.உபயதுல்லா படமாக மட்டுமல்ல, பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்

இவர்கள் இரண்டு பேரும் வணிகத் துறையில் மிக நெருக்கமான நண்பர்கள்.  அப்படி கா.மா. குப்புசாமி அவர்களால்  நீண்ட காலத்திற்கு முன்பு, அறிமுகப்படுத்தப்பட்ட தோழர்தான் இங்கே படமாக மட்டுமல்ல, எல்லோருக்கும் பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அய்யா நம் எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்கள்.

தஞ்சையில் இருக்கக்கூடிய திராவிடர் கழகத் தோழர்கள் தஞ்சை ராஜகோபால் மாதிரி, நடராஜன் மாதிரி, அய்யா குப்புசாமி போன்று பழைய தோழர்களை அய்யா ஆளவந்தார் காலத்திலிருந்து எனக்கு எப்படித் தெரியுமோ, அதேபோன்று என்னுடைய மாணவப் பருவத்திலிருந்து இந்த இயக்கத்தில் ஈடுபட்ட கார ணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறார்கள்.

நம்முடைய அய்யா வெண்சங்கு பெத்தண்ணன் அவர்கள் காலமாக இருந்தாலும், நிறைய தோழர் களுக்குத் தெரியாது - நடராஜன் என்று சொன்னால், இரண்டு நடராஜன்கள் இருந்தார்கள். அடையாளப் படுத்துவதற்காக குள்ள நடராஜன் என்று சொல்வார்கள்; ஏ.வி.ஏ.பதி அவர்கள், எஸ்.எஸ்.மணி அவர்கள் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

வலிமை வாய்ந்த சகோதரர்களாக இருப்பார்கள்!

நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களுக்கும் நன்றாகத் தெரியும்; திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் சண்டை போட்டுக் கொண்டாலும் சரி அல்லது ஒன்றாக இருந்தாலும் சரி, அரசியல் ரீதியாக அவர்கள் எந்த நேரத்திலும் மிகவும் வலிமை வாய்ந்த சகோதரர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.

இங்கே ஜெயக்குமார் சொன்னதுபோன்று, ஓராண் டிற்கு முன்பாக திடீரென்று ஒருநாள் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டார்.

‘‘எங்கே பார்த்தாலும் கரோனா தொற்றின் கொடூரம் இருக்கிறது; ஆகவே, உங்களுடைய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொண்டு, நிறைய எழுதுங்கள். புத்தகங்களை வெளியிடுங்கள்; அந்தப் புத்தகங்களை நாங்கள் படிக்கிறோம், வாங்கிப் பரப்புகிறோம்’’ என்று சொன்னார்.

பொதுக்கூட்டத்தில் நான் வந்தால்கூட, என்னை அதிக நேரம் உட்கார வைக்காதீர்கள் என்று கூட்டம் ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்வார்.

சிறந்த கொள்கை வீரர்; விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாதவர்

இப்படி அக்கறையோடு, தனிப்பட்ட அன்பு, பாசம் நிறைந்த ஒருவரை நாம் இழந்தோம். மேலும் அவர், சிறந்த கொள்கை வீரர்; விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாதவர்.

இங்கே நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் நன்றாக சொன்னார். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட துறை அது சாதாரண துறையல்ல; விற்பனை வரி துறை. அவருக்கு அனுபவம் வாய்ந்த ஒரு துறை யாக இருந்தாலும், எல்லா வகையிலும் அதில் நல்ல பெயர் எடுத்து வருவது என்பது சாதாரணமல்ல. அதில் அவர் அப்பழுக்கற்ற மாமனிதராக இருந் தார் என்றால், அவர் குறளைப் பேசியவர் அல்ல; குறள் வழி, கொள்கை வழி நடந்துகாட்டியவர் என்பது மிக முக்கியமானதாகும்.

சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோவின் பதில்!

‘‘பிளாட்டோ வசனம்‘‘ என்ற ஒரு புத்தகத்தில், ஒரு பதவிக்கு யார் தகுதியானவர்? என்கிற கேள்வியை கேட் கும்பொழுது, பிளாட்டோ சொன்னார், ‘‘யார் பதவியை விரும்பவில்லையோ, அவர்தான் அந்தப் பதவிக்குத் தகுதியானவர்’’ என்று சொன்னார்.

நடைமுறை உதாரணத்தை நான் வாழ்க்கையில் பார்த்தவன். மற்றவர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அரசியல் கட்சிகள் என்றால், பதவிகள்தான், பொறுப்புகள்தான்; ஆகவே, அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளை நம்முடைய மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

முதலமைச்சர் கலைஞரின் அழைப்பு!

தஞ்சையில் தொடர் தோல்விகள் வந்த நேரத்திலும் சரி, மாறி மாறி வெற்றி வரக்கூடிய வாய்ப்பு இருந்த நேரத்தில், 2006 ஆம் ஆண்டு தஞ்சை தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்கிற ஆய்வுகள் - திராவிட முன்னேற்றக் கழக ஆய்வுகள் முடிந்த பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

எனக்குத் தொலைப்பேசியில் அழைப்பு வந்தது, உடனே உங்களை வரச் சொன்னார் என்று சண்முகநாதன் சொன்னார்.

10 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி, நான் சென்றபொழுது, மூன்று முக்கிய பிரமுகர்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

வாங்க ஆசிரியர் என்றார் கலைஞர்.

ஒரு முக்கியமான பிரச்சினை; அதற்காகத்தான் உங்களை வரச் சொன்னேன் என்றார்.

என்னங்க பிரச்சினை என்றேன்.

தஞ்சை தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்து வது என்று ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றோம்; உங்களுடைய கருத்து என்னவென்று கேட்க வேண்டும் என்றுதான் அழைத்தேன் என்றார்.

உடனே நான் சிரித்துக்கொண்டே, ‘‘ஏங்க, எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர் நீங்கள்; உங்களுக்குத் தெரியாதா? என்னைப் போய் கேட்கிறீங்களே, வேடிக்கை செய் கிறீர்களா?’’ என்றேன்.

‘‘இல்லை, இல்லை. வேடிக்கை இல்லை. உண்மை யாகத்தான் உங்களுடைய கருத்தை கேட்கிறேன். பல பேர் அந்த இடத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார்கள். தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்பதில் உங்களுக்கும் அக்கறை இருக்கிறது. ஆகவே, அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்’’ என்றார்.

நிறைய பேர் அங்கே இருந்தார்கள்.

உங்கள் மனதில் படுவதை சொல்லுங்கள்; அதில் ஒன்றும் தவறில்லை என்றார் கலைஞர்.

எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களை வேட்பாளராக நிறுத்தலாம் என்றேன்!

உடனே நான் சொன்னேன், ‘‘எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்களை வேட்பாளராக நிறுத்த லாம். ஏனென்றால், உபயதுல்லா அவர்களுக்கு வர்த்தகர்களிடம் செல்வாக்கும் உண்டு; இயக்கத் தோழர்களின் ஆதரவும் உண்டு. அவரை இந்த அணி, அந்த அணி என்று சொல்லமாட்டார்கள். பணிதான் அவருக்கு முக்கியமே தவிர, அணி முக்கியமல்ல என்று நினைக்கக் கூடியவர். ஆகவே, அவரையே வேட்பாளராக நிறுத்தலாம்’’ என்றேன்.

பக்கத்தில் இருந்த சண்முகநாதன் சொன்னார், வேட்பாளராக நிற்கப் போகிறேன் என்று அவர் மனுவே போடவில்லை என்றார்.

உடனே கலைஞர் அவர்கள், ‘‘மனு போடவில்லை என்றால் என்ன? உடனே மனு கொடுக்கச் சொல்லுங்கள்; ஆசிரியர்தான் சொல்லிவிட்டாரே, அது சரியாகத்தான் இருக்கும்’’ என்றார்.

உடனடியாக அவர் மனு போடப்பட்டு, தஞ்சை தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதுபோன்ற ஒரு தகுதி வேறு யாருக்குக் கிடைக்கும்.

எனக்குக் கிடைக்கவில்லை, உனக்குக் கிடைக்க வில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்குத் தானாக அந்த வாய்ப்பு கிடைத்தது.

அதுதான் இந்த மாமனிதரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

பதவிகள் வரும்; ஆனால், தானாகக் கதவுத் தட்ட வேண்டும்; புகழ் என்பதுகூட, தானே வரவேண்டுமே தவிர, தேடி வேட்டையாடி பெறக்கூடிய ஒன்றல்ல.

அவ்வளவுப் பெரிய பெருமை இந்தத் தஞ்சை மாநகரத்திற்கு உண்டு. கடைசிவரையில் அவர்கள் அதனைச் செய்தார்கள்.

வணிகத் துறையில் இருக்கும் நண்பர்களும் சொன்னார்கள்; அதேபோன்று குறள்நெறி துறையில் இருக்கின்ற நண்பர்களும் சொன்னார்கள்; கம்பன் கழகத் தலைவர் அவர்களும் சொன்னார்கள்.

புத்தகக் கடையைத் திறந்தார்; 

வியாபாரத்திற்காக அல்ல!

அய்யா, அண்ணா சிலைகளுக்கு அருகே ஒரு புத்தகக் கடையைத் திறந்தார். வியாபாரத்திற்காக அல்ல; அவருக்கு எத்தனையோ வியாபாரம், அதிகமான லாபம் தரக்கூடிய வியாபாரங்கள் உண்டு. ஒருவர் புத்தகக் கடையை வைத்தால், அது வணிக நோக்கத்தோடு வைப் பார்கள். ஆனால், அய்யா எஸ்.என்.எம்.உபயதுல்லா அவர்கள் புத்தகக் கடையைத் திறந்தது எதற்காக என்றால், வாசிப்பு என்பது அவருடைய சுவாசிப்பு. புத்தகங்களைப் படிக்கின்ற பழக்கம், அறிவார்ந்த பகுத்தறிவு நூல்கள், தமிழ் இன உணர்வு நூல்கள் எல்லாம் பரவவேண்டும் என்கிற காரணத்திற்காகத்தான்.

எங்களிடம் புத்தகங்களை அனுப்புங்கள் என்று சொல்வார்.

இப்படி மிகப்பெரிய அளவிற்கு ஒரு மாமனிதராக, ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

எப்பொழுதும் குறளைப் பயன்படுத்துவார்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

என்பது அருமையான குறள்.

தன்னுடைய வருவாய் என்பது தன்னுடைய குடும் பத்திற்கு மட்டுமல்ல. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் அவரிடத்தில் கிடையாது.

தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள் என்று கருதி வாழ்ந்தவர்.

ஈதல் இசைபட வாழ்தல் - அதுபோன்றுதான் புக ழோடு வாழக்கூடிய அளவிற்கு, இதுதான் நாம் அவ ருக்குக் கொடுக்கின்ற புகழ் ஊதியமாக இருக்கக்கூடிய சூழ்நிலை.

ஆகவே, அப்படிப்பட்டவருடைய மறைவு என்பது, அது சாதாரணமானதல்ல. ஈடற்ற ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.

பொதுத் தொண்டறத்திற்கு 

மிகப்பெரிய இழப்பு

அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்போ - அதைவிட பொதுவாழ்க்கையில், பொதுத்தொண்டறத்திற்கு மிகப்பெரிய இழப் பாகும்.

ஏனென்றால், இந்த சோழ மண்டலத்திலேயே, இந்த தஞ்சை மண்டலத்திலேயே இப்படிப்பட்ட மாபெரும் மனிதர், தொண்டறச் செம்மல் இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்கள் துயரத்தைப்பற்றி சொல் லுகின்ற ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளவேண்டும். இந்தத் துயரமான சூழ்நிலை யிலிருந்து வெளியே வரவேண்டும் என்று சொன்னால் நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல் கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் இரங்கல் செய்திகளைப் பல தலைவர்களுக்கு எழுதியிருக்கிறார், அவர்கள் மறைந்த நேரத்தில்.

அவருடைய வாழ்விணையரான அன்னை நாகம்மையார் அவர்களுடைய இரங்கல் செய்தி என்பது எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கக் கூடிய செய்தியாகும்.

அதையெல்லாம் தாண்டி, இன்னொரு இரங்கல் செய்தியை எழுதினார் தந்தை பெரியார் அவர்கள்.

இளைய தலைமுறையினரும், இன்றைய தலை முறையினரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காகத்தான், இந்த மாமனிதருடைய இந்தப் புகழ்வணக்க படத்திறப்பு நிகழ்வில் இதைச் சொல்கிறோம்.

தந்தை பெரியார் எழுதிய 

இரங்கல் அறிக்கை!

இந்தத் தஞ்சை மண்டலத்தைச் சார்ந்தவர்தான் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் அழைக்கப்பட்ட நம்முடைய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களாவார்.

இந்த மண்ணுக்குரியவர், இந்த நகரத்திற்குரிய சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபொழுது, 1940 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் அவர்கள் எழுதிய மறைவு செய்தி.

இந்த வரலாறுகள் எல்லாம் பல பேருக்குத் தெரியாது; தெரியவேண்டும்; தெரியவேண்டும் என்பது மட்டுமல்ல, புரியவேண்டும் என்பதற்காகத்தான் அதை இந்த நேரத்தில், இந்த நிகழ்வில் பொருத்திக் காட்ட விழை கிறேன்; நினைவூட்ட விழைகிறேன்.

தந்தை பெரியார் எழுதுகிறார்:

“நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக் கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும், பற்றுதலும், விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத் தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர்செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோட வில்லை. கண் கலங்கி மறைக்கிறது. கண்ணீர் எழுத்துக் களை அழிக்கிறது!

பன்னீர் செல்வத்திற்குப் பாழும் உத்தியோகம் வந்ததும் போதும். அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்க விட்டு விட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் - யார், யார் என்று மனம் ஏங்குகிறது. தேடுகிறது. தேடித் தேடி ஏமாற்றமடைகிறது!

என் மனைவி (நாகம்மையார்) முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் - இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா?  இது பேராசை அல்லவா என்று கருதினேன்!

10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன், படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20 வயதில் இறந்து போனதற் காகவும் பதறவில்லை; சிதறவில்லை!

பன்னீர்செல்வத்தின் மறைவு மனத்தை வாட்டுகிறது. 

தமிழர்களைக் காணுந்தோறும் காணுந்தோறும் - தமிழர் நிலையை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கிறது!

காரணம், முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்துபோகும். பன்னீர்செல்வத்தின் மறைவு  பொதுநலத்தைப் பொறுத் தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும் - நினைக்குந்தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார்! இது என்று மறைவது? இவருக்குப் பிறகு யார் என்றே திகைக்கிறது! பாழாய்ப்போன உத்தியோகம் - ‘‘சர்க்கரை பூசின நஞ்சு ருண்டை குத்திய தூண்டில் முள்ளாக’’ இருந்து விட்டது! அம் முள்ளில்பட்ட மீனாக ஆகிவிட்டார் செல்வம்!

இனி என் செய்வது? தமிழர் இயக்கமானது தோன்றிய நாள் முதல் இப்படியே பல ‘தத்துக்களுக்கு’ ஆளாகி வந்திருக்கிறது என்றாலும் - நாளுக்கு நாள் முன்னேறியே வந்திருக்கிற அனுபவந்தான் நமக்கும் தமிழ் மக்களுக்கும் சிறிது ஆறுதலளிக்கும் என்று கருதுகிறேன்.

காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலம் சென்று விட் டாயா? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவாராக!” 

என்கிறார் தந்தை பெரியார்.

ஆகவே, இதிலிருந்து புரிந்துகொள்ளவேண்டியது என்ன?

பொது வாழ்க்கையில் இருக்கக்கூடியவர்கள், கொள் கையாளர்களாக இருக்கக்கூடியவர்கள் மறைந்தால், அவருடைய மறைவு என்பது அவருடைய குடும்பத் திற்கு மட்டுமல்ல நண்பர்களே, அதைத்தாண்டி சமு தாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அந்தப் பள்ளத்தை எளிதில் நிரப்ப முடியாது.

ஆனால், அவர்கள் விரும்பிய இலக்கை நோக்கி நாம் பயணிக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

விளம்பரத்தைக்கூட விரும்பாத உழைப்பு!

அதிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தளபதிகளில் ஒருவராய் நின்றவர். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல், கட்டடத்தை எப்படி அடித்தளம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ, அதுபோல, விளம்பரத் தைக்கூட விரும்பாத உழைப்பு அந்த மாமனிதருடைய உழைப்பு. 

இந்த இயக்கம் கற்பாறை போன்றது - இதனை அசைக்க முடியாது என்று காட்டக்கூடிய காலகட்டத்தில், அதிலும் இன்றைக்கு மதவெறி ஓங்கிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், ஜாதிவெறி சாய்ந்துவிடாமல், இன் றைக்கும் அதைத் தாங்கிப் பிடிக்கின்றவர்கள் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், மூடநம்பிக்கை வளர்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், திராவிடர் இயக்கத்தையே அழித்துவிடவேண்டும்; ‘திராவிட மாடல்’ ஆட்சியை நிலைநிறுத்த விடாமல் தடுத்து விடவேண்டும் என்றெல்லாம் சூதுகளும், சூழ்ச்சிகளும் வலைகளாகப் பின்னப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அய்யா உபயதுல்லா போன்ற இராணுவத் தளபதிகள் மறைந்தார்கள் என்று சொன் னால், அது இந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல நண்பர் களே, இந்தக் கொள்கைக்கு, இந்த லட்சியப் பயணத்திற்கு, லட்சிய இயக்கத்திற்கு மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்; இயற்கையை எண்ணி ஆறுதல் அடைகின்ற நேரத்தில், அவர்கள் எந்த இலக்கோடு வாழ்ந்தார்களோ, அந்த இலக்கை நாம் அனைவரும் சேர்ந்து பூர்த்தி செய்யவேண்டும்.

அவருக்கு நாம் செய்யக்கூடிய 

மிகப்பெரிய புகழ் வணக்கம்!

அவர்கள் எந்தக் குறிக்கோளோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ, அதி லிருந்து நாம் பாடம் பெறவேண்டும்; அவரை, அவரு டைய வாழ்க்கையைப் பாடமாகக் கொண்டு, நாம் நம்மு டைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு,  அதன்மூலம் சமூகத் தொண்டு என்பது, இன உணர்வு, தமிழ் இன உணர்வு, இலக்கிய உணர்வு, பகுத்தறிவுச் சிந்தனை, சுயமரியாதை வேட்கை இவையெல்லாம் வளரச் செய் வதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய புகழ் வணக்கம்!

அவர் விட்ட பணிகளை, அவர் விரும்பிய சமுதாயத்தை படைக்க உறுதியெடுப்போம்!

அத்தகைய வகையில், அவர் விட்ட பணிகளை, அவர் விரும்பிய சமுதாயத்தை, அவர் எந்தக் கொள் கைக்காக வாழ்ந்தார்களோ, அந்தக் கொள்கை தலைதாழாமல், வீச்சு குறையாமல், வேகம் குன்றாமல், வேகமாக நடத்தக்கூடிய அளவிற்கு, அதனை நடத்திக் காட்டுவோம் என்று இந்தத் தஞ்சை மண்ணிலே மீண்டும் நாம் உறுதியெடுத்துக் கொள்வதுதான் அவ ருக்கு நாம் அளிக்கின்ற உண்மையான மலர்வளையம்; உண்மையான புகழ்மாலை என்று சொல்லி, ஆறுதல் பெறுக என்று இந்தச் சகோதர குடும்பத்தைக் கேட்டுக்கொண்டு, இந்நிகழ்விற்கு நீங்கள் எல்லோரும் வந்து பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள், இந்த நகரம் காணாத அளவிற்கு.

கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை - தொண்டுதான். அதை அங்கீகரிக்கக் கூடியவர்கள் இருக்கின்றோம். மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு.

எனவேதான், பொதுத் தொண்டு என்பது தொண் டறத்திற்காகவே என்பதை இந்தப் படம் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும் - வரலாற்றில் நிலைக்கும்!

என்றும் உபயதுல்லாக்களாக நாம், நம்முடைய வாழ்க்கையில் முடிந்த அளவிற்கு வாழ்ந்துகாட்டி, திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை; அது வென்றே தீரும்; அது ஒன்றே சொல்லும்; வரலாற்றில் நிலைக்கும் என்று கூறி, அனை வருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

 வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வாழ்க எஸ்.என்.எம்.உபதுயல்லா புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

No comments:

Post a Comment