சமூகநீதிக்கான ஆட்சிக்கெதிராக கிளப்பிய புரளி புளி போல கரைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

சமூகநீதிக்கான ஆட்சிக்கெதிராக கிளப்பிய புரளி புளி போல கரைந்தது

சமூக நீதியின் பிறப்பிடம், இருப்பிடம், தலைமையகமான தமிழ்நாட்டில்  வடக்கத்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பொய்யுரையை பரப்பி அமைதியாக, கம்பீரமாக நடைபெறும் சமூகநீதிக்கான ஆட்சிக்கெதிராக கிளப்பிய புரளி வந்த வேகத்தில் புளி போல கரைந்து விட்டது. 

சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக அவப்பெயரை உருவாக்கத் துடியாய் துடிக்கிறது ஒரு கூட்டம். அவர்களுக்கு நிம்மதியான, திறமையான சமூக நீதிக்கான முதலமைச்சர் அவர்களின் ஆட்சியை கண்டு பாராட்ட மனமில்லை அதனால் தூற்றுகின்றனர். 

வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு எனப்பெயர் பெற்றது இந்த மண். 

புறமுதுகிட்டு ஓடாமல்  நெஞ்சுயர்த்தி இந்தியா வின் விடுதலைக்கு வித்திட்டது இந்த தமிழ்நாடு தான், 

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை தந்த பேகன், பசுவின் கன்று பலிக்காக மகனை பலி தந்த மனுநீதிச் சோழன், 

அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் என பழங்காலம் தொட்டே தமிழன் தற்புகழ்ச்சி இல்லாமல் அறநெறியாக வாழ்ந்து வருகிறான் இன்று வரை. 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மண முண்டு என்று திராவிட பெருந்தகையாளர் அறிஞர் அண்ணா அவர்களால் பெருமை படைத்தது தமிழ்நாடு. 

பாபர் மசூதி இடிப்பின்போது நாடெங்கும் கலவரங்கள் நிகழ்ந்த போதும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து பெருமை படைத்தது இந்த தமிழ்நாடு. 

கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் உலகிற்கே திறந்த வாயிலாக இன்று வரை திகழ்கிறது தமிழ்நாடு. இப்படி பெருமைமிக்க மண்ணில் வடக்கத்திய வர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும். 

மொழிக்காக களம் கண்டு மற்ற மாநிலங்களுக் கெல்லாம்  மொழி உணர்வுக்கு வழிகாட்டியது தமிழ் நாடு. 

தேசத்தந்தை காந்தியார் அவர்களையே ஆடைப்புரட்சி செய்ய வைத்தது இந்த மண். இப்படி பல்வேறு பெருமைகளால் திகழும் தமிழ்நாட்டில் எப்போதும் அனைவருக்கும், அனைத்தும் கிடைக் கும் ஏனென்றால் இது சமூக நீதிக்கான இருப்பிடம். 

புலித்தோல் போர்த்திய பசு போன்ற உங்கள் தீய எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது. 

கற்களையும், அவச்சொற்களையும் தாங்கிக் கொண்டு   சுயநலம் பாராமல் பணியாற்றியது தான் திராவிட இயக்கம். பெருமை மிகுதியால் தொடர்ந்து களப் பணியாற்றுவது தான் திராவிட மாடல் அரசு. சிறுமை எப்போதும் ஏற்படாது,திராவிடத்தின் பேனா மை  என்ற ஆளுமை ஆட்சியில் அருமை யும், புதுமையும் , வளமையும் தான் கடமையாகும். 

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா உவமையான வரிகள். 

- மு. சு. அன்புமணி

மதிச்சியம்.


No comments:

Post a Comment