பதிலடிப் பக்கம் - மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

பதிலடிப் பக்கம் - மின்சாரம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானிகள்

கேள்வி: தமிழக விளம்பரங்களில் ஸ்டாலின், கலைஞர் படங்கள் மட்டும் இடம் பெறுகிறதே! அண்ணா, பெரியார் அவ்வளவுதானா?

பதில்: அண்ணாதுரை, பிறந்த நாளன்று அண்ணா சதுக்கத்தில் அண்ணா சிலைக்கு, ஸ்டாலின் மாலை போடும் ஃபோட்டோ பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. ஈ.வெ.ரா. பிறந்த நாளன்று அவர் சிலைக்கு, ஸ்டாலின் மாலை போடும் ஃபோட்டோவும் பத்திரிகைகளில் பிரசுரமாகின்றன. பதவியில் இல்லாத ஈ.வெ.ரா.வுக்கும், 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த அண்ணா துரைக்கும் அது போதாதா?

(துக்ளக், 8.3.2023)

சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி என்று ஆரிய மாயை நூலில் அண்ணா குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் பார்க்க வேண்டும்.

விவாதத்திற்காகவே ஒப்புக் கொள்வோம். பெரியார், அண்ணா படங்கள் இடம் பெறவில்லை யென்றால் அதற்காக ‘துக்ளக்' சந்தோஷப்பட்டு, திமுக அரசைப் பாராட்டத்தானே வேண்டும்.

ஏன் பாராட்டவில்லை? ஏதோ பெரியார், அண்ணா  மீது அபரிமிதமான மதிப்பும் மரியாதையும் பொங்கி வழிவது போலவும்,

‘அய்யய்யோ, பெரியார் அண்ணா படங்களை அரசு விளம்பரத்தில் காண முடியவில்லையே!' என்று பாசாங்குக் கண்ணீர் விடுவதை நினைத்தால் அவர்களின் அற்பப்புத்தியை எள்ளி நகையாடத்தான் வேண்டும்.

ஆக திமுக அரசு எதைச் செய்தாலும், அதற்கு எதிராக எதையாவது சேற்றை வாரி இறைத்து ஆசுவாசம் அடைய வேண்டும் - இதற்குப் பெயர்தான் ஆரியப் புத்தி என்பது!

தந்தை பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாளாக" அறிவித்து அரசு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை உறுதிமொழி எடுக்கச் செய்தாரே - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் - நமது திராவிட மாடல் அரசின் மாண்பாளர் மானமிகு முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்த வயிற்றெரிச்சல் அக்ரகாரத்தின் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக் கரைத்து புளியேப்பம் விடச் செய்து அஜீரணப் படுக்கையில் விழுந்து புரள்வதைப் பார்க்க முடிகிறது.

தன்னுடைய பிறந்த நாள் செய்தியில்கூட "தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் கழகத்தின் உடன் பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொது வாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகி றேன்" என்று குறிப்பிட்டுள்ளாரே முதல் அமைச்சர்

அவாளின் மித்திரபேதம், சிண்டு முடியும் வேலை எல்லாம் இங்கு செல்லாது - காரணம் தந்தை பெரியார் திராவிட மண் இது!

அறிவியல் நாள்?

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது!

ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற ‘இராமன் விளைவை'க் கண்டுபிடித்த சர் சி.வி.இராமனை மய்யப்படுத்தி அந்நாள் கொண்டாடப்படுகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பைச் செய்த இந்த சி.வி. இராமன் பற்றி ஒன்றைச் சொன்னால் ஆச்சரியமாகவே இருக்கும்.

1962 இல் விண்வெளி அகண்ட காஸ்மாஸில் ககாரின் பயணித்தபோது, இந்த விஞ்ஞானி சர் சி.வி.இராமன் என்ன சொன்னார்?

''கடவுள் இருக்கும் இடத்திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லலாமா?'' என்று கேள்வி எழுப்பினார் இவர் என்றால், இவர்களை என்னவென்று சொல்லு வது!

(ஆதாரம்: ''கடவுள் கற்பனையே! புரட்சிகர மனித வரலாறு'' - ஏ.எஸ்.கே., பக்கம் 16,17).

அதேபோல, விண்வெளியில் பறந்த ராகேஷ் சர்மா, மூன்று முறை காயத்ரி மந்திரம் சொன்னார். 

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தன்னோடு பகவத் கீதையை எடுத்துச் சென்றார் என் றெல்லாம் சொன்னார்களே!

விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது வேறு - விஞ்ஞான மனப்பான்மை வேறு என்பது இதன்மூலம் விளங்க வில்லையா?

இந்திய ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் (பி.ஜே.பி.) - டார்வின் கூறும் பரிணாம வளர்ச்சி என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று பிதற்றினார்.

இந்திய விஞ்ஞானிகள் 1,200 பேர் கையொப்பமிட்டு அவருக்கு எதிராக சூடு கிளப்பினர்.

பிரச்சினை பெரிதாக வெடித்த நிலையில், ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், இப்படியெல்லாம் பேசவேண்டாம் என்று சத்யபால் சிங்கை எச்சரித்தார்!

2014 அக்டோபர் 28 அன்று மும்பையில் நடைபெற்ற ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, '' நமது விநாயகனின் யானை முகம் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைமூலம் உருவானது!'' என்றாரே, பார்க்கலாம்.

விஞ்ஞானிகள் பங்கேற்கும் மாநாடு களில்கூட வேத காலத்திலேயே விமா னங்கள் இருந்தன என்று கட்டுரை படித்த மே(ல்)தாவிகள் உண்டு.

இவற்றையெல்லாம் பார்த்த அய்தராபாத் பிர்லா அறிவியல் மய்ய இயக்குநர் பி.ஜி.சித்தார்த் மிக அழகாக விமர்சித்தார்.

''இது அறிவியல் மாநாடல்ல; அறி வியல் கும்பமேளா'' என்று எரிச்ச லுற்றார்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான டாக்டர் வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் கூடக் கடுமையாக விமர்சித்ததுண்டு.

அறிவியலை ஆன்மிகத்தில் குழைக்கும் ஆளுநர்களும் இங்கு உண்டே!

No comments:

Post a Comment