சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (2)

 சில எண்ண ஓட்டங்கள்: 

45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (2)

சென்னை பெரியார் திடலில் வழக்கமாக அய்யா தந்தை பெரியார் தங்கும்  அறையில் தனியே கட்டிலில் அமர்ந்திருந்தார். யாரும் பார்வையாளர்கள் இல்லை.

அப்போது நான் அய்யாவிடம் நெருங்கி மிகுந்த வருத்தத்துடன் 'அய்யா, நம் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள சிலர், தேவை யில்லாமல் என்மீது அவதூறு, அபாண்டப் பழிகளைப் பரப்பி, தூற்றி வருகிறார்கள்; என் காதுபடவே கேட்கிறேன். மன வேதனைப் பட்டேன்?' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, பிற வார்த்தைகள் வர முடியாமல் தழு தழுத்த குரலும் அழுகையும், கண்ணீரும் பொங்கி வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.

அய்யாவும் உடனே என்னைப் பரிவுடன் பார்த்து, 'என்ன நடந்தது? விவரமாகச் சொல்லுப்பா?' என்று கவலையோடு விசாரித்தார்.

"நான் போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் சிறையைத் தவிர்த்து விடுவதாகவும் -  நாம் எல்லாம் கிளர்ச்சி, தண்டனை, சிறைவாசம் - என்று கஷ்டப்படும்போது இவர் மட்டும் வசதியாக ஊர் சுற்றி வருகிறார்" என்றும் என்னைப் பற்றி அவதூறு பரப்பி நம் இயக்கத் தோழர்கள் சிலர் மூலம் இதனைச் செய்து வருகிறார்கள்!

உங்கள் ஆணைப்படிதான் நான் செயல் படுகிறேன். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை, வழக்கு - தண்டனைகளை ஏற்ற தோழர்களைப் போல செல்லவே ஆயத்தமாகி, உங்களிடம் அனுமதி கேட்டபோதெல்லாம் - அய்யா மறுத்து, உங்களைப் போன்ற சிலர் வெளியில் இருந்தால் தான் வேறு சில முக்கிய பணிகளைக் கவனிப்பதற்கு இயக்க நடவடிக் கைகளுக்கு உதவியாக இருக்கும். எல்லோரும் சிறைக்குப் போவதுதான் 'தியாகம்' என்று கருதக் கூடாது என்று எனக்குப் பதில் கூறி கண்டிப்புடன்  - என் சொல்லை மீறி உணர்ச்சி வயப்பட்டு நம் போராட்டங்களில் வீரமணி கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டளையே போட்டீர்கள். அதனால் தானே நான் கலந்து கொள்ளாமல், அய்யா இட்ட பணிகளையே செய்து முடித்து வந்தேன்.  இந்த இழிச்சொல் அபாண்ட அவதூறு எனக்குத் தேவையா? புதிதாக இயக்கத்திற்கு வருகின்றவர்கள் என்னைப் பற்றி தவறாகத்தானே எண்ணுவார்கள் அய்யா - அதனால்தான் அவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை - தங்களைச் சங்கடப்படுத்தியதற்காக என்னை மன்னிக்க  வேண்டுகிறேன்" என்று தயங்கிய குரலில் சொன்னேன்.

அய்யா நான் சொன்னதை, வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு எனக்கு தேறுதல் வார்த்தை களைச் சொல்லி - பொது வாழ்க்கையின் முக்கிய பாடத்தைப் போதித்து என்னை  பக்குவப் படுத்தினார்.

"அட பைத்தியக்காரா - உன்னை எவ்வளவோ தைரியசாலி?" என்று அல்லவா நினைத்தேன்! இம்மாதிரி செய்திகளையெல்லாம் அலட்சியப் படுத்திப் போட்டு விட்டு உன் வேலையைச் செய்ய நீ மேலும் பக்குவப்படுத்திக் கொண்டு தயாராக வேண்டும்.

ஜெயிலுக்குப் போவதைவிட வெளியில் இருந்து அந்த கால கட்டத்து நிலவரத்தை சமாளித்து, இயக்கப் பணி செய்வது எவ்வளவு கஷ்டமானதும், முக்கியமானதும் என்பதை அறிந்தவன் - நான் சொல்லுகிறேன். யாரை எந்த வேலைக்கு எப்படி, உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கல்லவா தெரியும் - ஓர் இயக்க நடவடிக்கை பலருக்கும் பலவிதமாக இருக்கும் - இதிலென்ன ஏற்றம் - இறக்கம் - பெருமை - சிறுமை எல்லாம்?

யாரோ பொறாமைக்காரர்கள் சொல்லு கிறார்கள் என்றால், அதைக் கேட்டு அலட்சியப் படுத்தி விட்டு உன் வேலையை நீ பார்க்க வேண்டுமே தவிர, அதற்காகவா மன உளைச்சல் அடைவது!

ஒன்றில் உறுதியாக இரு. இப்போது சொல்லுகிறேன் - உன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும், சரி - நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி மட்டும் புரிந்து கொண்டு மற்ற எதைப்பற்றியும் கவலைப்படாது வேலையை செய் - உனக்கே பக்குவம் வளர்ந்தால் இதனைத் தூசி போல தட்டி விட்டு பணி செய்யும் பழக்கம் - தானே வரும்!

அதை ஏன் காது கொடுத்து கேட்கிறாய்? "நான் என்ன நினைக்கிறேன் என்பதைப்பற்றி மட்டும் யோசி" என்றார். 

"உலோக ஊது குழாயில்  பக்குவப்பட்ட நெருப்பில் காய்ச்சிய துண்டத்தை சம்மட்டியால் அடித்து  கருவியாக்குவது போன்று எனக்கு என்றும் பயன்படும்  அறிவுரையல்லவா இது? 

'தலைமை என்ன நினைக்கிறது' என்பது மட்டும்தான் தொண்டர்களுக்குரிய கவலையாக இருக்க வேண்டுமே தவிர - வேறு சிந்தனையால் கவனச் சிதறல்  - கடமையாற்றும்போது ஏற்பட்டு விடக் கூடாது என்பது எத்தனை பெரிய பாடம் - எவ்வளவு பெரிய 'கைடுலைன்' வழிகாட்டுரை.

அன்று முதல் என்றும் என்னை அது வழி நடத்திடும் பாடம் - துணிவுடன் பொறுப்புகளை நிகழ்த்தினால் தலைமை வைத்துள்ள நம்பிக்கை ஊனப்படாது அல்லவா?

எந்த இயக்கத்திலும், எந்த கால கட்டத்திலும் எப்படிப்பட்ட சோதனைகள் ஏற்பட்டாலும்கூட - அதனை உணர்ந்து செயல்பட இதைவிட பயனுள்ள  மூதுரை வேறு தேவையா?

(வளரும்)


No comments:

Post a Comment