உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு!

*     பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து விளையாடும் விபரீத அரசியல்!

* ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவிற்கு கோளாறு செய்தால் தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு!

பல மாநிலங்களில் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவிற்கு கோளாறு செய்தால் தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றிலும் - அந்த மாநிலங் களில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். எளிதில், மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனநாயக வழிமுறையான தேர்தல்மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாதபோது, 'குதிரை பேரம்' நடத்துவது, ஆளுங்கட்சியை உடைப்பது, சில விபீடணர்களை உருவாக்கி மகுடம் சூட்ட அவர்கள் நாக்கில் பதவித் தேனைத் தடவுவது, சில காலம் கழித்து அந்தக் கூட்டில் இடம்பெற்றிருந்துவிட்டு, தமது கட்சி (பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியாகவே நம்பிக்கை வாக்கெடுப்பு - பதவி பரமபத அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு, மக்களாட்சியின் மாண்புகளை, அரசமைப்புச் சட்ட விழுமியங் களைக் காணாமற்போகச் செய்யும் வேலை களை மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு 'கன கச்சிதமாக' ஆளுநர்களை அரசியல் கருவி களாக்கிக் கொண்டு, அரசியல் சித்து விளை யாட்டுகளைத் தொடர்ந்து நடத்தி வருவது உலகறிந்த உண்மை!

ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் உண்டா?

ஆளுநர்களும், தங்களுக்குள்ள அதிகாரம் ஏதோ வானளாவியதுபோல எண்ணிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிடும் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தராமல், எல்லையற்ற காலம் கிடப்பில் போடுவது, பல்கலைக் கழக வேந்தர் ஆளுநர் என்பதை மாற்றும் திருத்தச் சட்டங்களைக்கூட நிறுத்தி வைத்து, ஒரு போட்டி அரசு நடத்துவது, சட்டமன்றத்தினை நடத்திட தேதி தராமல், இழுத்தடிப்பது போன்ற அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை பட்டாங்கமாய் செய்து, மேலிடத்தின் ''ஷொட்டுகளை''ப் பெற்று, அதற்குமேல் பதவி ஏதாவது கிடைக்காதா என்று ''ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாச'' நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற அரசியல் செப்பிடு வித்தைகளை நடத்தி வருகின்றனர்!

இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து பல வழக்குகளில் குட்டு வைத்து சுட்டிக்காட்டி வரும் தெளிவான தீர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன நாளும்!

மகாராட்டிரம் - கட்சித்தாவல் 

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

மகாராட்டிர மாநிலத்தில் ஆளுங்கட்சியான சிவசேனா கட்சியைப் பிளவுபடுத்தி, அங்கே நடந்த சிவசேனா -காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, அதில் பிரிந்த ஒருவர் தலைமையில் - ஆளுநரின் ஆணைக்கிணங்க நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் (அதுவும் நள்ளிரவில்) ஓர் ஆட்சி வர ஆளுநர் செய்த அரசியல்பற்றி - உச்சநீதி மன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு இடித்துச் சுட்டிக்காட்டித் தீர்ப்பு தந்துள்ளது!

மகாராட்டிர அரசு சார்பில் வாதாடிய அரசு வழக்குரைஞர் கொள்கையில் எதிராக இருந்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்ததால்தான் அவ்வாட்சியைக் கவிழ்த்து, மற்றொருவர் தலைமையில் புதிய ஆட்சி - சிவசேனா பிளவு கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது என்று வாதம் செய்தபோது,

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஞி.சீ.சந்திரசூட் அவர்கள் ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டு, முரண்பாட்டு அரசியல் வித்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார்!

''கடந்த 3 ஆண்டுகளாக நடந்த அதே அமைச்சரவையில்தானே பிளவு ஏற்படுத்திய வர்களும் இருந்தார்கள். அவ்வளவு காலம் குடும்பம் நடத்தியபோது, அது தெரியவில் லையா? திடீரென்றுதான் இப்போது அது தெரிந்ததா?'' என்று நெற்றியடிக் கேள்வியைக் கேட்டுள்ளார்!

தெலங்கானாவிலும் ஆளுநரை எதிர்த்து வழக்கு!

அதுமட்டுமா?

ஆளுநர்கள் இப்படி பதவிப் போட்டி அரசியல் நடத்திடும் வேளைகளில் வாக்கெடுப் புக்கு உத்தரவிடுவது, தேதி நிர்ணயம் செய்து அறிவிப்பது, அது நிலைமையை மேலும் சிக்கலாக்கத்தானே உதவிடும்?

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் முயற்சியைப் போன்றது என்று சொல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளார்!

அதுபோலவே, தெலங்கானா சட்டப்பேர வைப் பிரச்சினை; ஆளுநர் செய்யும் அரசியல் பற்றி வருகிற 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநர் பாடம் கற்றுக்கொண்டாரா?

தமிழ்நாட்டு ஆளுநர் இவைபற்றி என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார் - புரிய வில்லையே!

45 பேரை பலிகொண்ட ஆன்-லைன் சூதாட்டத்திற்குத் தடை என்ற உயிர் காக்கும் தடுப்பு மசோதாவைக் கூட 142 நாட்கள் வைத் திருந்து, இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, காலந்தாழ்ந்து திருப்பி அனுப்புவது, அரசு கொள்கைக்கு நேர்மாறான - விதண் டாவாதப் பேச்சு, நிகழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அமைதிப் பூங்காவாக இருக் கும் தமிழ்நாட்டில், 'திராவிட மாடல்' ஆட்சியை வீண் வம்புக்குத் தானே அழைக்கிறார்!

இதுபற்றி தமிழ்நாடு அரசு பொறுமை காப்பதை நிறுத்தி, ஆளுநர் கோளாறு செய்யும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் மற்ற எதிர்க்கட்சி மாநிலங்களைப்போல, வழக்கினையும் தாக்கல் செய்து, இங்கே நடப்பதை உலகறியச் செய்து, தக்க தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டாக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

உச்சநீதிமன்றம் செல்லட்டும் தமிழ்நாடு அரசு

உதவாதினி தாமதம்

உடனே விழித்துச் செயலில் இறங்கிட தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் போராட்டத்தினை கொதிநிலை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் நிலையும் நாளும் ஏற்படுகிறது!

மக்களாட்சி - வாக்களித்த மக்களுக்குரிய கடமையாற்றலுக்குத் தடைகள் ஏற்பட்டால், அவற்றைத் தகர்த்தெறியச் செய்யவேண் டாமா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

16.3.2023

No comments:

Post a Comment