உலக மகளிர் நாள்: "பெண்ணால் முடியும்" கழக மகளிரணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 14, 2023

உலக மகளிர் நாள்: "பெண்ணால் முடியும்" கழக மகளிரணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி


சென்னை, மார்ச் 14- பன்னாட்டு மகளிர் நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக "பெண்ணால் முடியும்" என்ற தலைப்பில்  கலந்துரையாடல் கூட்டம் சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் ஆவடி செல்வா நகர் பகுதியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர் கார்த்திகேயன் அவர்களது இல்லத்தில் 8.3.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது. 

கலந்துரையாடலில் தோழர் கார்த்திகேயன் குடும்பத்தினருடன் செல்வா நகர் பகுதியில் வசிக்கும் மகளிர் தோழர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகை தந்த தோழர்கள் அனை வரையும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி வரவேற்று மகிழ்ந்ததுடன், சாதனை படைத்த போற்றத்தக்க பெண் ஆளுமை களான  அன்னை மணியம்மையார், அன்னை நாகம் மையார், திருமதி சாவித்ரிபாய் பூலே, மருத்துவர் முத்துலட்சுமி (ரெட்டி) ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தும் சிறப்பித்தார். 

சாதனை படைத்த பெண் ஆளுமைகள்

தொடர்ந்து, திராவிட மகளிர் பாசறையின் மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை பேசு கையில்: 

தீவிர ஆத்திக குடும்பத்தில் பிறந்தும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழியில் கள்ளுக் கடை மறியலில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீராங் கனையாகவும் பெண்ணுரிமை போராளியாகவும் வாழ்ந்த அன்னை நாகம்மையார்

சிறு வயதிலேயே தந்தை பெரியாரின் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியாருக்குப் பிறகு அய்ந்து ஆண்டுகள் இயக்கத்தைக் கட்டிக்காத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைத் தலைவராக அடையாளம் காட்டிய அன்னை மணியம்மையார்

 மகாராட்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து அவரது கணவர் தோழர் ஜோதிராவ் பூலே அவர்களால் கல்வி கற்பிக்கப்பட்டு, பிறகு அவருடன் இணைந்து பல இன்னல்களுக்கிடையே முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் குழந்தைகளுக்குக்  கல்வி கற்பித்த சாவித்ரிபாய் பூலே

 இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்பினைப் பெற்றதுடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கி, பெண்களைக் கேவலப்படுத்தும் தேவதாசி முறையைச் சட்டப்படி போராடி ஒழித்த மருத்துவர் முத்துலட்சுமி அம் மையார்

ஆகியோர் பற்றியும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமைச் சார்ந்த கருத்துகளைப் பற்றியும் கூடியிருந்த மகளிருக்கு விளக்கிக் கூறினார். 

பெண்களின் பொருளாதார தற்சார்பு

திராவிடர் கழக மகளிரணியின் மண்டல செயலாளர் இறைவி அவர்கள் அனைத்து தோழர்களிடமும் அவர்களது அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் பெண்கல்வி, பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகளையும் வளர்க்கும் முறை, பெண்களின் பொருளாதார தற்சார்பு போன்றவைக் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டதுடன், இவைச் சார்ந்த கேள்விகளை எழுப்பி மகளிரின் எண்ணங்களையும் அறிய வைத்தார். மகளிர் அனைவரும் இன்றைய அரசியல் சமுதாய நிலைகளை அறிந்திருந்ததுடன், தயக்கமின்றி அவற்றைப் பற்றிய தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர். தங்களின் உரிமைகளோடு கடமைகளையும் உணர்ந்து தயக்கமின்றி கலந்துரையாடலில் பங்கேற்றனர். பங்கேற்ற மகளிரில் பலர்  சமுதாயத்தின் ஜாதிய வழக்கிலிருந்து முழுமையாக வெளிவர சற்று தயக்கம் காட்டினாலும் தங்களின் குழந்தைகளின் வாழ்க்கையினைப் பொறுத்த வரை இத்தகையக் கட்டுப்பாடு களை உதறியெறிய தயாராக இருந்தனர் என்பது மனதிற்கு  மகிழ்ச்சியளித்தது.

இறுதியாக, தோழர் கார்த்திகேயன் அவர்களின் இணையர் சுஜித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வருக்கும் நன்றி தெரிவித்தார். வருகை தந்த அனை வருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டது.  

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் செல்வா நகரைச் சேர்ந்த மகளிர் கயல்விழி, கோவிந்தம்மாள், எமலி, கோதை, ஜே.துளசி,  பி.துளசி, கே. பிரசன்ன குமாரி, ஏ. முத்து கிருஷ்ணம்மாள், டி. காமாட்சி, பி. ராஜாத்தி, எஸ். அனிதா, கே. சாந்தி, எஸ்.லதா, பானுமதி, ஆர். சாந்தி, எம். அமுதா, பி. கமலா, ஹேமமாலினி, கமலி, சுஜித்ரா, எஸ். சுதா, எஸ். சத்தியபாமா, இ. சரஸ்வதி, டி. லட்சுமி, எல்லம்மாள்,  சுகந்தி, திவ்யா, ஃபமிதா, ஜெயலட்சுமி, பிளாரன்ஸ் பியூலா, சமிக்ஷா, ஆவடி மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறையைச் சேர்ந்த தோழர்கள் அமல சுந்தரி, மெர்சி அஞ்சலா மேரி, கனிமொழி, செல்வி, மாட்சி, இளம் தென்றல் மணியம்மை, பகுத்தறிவு, தாம்பரம் பண்பொளி,  தந்தை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோரும் ஆவடிநகர கழக தலைவர் கோ-.முருகன், துணைத் தலைவர் சி.வஜ்ரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியினைத் தோழர் கலை யரசன், தோழர் தமிழ்மணி ஆகியோரின் உதவியுடன் திராவிட மகளிர் பாசறையின் மண்டல செயலாளர் மரகதமணி இனிதே தொகுத்து வழங்கினார்.


No comments:

Post a Comment