‘நம்ம ஸ்கூல் திட்டம்’ படித்த பள்ளிக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

‘நம்ம ஸ்கூல் திட்டம்’ படித்த பள்ளிக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 13-- ‘நம்ம ஸ்கூல் திட்டம்’ மூலம் நீங்கள் படித்த பள்ளிக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், வகுப்பறை மாணவர்களுக்கு உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் பெறப்படும் நிதிகள் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதிகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மேனாள் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவ பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில் கூறியிருப்பதாவது:

நம்மில் பலர் அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவிபெறும் பள்ளிகளிலோ படித்தவர்களாக இருப்போம். ஊரில் நாம் படித்த பள்ளி எப்படி இருக்கிறது? என்று உங்களுக்கு அவ்வப்போது யோசனை வந்து சென்றிருக்கக்கூடும். ஊருக்கு செல்லும்போது நாம் எத்தனை பேர் படித்த பள்ளிக்கு செல்கிறோம். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில், சொந்த ஊருக்கு செல்வதே அரிதாகிவிட்ட சூழலில், கிடைக்கும் இரண்டொரு நாட்களில் பள்ளிகளுக்கு சென்று பார்வையிடுவதற்கான நேரம் கிடைப்பதும் கடினமே. ஆனாலும் நாம் படித்த பள்ளியை கைவிடலாகாது. 

உங்கள் ஊருக்கு செல்லும்போது, மறக்காமல் நீங்கள் படித்த பள்ளிக்கு சென்று பார்க்க முயலுங்கள். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த எண்ணினாலோ, இப்போது படிக்கும் பிள்ளைகளின் படிப்புக்கு உதவ எண்ணினாலோ, பள்ளிக்கு வேறு வகையில் தொண்டாற்ற எண்ணினாலோ உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுங்கள். சொந்த ஊருக்கு வர நேரம் இல்லையென்றாலோ, வெளிநாடுகளில் இருந்தாலோ  https://nammaschool.tnschools.gov.in/#/alumini என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்கள் பள்ளிக்கு உதவலாம். உங்களை போல பலரும் இதுபோல் விவரங்களை பதிவு செய்திருப்பார்கள்.

பள்ளியில் உடன்படித்தவர்களின் விவரங்களை விரைவில் அந்த தளத்தில் காணலாம். இதன் மூலம் பாலியத்தில் ஓடி ஆடி விளையாடிய தோழர்களை கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்புகளை உருவாக்கி கொள்ளலாம். வகுப்பு நண்பர்கள் குழுவாக இணைந்தோ, தனிநபராகவோ பள்ளிக்கு உதவலாம். பள்ளிக்கூடம் நம் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம். அந்த பள்ளிக்கூடத்துக்கு உங்களால் இயன்றதை செய்ய வாருங்கள் என்று தமிழ்நாடு அரசு அழைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment