Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!
March 18, 2023 • Viduthalai

25.01.1947 - குடிஅரசிலிருந்து.... 

(20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்; மதவாதிகள் எதிரிகள்; இவர்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். இவற்றிற்கெல்லாம் பார்ப்பனர்களே தலைவர்கள். பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஆதரவளிப்பதற்கே இந்த ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆதலால் நாங்கள் இந்த எதிர்ப்புக்களைச் சமாளித்தால்தான் எங்கள் வேலை நடைபெறமுடியும்.

பார்ப்பானும் கல்லும் சாமிகளா? நான் சாமி இல்லை  என்று சொல்லுவதாகவே வைத்துக்கொள்ளுங்கள், அதற்காக இந்த ஆள்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இன்று நீங்கள் யாரை சாமி என்கிறீர்கள்? பார்ப்பனனைத்தானே சாமி என்கிறீர்கள்? பிறகு கல்லுகளையும், பொம்மைகளையும்தானே சாமி என்கிறீர்கள்; இவை சாமி ஆகுமா? நீங்கள் எதற்காக மனிதனைச்  சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று  கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடுகிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து  வைக்கப்பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்!  பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்! இப்படியாகப் பார்ப்பானும், பார்ப்பானைப்போல் உருக்கியும், அடித்தும் வைத்த பொம்மைகளும், எழுதி வைத்த சித்திரங்களும்தான் சாமிகளாக இருக்கின்றனவே தவிர,வேறு எது உங்களுக்குச் சாமியாக இருக்கிறது?  இந்தச் சாமிகளை நாங்கள் சாமிகள் அல்ல என்கிறோம். இதில் தப்பு என்ன? நீங்கள் சொல்லுங்கள், எதற்காக ஒரு மனிதனை சாமி என்று கூப்பிடுவது? அந்த மனிதன் எந்த விதத்தில் உங்களைவிட மேலானவன் ஆவான்? நம் ஜனங்களுக்கு வெட்கமில்லை, மானமில்லை என்பதல்லாமல் வேறு என்ன? இந்த ஊரில் ஒன்றோ இரண்டோ, பார்ப்பன வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன், அந்தப் பார்ப்பனரின் விஷமச் செய்கைதான் சுவரில் இப்படி எழுதச் செய்தது என்றும் சொன்னார்கள்.

பார்ப்பன ராஜ்யமே சுயராஜ்யம்!

உங்களுக்கு சாமியைப்பற்றி புத்தி எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு புத்திதான் உங்களுக்கு சுயராஜ்யம், பொதுவுடைமை, நேதாஜி, ஜெய்ஹிந்த், என்பவைகளைப் பற்றியும் இருக்கிறது. சுயராஜ்யம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? சுயராஜ்யம் என்றால் பார்ப்பான் மந்திரி, பார்ப்பான் பெரிய அதிகாரி, பார்ப்பான் கொள்ளை என்பதல்லாமல் வேறு மாறுதல் என்ன என்று கேட்கிறேன். உங்களுக்கு சுயராஜ்யம் வந்தால் பார்ப்பானுக்குச் சாமிப்பட்டம், பிராமணப்பட்டம், மேல்ஜாதிப்பட்டம், போய்விடுமா? அல்லது உங்களுக்குச் சுயராஜ்யம் வந்தால் உங்களுக்குள்ள சூத்திரப்பட்டம், பஞ்சமப்பட்டம், கீழ்ஜாதிப் பட்டம், போய்விடுமா? சொல்லுங்கள் பார்ப்போம் அல்லது இங்கு யாராவது காங்கிரஸ்காரர் இருந்தால் இங்கு வந்து சொல்லட்டுமே பார்ப்போம். பித்தலாட்டமும், புரட்டும் சுயராஜ்யம் என்று சொல்லப்படுவதல்லாமல், யோக்கியமும், நாணயமும்தான் சுயராஜ்யம் என்று யாராவது சொல்லட்டும்! நான் இப்படிச் சொல்லுவதால் சுயராஜ்யம் வேண்டாம் என்று சொல்லுவதாக யாராவது கருதினால் அது தவறு, தவறு என்றே சொல்வேன்.

இன்று மக்களுடைய மானமற்ற தன்மையும், மடத்தனமும், ஏமாந்த தன்மையும்தான்  சாமியாக, சுயராஜ்யமாக இருந்து வருகின்றனவே தவிர உண்மைக் கடவுளும், உண்மை சுயராஜ்யமும் உங்களுக்குத் தெரியவே தெரியாது. உங்களுக்கு யாரும்  சொல்லவும் இல்லை! விளக்கவும் இல்லை!

ஓரவஞ்சனை செய்யும் சாமி

உண்மையான கடவுள் ஒன்று இருக்கிறது என்றால் பாடுபடாத சோம்பேறி,  பித்தலாட்டக் கூட்டத்தார் வயிறு வீங்கச் சாப்பிடவும், பாடுபடும் பாட்டாளி மக்கள் பட்டினி கிடந்து, உடுத்த உடையில்லாமல், இருக்க வீடில்லாமல், படிக்க எழுத்து அறிவில்லாமல் இருக்கவும் முடியுமா என்று கேட்கிறேன்?  சாமியைப் பற்றிக் கவலை கொள்ளுகிற எவனுக்காவது இந்தக் குறைகளைப் பற்றிய கவலை இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

கோவில்கட்டி கும்பாபிஷேகம் பண்ணின ஜாதியார் கீழ்ஜாதியார் என்றும், சூத்திரன் என்றும், அழைக்கப்படுவதை, நடத்தப்படுவதை எந்தச் சாமியாவது தடுத்ததா? என்று கேட்கிறேன்.

அதுபோலவே, எந்தச் சுயராஜ்யத்திலாவது அல்லது இப்போது பேசப்படுகிற, கொடிகள் பறக்கின்ற மகாத்மாக்களோ, ரிஷிகளோ, வீரசூரதளபதிகளோ, தியாகமூர்த்திகளோ, வீராங்கனைகளோ, லட்சுமிகளோ, தேவிகளோ, தலைவர்களோ இருந்து நடத்துகின்ற எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன், மிலேச்சன் இல்லாமல் ஒரே ஜாதி மக்கள் உள்ள சுயராஜ்யமாய் இருக்குமா என்று கேட்கிறேன்? யாராவது பதில் சொல்லட்டுமே பார்ப்போம்! இங்கு பல கொடிகள் கட்டிய கொடி வீரர்களாவது, ஜெய்ஹிந்த் கூப்பாடுபோடும் நேதாஜி சங்கத்தாராவது, காங்கிரஸ் சமதர்மிகளாவது, யாராவது சொல்லட்டுமே, பார்ப்போம்!  சாமி இல்லை என்கிறவனும், தேசத்தைக் காட்டிக் கொடுத்தவனும் வருகிறான்; ஒருவரும் போகாதீர்கள், என்று துண்டுப் பிரசுரம் போட்டுச் சுவரில் எழுதிவிட்டால் போதுமா? வெட்கமும் இல்லை! அறிவும் இல்லையே! என்றால், இந்தக் கூட்டத்தாரின் இழிவான வாழ்வு எதற்குப் பயன்படும் என்று கேட்கிறேன்.

தொடரும்...


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn