நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்

சென்னை, மார்ச் 10  நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து எதிர் கொண்டவர் அன்னை மணியம்மையார், அந்தத் துணிவோடு, இன்று சவால் விடும் மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம் என்றார்  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (10.3.2023) அன்னை மணியம்மையாரின் 104 ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு: நெருக்கடி நிலை காலத்தில்

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களுடைய 104 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்றைக்குப் பல்வேறு சோதனைகளையும், நெருக்கடி நிலை காலத்தையும் சந்தித்த அன்னையார் அவர்கள், தந்தை பெரியார் அவர்களை எப்படி 95 ஆண்டு காலம் வாழ வைத்தார்களோ, அதேபோல, இந்த இயக்கத்தையும், அவர் உடல்நலிவுற்றிருந்தாலும், இயக்கம் நலமாக இருக்கவேண்டும்; வளமாக வளரவேண்டும் என்பதை எண்ணித் தொடர்ந்து தன்னையே தியாகம் செய்தார் - தந்தை பெரியாருக்கும், இயக்கத்திற்கும்!

அப்படிப்பட்ட அன்னையார் பிறந்த 104 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று - அவர் அன்று களத்தில் கண்ட எதிரிகளைவிட, மோசமான எதிரிகளை இப்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

மதவாத சக்திகளுக்கு எதிராக...

மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பதவி வெறிக்காக எந்த குறுக்கு வழியையும் கையாண்டு, தங்களுடைய முடிவு, வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற தவறான அணுகுமுறையில் போய்க் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், பெரிதும் அன்னையாருடைய உணர்வுகள் நம்மை மேலும் போராளியாகக் களத்தில் நிற்பதற்குப் பெரிதும் பயன்படவேண்டிய ஒரு காலகட்டம், இந்தக் காலகட்டம்.

குறிப்பாக, தந்தை பெரியார் அவர்களுடைய லட்சியங்களையும், அதற்கு முன்னால் உருவான திராவிட இயக்க ஆட்சி வகுத்த சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்று நினைத்து, இன்று மதவெறி சக்திகள் பல்வேறு சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், வித்தைகளையும், ஏமாற்று வேலைகளையும் கையாளக்கூடிய இந்த நேரத்தில், ஒரு நல்ல திராவிட மாடல் ஆட்சி இங்கு உருவாகி, உலகமே வியக்கக் கூடிய அளவில், இந்தியாவே பாராட்டக் கூடிய அளவிலே இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றது.

ஆரியத்தின் வியூகம்!

அப்படிப்பட்ட ஆட்சியை நேரிடையாக சந்திப்பதற்குத் தெம்பும், திராணியும் இல்லாததினால், பல்வேறு சூழ்ச்சி களால், பதவியில் இருக்கின்ற காரணத்தினால், அப்பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தி, ஆட்சியை வீழ்த்தலாம் என்கிற ஒரு வியூகத்தை இன எதிரியான ஆரியம் வகுத்து வருகிறது.

அதற்கு உதாரணம்தான், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஓர் ஆளுநர். அரசமைப்புச் சட்டப்படி தன்னுடைய கடமையை செய்யவேண்டிய ஓர் ஆளுநர், இன் றைக்குத் தேவையில்லாமல், சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டு, அனுப்பப்பட்ட சட்டத்தைக்கூட, நான்கு மாதங் களுக்குமேல் கிடப்பில் போட்டு வைத்து, அந்த சட்டம் நிறைவேற்றுவதற்குரிய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று 'திடீரென்று ஞானோதயம்' வந்த வரைப்போல் சொல்லுவது என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டாகும்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் பதிலடி!

14 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்து வதும், அரசமைப்புச் சட்டத்தையே துச்சமாக மதிப்பதும் - இவையெல்லாம் யாருடைய பலத்தால்? யாருடைய தூண்டுதலால்? என்கிற கேள்வியை மக்கள் கேட்டு, அதற்குக் காரணமாக இருப்பவர்களுக்கு வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்பதுதான் இந்த நாளில், இன்றைய நடைமுறைத் திட்டமாகும்.

எனவே, கொள்கைகள் காப்பாற்றப்பட, திட்டங்கள் தீவிரமாகப் பரப்பப்படவேண்டும். அதற்குரிய தீவிரமான உறுதிமொழி எடுத்த நாளாக - அந்த சூளுரையைப் புதுப்பிக்கின்ற நாளாக - அன்னை மணியம்மையார் பிறந்த நாளை திராவிடர் கழகமும், முற்போக்குச் சக்திகளும் கருதுகின்றன. நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.


No comments:

Post a Comment