Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மனுஸ்மிருதி எரிப்பும் சிகரெட் பற்ற வைப்பும்!
March 09, 2023 • Viduthalai

சனாதனத்தின் மூலமாகக் கருதப்படும் மனு ஸ்மிருதி புத்தகத்தை எரித்து, அந்தத் தீயில் சிகரெட் பற்ற வைக்கும் ஓர் இளம்பெண்ணின் காட்சிப் பதிவு சமூகவலைதளங் களில் பரவலாகி வருகிறது. இந்தக் காட்சிப் பதிவைப் பார்த்த பா.ஜ.க.வும், இன்னபிற வலதுசாரி அமைப்புகளும் கொந்தளித்து வருகின்றன. 

'புனித நூலான மனு ஸ்மிருதியை எப்படி களங்கப்படுத்தலாம்' என்றும், 'அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அதே சமயத்தில், அந்தப் பெண்ணோ "இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என்றும், 'மக்களிடம் ஜாதிப் பாகுபாட்டை உருவாக்கிய மனு ஸ்மிருதி புத்தகம் எங்குமே இல்லை என்கிற நிலைமை உருவாகும் வரை போராடுவேன்" எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவில் பா.ஜ.க.வுக்கு எதிராக சனாதன தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் பல எதிர்க்கட்சிகள் இன்று கையில் எடுத்திருப் பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், இதற்கு விதைப்போட்டது தமிழ்நாடு என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் தூக்கிப்பிடித்து வரும் மனு ஸ்மிருதி புத்தகத்தை கடுமையாக விமர்சித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்ததும், அதன் பின்னர் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா மனு ஸ்மிருதி மீது வைத்த விமர்சனமும் தேசிய அளவில் தீயைப் பற்ற வைத்தன. "சூத்திரர்களை வேசியின் பிள்ளைகள் என மனு ஸ்மிருதி புத்தகம் சொல்கிறது" என ஆ.இராசா பேசிய பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே புயலைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக, மனு ஸ்மிருதி புத்தகங்களை எரித்தும், மனு ஸ்மிருதியில் பிற ஜாதியினர் குறித்து இழிவாகக் கூறப்பட்டுள்ளதை அச்சடித்து மக்களுக்கு வழங்கியும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சூழலில், தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களில் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள், மனு ஸ்மிருதியை எதிர்க்கும் அரசியலை கையில் எடுத் துள்ளன. (திராவிடர் கழகம் மனுதர்மத்தை பல முறை எரித்ததுண்டு) முதன் முதலில் குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதைக்காரர்கள் மாநாட்டில் மனுதர்மம் எரிக்கப்பட்டது (17.10.1927).

அந்த வகையில், பீகாரில் ஓர் இளம்பெண் செய்த செயல்தான் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அப்பெண் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் பிரியா தாஸ் (27) என்பது தெரியவந்துள்ளது. அவர் பகிர்ந்துள்ள காட்சிப் பதிவில் பிரியா தாஸ் அடுப்பில் கோழி இறைச்சியை சமைத்துக் கொண்டிருக்கிறார். பின்னர், அருகில் இருக்கும் மனு ஸ்மிருதி புத்தகத்தை எடுத்து அதை அடுப்பில் உள்ள தீயில் பற்ற வைக்கிறார். பிறகு தனது வாயில் சிகரெட்டை வைத்து அந்த புத்தகத் தீயில் அதைப் பற்ற வைக்கிறார். இந்தக் காட்சிப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. பிரியா தாஸின் இந்தச் செயலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

புத்தகத்தை எரித்தது குறித்து தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று பிரியா தாஸிடம் கேள்வியெழுப்பியது. அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது: "முதலில் இங்கு ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறேன். நான் அசைவம் சாப்பிடவும் மாட்டேன். புகைப்பிடிக்கவும் மாட்டேன். ஆனால், இந்த காட்சிப் பதிவில்  நான் அந்த இரண்டையும் செய்திருக்கிறேன். மனு ஸ்மிருதி புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இதை நான் செய்தேன்.ஒரு பெண் மது அருந்தினால் அவளுக்கு என்னென்ன தண்டனைகள் கொடுக்கலாம் என மனு ஸ்மிருதியில் கூறப்பட்டி ருக்கிறது. அதே சமயத்தில், தண்டனை கொடுப்பதற்கு முன்பு அவள் எந்த ஜாதி என்பதைப் பார்க்க வேண்டும் எனவும் அதில் கூறப் பட்டுள்ளது. இதை விட இழிவான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்? இன்று நான் மனு ஸ்மிருதி புத்தகத்தை எரித்தது ஒரு நிகழ்வே! மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது எந்த தனிநபருக்கும் எதிரானது அல்ல. தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் மனநிலைக்கு எதிரானதாக இதைப் பார்க்க வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கர் பல ஆண்டுகளுக்கு முன்பே மனுஸ்மிருதியை எரித்து விதை போட்டுவிட்டார். இன்று நான் அதை செய்கிறேன். அவ்வளவுதான். இது தொடக்கம் மட்டுமே. மனுஸ்மிருதிக்கு எதிராக மக்கள் திரள வேண்டும். மனுஸ்மிருதி என்ற புத்தகமே இனி இருக்கக்கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்" இவ்வாறு பிரியா தாஸ் கூறினார்.

மனுஸ்மிருதி பெண்களை இழிவுபடுத்தியதுபோல, உலகில் எந்த நூலும் செய்ததில்லை. எடுத்துக்காட்டுக்கு இதோ! "மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள்" (மனு அத்தியாயம் 9 சுலோகம் - 19).

"படுக்கை ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு வானவர் கற்பித்தார்" (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 17).

இத்தகைய மனுதர்மத்தை பீகார் பெண் மட்டுமல்ல - அனைத்துப் பெண்களும் கொளுத்தக் கடமைப்பட்டவர்கள் தான்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn