காய்ச்சல் பரவும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழு: பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

காய்ச்சல் பரவும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழு: பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு

சென்னை, மார்ச் 7- காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவ டைந்தபோதிலும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியு டன் கூடிய காய்ச்சல் முதியவர்கள், குழந்தைகளிடை யேயும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், பொது சுகாதாரத் துறை அண்மை யில் நடத்திய ஆய்வில் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை தொற்று 50 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பு 37.5 சதவீதம் பேருக்கு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழங்கி யுள்ளார். அதுகுறித்து அவர் அனுப்பிய சுற்றறிக்கை:

சமூகத்தில் பரவி வரும் காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் வேண் டும். காய்ச்சல் பாதிப்பு விவரங்களை தொற்றுநோய் தடுப்புத் துறையின் அய்எச்அய்பி இணையப் பக்கத்தில் பகிர வேண்டும்.

காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பி மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தோராயமாக குருதிப் பரிசோதனைகளை மேற்கொண்டு நோயின் தன்மையை வகைப்படுத்த வேண்டும்.

உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிந்து ரைத்து சிகிச்சையளிக்க வேண்டும். மற்றொருபுறம், நோய்களை பரப்பும் கொசுக்கள், லார்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும்.

இதைத் தவிர, குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment