இதுதான் உ.பி. மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

இதுதான் உ.பி. மாடல்!

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து நாக்கை வெட்டி, முதுகெலும்பை உடைத்துக் கொன்ற வழக்கில் கீழமை நீதிமன்றம், குற்றம் சாட்டப் பெற்ற 4 பேரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனைபெற்றுவரும் சந்தீப் என்ற நபரை குற்றவாளி என தீர்ப்பளித்து, மற்ற மூன்று நபர்களையும் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்  சேர்ந்த 19 வயது பெண் வயல் வேலைக்குச் சென்ற போது உயர்ஜாதியைச் சேர்ந்த 4 பேர்  கடத்திச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர், உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க அவரது நாக்கை அறுத்தனர். மேலும் அவரது முதுகில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டு முதுகெலும்பை உடைத்தனர். . இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அந்த நிகழ்வு அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த,  அரசு நிர்வாகம் இரவோடு இரவாக  பெண்ணின் உடலை அவரது சொந்தக் கிராமத்திற்குக் கொண்டு சென்று அவரது பெற்றோரின் அனுமதி இன்றி  குப்பை மேட்டில் வைத்து எரித்துவிட்டனர். இந்தக் கொடுமை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஅய்க்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கில், சந்தீப், ரவி, லவகுஷ், ராமு என 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஹத்ராஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக சந்தீப் அறிவிக்கப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மற்ற மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், 9 பேர் கொண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும்  ஒருசில உறவினர்களைத் தவிர, விருந்தினர்கள் எவரும் வருவதில்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். வீட்டிற்குள் செல்ல மூத்த சிஆர்பிஎஃப் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் மற்றும் முறையான ஆவண சரிபார்ப்பைப் பின்பற்றித்தான் அவர்கள் வீட்டிற்குள் செல்ல முடியும் என்பதால் யாரும் வருவதில்லை என்று கூறியுள்ளனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை நிகழ்வு அரங்கேறிய 2020ஆம் ஆண்டு முதல் இந்தக் குடும்பத்தில் உள்ள  சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை. “என் மகள் வெளியே சென்று விளையாடக்கூட முடியவில்லை” என்று  சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் தங்கள் வீட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தில் உள்ள ஆண்கள் தெரிவித்தனர். “எங்களுக்குக் கிடைத்த 25 லட்ச ரூபாய் இழப்பீட்டில் காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்குகிறோம். அதை நம்பித்தான் நாங்கள் வாழ்கிறோம். குறைந்தபட்சம் எங்கள் குழந்தைகள் பால் குடிக்கலாம், என்று நாங்கள் சமீபத்தில் ஒரு எருமை மாடு வாங்கினோம்" என்று பெண்ணின் சகோதரர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் வழக்குரைஞர் சீமா குஷ்வாஹா கூறுகையில், "உத்தரப்பிரதேச அரசு இன்னும் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசு வேலை வழங்கவில்லை. அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை,” என்று கூறியுள்ளார்.

இதனிடையே  பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனி கூறுகையில், "காய்கறிகளை வாங்குவது கூட கவலை நிறைந்த பணியாக உள்ளது. காய்கறிகள் வாங்க பாதுகாப்பு வளையத்துடன் செல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார்கள்" என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் உடைமைகள் அவள் விட்டுச் சென்றபோது எப்படி இருந்தனவோ அப்படியே இருக்கின்றன. அவளுடைய ஆடைகள் தீண்டப்படாமல் கிடக்கின்றன, அவளுடைய தையல் இயந்திரம் தூசி படிந்து கிடக்கிறது. ஒரு சிறிய மூலையில், அவளது சாம்பல் ஒரு கலசத்திற்குள் இருக்கிறது. “குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் அந்த சாம்பலை கங்கையில் கரைக்க  மாட்டோம்” என்று புலம்பியுள்ளனர்.

பிஜேபியும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் கூறும் உ.பி. மாடல், குஜராத் மாடல் என்பது இதுதான்.

பனாரஸ் பல்கலைக் கழகத்தில் "மனுதர்மம்  சமூக அமைப்பில் தாக்கம்" எனும் தலைப்பில் ஆய்வு (றிலீபீ) செய்வோருக்கு மாதம் ரூ.25,380 உதவித்தொகை கொடுக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

பெண்கள் என்றாலே விபச்சார தோஷம் உடையவர்கள் என்று கூறும் மனுதர்மத்தை மேம்படுத்தும் நாட்டில், ஓர் ஆட்சியில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறத்தான் செய்யும்.வெட்கக் கேடு!


No comments:

Post a Comment