கல்விக் கொள்கை உருவாக்கம் மாநிலங்களுக்கு முன்னுரிமை தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

கல்விக் கொள்கை உருவாக்கம் மாநிலங்களுக்கு முன்னுரிமை தேவை

உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

சென்னை, மார்ச் 25 இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை யில் நேற்று (24.3.2023) நடைபெற்றது.

இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கையில் 3, 5, 8 ஆகிய வகுப்பு களுக்கெல்லாம் பொதுத்தேர்வை நடத்தச் சொல்கிறது. இதனால் மாண வர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். இந்திய மாநிலங்கள் மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டுள்ளன. அதனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கல்விக் கொள்கையை உருவாக்க அதிக உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அதிக அளவில்மாணவர்கள் தேர்ச்சி பெற்றால்மட்டும் போதாது தரமான கல்விகிடைக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீதாராம் பேசியதாவது: உயர்கல்வியில் தொழிற்கல்வியை எளிதாக்க பொறியியல் சார்ந்த பாடப் புத்தகங்கள் தமிழ்உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக புறக்கணிக்கக் கூடாது.முதலில் அதை செயல்படுத்தவேண்டும். அதன்பிறகு, எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

விஅய்டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: இந்திய அளவில் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக தமிழ் நாட்டில் 50 சதவீதமாக உள்ளது. வரும் காலத்தில் இது 75 சதவீதமாக உயர வேண்டும். நாடு முழுவதும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர வேண்டும். அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும். உயர்கல்வியில் முன்னணியில் உள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் இந்தியா வுக்கான கல்வி மேம்பாட்டு சங்க துணைத் தலைவர்கள் எஸ்.மலர்விழி, எம்.ஆர்.ஜெயராம், விஅய்டி துணைத் தலைவர்கள் ஜி.வி.செல்வம், சேகர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment