சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் - "கோயில் குட முழுக்குகளைத் தமிழில் செய்யலாம்" என்ற கருத்தின் அடிப்படையில் அதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கான நெறிமுறைகளை வகுப்பது அதன் நோக்கமாகும்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்; பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை குமரகுருபர சுவாமிகள், மு.பெ. சத்தியவேல் முருகனார், ப. குமரலிங்கனார் ஆகியோர் இக்குழு உறுப்பினர்கள் ஆவர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை சுகி.சிவம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் தமிழில் குட முழுக்கு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிஜேபி மாவட்டத் தலைவர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரும், ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சியினரும் தமிழில் குட முழுக்கு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சல் போட்டனர்.
சுகி சிவத்தைப் பார்த்து ஆவேசமாகக் கத்தினர். தமிழில் குட முழுக்கு நடத்த வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பிஜேபி மற்றும் அதன் வகையறாக்கள் நடந்து கொண்டதால் காவல் துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.
உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு எதிராக செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழன் கட்டிய கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு, அர்ச்சனை முதலியவை தமிழில் நடைபெறக் கூடாது என்று ஒரு கூட்டம் இந்த 2023ஆம் ஆண்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்றால் இவர்களைத் தமிழின மக்கள் அடையாளம் காண வேண்டாமா?
பாரதீய ஜனதா என்றால் பார்ப்பன ஜனதா என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டாமா?
"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்" என்று அறிஞர் அண்ணா அவர்கள் எழுதினாரே - ("திராவிட நாடு" 2.11.1947 பக்கம் 18) அதனை மீண்டும் இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.
ஹிந்துக் கோயில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவர் என்று சொல்லிக் கொண்டு (சென்னை மாவட்ட சுதந்திரா கட்சியின் தலைவரும் இவர்தான்) 1961 முதல் தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றதும் உண்டு.
"அர்ச்சனை பாட்டாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறி இருக்கிறாரே - அந்தச் சேக்கிழாரை எந்த இடத்தில் நிறுத்தப் போகிறார்கள்?
தமிழ் நூல்களில் சொல்லப்பட்டு இருந்தால் அதனை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவாள் பார்வையில் தமிழ் நீஷப் பாஷையாயிற்றே! பூஜை வேளையில் பெரியவாள் நீஷப் பாஷையில் பேச மாட்டாராம்!
நையாண்டி, கேலி, நக்கலில் பேர் பெற்ற பார்ப்பனரான சோ. ராமசாமி கூட "மொழி ஆர்வமா? மதத் துவேஷமா?" என்ற தலைப்பில் 'துக்ளக்' ஏட்டில் (18.11.1988) தலையங்கம் தீட்டவில்லையா?
"நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும், பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு!" என்று தலையங்கம் தீட்டினாரே!
கிறுக்குப் பிடித்த பார்ப்பனனாக இருந்தாலும் அவர்களின் புத்தி எதில் மேய்கிறது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
கரூரையடுத்த திருமுக்கூடல் சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், "கோயில் தீட்டுப்பட்டு விட்டது" என்று கூறி, நடையை இழுத்துச் சாத்தி, சுத்திகரித்த பின்னர் தானே கோயில் திறந்து விடப்பட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, தமிழில் குட முழுக்கு நடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தாரே!
தமிழில் வழிபாடு நடத்தினாலும் சரி, குட முழுக்கு நடத்தினாலும் என்ன நடக்கிறது என்று பார்த்து விடலாமே - தயார்தானா? கடவுள் கோபித்துக் கொண்டு இரவோடு இரவாக ஓடி விடுவாரா? அல்லது தமிழில் அவற்றை நடத்துவோரை சபித்து விடுவாரா? இந்தச் சவாலை ஏற்கத் தயாரா?
பக்தியா, நாத்திகமா என்பதல்ல பிரச்சினை. தமிழ் நாட்டில் தமிழன் கட்டிய கோயிலில் தமிழுக்கு இடமில்லை என்பது தமிழர்களையும், தமிழ்நாட்டையும் அவமதிக்கும் இழிவுபடுத்தும் செயலாகும்.
மொழியின் சுயமரியாதைக்கும் இனமானத்துக்கும் இழிவாகும் நிலைமை முற்றினால் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தும் கோயில்களுக்கு முன் தமிழ்நாட்டுப் பக்தர்களே போராடும் நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? சிந்திக்கவும்!