கர்ப்பத்திலேயே கலாச்சாரத் திணிப்பாம்! வெறியேறி நிற்கும் இந்துத்துவ நோயாளிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

கர்ப்பத்திலேயே கலாச்சாரத் திணிப்பாம்! வெறியேறி நிற்கும் இந்துத்துவ நோயாளிகள்!

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

“கர்ப்பத்தில் இருக்கும்போதே கலாச்சாரம் புகுத்தப்பட வேண்டும்; நாட்டுக்குத்தான் முன்னுரிமை என்பதை குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்றுக் கொள்வது அவசியம்” என்று மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சியில் பேசப்பட்டதாக தொலைக்காட்சிச் செய்தி ஓட்டத்தில் (scroll) திடீரெனக் காண முடிந்தது. என்ன செய்தி என்று முழுவதுமாகப் பார்க்கும்போது தான்,  “அட, வழக்கம் போல் இது நம்ம இந்துத்துவக் கும்பலின் காமெடி” என்று தெரிந்தது.

"ராமர், அனுமன், சிவாஜி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள் குறித்து கர்ப்பிணிகளுக்குப் படிப்பிக்க வேண்டும். பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சமஸ்கிருதம் மற்றும் கீதையைப் படிப்பது கருப்பையைச் சுத்திகரிப்பதில் ஒரு பகுதி” என்கிறது ஆர்.எஸ்.எஸ்.சின் கிளைகளில் ஒன்றான ராஷ்டிரிய சேவிகா  சமிதியின் ‘சம்வர்தினி நியாஸ்’ என்ற அமைப்பு. அதன் சார்பில் கர்ப்ப சன்ஸ்கார் என்ற பெயரில் மகப்பேறு மருத்துவர்கள், யோகா பயிற்றுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்களைக் கொண்டு மாநாடு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 5ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது. 

(முற்போக்குச் சிந்தனைக்குப் பெயர் போன டெல்லி ஜே.என்.யூ. வளாகத்தில் அண்மைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் இத்தகைய மடமைக் கருத்துகளும், அடாவடித்தனமும் அதிகரித்துவருவது மற்றுமொரு பிரச்சினை.)

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சியில் அறிவியல் பார்வையையா எதிர்பார்க்க முடியும்? பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், இனி இரண்டு சக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணிக்கலாம் என்று யோசனை சொல்வது, கருநாடகத்தில் அதிகம் மின் தடை ஏற்பட்டதால்தான் மக்கள் தொகை பெருகிவிட்டது போன்ற அதியற்புதமான 'வேதிக்' அறிவியல் கருத்துகளை உதிர்ப்பதெல்லாம் பா.ஜ.க.வினர் தானே! அப்படித் தான் இங்கும் அனுமன், ராமன் என்று அளந்துகொட்டியிருக்கிறார்கள்.  

கர்ப்ப சன்ஸ்கார் என்ற பெயரில் இப்படி ஆர்.எஸ்.எஸ். கும்பல் பேசுவது புதிதல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இத்தகைய கருத்தைச் சொல்லி, அதை ஆய்வு செய்வதற்கென நிதி ஒதுக்கி, கருவுற்ற  நாற்பது மகளிரை வைத்து ஆய்வு நடத்தப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்தார்கள். பரிசுத்தி தந்திரா என்ற பெயரில் ஆயுர்வேத கர்ப்ப காலப் பயிற்சிகள் கொடுக்கப்படும்; இதற்கென ஆயுர்வேத, சமஸ்கிருதப் பேராசிரியர்கள் குழு பல அடுக்குகளாக இத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்றும் சொன்னார்கள். ஆக, அரசுப் பணத்தில் ஆராய்ச்சி (!?) செய்து, அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் நடைமுறைப் படுத்தியிருக் கிறார்கள் - அதற்குத்தான் இந்த மாநாடு!

கருவுக்குள்ளிருக்கும்போதே சக்கர வியூகத்தைப் பற்றி கேள்விப்பட்டு, பின்னாளில் அதைப் பயன்படுத்திய அபிமன்யூவைப் போல, நாரதர் சொல்லச் சொல்ல கருவிலிருந்தபடி நமோ நாராயண மந்திரத்தைக் கேட்டு விஷ்ணு பக்தனாகிய பிரகலாதனைப் போல, நாமும் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பது அவர்களின் அடிப்படை எண்ணமாம்!

அதிலும் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஆயிரம் குழந்தைகளையாவது கர்ப்ப சன்சார் மூலம் உருவாக்கி விட வேண்டும் என்பது குறிக்கோளாம்! இப்படி உருவாகும் குழந்தைகளைக் கருச் சுத்திகரிப்பு குழந்தைகள் என்பார் களாம்! 

அந்த அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜன் மிட்டல் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "கருவில் இருக்கும் போதே குழந்தைகளைத் தூய்மைப்படுத்த வேண்டியது முக்கியம். இந்தியாவின் பழம்பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்காக இந்தப் பயிற்சியை நாங்கள் வழங்குகிறோம். இப்போது பாருங்கள், இந்தியாவில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன.. பெற்றோ ரைக் கொலை செய்யும் பிள்ளைகள், சிறு குழந்தைகளைக் கூட விடாத காமுகர்கள் என நாடே சீரழிந்து கிடக்கிறது. எனவே இந்தக் காலத்தில் ராமபிரானைப் போன்ற ஒழுக்கமும், வீரமும் கொண்ட குழந்தைகள் இந்தியாவுக்கு அவசியமாகிறது" என்று கூறினாராம்!

ராமனைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்கிறார்களே, அந்த ராமன் வால்மீகி ராமாயணத்து ராமனா? கம்பராமாயணத்து ராமனா?

வால்மீகி ராமாயணத்தின் ராமன் ஏக பத்தினி விரதன் அல்லவே! ஏகப்பட்ட பத்தினி விரதனாயிற்றே! கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு காட்டுக்குத் துரத்திய கயவன் ஆயிற்றே! அந்தப்புரத்தில் சோம பானம், சுரா பானங்களுடன் ஏராளமான பெண்களோடு கூத்தடித்தவன் ஆயிற்றே! கடைசியில் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டவனும் அவன் தானே!

ராமனைப் பற்றிச் சொல்லும்போது அவன் யாருக்குப் பிறந்தான்? எப்படி பிறந்தான் என்பதையும் சொல்வார் களா? ராமனின் தந்தை என்று சொல்லப்படும் தசரத 'மகா' சக்கரவர்த்தி 60,003 மனைவியரைக் கொண்டவர் என்பதையும் சொல்லி ஒழுக்கத்தை வளர்ப்பார்களோ? தம்பிக்குக் கிடைக்க வேண்டிய பட்டத்துக்கு ஆசைப்பட்டு பரிதாப வேடம் போட்ட மோசடியையும் கற்றுக் கொடுப் பார்களா?

ராமனின் சூழ்ச்சியை, கோழைத்தனத்தை, அறத்திற்கு மாறான செயலை, மனிதத்தன்மையற்ற நடவடிக்கை களைச் சொல்லி குழந்தையை வளர்க்க இருக்கிறார்களா? பலே, பலே!

ராமனைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்று சொன்னவர்கள், எச்சரிக்கையாக கிருஷ்ணனைப் போல ஒழுக்கம் உள்ள குழந்தை பிறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏனென்றால், கிருஷ்ணனின் ஒழுக்க லீலைகள் எப்படி என்பதை இவர்களே பெருமை பொங்க நாடெங்கும் பரப்பி இருக்கிறார்கள். 

பகவத் கீதையை எடுத்துரைத்து குழந்தையை வளர்க்க வேண்டும் என்பவர்கள், கீதையைச் சொன்னதாகச் சொல்லப்படும் கண்ணன், கோபியரோடு என்னவெல்லாம் செய்தான் என்பது எடுத்துரைக்கப்படுமா என்பதைச் சொல்ல வேண்டாமா? அத்தை ராதையும், வளர்ப்புத் தாய் யசோதாவுமே கோபியரோடு கோபியராக ராசலீலை புரிந்ததை எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள்? கீதையில் கூறப்பட்டுள்ளபடி சூத்திரர்களும் பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கருவில் இருக்கும் குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களா?

கிருஷ்ணன் யார் என்றும், போர்க் களத்தில் மத்தியில் நின்று அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் யார் என்றும் சொல்ல முற்படும் போது மகாபாரதக் கதையும் விவரிக்கப்படுமா? அய்வருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம் பாஞ்சாலி, ஆறாவதாகக் கர்ணன் மீதும் ஆசைப்பட்ட கதை எடுத்துரைக்கப்படுமா? இப்படி எல்லாம் கேள்வி எழும் என்றுதான் கவனமாக மகாபாரதத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார்களோ?

மேலும் இந்த மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளை எல்லாம் கேட்டால் எப்படிப்பட்ட அறிவு ஜீவிகளை யெல்லாம் ஆர்எஸ்எஸ் பயன்படுத்துகிறது என்று உங்களுக்குப் புலப்படலாம். எய்ம்ஸ் மருத்துவமனையின் என்.எம்.ஆர் பிரிவின் மருத்துவர் ராம ஜெயசுந்தர் என்றொருவர் பேசுகையில், “பொருளாதார வசதி கொண்ட பெற்றோருக்கு உடல்நலக் குறைபாடுகள் மற்றும் ஆட்டிஸம் கொண்ட குழந்தைகள் பிறப்பது அதிகரித்துவிட்டது. இது கர்ப்பத்தில் என்ன தவறு நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒரு இணையர் குழந்தையைப் பற்றி நினைக்கத் தொடங்கிய வுடனே ஆயுர்வேதா நடைமுறைக்கு வந்துவிடுகிறது” என்றாராம். 'NMR' என்றால் Nuclear Magnetic Resonance  படித்து, MBBS., படித்து, RSS என்றால் புத்தி இப்படித்தான் வேலை செய்யும். பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சமஸ்கிருதம் மற்றும் கீதையை படிப்பது கருப்பையைச் சுத்திகரிப்பதில் ஒரு பகுதி என்கிறார்கள் இந்த மாநாட்டினர். கருப்பையைச் சுத்திகரிப்பது என்றால் என்ன என்பதுதான் நமக்கு விளங்கவே மாட்டேன் என்கிறது.

மூளைச் சலவையைத் தான் அப்படிச் சொல்கிறார் களோ? சுத்தரிகத்தல், சுத்தி செய்தல் என்பதெல்லாம் அவர்கள் கணக்கில் இந்துத்துவக் குப்பைகளை ஏற்றுதல்தானே?

‘இதுக்கே அசந்துட்டா எப்படி? இன்னொரு ஸ்பெஷல் அயிட்டமும் இருக்கு’ என்பது போல, ‘கர்ப்ப சன்ஸ்கார்’ முறையாகக் கற்பிக்கப்பட்டால் அதன் மூலம் வயிற்றிலி ருக்கும் குழந்தையின் டி.என்.ஏவையே மாற்றிவிடலாம் என்று பேசியிருக்கிறார்கள் அந்தக் கூட்டத்தில். அடி ஆத்தீ, கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வை மாற்றுவதா? இப்படியெல்லாம் பேசித்தான் வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்திய விஞ்ஞானிகளிடமே கூட அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். நாட்டையும் சேர்த்து அசிங்கப்படுத்துகிறார்கள்.

மேலும் இந்த பயிற்சிக் கூட்டத்தில், "கர்ப்பகாலத்தில் குழந்தையின் பாலினம் குறித்த எதிர்பார்ப்பே தற்போது குழந்தைகள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறுவதற்குக் காரணம்" என்றும் பேசியுள்ளார் டாக்டர் ஷ்வேதா டாங்க்ரே. இவர்களின் பெயருக்கு முன்னாலிருக்கும் டாக்டர் என்பதெல்லாம் வெறும் எழுத்துகள்தானே தவிர, பொருள் பொதிந்தவையல்ல!

உண்மையில், கருவில் இருக்கும் குழந்தையால் இவர்கள் விடும் கட்டுக்கதைகளைப் புரிந்துகொள்ள முடியுமா? கருவில் இருக்கும் குழந்தைக்கு, வளர்ச்சிப் படிநிலையில் காதுகளும் வளரும்; கேட்கும் திறன் தொடங்கும் என்பதெல்லாம் சரி தான். ஆனால், குழந்தைகளால் மொழியைப் புரிந்து கொள்ள முடியுமா? அ, ஆ வெல்லாம் சொல்லிக் கொடுக்காமல், சொற்களின் பொருள் புரியாமல், வண்ணங்கள் என்றால் என்னவென்று புரியாமல், கருவிலிருக்கும் ஒரு குழந்தை, இவர்களின் கட்டுக் கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டு வெளியில் வரும்போதே ஹிந்து மதத்தைக் காக்கும் மாவீரனாகக் கையில் சூலாயுதத்துடன் பிறந்து வெளிவரும் என்ற இவர்களின் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? 

13ஆம் வாரத்திலிருந்து கேட்கும் ஆற்றல் பெறும் குழந்தையால், ஒலிகளைக் கேட்க முடியும்; கடினமான சத்தம் அதற்கு இடையூறாக இருப்பதை உணர முடியும். ஆனால், எல்லாம் சத்தமாகச் சென்றடையுமே தவிர, பொழிப்புரை, பதவுரையுடன் கதையாகச் சென்றடையும் என்பதை அறிவியலாளர் மட்டுமல்ல, சாதாரண அறிவு கொண்டோரே ஏற்க மாட்டார்களே! மொழியைப் புரிந்து கொள்ள முடியாத குழந்தைக்கு, சமஸ்கிருத மந்திரமும், தவளைகளின் முணுமுணுப்பும் ஒன்றாகத்தானே இருக்கும்? (வேத மந்திரங்கள் பெரியவர்களுக்கே அப்படித்தான் இருக்கின்றன என்கிறீர்களா? அதுவும் சரிதான்!)

ராமனைப் போல், அனுமனைப் போல், சிவாஜியைப் போல் என்றெல்லாம் பேசும் இவர்கள், பெண் குழந்தை களைப் பற்றிப் பேசியிருக்கிறார்களா பாருங்கள்! கருவிலி ருக்கும் பெண் குழந்தைகளுக்கு யார் ரோல் மாடல்? பேசுவது கருவுற்ற பெண்களிடம்; ஆனால், பெண் குழந்தைகளைப் பற்றிய கவனமேயில்லை. காரணம், பிள்ளைப் பெறுவதோடு பெண்ணின் தேவை, வேலை முடிந்துவிட்டது. 'அதற்குத்தான் பெண்' என்னும் பிற்போக்குத்தனம் தானே!

அரசுகள் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அதிக இந்துக் குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு வீரத்தாய் விருது கொடுத்துப் பாராட்டியவர்களல்லவா இவர்கள்?

அதிகம் பிள்ளை பெற்ற மெஷின் யார் என்பதுதானே அதன் உண்மைத் தன்மை. இப்படித்தான் பெண் இருக்க வேண்டும் என்று எந்தப் பெண் கடவுளைக் காட்டுவார்கள்? அத்தனையும் ஆபாசக் களஞ்சியம் ஆயிற்றே! 

'அமைதியான இசையைக் கேட்க வேண்டும்; மன அமைதி தரும் வகையில் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்' என்பதெல்லாம், கருவுற்ற பெண்களின் நலன் சார்ந்தது. அதற்கு மாறாக, தங்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கருத்துகளைப் பெரியவர்களிடம் திணித்து, மாணவர் களிடம் திணித்து, குழந்தைகளிடம் திணித்து, கடைசியில் கருவில் இருக்கும் குழந்தையிடமும் திணிக்க முடியுமா என ஹிந்துத்துவ வெறி ஏறி அலையும் மனநோயாளிகளாக மாறியிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்களா இவர்கள்? குஜராத்தில், கருவிலிருக்கும் குழந்தையைக் கையை விட்டு எடுத்து தரையிலடித்துக் கொன்ற கொடூரக் கொலைகாரர்கள் தானே இந்துத்துவ மன நோயாளிகள்?

இவர்களின் போக்கிலிருந்து நமக்குத் தெரிவது இதுதான் - எப்படியேனும் இளம் வயதிலேயே 

பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்துவிட வேண்டும் என்பது தான் அவர்களின் ஒரே நோக்கம். அந்தப் பித்துத் தலைக்கேறிப் போய்தான், கண்ட இடங்களிலும் எப்படித் திணிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் சமய வகுப்புகள் என்ற பெயரால் இவர்கள் நஞ்சு திணிப்பதற்கு இடையூறாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டத்தில், மண்டைக் காடு பகவதி அம்மன் கோவிலில் ஹிந்து சமய வகுப்பு மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கத்தைத் தவிர, இந்து அறநிலையத் துறை மாநாடு நடத்தக் கூடாது என்று பதறுகிறார்கள். 

எங்கெங்கும் மதத்தை, இந்துத்துவாவை, ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளைத் திணிப்பது இவர்களுக்கு அடியாள் கூட்டம் சேர்க்க முனையும் நடவடிக்கையே!

No comments:

Post a Comment