ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : பெண் வழக்குரைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிறீமதி கூறியுள்ளாரே?

- ஆறுமுகம், திருத்தணி

பதில் 1 : நீதித்துறைதோறும் இப்படிப்பட்ட தேவையற்ற அறிவுரை வழங்கும் சனாதனம் இப்போது இருப்பது எவ்வகையில்  சரியானது? பெண்கள் நீதிபதியாக வந்ததே மனுதர்ம விரோதம்தான். வந்த பிறகும் ஏன் பழைய மனுநீதி மனப்பான்மை? வருத்தமாக உள்ளது!

---

கேள்வி 2: அரசுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புறப்பட்டுவிட்டாரே? தமிழிசையிடம் பாடம் கற்றிருப்பாரோ?

                                                                                                              - கோவிந்தசாமி, மதுரை

பதில் 2: தமிழிசையிடம் மட்டுமா? அமித்ஷா, மோடியை எப்படி திருப்தி செய்வது என்பதையும் ஆராய்ச்சி செய்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களோ?

--- 



கேள்வி 3: இராகுல் காந்தி, நீரவ் மோடி குறித்துப் பேசியதை பிரதமர் நரேந்திரமோடி குறித்துப் பேசியதாக வழக்குத் தொடர்ந்து 2 ஆண்டு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்களே?

                                                                                                                       - வீராசாமி, நெல்லை

பதில் 3: இந்தச் செய்தி பரவ வேண்டிய செய்தி!

 ---

கேள்வி 4: ரவுடிகளை பிரதமர் மோடியையே சந்திக்க வைக்கும் அளவிற்கு கருநாடக பாஜக வளர்ந்துவிட்டதே?

                                                                                                    - அருள்மொழி, வியாசர்பாடி

பதில் 4: பா.ஜ.க. "வேகமாக" - "தீவிரமாக"  வளருகிறது என்பதற்கு உண்மை அர்த்தம் இதுதானோ?

---


கேள்வி 5: இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் பஞ்சாபில் ஆட்சியில் இருந்தபோது வராத காலிஸ்தான் பிரச்சினை ஆம் ஆத்மி ஆட்சியில் மட்டும் வந்ததன் ரகசியம் என்ன?

                                                                                                          - கருப்பசாமி, திருவாரூர்



பதில் 5: "என்னோடு இல்லாத எவரும் - என் எதிரிகள்தான்" என்ற புதிய அரசியல் பாடத்தின் விளைவு போலும்!

---

கேள்வி 6: கேரளாவில் பாஜக - ஆட்சியைப் பிடிக்க சிறுபான்மையினரை தாஜா செய்வோம் என்று கூறிய அடுத்த வாரத்திலேயே கேரள மத போதகர் நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கமாட்டோம் என்கிறாரே?

                                                                                                            - தாமரை, வேளச்சேரி

பதில் 6: வித்தைகளின் பலன் தெரிகிறதா? சாம, பேத, தான, தண்டம் - மனுதர்மத்திலும்.

---

கேள்வி 7: தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை இரண்டையுமே எதிர்க்கட்சிகள் சரியான காரணம் கூறாமல் சப்பைக் காரணங்களைக் கூறி எதிர்க்கின்றனவே?

                                                                                            - செந்தில்வேலன், திண்டுக்கல்

பதில் 7: எதிர்க்க சரக்கு கிடைக்காததால் - "சப்பைகளை" தேடுகின்றனர் போலும்!

---

கேள்வி 8:  போர்நிறுத்தம் தொடர்பாக சீனாவை அழைத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளாரே, இதை முதலில் செய்திருந்தால் எப்போதோ போர் முடிவிற்கு வந்திருக்குமே?

                                                                                                     - வேணுகோபாலன், திருச்சி

பதில் 8: முதலிலே செய்திருந்தால் போர் ஆயுதங்களை ஏராளம் இரு புறத்திற்கும் விற்றுப் பணம் பண்ணும் வேலை முடங்கிப் போகாதோ!


---


கேள்வி 9: 'உலக தண்ணீர் நாளில்' - கிராமசபைக் கூட்டம் - முதலமைச்சருக்கு இப்படி ஒரு சிந்தனை வந்தது எப்படி?

                                                                                                                - சந்திரசேகர், மதுரை

பதில் 9: அவரது மக்கள் நல ஆட்சியில் உருவான சிந்தனையே அடிப்படைக் காரணமாக இருக்க வேண்டும்.

---


கேள்வி 10: புதுச்சேரியிலும் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்களே - தமிழிசை ஒப்புக்கொள்வாரா? 

                                                                                                                  - செல்வராஜ், காஞ்சி

பதில் 10: பொறுத்திருந்து பார்ப்போம்!


No comments:

Post a Comment