பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

பிற இதழிலிருந்து...

கருவறை தீண்டாமை இன்னமும் நீடிப்பதா?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு மாநில அரசின் சட்டத்தின்கீழ் நியமிக்கப் பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை ஆகம விதி களை காரணம் காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சமூகநீதிக்கு மட்டுமல்ல, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் எதிரானது.  இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாநில அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ப தற்கான சட்டம் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது. எனினும் சனாதன வாதிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்தனர். 2007ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டதோடு 

6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. எனினும் சனாதனவாதிகள் குறுக்கு வழியில் குழப்பம் விளைவித்து இந்தத் திட்டத்தை நிறை வேற்றவிடாமல் செய்தனர்.  

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. பயிற்சி பெற்ற 28 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டன. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கில் ஆகம விதிகளை பின்பற்றி இயங்கும் கோயில்களில் ஆகம விதிப்படி அர்ச்ச கர்களை நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் இதுதொடர்பான பட்டியலை தயாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. 

இந்தப் பின்னணியில் திருச்சி குமாரவயலூர் முருகன் கோயிலில் பிரபு, ஜெயபாலன் ஆகிய இருவரை நியமித்தது ஆகமவிதிகளுக்கு எதி ரானது என வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த நியமனங்கள் ஆகமவிதிகளுக்கு எதிரானது என்று கூறி நியமனங்களை ரத்து செய்ததோடு பரம்பரையாக அந்தக் கோயிலில் அர்ச்சகராக உள்ளவர்களை பணிநியமனம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

ஆகம விதிகள் அரசியல் சட்டத்தைவிட மேலானதா? என்ற கேள்வி எழுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறும்போது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஜாதி அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம்  நடை பெற வேண்டும் என்பது அநீதியானதாகும். ஒரு கோயில் எவ்வாறு கட்டப்பட வேண்டும். பூஜை கள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்துத் தான் ஆகமவிதிகள் கூறுவதாகவும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆகம விதி கூறவில்லை என்று ஆகம விதிகளை அறிந்த வர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை அப்படி இருந் தாலும் கூட அது மாற்றப்பட வேண்டுமேயன்றி நாகரிக சமூகத்திற்கு ஒவ்வாத விதிகளை பிடித்துக் கொண்டு சமூகநீதியை மறுப்பது அநீதியாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதோடு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக்குவதற்கு இன்னும் தெளிவான சட்டவிதிகளை உருவாக்க வேண்டும்.

நன்றி:  'தீக்கதிர்' தலையங்கம், 6.3.2023


No comments:

Post a Comment