Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
குறள் - மாபெரும் பகுத்தறிவு நூல் - தந்தை பெரியார்
March 19, 2023 • Viduthalai

திருவள்ளுவரின் திருக்குறளைப் பற்றிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அது இவ்வாரக் குடிஅரசில் பிறிதோரிடத்தில் பிரசுரிக் கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் ஊன்றிப் படிக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். ஒரு தடவை மாத்திரம் படித்தால் போதாது, இருமுறை, மும்முறை வாசிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம்.

குறள் ஒரு நீதிநூல் என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. என்றாலும் பெரியார் அவர்களின் கருத்துப்படி அது ஒரு கண்டன நூல் என்றே கருத வேண்டியிருக்கிறது. திருவள்ளுவர் குறளை எழுதிய காலம், ஆரிய மதக் கடவுள்கள் - சாஸ்திரங்கள் - புராண இதிகாசங்கள் - ஆரியப் பழக்க வழக்கங்கள் இந்த நாட்டில் புகுந்துவிட்ட காலமாகும். அவைகளை மக்கள் நம்பத் தலைப்பட்ட காலமாகும். இல்லாவிட்டால், எடுத்துக்காட்டடாக, “அந்தணர்” என்பவர் யார் என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் வள்ளுவருக்கு எப்படி வந்திருக்க முடியும்?

“அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” என்கிற குறள், ‘அந்தணர்’ என்கிற ஒரு ஜீவகாருண்யம் நிறைந்த தமிழ்ச்சொல்லை, ஜீவகாருண்யத்தின் ஜென்ம விரோதிகளான பார்ப்பனர்கள், தங்களையே குறிப்பிடக் கூடிய ஒரு தனி ஜாதிச் சொல்லாக ஆக்கிவிட எத்தனிக்க, அந்த எத்தனமும் மக்களால் உண்மை என்று நம்பக்கூடிய அளவில் வந்து விட்டதினால் தானே, ‘அந்தணர்’ என்பவர்கள் ஒரு ஜாதிக்காரரல்ல, அந்தணர் என்பது ஜாதிப் பெயரல்ல; யார் யார் மற்ற ஜீவன்களிடத்திலெல்லாம் பரிபூரண இரக்கத்தோடு மற்ற ஜீவன்களின் துன்பத்தை, தொல்லையை, கஷ்ட, நஷ்டத்தைத் தங்களுடையது என்று கருதி, அவைகளைப் போக்குவதற்கான பரிகாரத்தை ஓய்வு ஒழிச்சலில்லாமல் - வாழ்க்கையில் ஒரு லட்சியமாகக் கொண்டு நடக்கிறார்களோ, அவர்கள்தான் “அந்தணர்கள்” என்று விளக்க வேண்டியதாகிவிட்டது?

பார்ப்பனர்கள் தம்மை அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்வது தப்பு; அவர்களை, மற்றவர்கள் அந்தணர்கள் என்று உடன்பட்டுப் பேசுவது, எழுதுவது அதைக் காட்டிலும் பெரிய தப்பு என்று இந்தக் குறள் கண்டிக்கவில்லையா? “மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான்  பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்” என்பது ஒரு குறள். 

இது, பார்ப்பான் என்றால், அவன் எவ்வளவுதான் கொலை பாதகனாய் இருந்தாலும், தாய் என்றும் தங்கை என்றும் வித்தியாசம் பார்க்காத பெரிய காமாந்தகாரனாய் இருந்தாலும், அவன் பிறந்த பிறப்பினாலேயே உயர்ந்தவனாவான், பூதேவன் அவனே, அவனையே மக்கள் பூஜிக்க வேண்டும் என்கிற கருத்தைப், பார்ப்பனர்கள் - பார்ப்பன ரிஷி சிரேஷ்டர்கள் பரப்பியதினால் அல்லவா, அதை மறுத்து, கடவுள் முகத்தில் பிறந்தவன் என்று சொல்லப்படுகிற பார்ப்பானாயிருந்தாலும், ஒழுக்கங்கெட்டு விட்டால் அவன் இழிமகன்தான். மனிதனுக்கு ஒழுக்கம்தான் முக்கியமே தவிர, பிறப்பு - ஜாதி முக்கியமல்ல என்றுதானே இந்தக் குறள் வற்புறுத்துகிறது?

அவர்களுடைய கொள்கை, வேள்வி - யாகம் செய்யவேண்டும் என்பதாகும். அதுமட்டுமல்ல, யாக வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - சண்டாளர்கள் - அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்லுகிறார்? “அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்று சொல்லுகிறார். 

இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதைத் தெளிவாக்கவில்லையா? மற்றும் அதைக் கண்டன நூல் என்று மாத்திரமல்லாமல் ஒரு மாபெரும் பகுத்தறிவு நூல் என்றும் கருதவேண்டியிருக்கிறது. கண்டனநூல் என்றால், எதைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று பார்ப்போமானால், ஆரியத்தை - ஆரியப் பண்பை, அதிலுள்ள உண்மை ஒழுக்கத்துக்கும், பகுத்தறிவுக்கும் ஏற்காத ஆபாச மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டிக் கும் கண்டன நூல் என்றே எண்ணலாம். மற்றும் பல மதவாதிகளின் கற்பனைகளை அதாவது பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காததும், வெறும் நம்பிக்கை - நம்பி ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தினால் மாத்திரமே நிற்பனவாகிய பல மூடநம்பிக்கைகளை ஒழித்து, மக்களுக்கு இயற்கைத் தன்மை விளங்கும்படி செய்வதாகிய பகுத்தறிவு நூல் என்றே சொல்லலாம்.

இந்தப்படி சொல்லுவதிலும் பெரியார் அவர்கள் தமது கட்டுரையில் ஒரு பாதுகாப்புப் பிரிவைச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுவும் மிகமிகக் குறிப்பிடத்தக்கதாகும். “நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதின் மூலம், குறள் முழுவதையும் ஒப்புக் கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதிவிடாதீர்கள். எனக்கு - எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம். அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு - எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன. அதுபோலவே ஒழுக்கவாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும் வேண்டியவைகள் எல்லாம் அதில் இருக்கின்றன, எடுத்துக் கொள்ளுங்கள்” என்பது ஆக தெளிவுபட விளக்கி உள்ளார்.

ஏன் அப்படிக் கூறியிருக்கிறார் என்றால், இன்று நம் திராவிட மக்களுக்கு முக்கியமாய், முதன்மையாய், இன்றியமையாததாய் வேண்டப் படுவது ஆரிய ஆபாசமும், அறியாமையும், மூடநம்பிக்கையும் கொண்ட ஜாதி, மத, கடவுள்கள் தன்மையிலிருந்து வெளியேறிப் பகுத்தறிவும் தன்மானமும் பெற வேண்டியதே ஆதலால், அவற்றைப் பொறுத்தவரை பெரியாரவர்களும் திராவிடர் கழகம் கருதும் - கூறும் விஷயங்களுக்கு நல்ல உறுதியான ஆதாரங்கள் அதில் - குறளில் இருக்கின்றன என்ற உறுதியால் அப்படிக்கூறி இருக்கிறார்கள். 

அதாவது ஒருபாதுகாப்புக் குறிப்புக் கூறி இருக்கிறார்கள். ஏன்? அப்பாதுகாப்பு என்றால், குறளின் காலம் இன்றைக்குச் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தியதாகலாம். அப்படி இருக்குமானால் 2,000 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட பல அறஉரைகள் பற்றிய நீதிகள், சமுதாய முறையான ஒழுக்கங்கள், அக்காலத்தில் நாட்டில் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த கருத்துக்கள் யாவும், இன்றும் பொருத்தமானதாகவும் மதிக்கத் தகுந்ததாகவும் இருக்கும் என்று சொல்லுவது இயற்கைக்குப் பொருந்தாததாகும். 

ஆதலால், அவற்றுள் சில இன்றைய நிலைக்கு - கருத்துக்கு - மக்களின் ஆசாபாசத்துக்கு - சுற்றுச் சார்புக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டியது அறிவுடைமையாகும். உதாரணமாகத் தனி உடைமை உரிமை உள்ள காலத்தில், ஒருவனின் உடைமையை அவன் சம்மதமின்றி எடுப்பது திருட்டு ஆகும் என்பது ஒழுக்கவிதியாகும். அதே ஒழுக்கவிதி, தனி உடைமை உரிமை இல்லாத காலத்தில், ஒருவன் தனக்கென்று அதிக உடைமை எடுத்து வைத்துக் கொள்ளுவானானால். அதைப் பலாத்காரமாகப் பறிக்காதது ஒழுக்கத்துக்குக் கேடாகும் அல்லவா? இப்படியாக மற்றும் பல படியாக காலத்துக்கு - நிலைமைக்கு ஏற்ப பல மாறுதல் இயற்கையாக அமைக்கப்பட வேண்டியதும் அனுசரிக்கப்பட வேண்டியதும் இயல்பாகும்.

குறள், ஆரியத்தை ஆரியப்பண்பு முதலிய வற்றைக் கண்டிக்கும் கண்டன நூல் என்று எதனால் சொல்லப்பட்டது? என்பதைச் சிந்திப்போம். ஆரியத் துக்கும் ஆரியப் பண்புக்கும் அடிப்படை முதலாவது மூட நம்பிக்கை. பிறகு, அதன் மீது ஆரியர்களின் சுயநலத்துக்காகக் கற்பனை செய்துகொண்ட மதம், கடவுள்கள், ஜாதிகள், மேல் உலகம், கீழ் உலகம், நரகம், மோட்சம், தலைவிதி, முன் ஜன்மம், பின் ஜன்மம், இவைகளைப் பிரசாரம் செய்ய அவர்களால் உண்டாக்கப்பட்ட கடவுள்கள் - வேத - சாஸ்திர - புராண - இதிகாசங்கள் முதலியவைகளும், இவைகளை ஆதாரமாய்க் கொண்ட நாள்கள், பண்டிகைகள், உற்சவங்கள், பழக்க வழக்கங்கள் முதலிய கொண்டாட்டங்களும் ஆகும்.

குறள் இவைகளை எல்லாம் பெரிதும் கண்டித்தும், மறுத்தும், கிண்டல் செய்தும், அலட்சியப் படுத்தியும் வருகிறது. இந்தப்படி கண்டித்து மறுத்து அலட்சியப்படுத்தி, கிண்டல் செய்துவருவதற்கு ஆதாரமாகக் குறளில் பல குறள்கள் இருக்கின்றன. 

முதலாவதாக தலைவிதியையும், கடவுளின் சர்வ சக்தியையும் குறள் மறுக்கின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே மிகமிகப் போதுமான தென்போம். அது என்னவெனில் “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்” என்று கூறுகிறது.

இதில் இரண்டு உண்மைகள் இருக்கின்றன. 1. ஒரு மனிதன் இரந்து - பிச்சை எடுத்துக் கீழ்மைப்பட்டு உயிர் வாழ்வதற்குக் காரணம் அவன் தலைவிதி அல்ல என்பது. 2. உலகத்தைச் சிருட்டித்தது அதாவது உலகில் உள்ள நலத்துக்கும் கேட்டிற்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், கடவுள் காரணமல்ல; கடவுள் சக்தி - ஆக்கல் அவற்றிற்கு பொறுப்பல்ல என்பது.

இரண்டாவதாக, தேவர்கள் என்பதாக யாரும் இல்லை என்பதும், ஆரியர்களால் கற்பிக்கப்பட்டிருக்கும் தேவர்கள் என்பவர்களுக்கு அயோக்கியத்தனங்கள் தான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன என்பது விளங்க, ஒரு தங்கமான எடுத்துக்காட்டு குறளில் விளங்குகிறது. அது என்னவெனில், ‘தேவரனையர் கயவர்; அவர்தாம் மேவன செய்தொழுகலான்’ என்று கூறுகிறது.

இது எவ்வளவு பொருத்தமானதும் சரியானதும் என்பதை ஆரியக்கடவுள்கள், தேவர்கள், ரிஷிகள், தேவர்கோன் முதலியவர்களைப் பற்றிய சாஸ்திர - புராண இதிகாசங்களைப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கும். தேவர்கள் என்பதில், குறள் எல்லாத் தேவர்களையும், தேவர்கோன் உள்பட சேர்த்தே, பல இடங்களில் அவர்களை இழிவுபடுத்திக் கூறுகிறது. மற்றும் உலக நடப்புக்கு - வாழ்வுக்குக் கடவுள் காரணமல்ல, இயற்கை நடப்புத்தான் காரணம் என்பதைக்காட்டக் குறளில் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எவை எனில், “வானின்றுலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று.”

மழையால்தான் உலகம் வாழ்கின்றது - காப்பாற்றப்படுகின்றது. ஜீவராசிகளுக்கு உணவு அளிக்கப்படுகின்றது என்பதற்கும், மற்றும் மழையால்தான் கடவுள் காரியங்களும் மனிதர் தர்மங்களும் (கடமைகளும் அறமும்) நடைபெறுகின்றன என்பதற்கும் குறளில் பல ஆதாரமாய் விளங்குகின்றன. அதாவது “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு” என்றும், “தானம் தவம் இரண்டும் (கூட) தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின்” மழை இல்லாவிட்டால் கடவுளுக்கு பூசனையும், தேவர்களுக்குப் படைப்பும் கிடையாது. மக்களிடமும், ஒழுக்கம் கடமை ஒன்றுமே இருக்க முடியாது என்றும் தெளிவுறுத்துகிறது.

மக்களில், பிறப்பில் ஜாதி இல்லை, உயர்வு தாழ்வு இல்லை என்பதையும், தொழிலாலும் உயர்வு தாழ்வு இல்லை என்பதையும் குறள் நன்றாய் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக, “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பு (ம்) ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (லும்) “மக்கள் பிறவியில் யாவரும் சமம், தொழிலிலும் அதாவது மக்களுக்கு ஆக யார் எத்தொழிலைச் செய்தாலும் அதிலும் யாவரும் சமமே யாவர்” என்கின்றது. தெய்வ எத்தனம் என்பது பயனற்றது, மனித எத்தனம்தான் உண்மை என்பதற்கும் எடுத்துக்காட்டு குறளில் இருக்கிறது. “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்.” எல்லாக் காரியங்களும் தெய்வத்தால்தான் ஆகிறது என்று சொல்லப்பட்டாலும், உண்மை நடப்பு என்னவென்றால், மனிதனது முயற்சியும் செய்கையும் இருந்தால்தான் பயன் உண்டாகும் என்கிறது. மனிதனின் நடப்புக்கு - குணங்களுக்கு அவனவன் சரீர அமைப்புத்தான் முக்கிய காரணமே ஒழிய விதியோ, முன்ஜென்ம கர்மபலனோ என்பது அல்ல என்பதைக்குறளில் “ஊழ்” என்பது விளக்குகிறது.

ஊழ் என்பதை, குறள், சரீர அமைப்பு இயற்கைக்குணம், பிறவிக்குணம், ஜென்மக்குணம் என்பதாகக் கொள்ளாமல், முன் ஜென்மத்தில் அச்சீவன் செய்த கர்மத்திற்கு ஏற்ற விதி என்றும், அது தவறாமல் நடந்தே தீரும் என்றும் குறள் ஆசிரியர் கருதி இருப்பாரானால், அவர் இக்குறளில் இந்த ‘ஊழ்’ என்ற ஒரு அதிகாரத்தை (அதாவது இந்த ஒரு 10.பாட்டை) மட்டும் பாடி விட்டுப்பேசாமல் தனது கடமையை முடித்துக் கொண்டு இருப்பார். அன்றியும் இந்தப் பத்துக் குறளைக்கூட இவர் பாடி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் எனில், இவருக்கு முன்பதாகவே தலைவிதியையும், முன் ஜென்மத்தையும், கர்ம பலனையும் பற்றி ஏராளமாக, வண்டி வண்டியாக ஆரியரால் எழுதப்பட்ட நூல்கள் இருக்கும்போது இவர் - மற்ற துறைகளில் ஆரியத்தை மறுத்து ஆரியர் பண்புகளைக் கண்டித்துக் கூறிய இவர், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருந்தாத இதைப்பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்தித்தால் விளங்காமல் போகாது. அன்றியும் தலைவிதி, முன் ஜென்மக் கர்மபலன்களின்படியேதான் மனித வாழ்வின் சம்பவங்கள் என்பதும் அவை வேறு எந்தக் காரணங்கொண்டும் மாற்றமில்லாதது என்பதும் முடிவானால், மற்ற நீதிகள், வழிபடுதல், வழிமுறைகள், கற்பித்தல்கள், மனித அறிவுப் பெருமை, சுதந்திரம் முதலியவைகள் பற்றிக் கூறுவது பயனில்லவேயாகும். ஆதலால் ஊழுக்கு, விதி, முன் ஜென்மக் கர்மபலன் என்று கருத்துக் கொள்ளுகிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருந்து பொருள்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.

இவை போலவே, குறளில் ஆரியத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராக அறிவூட்டித் தெளிவு படுத்தும் கருத்துகள் ஏராளமாக இருப்பதால், பெரியார் அவர்கள் குறளை திராவிட மக்களுக்கு எடுத்துக்காட்டி வழிபடவைக்கிறார். குறளில் பல முரண்பாடுகள் இருப்பதாக மதப் பண்டிதர்கள், மதவாதிகள், ஆரிய தாசர்கள் கூறக்கூடும். அதுபற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. நமக்கு ஒப்பானவைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. நடப்புக்குத் தேவையானவைகளையெல்லாம் நாம் எடுத்துக்கொள்ளு வோம். நம்பிக்கைக்குத் தேவையானவைகளுக்கு, நம் பகுத்தறிவால்  நிறுத்து ஆராய்ச்சி அனுபவ, உரைகல்லில் உரைத்துப்பார்த்துக் கொள்முதல் செய்வோம். குறள் வாழ்க!

குடிஅரசு - தலையங்கம் - 30.04.1949


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn