அண்ணாமலைக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் என்ன தொடர்பு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

அண்ணாமலைக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் என்ன தொடர்பு?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று மோடி கதைத்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த 2014,2015,2016 ஆம் ஆண்டு களில் 400க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நூற்றுக் கணக்கான தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் கைப் பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடிக்கு மேல் ஆகும் என்று தமிழ்நாடு மீனவர் அமைப்பினரால் கூறப்பட்டது

இலங்கைக் கடற்படையினரால் மீனவர் சுட்டுக் கொல் லப்பட்டது மட்டுமின்றி இந்தியக் கடற்படையினரே ஹிந்தி தெரியாத காரணத்தினால் மீனவர்களைத் தாக்கிய நிகழ்வுகள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில்  நிகழ்ந்து உள்ளன.  மார்ச் 2017-இல் இலங்கைக் கடற்படையால் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 22 வயதான மீனவர் ப்ரிட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மீனவர்கள் பலரும் படுகாயமடைந்து கரை திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்பு எல்லாம் இலங்கைக் கடற்படை மட்டுமே மீனவர்களை தாக்குவதாக செய்திகளைக் கேட்டு இருப்போம். ஆனால், இந்திய கடற்படை மீனவர்களைத் தாக்கிய சம்பவம் 2017-இல் அரங்கேறியது. 2017-ஆம் ஆண்டு நவம்பரில் ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின்மீது இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள்   ரப்பர், அலுமினியம் புல்லட்கள் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் அளித்தனர்.

அதில் பிச்சை ஆரோக்கியதாஸ் மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், மீன்பிடிப் படகுகளை நிறுத்தி மீனவர்களிடம் ஹிந்தி தெரியவில்லை என்ற காரணத்திற்காக தாக்கியதாகவும் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது தொடர்பாக இந்திய கடற்கரை பாதுகாப்பு வீரர்கள் மீது   கொலை முயற்சி  உள்பட பல  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முன்பாக,  2017 அக்டோபர் மாதத்தில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க 200-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற வர்களை கச்சத்தீவு பகுதிகளில் நிறுத்தி , வலைகளை வெட்டி, மீனவர்களை விரட்டி அடித்தனர்.

டிசம்பர் 2018-இல் 500 படகுகளில் கச்சத்தீவு நோக்கி மீனவர்கள் சென்றுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் வந்த இலங்கைப் படையினர் 3000 மீனவர்களை விரட்டியதாக மீனவ அமைப்பின் பொதுச்செயலாளர் போஸ் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

2019-இல் ராமேசுவரம் மண்டபத்தில் இருந்து கச்சத்தீவு நோக்கி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.  இரண்டு நாள்களில் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பிப்ரவரி 22-ஆம் தேதி  செய்தி வெளியானது. 2019 ஜனவரி 13-ஆம் தேதி இலங்கைக் கடற்படையால் விரட்டப்பட்டதில் இரு படகுகள் கவிழ்ந்து முனியசாமி என்பவர் உயிரிழந்தார். இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு முனியசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

கச்சத்தீவு பகுதிகளில் இந்திய - தமிழ்நாடு மீனவர்கள் விரட்டப்படுவது, வலைகளை வெட்டி நாசம் செய்வது, படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களைத் தாக்குவது கைது செய்வது போன்ற கொடூரங்கள் இன்னும் தொடர்கின்றன. மீனவர்களுக்கு நடக்கும் இக்கொடுமைகள் முடிந்த பாடில்லை.

 2020, 2021, 2022 மற்றும் 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டுமே 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 48 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் - இது தொடரக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை மீன்பிடி மற்றும் கடல்சார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பவர்  தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக கொழும்பில் பேசும் போது, 

“தமிழ்நாட்டு மீனவர்கள் எங்கள் கடல்வளத்தை சுரண்டுகின் றனர். அவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க ஒரு நிமிடம் கூட அனுமதிக்க மாட்டோம்”  என்று கூறியவர்,  தொடர்ந்து பேசும் போது ”தமிழ்நாடு மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவரிடமும் விரிவான அறிக்கையைக் கொடுத்துள் ளோம்”  என்று கூறினார்.

 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வெளிநாட்டு அமைச்சர் விளக்கம் கேட்டு அறிக்கைகொடுப்பது பொதுவானது, ஆனால் இவர்கள் தமிழ்நாட்டின் ஒரு கட்சித் தலைவருக்கு - அண்ணாமலைக்கு எதற்காக மீனவர்கள் கைது தொடர்பாக விளக்க அறிக்கை கொடுக்க வேண்டும்.? அவர் என்ன தமிழ்நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியா? அல்லது ஒன்றிய அரசால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியா?    

சமீபத்தில் இலங்கை சென்றுவந்த அண்ணாமலை  - அங்குள்ள தமிழர்களிடம் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகவே செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணம் கண்டறியப்பட வேண்டும். இன்னொரு நாட்டின் அமைச்சர் ஒருவர், சம்பந்தா சம்பந்தமின்றி இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலக் கட்சியின் தலைவருக்கு அறிக்கை  கொடுப்பது சரிதானா? இதன் பின்னணி என்ன?

இலங்கை சென்ற தமிழ்நாடு பிஜேபி தலைவர் அந் நாட்டு அமைச்சருடன் என்ன பேசினார்? தமிழ்நாடு  மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும், தாக்கப்படுவதற்கும் யார் பின்னணி - எந்தப் பின்னணி என்பது அறியப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

No comments:

Post a Comment