பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 25, 2023

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் எதிலும் தனித்தன்மையோடு இருப்பார்!

ஒரு பகுத்தறிவாளரை, சுயமரியாதைக்காரரை நாம் இழக்கின்றோம் என்றால்

சமூக விஞ்ஞானியை இழக்கின்றோம் என்று அர்த்தம்!

சென்னை, மார்ச் 25 பகுத்தறிவாளரில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், அவர் திராவிடர் கழகத்தில் உறுப்பினரா? உறுப்பினர் இல்லையா? என்பது முக்கியமல்ல. ஒரு பகுத்தறிவாளர், ஒரு சுயமரியாதைக்காரர் - அவர் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம்; கட்சிகளுக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கலாம். அது நமக்கு முக்கியமல்ல. மனிதர்கள் என்று வருகின்ற நேரத்தில், அப்படிப் பட்டவர்களை நாம் இழந்தால், சமூக விஞ்ஞானிகளை இழக்கின்றோம் என்று அர்த்தம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

படத்திறப்பு - நினைவேந்தல்

கடந்த 23.3.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற மறைந்த பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

எத்தனையோ மகிழ்ச்சிகரமான விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள்!

இந்தப் பெரியார் திடல், எத்தனையோ மகிழ்ச்சிகர மான விழாக்களையும், கொண்டாட்டங்களையும், கருத்தரங்கு களையும் நடத்தி மகிழ்ந்திருக்கிறது; மகிழ்ந்துகொண்டிருக்கிறது.

இனமானப் பேராசிரியர் மதித்த 

பேராசிரியர் மங்களமுருகேசன்

ஆனால், இப்படி ஒரு துன்பியல் நிகழ்வு - அதிலிருந்து வெளியில் வருவது எப்படி என்பதையெல்லாம் ஆய்வு செய்யும் நிலையில் நாம் உள்ளோம். மறைந்தும் மறையாமலும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கக்கூடிய படமாகி வரலாறாகிவிட்ட அருமை இனமானப் பேராசிரியர் என்று, பேராசிரியரை நாம் அழைத்தோம் - அந்தப் பேராசிரியர் மதித்த ஒருவர் என்று சொன்னால், அவர் நம்முடைய பேராசிரியர் மங்களமுருகேசன் என்ற அந்த சிறப்புமிகுந்த ஆற்றல் வாய்ந்த அருமைத் தோழர், கொள்கைப் பயணத் தோழர் - எதையெல்லாம் நாங்கள் விரும்புகிறோமோ, அதையெல்லாம் செய்த தோழ ருடைய நினைவேந்தல், புகழ்வணக்கம் - அவருக்குப் பெருமைச் சேர்த்து ஆறுதல் நாம் அடைந்து, அடுத்த பணியை அவரைப் போலவே நாம் செய்யவேண்டும் என்று உறுதியேற்கக் கூடிய இந்த நிகழ்ச்சிக்கு, வரவேற்புரையாற்றியுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில், அவருடைய ஆரூயிர் தோழராக, அறுபதாண்டு கால நண்பராக சிறப்பாக இருந்து, அவ ரைப்பற்றி எத்தனையோ சுவையான செய்திகளையும், அவர் எப்படி வளையாதவராக இருந்தார்கள்; அதனால், விளையவேண்டிய விளைச்சல்கூட விளையாததாகி விட்டது என்பதையெல்லாம் தயக்கமின்றி எடுத்துச் சொன்ன அருமைப் பேராசிரியர் முனைவர் 

மா.செ. என்று எல்லோராலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மா.செல்வராசன் அவர்களே,

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர் பேராசிரியர் ஜெகதீசன்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக அவருடைய பெருமைகளைச் சொன்ன பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான முனைவர் பேராசிரியர் ஜெகதீசன் அவர்களே,

பெரியார் நூலக வாசகர் வட்டத்தினுடைய தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே,

கழகப் பிரச்சார செயலாளரும், உயர்நீதிமன்ற வழக் குரைஞருமான அருமைத் தோழர் அருள்மொழி அவர்களே,

இறுதியில், குடும்பத்தின் சார்பில் நன்றியுரை கூற விருக்கக்கூடிய மருத்துவர் தென்றல் மங்களமுருகேசன் அவர்களே,

முனைவர் ந.க.மங்களமுருகேசனின் அன்புச் செல்வங்களாக இருக்கக்கூடிய மகன் ராஜேஷ் கந்தன் அவர்களே, மருமகள் ஆர்த்தி அவர்களே, பேரப் பிள்ளைகளே, மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான நண்பர்களே, சான்றோர்ப் பெரு மக்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக் கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே உரையாற்றிய நண்பர்கள், மறைந்த பேரா சிரியர் மங்களமுருகேசன் அவர்களுடைய சிறப்பு களைப்பற்றியெல்லாம் சொன்னார்கள்.

துன்பமான கடமையை நான் ஆற்றுவேன் என்று எதிர்பார்க்கவில்லை!

இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல, இப்படியொரு துன்பமான கடமையை நான் ஆற்றுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர் பார்க்காமல் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்த துண்டு.

அதுபோலத்தான், அருமை நண்பர் மங்கள முருகேசன் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட நேரத்தில், என்னால் சிறிதுநேரம் நம்பவே முடியவில்லை.  அவருக்கு எந்தவிதமான உடல்நலக் குறைவும் இல்லையே - என்று கேட்டேன்.

கொள்கையில் அவர் எப்படி பற்றுக்கொண்ட வராக இருந்தாரோ, அதுபோல சில நேரங்களில் அவருடைய பிடிவாதமும் தனியானதாக இருக்கும்.

உரிமை எடுத்துக்கொண்டு பேசக்கூடிய நபர் களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

வளைந்தாரோ இல்லையோ, 

திடலிலே கலந்தார்!

இங்கே மா.செ. ஓர் உதாரணம் சொன்னார்; வளைந்து வளைந்து கடலிலே கலந்ததுபோல என்று. அவர் வளைந்தாரோ இல்லையோ, திடலிலே கலந்தார்; அதுதான் மிகவும் முக்கியம்.

அவரிடம் எந்தப் பணியைச் சொன்னாலும், கொஞ்சம்கூட முகம் சுளிப்பில்லாமல், கவிஞர் அவர்கள் சொன் னதைப்போல,  சொன்னதைவிட வேகமாக செய்வார்.

பொதுவாக இந்தத் திடலைப் பொறுத்தவரையில், இது ஒரு சிந்தனைப் பட்டறை - அதில் அவர் எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தார்.

ஓய்வு பெற்ற பார்ப்பனர்கள், பெரிய பதவியில் உள்ளவர்கள் எல்லாம் சங்கரமடத்திற்குப் போகிறார்கள்.

ஆனால், ஓய்வு பெற்ற பிறகும், பலர் இன்னமும் தங்களுக்கு அடுத்த பதவி என்ன கிடைக்கும்? என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் பெரும்பாலும் இந்த சமுதாயத்தில்.

படைக்கலன்களைப்போல 

நிறைய தோழர்கள் அமைந்தார்கள்!

ஆனால், மங்களமுருகேசன் போன்றவர்கள், ஒரு பெரிய பட்டியலே நம்மிடத்தில் இருந்தது. அது அய்யா காலத்தில், சுயமரியாதைக் கோட்ட மாக இருந்ததைப்போல, அதற்குப் பிறகு பெரியார் திடலில், ஒரு படைக்கலன்களைப்போல நிறைய தோழர்கள் அமைந்தார்கள்.

குறிப்பாக, அய்யா புலவர் நன்னன் அவர்கள், அதுபோலவே, நம்முடைய பேராசிரியர் இராமநாதன் அவர்கள். அவர் ஓய்வு பெற்று, இங்கேயே வந்துவிட்டார். இறுதிவரையில் அவர்கள் அந்தப் பணியை செய்தார்.

நம்முடைய பேராசிரியர் இறையனார் அவர்கள்; அதுபோலவே, மு.நீ.சிவராசன் அவர்கள், கு.வெ.கி.ஆசான் அவர்கள் என்று ஒரு பெரிய பட்டி யலை சொல்லலாம்.

அந்தப் பட்டியலில், அவர்கள் எல்லாம் மறைந்து விட்டார்களே என்று சங்கடப்பட்ட நேரத்தில் எல்லாம். பேராசிரியர் மங்களமுருகேசன் போன்றவர்கள்தான் ஆறுதலாக அமைந்தனர்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவானது!

நாங்கள் எல்லோரும் கூடிப் பேசி, கருத்து களைப் பரிமாறிக்கொண்டதன் விளைவாக திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உருவானது. பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய தலைமையில் அந்த ஆய்வு மய்யம் உருவானது என்று சொன்னாலும், அடிக்கடி அவர்களை எல்லாவற்றிலும் தொடர்புகொண்டு, திடலுக்கு வந்து, எந்த செயலானாலும், அதை செய்துவிடலாம் என்று சொல்லக்கூடியவர்களின் வரிசையில் பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களும் முக்கியமான ஒருவர்.

மங்களமுருகேசன் அவர்கள் 

எதிலும் தனித்தன்மையோடு இருப்பார்

மங்களமுருகேசன் அவர்கள் எதிலும் தனித்தன்மை யோடு இருப்பார். எங்கள் குடும்பத்தினருடனும் நன்றாகப் பழகக்கூடியவர். என்னிடத்தில்கூட அதிகம் பேசமாட்டார்; என்னுடைய வாழ்விணையரோடு அதிக நேரம் பேசுவார்.

காரணம் என்னவென்றால், மங்களமுருகேசன் அவர்கள் எங்கே சென்றாலும், யார் எதைக் கொடுத் தாலும் சாப்பிடமாட்டார்; இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது.

தேநீர் குடிக்கிறீர்களா?

வேண்டாங்க!

காபி குடிக்கிறீர்களா?

வேண்டாங்க!

மோர் சாப்பிடுறீங்களா?

வேண்டாங்க!

கூல்டிரிங்ஸ் சாப்பிடுறீங்களா?

வேண்டாங்க! என்பார்.

எங்கள் வீட்டிற்கு ஒருமுறை வந்தபொழுது என் னுடைய துணைவியாரும் மேற்சொன்னபடி வரிசை யாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

இவர் எதுவுமே வேண்டாம் என்றார்.

உடனே என்னுடைய துணைவியார் கோபமாக, ''ஏங்க, ஒரு வீட்டிற்குப் போனீர்கள் என்றால், அங்கே அந்த வீட்டில் உள்ளவர்கள் உபசரிப்பதற்கு, அன்பு காட்டுவதற்கு, நம்முடைய பண்பாட்டின்படி, என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்பது வழக்கம். ஆனால், எதுவுமே சாப்பிடமாட்டேன் என்று சொன்னால், உங்களுக்கு ஜாதி மனப்பான்மை இருக்கிறதா?'' என்று உரிமை எடுத்துக்கொண்டு கேட்டார்.

நான் என்னை மாற்றிக்கொள்ளுகிறேன் என்றார்!

அன்றைக்கு அவர் ஆடிப்போய்விட்டார்; நான் என்னை மாற்றிக்கொள்ளுகிறேன் அம்மா என்று சொன்னார். அந்த நிகழ்விலிருந்து இரண்டு பேரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

குடும்ப ரீதியாகவே பழகியவர் அவர். இங்கே நண்பர்கள் அவரைப்பற்றி மட்டும்தான் சொன்னார்கள். நம்மிடமிருக்கும் சில குறைபாடுகளில் இதுவும் ஒன்று.

அவருடைய வாழ்விணையர் 

இராஜம் அம்மையாரைப் பாராட்டவேண்டும்

அவரைப் பாராட்டுவதைவிட, ஒரு படி மேலாக அவருடைய வாழ்விணையர் இராஜம் அம்மையாரைப் பாராட்டவேண்டும்.

இவர் இவ்வளவு பெரிய சாதனைகளை செய்ததற்கு என்ன அஸ்திவாரம் என்றால், அந்த அம்மையார்தான் அஸ்திவாரம்.

அவர்கள் இரண்டு பேரும் எப்படி வாழ்ந்தார்கள் என்பது மிகவும் முக்கியமானது.

அந்த அம்மையாரைப் படிக்க வைத்து, மேலே மேலே உற்சாகப்படுத்தி படிக்க வைத்தவர். 

நம் நாட்டில் சாதாரணமாக இது ஆணாதிக்க சமுதாயம். என்னய்யா, பொம்பளை படித்தால், நமக்கு மரியாதை இருக்குமா? நமக்கு சமமாக உட்காரலாமா? இப்படி எங்கோ ஒரு மூலையில் அந்த எண்ணங்கள் வந்திருக்கக் கூடிய சமுதாயத்தில், நீ படி, மேலே படி, தேர்வு எழுது என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு வழிகாட்டியாக இருந்தார்.

எப்பொழுது வேண்டுமானாலும் கோபுரம் விழும்; ஆனால், அஸ்திவாரம் எப்பொழுதும் விழாது!

பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் அஸ்திவாரமாக அமைபவர்கள் அவர்களுடைய வாழ்விணையர்கள்தான். அந்த அஸ்திவாரம்தான் பலமானது. ஆனால், அஸ்திவாரத்திற்கு வெளிச்சம் கிடையாது. கோபுரத்திற்குத்தான் அதிகமான வெளிச்சம் இருக்கிறது; ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் கோபுரம் விழும்; ஆனால், அஸ்திவாரம் எப்பொழுதும் விழாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவருடைய வாழ்விணையரான இராஜம் அம்மையார் அவர்கள் மறைந்தது, நம்முடைய மங்களமுருகேசன் அவர்களை வெகுவாகப் பாதித்தது. 

அந்த அம்மையார் பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வருவார்கள். திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருந்தவர் அவர். நம்முடைய கழக மாநாடுகளுக்கும் வந்திருக்கிறார்கள்.

அவருடைய மறைவால், மிகவும் பாதிப்படைந்தார் மங்களமுருகேசன் அவர்கள். அதிலிருந்து வெளியே வர முடியவில்லை அவரால். மிகவும் உணர்ச்சி வசப்படுவார். நான் அவரை கண்டிப்பேன்.

''ஏங்க, இயற்கை அமைப்பில் மறைவுகளும், பிரிவுகளும் ஏற்படத்தான் செய்யும். பகுத்தறிவாளர் களாகிய நாம், சுயமரியாதைக்காரர்களாகிய நாம் அதனை ஏற்றுக்கொண்டுதான் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும்'' என்பேன்.

சிறப்புமிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர்; பிள்ளை களின்மேல் பற்று நிறைந்தவர்.

தொடரும்)


No comments:

Post a Comment