விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!

 ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது!

அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே, காலில் போட்டு மிதிக்கலாமா?

விழுப்புரம், மார்ச் 28- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று (27.3.2023) விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

விழுப்புரத்தில் தமிழர் தலைவர்!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று (27-3-2023) சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் தலைமையில் நடை பெற்றது. நகர செயலாளர் பழனிவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். 

விழுப்புரம் மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர், மண்டல செயலாளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி தாஸ், மாவட்ட  தி.க.செயலாளர் அரங்க.பரணீதரன், திண்டிவனம் மாவட்ட தி.க.தலைவர் இர.அன்பழகன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தாமன், விழுப்புரம் மாவட்ட கழக அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, விழுப்புரம் மாவட்ட ப.க. தலைவர் துரை.திருநாவுக்கரசு, திண்டிவனம் மாவட்ட ப.க. தலைவர் நவா.ஏழுமலை, மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மாவட்ட ப.க.அமைப் பாளர் கி.கார்வண்ணன், விழுப்புரம் நகர தலைவர் கொ.பூங்கான், மண்டல இளைஞரணி செயலாளர் த.பகவான் தாஸ், மாவட்ட ப.க.செயலாளர் வே.இரகு நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சர்க்கரைப் பந்தலில்  கொள்கைத் தேன்மாரி!

மேடையில் நகர்மன்ற உறுப்பினர்களாகவோ, தலைவர்களாகவோ மகளிர் அமர்ந்திருந்தால் ஆசிரியர் மிகுந்த பெருமிதமும், உற்சாகமும் அடைந்துவிடுவார். இது முக்கிய பிரமுகர்களை விளித்துக் கொண்டிருக்கும் போதே, செங்கல்பட்டு மாநாடு வரை சென்றுதான் திரும்புவார். அவ்வாறே விழுப்புரத்திலும் ஏற்பட்டது. அதாவது, ஆசிரியர் முதலில் மேடையில் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்கள் பற்றி பேசிக்கொண்டு வரும் போது, தி.மு.க. தோழரான சக்கரை அவர்களை, ”எங்களின் கொள்கை உறவுக்காராக இருக்கும், தி.மு.க. சார்பில் இந்த பகுதியிலே சுயமரியாதைச் செம்மலாக திகழ்ந்து கொண் டிருக்கக்கூடிய ’சக்கரை’ அவர்களே! என்று விளித்தார். அந்த சக்கரை என்ற பெயர்ச் சொல்லின் தொடர்ச்சி யாகவே, விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வியைப் பற்றி குறிப்பிடும்போது, தமிழ்நாட் டில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல் என்பார்கள். அதுபோல இங்கே தமிழ்ச்செல்வி நகர்மன்றத் தலைவராக மேடையில் அமர்ந்திருக்கிறாரே, இது ஒன்று போதாதா? திராவிட மாடலின் வெற்றிக்கு!” என்று முழங்கினார். எடுத்த எடுப்பிலேயே இப்படி ஆசிரியர் பேசுவார் என்று எதிர்பார்க்காத மக்கள், சுதாரித்து ஆர வாரித்தனர். இருந்த உற்சாகத்தில் முக்கிய பிரமுகர்கள் பெயரை விளிப்பது தடைப்பட்டுவிடுமோ என்றெண்ணி, ‘அதற்கு பிறகு வருகிறேன்’ என்று தொடர்ந்து பெயர்களை விளிக்கத்தொடங்கினார். முடிந்த பிறகு,  ”இந்த நகரத்தின் வரலாற்றில் நீதிக்கட்சி நகர்மன்றத் தலைவர் இந்த ஊருக்கு உண்டு! கோவிந்தராஜுலு நாயுடு என்று அவரது பெயர். அதற்குப் பிறகு திரு. சண்முகம் உடையார் அவர்கள்! நான் ஜாதியைச் சொல்வது ஒரு அடையாளத்துக்காக. நாங்கள் இங்கே அடிக்கடி தங்குகிற இடம் எதுன்னா? டாக்டர் தியாகராஜனும் சேர்மனா இருந்தவரு! ஆனால் அவர்க ளெல்லாம் அமைந்ததைவிட சிறப்பு என்னன்னு கேட்டால், எந்தக் கொள்கைக்காக இந்த இயக்கம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே பிறவி பேதம் இருக்கக்கூடாது என்று உருவாக்கப்பட்டதோ அது இன்றைக்கு தமிழ்ச்செல்வி நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்றிருப்பது இந்த இயக்கத்துக்கு வெற்றி! இந்த கொள்கைக்கு வெற்றி! என்று விடுபட்ட செய்திக்காக தமிழ்செல்வியை குறிப்பிட்டு பேசினார். 

திராவிட மாடலா? ஆரிய மாடலா?

தொடர்ந்து வரலாற்றை நினைவு கூர்ந்து, ”அடுப் பூதுகிற பெண்களுக்கு படிப்பெதற்கு? என்றார்கள். நல்ல வாய்ப்பாக கலைஞர் அடுப்புக்கு வாய்ப்பில்லாமல் செய்து எரிவாயு உருளையை கொண்டுவந்துவிட்டார்” என்று முடிப்பதற்குள் மக்கள் சிரித்தபடியே கைதட்டி ஆசிரியரின் கூற்றை ஆமோதித்தனர். ”ஆனால், மோடி எரிவாயு உருளை விலையை 1200 க்கு ஏற்றியதன் முலம் மறுபடியும் மக்கள் பழைய அடுப்பைத் தேடுகிற மாதிரி செஞ்சிட்டாரு” என்று தொடர்ந்தது பேசி ஒன்றிய அரசின் மக்கள் விரோதத்தை சுட்டிக்காட்டினார்.

“ஆனால் திராவிட மாடலின் முதலமைச்சர் இன்று (27-3-2023) சட்டமன்றத்தில் 1 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கப்போவதாக அறிவித்து உள்ளார்” என்று மோடியின் எதிர் அரசியலான திராவிட மாடலின் சிறப்பையும் தொடர்புபடுத்திக்காட்டினார். 

உடனே, “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன்னு சொன் னாரே, கொடுத்தாரா?” என்று அழுத்தம் திருத்த மாகக் கேட்டார். இப்படி அடுக்கடுக்காக ஆரிய, திராவிட மாடல் கருத்துக்களை வரிசைப்படுத்தி நகைச்சுவையுடன் சொன்னதை மக்கள் வெகுவாக ரசித்தனர். அதை அவர்களின் ஆரவாரமும், கைதட்டல்களும் மெய்ப்பித் தன. சனாதனம் பெண்களை அடிமைகளாக வைத்திருந் ததையும், திராவிடம் ஆண்களைப் போலவே பெண் களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கப் பாடுபட்டதை யும் எடுத்துரைத்தார். அதை செங்கல்பட்டு மாநாட்டோடு இணைத்துக்கொண்டார். தொடர்ந்து திராவிட மாடலில் கலைஞர் பெண்களின் கல்வி, வாழ்க்கைத்தரம் மேம்பாட்டுக்கு செய்த பங்களிப்பை பட்டியலிட்டார். நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு பல பத்தாண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் சூழலில், பெண்கள் கோரிக்கை வைக்காமலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு வழங்கி திராவிட மாடல் அரசு கொள்கை வழி நிற்பதை பெருமிதத்துடன் எடுத்தியம்பினார். 

 கண்கொள்ளாத கொள்கைக் காட்சி!

மீண்டும் தமிழ்ச்செல்வியைக் குறிப்பிட்டு, “பெண்கள் நகர்மன்ற தலைவர்களாக வந்ததும் கொள்கை எதிரிகள் ’நட் லூஸ் தியரி’ என்பது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் கணவர்கள்தானே முன்னால் நிற்கிறார்கள் என்று பேசுகிறார்கள். நமது ஆட்களுக்கு இதில் ஒரு மயக்கம் வந்துவிட்டது. நான்தான், அதிலென்ன தவறு? புதிதாக பணிக்கு சேர்ந்தால் பயிற்சி கொடுப்பதில்லையா? ஓரிரு முறை அப்படியிருக்கும். பழகிவிட்டால், பெண் கள், சரிங்க இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க என்று சொல்லிவிடுவார்களே” என்றதும் பெண்கள் - மேடையிலிருந்த தமிழ்செல்வி முதல் கீழே அமர்ந்திருந்த பெண்கள் வரை - இலேசான வெட்கத்துடன் சிரித்தனர். 

ஆசிரியருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்த தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஆசிரியரை நெருங்கி அவர் காதில் ஏதோ பேசினார். ஆசிரியர் சிரித்துக் கொண்டே, “இதோ இவர், அவங்க எப்பவோ சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார்” என்றதும் மக்கள் வெடித்துச் சிரித்தனர். தமிழ்ச்செல்வி வெட்கத்துடனேயே வெடித்துச் சிரித்தார். கண்கொள்ளாத காட்சியாக இருந்தது அது! கொள்கையைக் கூட இப்படி வெடிச்சிரிப்பு வரும்படியாக சொல்லமுடியுமா? என்று மலைப்பாகத் தான் இருந்தது. தொடர்ந்து கொள்கையிலிருந்து கொள்கை அரசியலுக்கு வந்தார் ஆசிரியர். நிறை வேற்றித் தருகின்ற மசோதாக்களை குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கும் ஆளுநரை கண்டித்தார். குறிப்பாக மக்களை பலிவாங்கும் நீட், ஆன்லைன் சூதாட்டம் குறித்து அதிகமாகப் பேசினார். தங்கை அனிதாவை நினைவுபடுத்திப் பேசினார். சூதாட்டம் என்பது பாரதக் கலாச்சாரம் என்று குறிப்பிட்டு, இருக்கிறவர்களிலேயே யோக்கியமானவர் என்று சொல்லக்கூடியவர்தான் மனைவியை வைத்தும் சூதாடிய தர்மன் என்று புராணக் கதையை நினைவுபடுத்தி, “ஆளுநர் அவர்களே, உங்கள் சூதாடும் கலாச்சாரத்திற்கு தமிழ்நாடு ஒரு போதும் இடம் தராது” என்று எச்சரிக்கை விடுத்து, மக்களை நோக்கி கைநீட்டி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்த கருத்துகளை மனதிற்கொள் ளுங்கள் என்று வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலை நினைவுபடுத்தி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளர் இரா.சக்கரை, மாவட்ட தி.மு.க. பொருளாளர் இரா.ஜனகராஜ், மாநில தி.மு.க.ஆதி திராவிட நலக் குழு துணை செயலாளர் செ.புஷ்பராஜ், காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் குலாம் மொய்தீன்,சி.பி.அய்‌. மாவட்ட செயலாளர் சவுரி ராஜன், சி.பி.எம்.- மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், வி.சி.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆற்றலரசு, விழுப்புரம் மாவட்ட  ப.க. தலைவர் துரை.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முடிவில் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சதீஷ் நன்றி கூறினார். தொடர்ந்து அங்கிருந்து உளுந்தூர் பேட்டையை நோக்கி பயணக்குழு புறப்பட்டது.

உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர்!

உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் சுயமரியாதை சுடரொளி சந்திரசேகரன் நினைவு மேடையில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை  பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் செல்வ.சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார். 

மண்டல தலைவர் கோ.சா.பாஸ்கர், மண்டல செயலா ளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன்,  மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், கல்லக்குறிச்சி மாவட்ட துணை செயலாளர் முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் பகவான் தாஸ், பொதுக்குழு உறுப்பினர் திருக்கோவிலூர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடக்கவுரையாற்றினர். 

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

என்மீது கல்லும் மண்ணும்  வீசப்பட்ட இடம் இது!

ஆசிரியர் உளுந்தூர்பேட்டையில், “இது பொன்விழா கூட்டம் என்ற சிறப்பு பெற்றுள்ளது” என்று தொடங் கினார். எதிர்பாராத மகிழ்ச்சியில் மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர். 

ஆசிரியருக்குள் உளுந்தூர்பேட்டையில் நடந்த பழைய சம்பவங்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தன. அதில் திராவிடர் இயக்கம் வெற்றி பெற்றிருப்பதால் அந்த உற்சாகமும் சேர்ந்துகொள்ள மிகுந்த உற்சாகத் துடன் இருவரையிலும் இல்லாதபடி திராவிட இயக்கத்தின் தத்துவத்தை அரசியலோடு அருமையாகக் கலந்து, சனாதனமா? அறிவியலா? என்ற பொருளில் பேசி மக்கள் உள்ளம் கவர்ந்துவிட்டார். 

75 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததை நினைவூட்டிக்கொண்டு பேசினார். அதாவது, “எனக்கு அப்போது 15 வயதிருக்கும்.எனது ஆசிரியர் திராவிட மணியுடன் இங்கே பேச வந்திருக்கிறேன். எங்களுக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா தோழர்களே, கல்லும், மண்ணும் எங்கள் மீது வீசப்பட்டதுதான் எங்களுக்குக் கிடைத்த பரிசு” என்று சொல்லி சற்றே நிறுத்தினார். 

மக்கள் மிகுந்த ஆவலுடன் அவரையே பார்த்த வண்ணம் இருந்தனர். “நாங்கள் அதைப்பற்றி கவலைப் படாமல் பேசி முடித்துவிட்டுத்தான் சென்றோம்” என்று அந்த வாக்கியத்தை முடித்தார். கைதட்டல் பறந்தது. தொடர்ந்து அவர், “அடுத்த ஓராண்டு சென்று இதே இடத்திலிருந்து ஒருவர் வந்து, எனது ஆசிரியரான திராவிடமணியிடம் எங்கள் தேதியைக் கேட்டார். அவர் யாரென்று எனது ஆசிரியர் வினவுகிறார். அதற்கவர், நாந்தான் சென்ற ஆண்டு உங்கள்மீது கல்லையும் மண்ணையும் வீசியவன் என்கிறார்” முடிப்பதற்குள் விசிலும், கைதட்டலும் அந்த இடத்தையே மயிர்க்கூச் செறியும்படியாக அதிரச்செய்கிறது. விசில் ஓசை ஓயும் முன்பே தொடர்கிறார் ஆசிரியர். “அன்றைக்கு மேசை மீது நின்று பேசி கற்களையும், மண்ணையும் எதிர்கொண்டேன். அதே இடத்தில் இன்று அனைவரும் எனக்கு ஆடையணிவித்து வரவேற்றிருக்கிறீர்கள்” என்றதும் அதே ஆரவாரம் தொடர்கிறது. 

அந்த ஆரவாரத்திற்கிடையே, “நாங்கள் வந்து பேசிவிட்டுத்தான் சென்றோம். இதோ இதே ஊரில்தான் பிராமணாள் கபே ஒழிப்புப்போராட்டம் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் நடந்து வெற்றி பெற்றது” என்று சொன்னதும் பக்கவாட்டில் அமர்ந்திருந்தவர்கள் அதை ஆமோதிப்ப துப்போல தலையசைத்தது, இன்னமும் உறசாகமான ஆசிரியர், “நான் சாட்சியை பக்கத்தில் வைத்துக் கொண் டேதான் பேசுகிறேன்” என்று சமயோசிதமாக பேசி ஆமோதித்தவர்களையும் கைதட்ட வைத்து விட்டார்.

மனிதர்களுக்காக ஆரியம் செய்தது என்ன?

தொடர்ந்து அவர், எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் ஆளுநர் என்றொருவர் சனாதனம் என்று பேசுகிறார். சனாதனம் என்றால் மாறாதது என்று பொருள். எதுவும் மாறவில்லையா? மாற்றம் ஒன்றுதானே மாறாதது! வளர்ச்சி என்பதும் அதனடிப்படையில்தானே வருகின்றன! ஆனால் நமது சம்பளத்தில் இருக்கக்கூடிய ஆளுநர் சனாதனம்தான் தேவை என்கிறார்” என்று குறிப்பிட்டுவிட்டு, “எங்கும் இருப்பவன், எல்லாம் வல்லவன் என்கிறார்களே, அவர் ஒருமுறையாவது இதோ இருக்கிறேன் என்று வர முடிந்ததா?” என்று கேட்டு பகுத்தறிவுப் பக்கம் திரும்பினார்.  

சனாதனம், சனாதனம் என்கிறீர்களே, மனிதனுக்காக நீங்கள் செய்தது என்ன? மனித நேயம் முக்கியமல்லவா? என் சகோதரனை தீண்டக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்று வரிசையாக மயிர்க்கூச்செறியும்  கேள்விகளாக கேட்டு பொங்கிவிட்டார். அதற்கு ஆதாரமாக 1899ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற ஒரு நாடகக் கொட்டகையில் பஞ்சமருக்கு இடமில்லை என்றிருந்ததை அந்த 124 ஆண்டுகள் ஆன துண்டறிக் கையை கையில் வைத்துக்கொண்டே பேசி, “இன்று அப்படி யாரேனும் சொல்லிவிட முடியுமா? அந்தக் கொடுமை மாறிவிடவில்லையா? அதற்கு தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் காரணமில்லையா?” என்று தத்துவத்தையும், அரசியலையையும் கலந்து தொடர்ந்தார். 

அடுத்து ஆளுநருக்கு, “சனாதனம் என்ற பெயரால் ஜாதி, ஜாதி என்கிறீர்களே, உங்கள் சனாதனப்படி டில்லிக்கு மாட்டு வண்டியில் போவீர்களா?” என்றொரு கேள்வியை நேரிடையாகக் கேட்டார். ”நீட் தேர்வாலும், ஆன்லைன் சூதாட்டத்தாலும் தற்கொலைகள் தொடர் கின்றனவே, மனிதநேயம் வேண்டாமா? இவையெல்லாம் மாறவேண்டாமா?” என்று தத்துவரீதியாக கேட்டுவிட்டு, “அரசியல் சாசனத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, அவர்களே அதை காலில் போட்டு மிதிக் கிறார்களே, இது சரியா?” என்று ஒரு ஆளுநரை ஒரு பிடிபிடித்தார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி எப்படி மனிதநேய ஆட்சியாகத் தொடர்கிறது என்பதை ஆதாரங்களுடன் பேசினார். 

திராவிட மாடல் என்பதற்கே ‘அனைவருக்கும் அனைத்தும்! எல்லோர்க்கும் எல்லாமும்’ என்பதுதான் என்று தந்தை பெரியார் சொன்ன விளக்கத்தைச் சொல்லி, திராவிட இயக்கம் மனிதநேய இயக்கம்! ஆரியம் இதற்கு எதிரான இயக்கம்? ஆகவே உங்கள் சந்ததிகளின் எதிர் காலம் நன்றாக இருக்க அவர்களை புறக்கணியுங்கள் என்று வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலை நினைவு படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வைத்தியநாதன், தி.மு.க.நகர செயலாளர் டேனியல்ராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், சி.பி.அய். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், சிபி.எம்.மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, ப.க.நகர தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிர மணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, கழக சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்ற னர்.

திராவிடம்! திராவிட மாடல்!  என்றால் என்ன?

"திராவிடம் என்பது ஒரு மொழிக்குரிய பெயர்! திராவிடம் என்பது ஒரு நிலப் பகுதிக்குரிய பெயர்! திராவிடம் என்பது ஒரு மொழிக் கூட்டத்தினுடைய பெயர்! திராவிடம் என்பது ஒரு இயலுக்குரிய பெயர்! திராவிடம் என்பது பெரியாரிய கருத்தியலுக்குரிய பெயர்! திராவிடம் என்பது ஒரு வாழ்க்கை நெறிக்குரிய பெயர்! திராவிடம் என்பது ஒரு நாகரிகத்துக்குரிய பெயர்! திராவிடம் என்பது வந்தேறிகளான ஆரியக் கூட்டத்திற்கு ஒரு எதிர்மறையான அடையாளம்! திராவிடம் என்பது இயற்கை சித்தாந்தத்தின் பெயர்! திராவிடம் என்பது ஒரு பண்பாட்டின் பெயர்! ஆரியப் பண்பாடு வேறு! திராவிடப் பண்பாடு வேறு! ஒருவனுக்கு ஒருத்தி என்பது திராவிடப் பண்பாடு! ஒருத்திக்கு அய்வர் என்பது ஆரியப் பண்பாடு! திராவிடம் என்பது தமிழுக்கு ஒரு மாற்றுப் பெயராகிய மரபினமாகவும் பொருள் கொண்டு நிற்கிறது! தமிழ் வேறு திராவிடம் வேறல்ல! இரண்டும் ஒன்றுதான்! அப்படிப்பட்ட தமிழை அழிப்பேன் என்று சொல்லுகிறவன் நிலைத்திருக்க மாட்டான்! திராவிடம் இருக்கும். அது மானுடவியல்! அதுதான் அரசியலாக இங்கே கோலோச்சுகிறது!" என்று நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அடுக்கிக்கொண்டே போகிறார். அதுதான் இன்று திராவிட மாடலாக மலர்ந் திருக்கிறது.  

கடந்த  தேர்தலிலே எங்கள் தலைவரவர்கள் இதுபோன்ற ஒரு பரப்புரைப் பயணத்தில், “திராவிடம் வெல்லும்” என்று ஒரு முழக்கம் வைத்தார்.

திராவிடம் வென்றது! திராவிடம் வென்றதன் அடை யாளமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்து அமர்ந்தார்! 

திராவிடக் கருத்தியலால் வந்திருக்கும்  அவர், “எனக்கு வழிகாட்டும் நெறி எது என்று சொன்னால், என் ஆட்சிக்கு வழிகாட்டக்கூடிய தத்துவம் எது என்று சொன்னால் திராவிட மாடல் தத்துவத்தின் அடிப்படையில் என்னுடைய ஆட்சி நடக்கிறது” என்று சொல்கிறார்.

திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் என்னென்ன வேறுபாடு? இந்தியா மதச்சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும் என்பது திராவிட மாடலின் கருத்து! ஆனால், இந்தியா மதச்சார்புள்ள ஒரு இந்துத்துவா நாடாக இருக்க வேண்டும் என்பது ஆரிய மாடலின் கருத்து? எல்லோர் கையிலும் புத்தகத்தைக் கொடுப்பது திராவிட மாடல்! எல்லோர் கையிலும் வேல் கொடுப்பது ஆரிய மாடல்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது திராவிட மாடல்! பிறவி பேதம் கற்பிப்பது ஆரிய மாடல்! சமதர்மம் வேண்டும் என்பது திராவிட மாடல்! மனுதர்மம் வேண்டும் என்பது ஆரிய மாடல்!

- முனைவர் துரை. சந்திரசேகரன்

பொதுச்செயலாளர் - திராவிடர் கழகம்

உளுந்தூர்பேட்டையில் பேசியது (27-3-2023)

பொன்விழாக் கூட்டம்! 

‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘மீண்டும் சேது சமுத்திரத்திட்டம்’ போன்ற தமிழ்நாட்டின் உயிர் போன்ற முக்கியமான மூன்று பிரச்சினைகளை முன்னெடுத்து, அறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதியன்று, தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் தொடங்கி, மார்ச் 31 ஆம் தேதி தந்தை பெரியாரின் மாணாக்கரான ஆசிரியர் பிறந்த கடலூரில் நிறைவுறும் வண்ணம் மாபெரும் பரப்புரைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பெரிய நகரங்கள், பேரூராட்சிகள் என்று ஒரு நாளைக்கு இரண்டு இடங்களாக, ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதுமாக சாலை மார்க்கமாகவே இந்த பரப்புரைப் பயணம் நடைபெற்று வருகிறது. கழகத் தோழர்கள், ’உங்களை சந்திக்க தந்தை பெரியாரின் தனிப்பெரும் தொண்டர் வருகிறார்! திராவிட இயக்கத்தின் 90 வயது இளைஞர் உங்களிடம் பேச வருகிறார்! ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்ட, நாளையும் மீட்கப் போகிற ஆரிய சங்காரன் வீரமணி வருகிறார்! திராவிடர் நாயகன் வருகிறார்!' என்று தமிழ்நாடு முழுவதும் சுவர் எழுத்துக்களாக, சுவரொட்டிகளாக, கழகக் கொடிகளாக, பதாகைகளாக, சமூக ஊடகங்களில் விளம்பரங்களாக பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

ஆரியத்தை சமர்க்களத்தில் சந்திப்பதென்றால் கழகத் தோழர்களுக்கு கூடுதலாக இறக்கைகள் முளைத்து விடும். உற்சாகம் பொங்கிப் பெருகி விடும்! கழகத் தோழர்களே அப்படியென்றால், அவர்களை கடைக்கண் பார்வையாலேயே இயக்குகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? அவரும் தன் வயதை மறந்து, தன் உடல் உபாதைகளைத் துறந்து, தமிழ் மக்களின் நலம் ஒன்றே, தன் நலன் என்று கருதி, மிகுந்த உற்சாகத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்களில், ’90 வயதுக்காரரா இவர்?’ என்று தோழமைக் கட்சியினர் வியக்கும் வண்ணம் பேசி வருகிறார். 

இந்த பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகம் தயாரித்த, “தோழா முன்னேறு! வீரமணியோடு!” என்கிற கருத்தாழமிக்க, வீரியமான பாடலும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அப்படிப்பட்ட இந்த பயணம் நான்கு கட்டங்களாக பகுக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக ஈரோட்டில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 10 ஆம் தேதி சென்னை பல்லாவரம் வரையிலுமாக மொத்தம் 15 கூட்டங்களாகவும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் தொடங்கி, 21 ஆம் தேதி மன்னார்குடியில் முடிந்த வகையில் 16 கூட்டங்களாகவும், மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 22 ஆம் தேதி ஆண்டிப்பட்டியில் தொடங்கி, 28 ஆம் தேதி பேராவூரணியில் முடிந்ததில் மொத்தம் 16 கூட்டங்களாகவும், நான்காம் கட்டமாக மார்ச் 5ஆம் தேதி திருநாகேஸ்வரம், நன்னிலம் 2 கூட்டமாகவும், அதன் தொடர்ச்சியாக மார்ச் 26 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்கி, 27 ஆம் தேதி விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வரை 3 கூட்டங்களாகவும் ஒட்டுமொத்தமாக 26 நாட்களில் இதுவரை 50 கூட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. (15+13+16+2+3 = 50) இதை மிகச்சரியாக நினைவு வைத்துக் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ’உளுந்தூர்பேட்டை சிறப்புக்கூட்டமாக; பொன்விழாக் கூட்டமாக அமைந்துள்ளது’ என்று திரண்டிருந்த மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார்.


No comments:

Post a Comment