தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 7, 2023

தோள்சீலை போராட்டம் 200 ஆம் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

*     சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

* சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

* சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

* அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி!

தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடுவோம்!

நாகர்கோவில், மார்ச் 7 சூத்திரர்களையும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு; சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக் கின்றன! சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்! அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி! தமிழ் நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்  என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.03.2023) நாகர்கோவில் மாவட்டத்தில் நடைபெற்ற தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:

தோள்சீலை போராட்டம் 200 ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நிறைவுரையாற்ற அமர்ந்திருக்கக் கூடிய மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினராயி விஜயன் அவர்களே,

எனக்கு முன்னால் உரையாற்றி அமர்ந்துள்ள மாண்பு மிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் அவர்களே, இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே, 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர்  என்னுடைய பாசமிகு சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர்  மதிப்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான என்னுடைய பாசமிகு சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்  வீரபாண்டியன் அவர்களே, பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களே,

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் நண்பர் மகேஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் அருமை சகோ தரர் விஜய் வசந்த் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் அவர்களே, ராஜேஷ்குமார் அவர்களே, 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் அவர்களே, 

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கக்கூடிய தோழமைக் கட்சிகளைச் சார்ந் திருக்கக்கூடிய தோழர்களே, தோழமைக்கட்சி நிர்வாகி களே, அய்யாவழி சொந்தங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். 

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாகப் பதிவாகி இருக்கக்கூடிய தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மிகுந்த பெருமைப்படு கிறேன், மகிழ்ச்சியடைகிறேன், வாய்ப்பினை தந்திருக்கக் கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

மனமார்ந்த பாராட்டுகள், நன்றி!

சனாதன ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட போராட்டத்திற்கு தோள் சீலைப் போராட்டம் என்ற அடைமொழியைக் கொடுத்து, அதனுடைய 200 ஆவது ஆண்டு விழாவை ஒரு சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக இன்றைய தினம்  எழுச்சியுடன், ஏற்றத்துடன் ஏற்பாடு செய்திருக்கக் கூடிய ஒருங்கிணைப்புக் குழுவினர் அனைவருக்கும் என்னுடையது மனமார்ந்த பாராட்டுகளை, நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டு களுக்கு முன்னால் இருந்தது? என்பதையும் - வீரமிக்க போராட்டத்தின் காரணமாக அந்த இழிநிலை எவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டது என்பதையும் - இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  நடத்தப் பட வேண்டும்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளா தாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங் களைத் தொட்டுவிட்டது. 

இப்படிப்பட்ட உயரத்தில்தான் அய்ம்பது ஆண்டு களுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால், இல்லை.

எப்படி இருந்த நாம் - 

இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம்!

ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்குள்ளும் அனைவரும் போக முடியாது. பஞ்சமர்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டி இருப்பார்கள். நாடகக் கொட்டகைகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ரயில் நிலையங்களில் உயர் ஜாதியினர் சாப்பிடத் தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தார்கள். 

80 வயதைக் கடந்த பெரியவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர்களுக்குத்தான் தமிழ்ச் சமு தாயத்தில் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் நடந் திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் - இப்போது இப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். 

அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்துகின்ற விழாவாக இந்த தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழா அமைந்திருக்கிறது. 

ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது தமிழ்ச் சமுதாயம்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாக - தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண் பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது

நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தை நான் திறந்து வைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைசிறந்த நாகரிகமான வைகைக் கரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி. உலகம் நாகரிகம் அடை வதற்கு முன்னதாகவே ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமல்ல, அணிகலன்களும் அணிந்து வாழ்ந்து வந்திருக்கக்கூடிய இனம்தான் நம்முடைய தமிழினம். அதனைத்தான் நமக்கு கீழடி காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் தமிழினத்தினுடைய பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது.

சூத்திரர்களையும், பெண்களையும் 

இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு

மதத்தின் பேரால் - ஜாதியின் பேரால் - சாத்திர சம் பிரதாயங்களின் பேரால் - புராணங்களின் பேரால் - மனிதரை மனிதர் பாகுபடுத்திவிட்டார்கள். ஆணுக்குப் பெண் அடிமை என்றாக்கி விட்டார்கள். சூத்திரர்களை யும், பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. தீண்டாமையை 'புனிதம்' ஆக்கினார்கள். மனி தனுக்கு மனிதன் தொடக்கூடாது - கண்ணில் படக்கூடாது - நேரில் வரக்கூடாது - படிக்கக் கூடாது என்று ஆக் கினார்கள். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆக்கி னார்கள்.

சீர்திருத்த இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்திருக்கின்றன!

இதற்கு எதிராக அருட்பிரகாச வள்ளலாரும், அய்யா வைகுண்டரும், அயோத்திதாச பண்டிதரும், பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக் கங்கள்தான் தமிழ்நாட்டை இந்தளவுக்கு தலைநிமிர வைத்திருக்கின்றன.  பக்தி வேறு - பாகுபாடு வேறு என் பதை உணர்த்தியவர்கள் இந்தத் தலைவர்கள்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடியது அதிகமாக இருந்தது. 

ஒடுக்கப்பட்ட மக்கள்,

* குடை எடுத்துச் செல்லக் கூடாது.

* செருப்பு அணியக் கூடாது

* பசு வளர்க்கக் கூடாது.

* வீட்டுக்கு ஓடு போடக் கூடாது.

* ஒரு மாடிக்கு மேல் கட்டக் கூடாது

* முரட்டுத் துணிதான் அணிய வேண்டும் - என்றெல்லாம் இருந்தது.

'முலைவரி' என்ற வரியையே போட்டார்கள்!

இந்தத் திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமு தாயத்துப் பெண்கள் அனுபவித்த துன்ப துயரம் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், மார்பில் சேலை போடக் கூடாது என்பதைப் போன்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. இதனை மீறி சேலை போட்டுக் கொள்ள முயற்சித்த பெண்கள் தாக்கப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட் டார்கள். இதை விடக் கொடூரமாக 'முலைவரி' என்ற வரியையே போட்டிருக்கிறார்கள். 

இதைவிட அநியாயம் இருக்க முடியுமா?

அப்படி வரிகட்டாத காரணத்தால் தனது மார்பையே அறுத்து எறிந்தாள் ஒரு பெண். அதுதான் 'முலைச்சிப் பறம்பு' வழிபாட்டுத் தலமாக இன்றும் இருக்கிறது.

முலைவரிக்கு எதிராக 1822 ஆம் ஆண்டு போராட் டம் தொடங்கியது. அய்ம்பது ஆண்டு காலம் இந்த மண்ணிலே வீரம்மிக்க போராட்டங்கள் நடந்தது.

சீர்திருத்த கிறித்துவ இயக்கத்தினர் இந்த போராட் டத்திற்குத் துணையாக இருந்தார்கள்.

புதிய வழியை உருவாக்கிய 

அய்யா வைகுண்டர்

அய்யாவழி என்ற புதிய வழியை உருவாக்கிய அய்யா வைகுண்டர் இந்தப் போராட்டத்திற்குத் துணை யாக இருந்தார். திறந்த மார்போடு பெண்கள் இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து பரப்புரை செய்தார் அய்யா வைகுண்டர் அவர்கள். பொதுக்கிணறுகள் உருவாக்கினார். சிதறிக் கிடந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் அனைத்துத் துன்பங்களும் ஒழியும் என்று தூண்டியவர் அய்யா வைகுண்டர் அவர்கள். அன்புக்கொடி என்ற மதப் பிரிவையே உரு வாக்கினார். அடித்தள மக்கள் அனைவருக்கும் தலைப் பாகை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் எடுக் கக் கூடாது என்று அந்தக் காலத்தில் தடை இருந்தது. அதை உடைத்து இடுப்பில் தண்ணீர்க்குடம் கொண்டு வரக் கட்டளையிட்டவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.

'தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்' என்று சொன்னவர் அவர். இதன் விளைவாகத்தான் 1859 ஆம் ஆண்டு உத்தரம் திருநாள் அரசர் உத்தரவு போட்டார். தோள்சீலை அணியலாம் என்ற உரிமை அதன்பிறகுதான் கிடைத்தது.

இந்த வெற்றிக்குக் காரணமான,

* அய்யா வைகுண்டர்

* கர்னல் மன்றோ

* பீட் பாதிரியார்

* ரிங்கல் தவுபே பாதிரியார் - ஆகியோர் நம் அனை வராலும் வணங்கத் தக்கக்கூடியவர்கள். நமது நன்றிக் குரியவர்கள்.

இப்படி எத்தனையோ படிகளைத் தாண்டித்தான் இப்போது இருக்கும் உயரத்தை நாம் பெற்றுள்ளோம். 

இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக - பொருளாதார ரீதியாக எத்தனையோ கெடுதல்களை பிரிட்டிஷ் ஆட்சி செய்திருந்தாலும் சமூகரீதியாக பல்வேறு சீர்திருத்தச் சட்டங்களையும் உருவாக்கிக் கொடுத்ததை மறுப்பதற் கில்லை.

* மனிதர்களை அடிமைகளாக விற்க தடை

* பெண் குழந்தைகளைக் கொல்லுதல் கொலைக்கும் சமமானது என  அறிவிப்பு.

* உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு.

* அனைத்து ஜாதியினரும் ஓடு வேய்ந்த வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம், 

*  நகைகள் அணியலாம் என்ற உத்தரவு.

* நரபலிக்குத் தடை

* வேலைவாய்ப்பில் ஜாதிப் பாகுபாடு கூடாது.

* சட்டம் அனைவருக்கும் பொது.

* அனைவருக்கும் கல்வி

* கைம்பெண்கள் மறுமணம் செய்யலாம்

* சிறுமிகள் திருமணத்துக்கு தடை.

* திருமண வயது மசோதா.

* ஆதிதிராவிடர் நிலம் மற்றும் சொத்து வாங்குவதைத் தடை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வகுப்புவாரி உரிமையை வழங்கிய

நீதிக்கட்சியின் சாதனைகள்!

இப்படி எத்தனையோ சமூக சீர்திருத்தங்கள் பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியானது இதனை முழுமையாகச் செய்து காட்டியது.

வகுப்புவாரி உரிமையை 1922 ஆம் ஆண்டே வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி.

அனைவருக்கும் கல்வி என்பதை கட்டாயம் ஆக்க நீதிக்கட்சி அரசு 9.03.1923 அன்று ஓர் அரசாணையை வெளியிட்டது.

எந்த சமூகத்தைச் சேர்ந்தவரையாவது பாகுபாடு பார்த்து கல்விச் சாலைக்குள் அனுமதிக்க மறுத்தால், அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்பதை நீக்கியது.

நாட்டிலேயே முன்னோடியாக பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.

பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்ற ழைக்கக்கூடிய அரசாணை போடப்பட்டது.

சாணார் என்பதை நீக்கி நாடார் என அரசாணை போடப்பட்டது.

பட்டியலின மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டது.

குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயி லுக்குப் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க வில்லை என்றால், பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப் படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியனார் அவர்கள்.

பள்ளிச்சாலைகளை அனைவருக்கும் திறந்து விட்டது நீதிக்கட்சி ஆட்சி.

இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கூடங்களை அதிகள வில் திறந்தவர்தான் பெருந்தலைவர் காமராசர் அவர் கள். அதனால்தான் அவரை 'பச்சைத்தமிழன்' என்று புகழ்ந்தார் தந்தை பெரியார் அவர்கள். அதைத் தொடர்ந்து வந்த பேரறிஞர் அண்ணா அவர்களும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார்கள். கல்லூரிக் கல்வியை ஊக்குவித்தார்கள்.

அனைத்து சமூக மக்களையும் சமூக, 

அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே 'திராவிட மாடல்' ஆட்சி!

இன்றைய 'திராவிட மாடல்' அரசானது உயர்கல்விக்கு, ஆராய்ச்சிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வரு கிறது. அனைத்து சமூக மக்களையும் சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி. 

நம்மை ஏன் இன்றைக்கு சிலர் எதிர்க்கிறார்கள்? இந்தக் காரணங்களுக்காகத்தான். காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை இவர்கள் உயர்த்து கிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள். 

வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண் ணுக்கு இலவசப் பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே என்ற காரணத்தால்தான் எதிர்க் கிறார்கள்.

படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்களே என்பதால்தான் எதிர்க்கிறார்கள்.

சமூகநீதிதான் நமது 

திராவிட இயக்கத்தினுடைய 

முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள்!

மற்றவர்கள், அதாவது நாம் எல்லாரும் முன்னேறுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நம்மை எதிர்க்கிறார்கள். இதைப்பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. சமூகநீதிதான் நமது திராவிட இயக்கத்தினுடைய முதலும் இறுதியுமான ஒரே குறிக்கோள் ஆகும்.

தமிழ்நாடு - கேரள அரசு சார்பில் 

வைக்கம் நூற்றாண்டு விழா!

காங்கிரஸ் கட்சியில் இருந்த தந்தை பெரியார் அவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கத்துக்குப் போய் போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்கக் கூடாது என்று இருந்த தடைக்கு எதிராக கேரளத்தில் இருந்த சீர்திருத்தவாதிகள் போராட்டத்தைத் தொடங்கி, அதில் அனைவரும் கைதான பிறகு - இந்தப் போராட்டம் நின்று விடக் கூடாது என்ற நோக்கத்தோடு, தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் சென்று போராடி னார். மனைவி நாகம்மையாரையும் அழைத்து வந்தார். தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் சுயமரியாதை இயக்க வீரர்களை அழைத்து வந்து போராடினார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.

''அந்தப் போராட்டம்தான் எனக்கு ஊக்கமளித்த போராட்டம்'' என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம்.

கேரளாவில் இருந்து வந்திருக்கக்கூடிய  முதல மைச்சர், நம்முடைய மரியாதைக்குரிய மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களும் இங்கு வந்திருக்கிறார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு அரசும், கேரள அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானாக எதுவும் மாறிவிடவில்லை.  நமது தலைவர்களால் - நமது முன்னோடிகளால்- அவர்களது போராட்டங்களால் - தியாகங்களால்தான் அனைத்தும் மாறி இருக்கின்றன.

சமூக அழுக்குகளை சட்டத்தாலும் மாற்றவேண்டும். மனமாற்றத்தாலும் மாற்ற வேண்டும். அரசுகள் சட்டம் போட வேண்டும். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற விழாக்களின் மூலமாக மனமாற்றங்களை உருவாக்க வேண்டும்.

நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்த மாகத் துடைத்துவிட முடியாதுதான். ஆனாலும் நமது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்.

'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' - என்ற அய்யா வைகுண்டரின் முழக்கத்தை எந்நாளும் எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! எதிரொலிப்போம்! என்று உங்கள் அனைவரிடத்தில் நான் என்னுடைய உறுதிமொழியாக ஏற்று, வாய்ப்பு தந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment