பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ''குற்றப்பரம்பரை'' ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ''குற்றப்பரம்பரை'' ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்!

ஆண்டிப்பட்டி - பேரையூரில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை!

தேனி, பிப்.23 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்’ என்ற மூன்று  தலைப்புகளை மய்யப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத் தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் நேற்று (22.2.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  விளக்கவுரை ஆற்றினார்.

ஆண்டிப்பட்டியில் தமிழர் தலைவர்!

ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் 22-02-2023 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், தென்மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன் ராசா, அமைப்பு செயலாளர் வே.செல்வம், மதுரை மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனம், மண்டல செயலாளர் கருப்பு சட்டை நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், கம்பம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன்,  மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் எழுதிய தனித் தீர்ப்பு!

தமிழர் தலைவர் தனது உரையில், “தங்க தமிழ்ச்செல்வன் எங்க தமிழ்ச்செல்வன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, நாங்கள் வரும்போதெல்லாம் எங்களை அன்புடன் வரவேற்று சிறப்பிக்கக் கூடியவர்” என்று உற்சாகமாகத் தொடங்கினார். ஆசிரியருக்கு இடது பக்கம் அமர்ந்திருந்த தங்க தமிழ்ச் செல்வனுக்கும் ஆசிரியரின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. ஆசிரியர் மக்களையும் பார்த்து, “ஏராளமானோர் உற்சாக மாகக் கூடியிருக்கிறீர்கள்” என்றார். மக்களின் உற்சாகமும் கூடிப் போனது. தொடர்ந்து தன்னை வியந்து பேசினார். அதாவது, “கடந்த 6 மாதத்திற்குள் 4 முறை இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறேன் என்று எண்ணும் போது எனக்கே உற்சாக மாக இருக்கின்றது” என்றார். தொடர்ந்து, “சமத்துவம் இல்லாத இடத்தில்தான் சமூக நீதி பிறக்கும்” என்று தத்துவரீதியாக சொல்லிவிட்டு, மண்டல் வழக்கு பற்றி சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, “பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. மண்டல் குழு அறிக்கை வந்துதான் கிடைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. பி.பி.மண்டல் பெரியார் திடலில் பேசும் போது, நான் அறிக்கை தயாரித்து விட்டேன். அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது” என்று தன்னிடம் கூறியதையும், 42 மாநாடுகள், 16 போராட்டங்கள் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டதையும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் வந்துதான் இதை நிறைவேற்றினார் என்பதையும் நன்றி யுணர்ச்சியோடு கூறினார். குறிப்பாக 9 நீதிபதிகளில், மேனாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மட்டும் நன்றியுணர்ச்சி காரணமாக தனித் தீர்ப்பு எழுதினார் என்று அந்தத் தீர்ப்பும் எத்தகையது என்றும் எடுத்தியம்பினார்.

யார் குற்றப்பரம்பரை?

மேலும் அவர் ரத்தினவேல் பாண்டியன் தொடர்பாக எழுந்த பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முனைந்து, “திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்களே அவர்களுக்காக ஒன்று சொல்கிறோம்” என்று சொல்லிவிட்டு திராவிட இயக்கத்தின் அதிகம் அறியப் படாத ஒரு சாதனையைச் சொன்னார். அதாவது, இந்தப் பகுதியிலிருந்து பெருமையோடு நீதித்துறையில் உச்சம் தொட்ட மேனாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், தனது தனி தீர்ப்பில் மேனாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் குறிப்பிட்டிருந்ததை, ’திருமலை’ எழுதிய ‘மதுரை அரசியல்’ எனும் புத்தகத்திலிருந்து 109 ஆம் பக்கத்தில் உள்ள ஒரு பகுதியைப் படித்துக் காட்டினார். அதாவது, “குற்றப்பரம்பரை சட்டத்தில் ஒவ்வொரு நாளும் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குற்றப்பரம்பரை என்று சொல்லப்பட்டு, காவல் நிலையத்திற்குச் சென்று ரேகை வைத்துவிட்டு இரவு முழுவதும் அங்கேயே இருக்க வேண்டும்” என்று உள்ளதைச் சொல்லிவிட்டு, “கல்வி கொடுக்கப்படவில்லை; வேலை வாய்ப்பு இல்லை; பசித்தவன் என்ன செய்வான்? இருக்கிற வனிடமிருந்து பறித்து உண்ணத்தான் செய்வான். இது அவனது தவறல்ல, அவனை அப்படி இருக்க வைத்த சமூகத்தின் தவறு” என்று தனது கருத்தை இடையில் சொல்லி விட்டு படிப்பதைத் தொடர்ந்தார்.

“திராவிடர் இயக்கம் காரணமாக நான் படித்து, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை நீதிபதியாக வந்திருக் கிறேன்” படித்து முடிப்பதற்குள்ளாகவே கருத்தை உள் வாங்கிக்கொண்ட மக்கள் உணர்ச்சிப்பெருக்கில் படபடவென கைகளைத் தட்டினர். மேடையில் அமர்ந்திருந்த வர்கள் அந்தக் கருத்தை ஆமோதிப்பதை போல தலையசைத்தனர். கிடைத்த அந்த இடைவெளியில் ஆசிரியர், “யார் குற்றப் பரம்பரை? என்று கேட்டு, “உழைக்காமல் சாப்பிடுகிறான் பாருங்கள். அவன்தான் குற்றப்பரம்பரை” என்று பதில் சொன்னதும் கைதட்டல்கள் தொடர்ந்தன.

“வரதரஜூலு நாயுடு தலைமையில், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் இணைந்து பெருங்காமநல்லூர் போராட்டம் நடத்தினர். நீதிக்கட்சி அரசு வந்த பிறகு மனு கொடுத்த உடனேயே, குற்றப்பரம்பரை சட்டத்தில் சில திருத் தங்களைச் செய்து பெரும்பான்மை மக்களை விடுவித்தது” என்று தொடர்ந்து படித்துவிட்டு, சிமெண்ட் சாலையில் இப்போது போகிறவர்களுக்கு அந்தக்காலத்திலிருந்த பள்ளம் மேடு தெரியாது” என்று சொல்லி ஓர் இடைவெளிவிட்டு, “2024 இல் பா.ஜ.க. மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நம்மை குற்றப்பரம்பரை ஆக்கும் முயற்சிகள் நடக்கும்; மீண்டும் மனுதர்மம் சட்டமாக வரும்; தலைநகரம் டில்லி அல்ல, காசி” என்று சொன்னதும் ஒரு இறுக்கம் வந்து போனது. 

மேலும் தொடர்ந்து, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூகநீதியின் காரணமாக தமிழ்நாடு செய்த சாதனைகள், அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றை பட்டிய லிட்டு, மோடி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தையும், அவர்கள் நிறைவேற்றாவிட்டாலும் நம்மிடம் வெண்ணெய் உள்ளது அதை உருக்கினால் லட்சக்கணக்கில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரமுடியும் என்று சேது சமுத்திரம் பற்றி பேசினார். இவற்றையெல்லாம் சொல்லி உங்களை ஆயத்தப்படுத்தத்தான் இந்த சூறாவளிச் சுற்றுப்பயணம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!'' என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசையன், ஆண்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க.செயலாளர் ராஜாராம், தி.மு.க‌ நெசவாளர் அணி துணை செயலாளர் ராமசாமி, தி.மு.க.பேரூர் கழக செயலாளர் சரவணன், சி.பி.அய். ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, சி.பி.அய்.நகர செயலாளர் முனீஸ்வரன், காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் சுப்புராஜ்,வி.சி.க. தொகுதி செயலாளர் முத்துராமன், வி.சி.க.தொகுதி துணை செயலாளர் குழந்தை ராஜ், இ.யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் சர்புதீன், தலித் மக்கள் சம்மேளனம் பொறுப்பாளர் முத்து.முருகேசன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் தங்கபாண்டியன், கிறித்துவ மக்கள் நல பேரமைப்பு பொறுப்பாளர் நாகராசன், சமூக நல்லிணக்க பேரவை பொறுப்பாளர் முகமது சபி,ஜமாத்தே இஸ்லாமி பொறுப்பாளர் அபுதாகீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முடிவில் நகர கழக செயலாளர் ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, பரப்புரைக் குழு பேரையூரை நோக்கிச் சென்றது.

பேரையூரில் தமிழர் தலைவர்!

பேரையூர் காவல் நிலையம் அருகில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.ம.எரிமலை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துக்கருப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். ப.க.எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு, தென்மாவட்ட பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன் ராசா, அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், மண்டல தலைவர் சிவகுருநாதன், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சுப. முருகானந்தம், மண்டல செயலாளர் நா.முருகேசன், மாவட்ட துணை தலைவர் சிங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார்.

இந்தப் பயணம் எங்களுக்காகவா?

தமிழர் தலைவர், “பேரையூரில் ஒரு மாநாடு போல கூடியிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினார். 

“1946 இல், இந்த ஊரில் தில்லை என்ற தோழர் -  அந்தக்காலத்தில் ஜாதிப்பட்டத்தோடு, தில்லை நாடார் என்றுதான் சொல்வார்கள். அவருடன் சேர்ந்து 10 தோழர்கள் கழகக் கொடியை ஏற்றினார்கள். (ஆசிரியர் பேசப்பேச பின்னாலிருந்து ஒரு தோழர் தனது கைப்பேசியில் தில்லை நாடார் தந்தை பெரியாரோடு இருக்கும் படத்துடன் தமிழர் தலைவரிடம் கொடுத்தார். அவரோ அளவற்ற ஆனந்தத் துடன்), இங்கே பாருங்க படத்தையே காட்டிட்டாங்க. அறிவியல் இது” என்று ஒரு குழந்தையைப் போல குதூகலத்துடன் கூறிவிட்டு, தானும் பார்த்து மக்கள் பக்கமும் கைப்பேசியை திருப்பிக்காட்டினார். 

தொடர்ந்து, “1972 இல் தோழர் நெடுமாறனோடு ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நானும் இங்கே வந்து பேசியிருக் கிறேன்” என்றார் மனநிறைவுடன். பிறகு, “இந்தப்பயணம் எங்களுக்காகவா?” என்று மக்களைப் பார்த்து கேட்டார். “நாங்க ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்குக் கூட நிற்காதவர்கள்” என்று பதில் சொன்னார். மக்கள் அதை ஆமோதித்தனர். “இந்த நாடு ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? பாசிச நாடாக இருக்க வேண்டுமா? என்ற கேள்வி இருக்கிறது. இதில் எது நமக்கு வேண்டும் என்பதை தெளிவுபடுத்தத்தான் இந்தப்பயணம்” என்று பயணத்தின் நோக்கத்தை தெளிவு படுத்தினார். இன்னுமொரு முக்கியமான கருத்தை சொன்னார். அதாவது, “நாம் இங்கே ஒன்றாக கூடியிருக்கிறோம் என்றால், சுதந்திரம் வந்ததால் அல்ல,திராவிடர் இயக்கம் வந்ததால் தான்!” என்று குறிப்பிட்டு ஆழமாக சிந்திக்க வைத்தார். “வெள்ளைக்காரர்கள் வந்துதான் ஜாதியைத் திணித்தார்கள் என்று இங்கொரு ஆளுநர் வரலாற்றையே திரிக்கிறார்” என்றும், “காளை மாடு திராவிட மாடல் அடையாளம்! பசு மாடு ஆரிய மாடலின் அடையாளம்!'' என்றும், படிக்கக்கூடாது என்று சொல்வது ஆரிய மாடல்? படி படி என்று சொல்வது திராவிட மாடல்!'' என்றும் குறிப்பிட்டார். 

பெரியாரின் போராட்டம் 

தோற்றதில்லை!

தொடர்ந்து, காலமெல்லாம் பார்ப்பனியம் நம்மை படிக்க விடாமல் தடுத்தது. அதையும் மீறி நாம் படித்திருக்கிறோம்! அதனால் ஏற்பட்டுள்ள நல்ல விளைவுகளை மக்கள் முன் எடுத்து வைத்தார். அதையொட்டி சில புள்ளி விவரங்களை 'தினமணி' நாளிதழில் இருந்து படித்துக் காட்டினார். அதிலும் கூட நாளிதழில் தமிழகம் என்று இருப்பதை சுட்டிக்காட்டி, “இவரு ஆளுநர் கட்சிக்காரரு” என்று நையாண்டி செய்ய, மக்களும் மிகப்பொருத்தமாக பளிச்சென்று சிரித்துவிட்டனர். திராவிட இயக்கத்தின் பெண் விடுதலைப் பங்களிப்பை சுருக்கமாக பாடம் எடுப்பதைப் போல சொல்லிக்கொடுத்தார். சேது சமுத்திரத்திட்டம் மூட நம்பிக்கை காரணமாக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டதை வேதனையுடன் சொல்லி, பா.ஜ.க.வின் அமைச்சரே நாடாளுமன்றத்திலேயே ராமன் பாலம் கட்டினான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொன்னதை நினைவுபடுத்தி, “என்னுடைய போராட்டம் தோற்றது கிடையாது. வேண்டு மானால் கொஞ்சம் கால தாமதம் ஆகலாம். அவ்வளவுதான்.” என்று தந்தை பெரியார் சொன்னதைக் கூறி, “சேது சமுத்திரத் திட்டமும் நிச்சயம் நிறைவேறும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு!” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனர் நாகை.திருவள்ளுவன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன், மாவட்ட தலைவர் தனபாலன்,  தி.மு.க.ஒன்றிய பிரதிநிதி முருகன், தி.மு.க.மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வர்சை முகம்மது, தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம், வி.சி.க.மாவட்ட செயலாளர் இன் குலாப், ப.க.மாவட்ட தலைவர் மன்னர்மன்னன், ப.க.மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ், கழக வழக்குரைஞரணி மாநில துணை செயலாளர் வழக்குரைஞர் கணேசன், ஆதித்தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலா நன்றி கூறினார்.

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரைப் பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment