சென்னையில் தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு கழகப் பொருளாளர் பங்கேற்று உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

சென்னையில் தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு கழகப் பொருளாளர் பங்கேற்று உரை

சென்னை, பிப். 19- அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி ஏற்பாட்டில் சென்னையில் 17.2.2023 அன்று தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. 

சென்னை - தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற மாநாடு கல்வியில் தாய்மொழி புறக்கணிப்படுவதை எதிர்த்தும், உயர்க் கல்வியில் ஆங்கில வழிக் கல்வியை நீக்கிடும் ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுத்தும், ஹிந்தி மொழிதான் ஒரே அலுவல் மொழி, பயிற்று மொழி எனும் நிலையினை எதிர்த்தும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு கல்வியாளர் பேராசிரியர் முனைவர் ஜவஹர் நேசன் தலைமை வகித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியர் துருவ ஜோதி முகர்ஜி தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கேரள மாநிலத்தைச் சார்ந்த மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.பி. பாஸ்கர், ஆந்திரப் பிரதேச அனந்தபூர், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ஏ.சந்திரசேகர், கருநாடகா மாநில கல்லூரி மேனாள் முதல்வர் அல்லம் பிரபு, பெட்டாடுரு, திருவண்ணாமலை, -  லயோலா கல்லூரியின் செயலாளர் - தாளாளர் டாக்டர் மரிய ஜோசப் மகாலிங்கம், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன், மதுரை, மதுரைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் ஆர்.முரளி ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டு சிறப்புரையினை அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண்காந்தி நஸ்கர் வழங்கினார். 

தமிழர் தலைவரின் வாழ்த்துச் செய்தி 

மாநாட்டிற்குத் தமிழர் தலைவர் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியினை கருநாடக மாநில பொறுப்பாளர் வாசித்தார்.

தமிழர் தலைவர் ஆங்கிலத்தில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் பின்வருமாறு:

மொழிகாப்பு மாநாடு (ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி)

அனைத்திந்திய கல்வி பாதுகாப்புக் குழுவான ஏஅய்எஸ்இஸி (AISEC) மேற்கொண்ட முயற்சியின்படி சென்னையில் தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு நடக்கவிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகி றோம்.

மக்களின் பண்பாட்டு அடையாளத்தில் மொழி என்பது அடிப்படை அம்சமாகும். பல மொழிகள் பேசப்பட்டுவரும் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிட்ட மொழி மட்டுமே போதும் என்று எவரும் முடிவு செய்யலாகாது. பல சிறப்புச் சலுகைகளுடன் ஹிந்தியை அலுவல்  மொழியாக அறிவிப்பது முறையற்ற செயல். எங்கள் திராவிடர் கழகம் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் உருவாக்கிய இயக்கம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, 1926ஆம் ஆண்டுமுதல் ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்த்தே வந்துள்ளவர்கள் நாங்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்ட வணையில் 22 மொழிகள் இடம் பெற்ற நாடு இது. எங்குமே எவராலும் பேசப்படாத சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற எல்லா மொழிகளுமே அலுவல் மொழிகளாக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் ஹிந்தி மொழிக்கு மட்டும் அளித்துள்ள சிறப்புச் சலுகைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் அலுவல் மொழிகள் என்னும் தகுதி வழங்கப்படவேண்டும். சரிசமமாக, எந்தப் பாகுபாடுமின்றி. ஒன்றிய அரசு-மாநிலங்களுக்கிடையிலும், மாநிலங்களுக்கிடையிலும் நடுவிலும் அலுவல் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கவேண்டும். இந்த வழி முறையே எல்லோருக்கும் ஏற்புடையது.

ஆங்கிலத்திற்குப் பதிலாக மத்திய உயர்கல்வி நிலையங்களில் ஹிந்தி இருக்கும் என்று அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது ஓர் அரசியல் தந்திரமே. ‘ஒரே நாடு - ஒரே மொழி’ என்று நாட்டையே மாற்ற நடக்கும் சதி இது. காவிக் கூட்டத்தினருடைய சூழ்ச்சியின் முதல்படி இது. இந்த முயற்சி அரசமைப்புச் சட்டத்திற்கும் நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். நாட்டு மக்கள் பேசும் எல்லா மொழிகளையும் நல்லிணக்கத்துடன் இணைப்பதன் மூலம்தான் மக்களின் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட முடியும்.

தாய்மொழியுடன் ஆங்கிலம்  என்னும் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தக் கொள்கையின் பிடியிலிருந்து தளராமல் இருந்து தொடர்ந்து வருவது எங்கள் திராவிட மாடல் ஆட்சி. இதனால் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சி எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பெரிதாக எந்த இழப்பும் எங்களுக்கு இல்லை. சொல்லப்போனால், தமிழ்நாட்டு இருமொழிக் கொள்கையால் பல துறைகளில் முன்மாதிரி மாநிலமாக வளர்ச்சியே அடைந்திருக்கிறோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குறிப்பாக கல்வித்துறையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருமொழிக் கொள்கையே நம் நாட்டிற்கு தேசிய மொழிக்கொள்கையாகும் நாள் வரவேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகலாம். இந்த உணர்வை நடைபெறவுள்ள மொழிப் பாதுகாப்பு மாநாடு எல்லோர் மனங்களிலும் தீப்பொறியாய்க் கிளப்பும் என்று நம்புகிறோம். நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்தைப் பரப்பிடவும் இந்தச் சந்திப்பும் நிகழ்வும் பயன்படலாம். காரணம்- இறையாண்மை மக்களையே சார்ந்தது என்ற மறுக்க முடியாத உண்மை. மக்களின் தீர்ப்பே அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்பட வழி வகுக்கக்கூடும். அதைத் தொடர்ந்து இருமொழிக் கொள்கையே நாடு முழுவதும் நிலவும் நாள் விரைவில் வரும்.

நடைபெறவுள்ள மாநாடு வெற்றிகரமான நிகழ்வாக அமைய எங்கள் இதயபூர்வமான வாழ்த்துகள்.

- கி. வீரமணி 

தலைவர்

மாநாட்டிற்கு வர இயலாத நிலையில், கருநாடக மாநில அரசின் மேனாள் அரசு வழக்குரைஞர் டாக்டர் ரவிவர்மகுமார் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் சச்சிதானந்த சின்கா (மேனாள் பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி) மற்றும் முனைவர் வி.வெங்கட்ராமன் (மேனாள் பேராசிரியர் ராஜு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராஜபாளையம்) ஆகியோர் வாழ்த்துச் செய்தியினை அனுப்பியிருந்தனர். மாநாட்டு அரங்கில் வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

கழகப் பொருளாளர் உரை

மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

அரசமைப்புச் சட்டம் உருவாக்கிடும் பொழுதே ஹிந்தி மொழிக்கு சிறப்பு தகுதி தர வேண்டும் என்ற நோக்கில்தான் நிகழ்வுகள் நடந்தேறின. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்த்து வந்துள்ளது. பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி..வீரமணி அவர்கள், அடிக்கடி மேடையில் பேசும் பொழுது குறிப்பிடுவார். Our opposition to Hindi imposition is older than Hindi itself  (எங்களது ஹிந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு என்பது ‘ஹிந்தி'யைவிட மூத்தது). இன்றைய ‘ஹிந்தி' என்பது அரசமைப்புச் சட்டம் கூறும் ‘அலுவல் மொழி ஹிந்தி' என்பதே இதன் கருத்து. கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்று. அரசமைப்புச் சட்டத்தில் விதி இருந்த நிலையில் 1965க்குப்பின் ஆங்கில மொழி நீடிப்பு என்பது சட்ட விதி என்பதாக இல்லாமல் வெறும் உறுதிமொழி அளவிலேயே இன்றளவும் நீடிக்கிறது. அந்நிலை மாற்றப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அதற்குண்டான வகையில் ஆளும் தரப்பினருக்கு அழுத்தம் தருகின்ற வகையில் பொது வெளியில் கருத்து உருவாக்கப்பட வேண்டும். அந்த அழுத்தம், அரசியல் கட்சிகள் தரும் தேர்தல் அறிக்கையிலும், ‘மொழி பாதுகாப்பு', அனைத்து மொழிகளும் சமத்துவமாக கருதப்படும் நிலையாகவும் இடம் பெற வேண்டும்.

கூடுதலாக, அரசியல் கட்சி கூட்டணிகளின் குறைந்த பட்ச வேலைத் திட்டமாக இது இடம் பெற வேண்டும். அதற்குரிய வகையில் இந்த மாநாடு - மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் உரிய பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கழகப் பொருளாளர் தமதுரையில் குறிப்பிட்டார்.

மாநாட்டிற்கு தென் மாநிலங்களான கேரளா, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய பிற மாநிலங்களிலிருந்தும் பேராளர்கள் பலர் வருகை தந்திருந்தனர். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் திரளாக மாநாட்டிற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 

மாநாட்டின் நிறைவாக அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரைவுத் தீர்மானம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் கமிட்டியின் கடந்த கூட்டத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும். கேந்திரிய வித்யாலயா. அய்அய்டி., அய்அய்எம், ஒன்றிய பல்கலைக்கழகங்களில் ஹிந்தியை மட்டுமே பயிற்றுமொழியாகப் பயன்படுத்த வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளதற்கு அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தென்னிந்திய மாநில கமிட்டிகள் ஏற்பாட்டில் நடைபெறும்  பாதுகாப்புக்கான தென்னிந்திய மொழிப் பாதுகாப்பு மாநாடு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம்மைப்போன்ற பன்மொழி பேசும், கூட்டாட்சி நாட்டில், பல்வேறு இனங்கள், மொழிகள், ஜாதிகள், வர்க்கங்கள் ஒன்றாக வாழும் நாட்டில், 56.37 விழுக்காட்டினர் -அதாவது பாதிக்கும் மேற்பட்ட மக்களின் முதல் மொழியாக ஹிந்தி இல்லாத நிலையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் ஹிந்தி பேசாத மக்களின்மீது இதுபோன்று ஹிந்தி திணிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது, நாட்டின் கூட்டாட்சி  முறைக்கு எதிரானது. மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்கு எதிரானது என்று மாநாடு உறுதியாகக் கருதுகிறது. இந்தியாவில் 22 அலுவல் மொழிகள் உள்ளன. அவை அனைத்தும் சம உரிமை உள்ளவை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 344(1)2ம் 8ஆவது அட்டவணையும் கூறுகிறது. அதில் எந்த ஒரு மொழியையும் தேசிய மொழி என்று கூறவில்லை. ஆனாலும் 8ஆவது அட்டவணையில் ஆங்கிலம் இடம் பெறவில்லை.

ஆங்கிலேயர்களால் வரலாற்றுக் காரணங்களால், நமது நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ஆங்கிலம் உலக அறிவின்  பொக்கிசத்திற்கான வாயிற்கதவுகளைப் திறந்துவிட்டது. ஜனநாயகம், மனிதநேயம், விஞ்ஞானபூர்வ சிந்தனைகளை நாட்டிற்குள் கொண்டு வந்தது. நாடு சுதந்திரம் பெறும்போது ஏற்கெனவே ஆங்கிலம் புழக்கத்தில் வந்துவிட்டது. சொல்லப்போனால் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பல மொழிகள் பேசும் இந்திய மக்களை ஆங்கிலம்தான் ஒன்றுபடுத்தியது. எனவே ஆங்கிலத்தை அந்நிய மொழி என்று முத்திரை குத்த முடியாது.

பல்வேறு தேசிய இனங்களின் மொழிகளை வளர்த்தெடுப்பதற்கு சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் உரிய சிரத்தையோடு முழுவீச்சிலான முயற்சிகளை மேற்கொள்ளும் என மக்கள் எதிர்பார்த்தனர் என்பதை இந்த மாநாடு கவனத்தில் கொள்கிறது. ஒரு வளர்ந்த மொழியுடன் தொடர்ச்சியான உறவாடல் மூலமாகத்தான் ஒரு மொழி வளர்ச்சியடைவதை  உத்திரவாதப்படுத்த முடி யும். சொல்லப்போனால் ஆங்கிலேயரால் இந்தியா விற்குக் கொண்டுவரப்பட்ட வளர்ந்த மொழியாக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கிலத் தோடு இணைந்து உறவாடியதன் மூலமாக  இந்திய மொழிகளும் இன்றிருக்கக்கூடிய நிலைக்கு வளர்ந்துள்ளன.

ஹிந்தி மொழியை ஹிந்தி பேசாத மக்கள் மீது திணிப்பது பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஊறு விளைவிக்கும் என்று மாநாடு கருதுகிறது. அமைச்சர் .அமித்ஷா கூறுவதுபோல அது மக்களை ஒன்றுபடுத்துவதற்கு மாறாக, ஹிந்தித் திணிப்பானது ஏற்றத்தாழ்வை உருவாக்கி, குறுகிற மொழிவெறி உணர்வுகளைத் தூண்டிவிட்டு விடும். அது மக்களைப் பிளவுபடுத்திவிடும்.

தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய் மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டுமென்று மாநாடு கருதுகிறது. ஆனால், உயர்ந்த அறிவைப் போதிக்கும் அளவிற்கு இந்திய மொழிகள் வளர்கின்ற கட்டத்தை அடையும் வரை உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு மாற்றாக வேறு எந்த மொழியையும் பயிற்று மொழியாக ஆக்கக்கூடாது. இந்து - ஹிந்தி - ஹிந்துஸ்தான் என்ற ஹிந்து மதவெறிவாத முழக்கத்தின் தொடர்ச்சியாகவே தற்போதைய முயற்சி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானதாகும்.

எனவே, இந்த மாநாடு பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. ஹிந்தியை ஒற்றை ஆட்சி மொழியாகவும், கல்வி நிலையங்களில் ஒற்றைப் பயிற்று மொழியாகவும் ஆக்கக்கூடாது.

2. உயர்கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும். அதற்காக அனைத்து மாநில மொழிகளையும் குறுகிய காலத்தில் வளர்த்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

3. நாடு முழுவதும் தொடக்க கட்டத்தில் உரிய முக்கியத்துவமளித்து, உடன் ஆங்கிலத்தைப் போதிக்க வேண்டும்.

4. நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர வேண்டும்.

5. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் ஆங்கிலத்தைச் சேர்க்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட தீர்மான வரைவினை அனைவரும் ஒருமித்து கை உயர்த்தி வழிமொழிந்து நிறைவேற்றினர்.

மாநாட்டு ஏற்பாடுகளை ராஜசேகர், திலகர், வால்டேர் மற்றும் பல பொறுப்பாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment