சங்கரன்கோவில், சேத்தூரில் தமிழர் தலைவர் எழுச்சியுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 26, 2023

சங்கரன்கோவில், சேத்தூரில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 சனாதனத்தால் சாதிக்க முடியாது; 

திராவிட மாடல் சாதித்து காட்டியிருக்கிறது!

காவிகளின் பிள்ளைகளுக்கும் சேர்த்துப் போராடும் நாங்கள் சமூக விரோதிகளா?

தென்காசி, பிப்.26 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில், நாடெங்கும் நடைபெற்று வரும், பெரும் பரப்புரைப் பயணத்தில் சங்கரன்கோவில், சேத்தூர் பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு  எழுச்சி உரை ஆற்றினார்.

சங்கரன்கோவிலில் தமிழர் தலைவர்!

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில், 25.02.2023 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு- திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக் குரைஞர் த.வீரன் தலைமை வகித்தார். ப.க.மாநில அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, மண்டல செயலாளர் அய்.இராமச்சந்திரன், மாவட்ட ப.க.தலைவர் நல்லசிவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சவுந்திரபாண் டியன், மாநில சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சனாதனம் சாதிக்காது

அதிரடிப்படையினர் உள்ளிட்ட காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் கூட்டத் திற்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஆசிரியர் தமது உரை யின் தொடக்கத்தில், “காவல்துறையினர் பெருமளவில் கூடியிருக்கின்றனர். அவர்கள் கடமை, கடமை என்று இருந்து விடுவதால் இது போன்ற கருத்துகளை கேட்பதே இல்லை. ஆகவே இன்று அவர்களும் நமது கருத்துகளை கேட்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நகர் மன்றத்திற்கு ஒரு பெண் தலைவராக ஆகியிருப்பது இன்னுமொரு மகிழ்ச்சி'' என்றார்! “சனாதனம் ஆட்சி புரிந்தால் இந்தப் பெண்ணுக்கு இங்கு வேலை இல்லை. சனாதனத்தால் சாதிக்க முடியாததை திராவிட மாடல் சாதித்துக் காட்டும்'' என்றார் பலத்த கைதட்டலுடன். “இதற்கு முன்னாலே சங்கரன்கோவிலுக்கு தந்தை பெரியார் வந்திருக்கிறார். நாங்கள் வந்திருக்கிறோம். அன்றைக்கு இங்கு நகர சபைத் தலைராக தோழர் பழனிச்சாமி இருந்தார். அவருக்கு வீரவணக்கம்! இன்றைக்கு அதே இடத்தில் ஒரு பெண் இருக்கிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பழனிசாமியின் தந்தை தளவாய் நினைவுக்கு வருகிறார் என்றார். பொதுமக்கள், தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமான மக்கள் திரண்டிருந்ததாலும், கூட்டம் நடத்த எதிர்ப்பு இருந்ததாலும், காவல் துறையினர் குவிக்கப் பட்டிருந்ததாலும் ஆசிரியர் குறித்த நேரத்தையும் தாண்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் கொடுக்கப் பட்டுள்ள மூன்று தலைப்புகளைப்பற்றி எழுச்சிகரமாக உரையாற்றினார்.

கலந்து கொண்ட தோழர்கள்

இந்த பரப்புரை கூட்டத்தில் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தென்மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை, மாவட்ட ப.க.செயலாளர் ஆலடி எழில்வாணன், மாவட்ட ப.க.தலைவர் சுரண்டை ஜெயபால், தி.மு.க.நகர செயலாளர் பிரகாஷ்,  ஒன்றிய பெருந்தலைவர் சங்கர பாண்டியன்,  ப.க.பொறுப்பாளர் சங்கரலிங்கம், வி.சி.க. மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் இனியன், கழக அமைப்புச் செய லாளர் மதுரை வே.செல்வம், தி.மு.க. ஒன்றிய செய லாளர்கள் குருவிகுளம் தெற்கு-கடற்கரை, குருவிகுளம் கிழக்கு - கிறிஸ்டோபர், வாசுதேவநல்லூர் தெற்கு- பூசைப்பாண்டியன், மேலநீலிதநல்லூர் மேற்கு ராமச் சந்திரன், வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் பராசக்தி, தி.மு.க.மாவட்ட பொருளாளர் சர வணன், தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் ராஜதுரை, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ், வழக்குரைஞர் சண்முகையா, தி.மு.க. மூத்த முன்னோடி அண்ணாவி அப்பன், தி.மு.க. பேரூர் கழக செயலாளர்கள் சிவகிரி-செண்பக விநாயகம், திருவேங்கடம் - மாரிமுத்து, புளியங்குடி -அந்தோணிசாமி, வாசுதேவநல்லூர்- ரூபி பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகர ப.க. தலைவர் சதாசிவம் நன்றி கூறினார். அங்கிருந்து சேத்தூர் நோக்கி பயணக் குழு புறப்பட்டது.

சேத்தூரில் தமிழர் தலைவர்!

சேத்தூர் பேருந்து நிலையம் கலையரங்கம் முன்பு மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இல.திருப்பதி தலைமை வகித்தார். ராஜபாளையம் நகர தலைவர் பூ.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் தி.ஆதவன், மண்டல இளைஞரணி செயலாளர் அழகர், ப.க. மாநில துணைத் தலைவர் கா.நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி, திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். 

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். 

அவர் தனது உரையில், ”எங்களைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கின்ற தோழர்களே, உங்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம். உங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணம். அப்படிப்பட்ட நாங்கள் சமூக விரோதிகளா?” என்று கேள்வி எழுப்பி விட்டு, மூன்று தலைப்புகளிலும் சிரிக்கவும், சிந்திக்கவுமாக பேசி தனது உரையை நிறைவு செய்தார். தோழர்களிடம் தமிழர் தலைவர் விடைபெற்றுக்கொண்டு, இரவு முகாமான மதுரையை நோக்கிப் புறப்பட்டார்.

கலந்து கொண்ட தோழர்கள்

இந்த பரப்புரை கூட்டத்தில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சி.பி.அய். மாவட்ட செயலாளருமான பொ. லிங்கம், ம.தி.மு.க. வெளியீட்டு அணி செயலாளர் டாக்டர் நவபாரத் நாராயணராஜா,  அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ம.தி.மு.க.தொழிலாளரணி மாநில துணை செயலாளர் காதர் மைதீன், வி.சி.க.தொகுதி செயலாளர் சரவணன், தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர் தமிழரசு, சி.பி.எம்.பொறுப்பாளர் குருநாதன்,

ம.தி.மு.க. சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யணப்பன், சி.பி.அய். பேரூர் செயலாளர் ராஜா, சேத்தூர் கூட்டுறவு சங்கத் தலைவர் பட்டு ராஜன், தி.மு.க. பொறுப்பாளர் சண்முகசுந்தரம், ப.க. மாநில அமைப்பாளர் கே.டி.சி.குருசாமி, ம.தி.மு.க. ராஜபாளையம் நகர செயலாளர் மதியழகன், தி.மு.க. ராஜபாளையம் நகர பொறுப்பாளர் சரவணன், காங்கிரஸ் கட்சி மேற்கு வட்டார தலைவர் கணேசன், ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ம.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திண்டுக்கல் மு.ஈட்டி கணேசன் வழங்கிய மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.

முடிவில் ராஜபாளையம் நகர செயலாளர் பாண்டி முருகன் நன்றி கூறினார்.

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் பங்கேற்றனர்.


சில்லுண்டிகளால்

இந்த நேரத்திலும் இவ்வளவு பேர் திரண்டிருப் பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அதைவிட ஒன்று, இப்படிப்பட்ட ஓர் உணர்வை உண்டாக்குவ தற்காக பொது மக்கள் ஒரு பக்கம் ஆர்வமாக இருந்தாலும், இந்த ஆர்வத்தை குறைத்து விடக்கூடாது என்று சில சில்லுண்டிகள் விசமத்தைச் செய்து, அதன் மூலம் நம்முடைய உணர்ச்சியை அதிகமாக்கியிருக் கிறார்கள். முதலில் அவர்களுக்கு நன்றி! இதோடு நிறுத்தி விடாதீர்கள். ஒவ்வொரு முறையும் செய் யுங்கள். அப்பதான் எங்க இயக்கம் வளரும். அடிக்க அடிக்க எழும்பும் பந்து இந்த இயக்கம் (கைதட்டல்). எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்த இயக்கம் இந்த இயக்கம். (கைதட்டல்). எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை, அணியை அசைத்துவிட முடியாது. (கைதட்டல்). அதை நன்றாக நினைத்துப்பார்க்க வேண்டும். சில கூலிப் பட்டாளங்கள் கூவி இதை நிறுத்திவிட முடியாது. (கைதட்டல்). 

நாங்கள் வெளியூருக்கு வரும்போதே, கணக்கு எழுதிவிட்டுத்தான் வருகிறோம். (கைதட்டல்). திரும்பப் போனாதான் வரவு. இல்லேன்னா இல்லை. எனக்கென்ன? ரொம்ப வயதாகவில்லை, 90 தான். (சிரிப்பும் பலத்த கைதட்டலும்) எது வந்தாலும் சந்திக் கலாம். இது ஒன்றும் ஆண்டவன் அருளால் வந்ததல்ல, மருத்துவர்கள் தயவால் வந்தது. (கைதட்டல்) என்னுடைய துணிவால் வளர்ந்தது. உங்கள் கனிவால் உற்சாகம் பெறுகிறது! ஊக்கம் பெறுகிறது..(கைதட்டல்) ஆகவே இந்த சலசலப்பெல்லாம் ஒன்றுமில்லை. காவல்துறை அவர்களுடைய கடமையை சிறப்பாக செய்கிறார்கள். செய்வார்கள். நாங்களே காவலாளிகள் தானே! (வெடிச்சிரிப்பும், கைதட்டலும்) கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அவ்வளவு தானே! (கைதட்டல் தொடர்கிறது) எங்களுக்கில்லை, மக்களுக்கு காவல் தேவை. காலிகளிடமிருந்து, சமூக விரோதிகளிடமிருந்து, கூலிகளிடமிருந்து - அவர் களைப் பற்றி பேசி நேரத்தைக்கூட செலவழிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 

சேத்தூர் பொதுக்கூட்டம், 25.02.2023.

சனாதன தர்மம் என்றால் என்ன?

சனாதன மதம் என்றால் நித்தியமான மதம் அல்லது புராதன விதி என்று பொருள்படும். இது வெகு காலங் களுக்கு முன்பு, மானிடர்களுக்கு அளிக்கப்பட்ட புண்ணிய புஸ்தகங்களான வேதங்களை ஆதாரமாகக் கொண்டது. இந்த மதத்திற்கு ஆரிய மதம் என்ற பெயரும் இடப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆரிய மகா ஜாதியாருள் முதலாம் வகுப்பாருக்கு இம்மதம் கொடுக்கப்பட்டது.(பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், எல்லா ஜாதி பெண்கள்) ஆரிய என்ற பதத்திற்கு மேன்மை பொருந்திய என்று அர்த்தம். இவ்வுலகில் வசித்த பூர்வ ஜாதியார்களைக் காட்டிலும் ஒழுக்கம், ரூபம் இவற்றுள் மிகச் சிறந்த ஜாதியாருக்கு ஆரியம் என்று பெயரிடப்பட்டது. இவ்வாரிய மகா ஜாதியாரின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்று கூறப்படுகிற இந்நாட்டின் வடபாகத்தில் குடியேறினார்கள். (அவர்களை வந்தேறி கள் என்று சொல்கிறோமே அந்த வாக்குமூலம் தெளி வாக இதில் பதிவாகியிருக்கிறது) அவ்விதம் அவர்கள் முதலில் குடியேறின நாட்டிற்கு ஆரிய வர்த்தம் என்ற பெயரும் உண்டு.

- 1907 இல் காசி பல்கலைக்கழகத்தின் சார்பில் பி.ஏ.பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டு, நாராயண அய்யர் தமிழில் மொழி பெயர்த்தது. அதில் உள்ள ஒரு பகுதி. 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 

சங்கரன்கோவில் பொதுக்கூட்டம், 25.02.2023.

சங்கரன்கோவில், சேத்தூரில் காவிகளின் காலித்தனம்

திராவிடர் கழகத் தலைவர் கலந்து கொள்ளும் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தை வடக்கு ரத வீதியில் நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, பொதுக்கூட்டம் நடப்பதற்கு சற்று முன்னதாக, அதாவது மாலை 4 மணி அளவில்  நான்கு ரத வீதியில் 'சிவாயநம மந்திரம்' சொல்லியபடி இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 10 பேர் ஊர்வலம் செல்ல முயன்றனர். புளியங்குடி காவல் துறையினர் அனுமதி இல்லாமல் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறியதால், கோயிலுக்குள் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெ.சக்திவேலன், செங்குந்த சமுதாய சங்கத் தலைவர் மாரிமுத்து மற்றும் அய்யப்ப சங்க நிர்வாகிகள் 'சிவாயநம மந்திரம்' சொல்லி சிவன் கோயிலினுள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக செல்ல முயன்றவர்கள் மீது புளியங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல், சேத்தூரில் தமிழர் தலைவரின் வாகனம் மேடைக்கு அருகில் வந்த போது, அங்கிருந்த இந்து முன்னணி அலுவலகத்தின் முன் 7 பேர் நின்று “வீரமணி ஒழிக” என்று கூக்குரலிட்டனர். காவல் துறையினர் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். அப்போது பேசிக்கொண்டிருந்த பெரியார் செல்வம், காவல்துறையினரின் பாராமுகத்தை கண்டித்து பேசினார். பின்னர் அந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். 20 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                                                          டபுள் இஞ்சின்?

பெண்கள் படிக்கவே கூடாது என்றார்கள். கொஞ்சம், கொஞ்சமாக படிச்சாங்க. கலைஞர் வந்த உடனே ஒரு வியூகம் வகுத்தார். என்னனா? சரி, பெண் குழந்தை படிக்காம வீட்டில் இருக்கா? எட்டாவது வரையிலும் படிச்சிருந்தாலே உங்களுக்கு இவ்வளவு உதவின்னு சொன்னார். அப்படியாவது எட்டாவது வரையில் வர மாட்டாங்களான்னு. அப்புறம் பத்தாவது வகுப்பு வரையிலும் உயர்த்தினார்கள்.  அதைவிட இந்த ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சியின் நீட்சியில் பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்த மாதிரி என்று அந்தப் பெண்ணுக்கு அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் படித்தால் மாதம் ரூ.1000 அவரது வங்கிக் கணக்குக்கு செல்லும். ஆண்டுக்கு ரூ. 12,000. ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால் நான்கு பேருக்கும் தலா ரூ. 1000 கிடைக்கும். கஜானா காலியாக இருந்தாலும் செய்கிறார். இந்தியாவில் வேறு எங்காவது இது இருக்கா? பிரதமர் மோடி எங்க கட்சிக்கே ஓட்டு போடுங்க மாநில அரசுக்கும். அப்பதான் டபுள் இஞ்சின் என்றார். இரண்டு இன்ஜினாம். அப்பத்தான் மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும். நல்ல இணைப்பு இருக்குமாம். சரி, மத்தியபிரதேசத்தில் டபுள் இன்ஜின் தானே? இன்னும் கேட்டா அந்த இன்ஜின் தானா வர்லே. வெற்றி பெற்று வரவில்லை. வெற்றி பெற்றவர்களை விலைக்கு வாங்கிட்டாங்க. அந்த டபுள்  இஞ்சின் மாநிலத்துக்குதானே பெண்கள் போவதற்கு பயப்படறாங்க. இங்க சிங்கிள் இஞ்சினா இருந்தாலும் ஓட்டை இல்லாத இஞ்சினா இருக்கு (பலத்த கைதட்டல்) சரியாக நடக்கிறது.

                                                                                                                               - தமிழர் தலைவர்

சேத்தூர், 25-02-2023


No comments:

Post a Comment