ஆசிரமங்களின் யோக்கியதை - பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

ஆசிரமங்களின் யோக்கியதை - பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

விழுப்புரம் பிப்.19 அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர்  ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்தி  விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று  கூறினார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். இதில் அந்த ஆசிரமம் அனுமதியின்றி இயங்கியதுடன், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களை கடும் சித்ரவதைக்கு ஆளாக்கியதும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும்,அங்கிருந்த பலர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து ஆசிரமத்தில் இருந்த 143 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வெவ்வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று  (18.2.2023) தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் விழுப்புரம் வந்தார். அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு ஆசிரமத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி னார்.

 அப்போது ஆசிரமத்தில் எவ்வளவு ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளீர்கள்?, அங்கு 3 வேளையும் சரியாக உணவு வழங்கப்பட்டதா?, யாரேனும் அடித்து துன்புறுத்தினார்களா?, தனி அறையில் அடைத்து வைத்தோ அல்லது இரும்புச்சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்தினார்களா?, ஆசிரமத்தில் உங்களை என்னென்ன வேலைகளை செய்ய சொன்னார்கள்?, உங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் பார்க்க வந்தார்களா? மற்றும் ஆசிரமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதா?, குரங்குகள் மற்றும் நாய்களை விட்டு கடிக்க வைத்தார்களா? என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். குறிப்பாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும் கேட்ட றிந்தார்.  

இதனை தொடர்ந்து குண்டலப் புலியூருக்கு சென்ற தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார், அங்குள்ள அன்புஜோதி ஆசிரமத்தை பார்வையிட்டார். அப்போது ஆசிரமத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் தங்கும் அறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்கும் அறைகள், சமையல் அறை, உணவு பரிமாறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் தங்கும் அறைகளில் மின்விளக்கு வசதி, மின்விசிறி வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செஞ்சி, மேல்மலையனூர் அருகே உள்ள துறிஞ்சிப்பூண்டி ஆகிய இடங்களில் உள்ள மனநல காப்பகங்களுக்கு சென்று அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டார். 

முன்னதாக தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அன்பு ஜோதி ஆசிரம வழக்கை பொறுத்தவரை மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரணை செய்கிறது. வழக்கை விசாரிக்க என்னையும், மகளிர் ஆணைய வழக்குரைஞர் மீனாகுமாரியையும் நியமனம் செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் இருவரிடம் பாலியல் அத்துமீறல் நடந்தது தெரியவருகிறது. ஆசிரமத்தில் உள்ள அலுவலக அறைகள், மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளை ஆய்வு செய்தோம். அவைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது. விசாரணை முழுமை அடைந்த பிறகு விரைவில் ஆணையத்தில் அறிக்கை சமர்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment