அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம்

சென்னை, பிப்.24 காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதினார் என்றும், காரல் மார்க்ஸ் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்றும் 21.2.2023 அன்று  சென்னை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி  22.2.2023 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-  மனிதர்களைப் பிறப்பால், ஜாதியால், நிறத்தால், பாலினத் தால், பணத்தால் என எந்த வகையிலும் பாகுபடுத்திப் பார்க்காமல் அவரவருக்கான உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்கிற பரந்த மானு டப்பார்வை கொண்ட பொதுவுடைமை கருத்தியலை வழங்கியவர் காரல் மார்க்ஸ். பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருணபே தத்தை பாதுகாக்க நினைப்போருக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பதுபோல ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும் பதவிப்பொறுப்புக்கு அழகல்ல. முறையுமல்ல!. ஒரு கட்சியின் சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத் துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்க செய்யப்பட்ட மேனாள் ராணுவ வீரர்கள் அளித்த கோரிக்கையை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடும் ராஜ்பவன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலாக தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட் டத்தடை மசோதாவின் நிலை என்ன? என்பதை எப்போது வெளியிடப்போகிறது? கிடப்பில் உள்ள மற்ற மசோதாக்களை பற்றி என்ன சொல்லப்போகிறது?. 

ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவிக்கு பரிந்துரைத்த பா.ஜ.க.வின் உள்நோக்கமிக்க அரசியல் செயல்பாடுதான் சென்னையில் மேனாள் ராணுவ வீரர்கள் சிலரை பங்கேற்கச் செய்த ஆர்ப்பாட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் குடிதண்ணீர் பிடிக்கும் இடத்தில் குடும்பத்தின ரிடையே நடந்த வாய்த்தகராறு முற்றியதில் தாக்குதல் நடைபெற் றுள்ளது. இதில் ராணுவ வீரர் பிரபு என்பவர் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இது தொடர் பாக உடனடியாக காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற் கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர் கைதும் செய்யப்பட்டிருக் கிறார் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் ஆளுங்கட்சி கவுன்சில ராக இருக்கிறார் என்பதைத்தவிர, குடும்பரீதியான இந்த தகராறில் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் துளியும் கிடையாது. ஆனால், தேசபக்தியையும் அரசியல் வியா பாரப் பொருளாக்கிவிட்ட பா.ஜ.க. சார்பில் உள்நோக்கத்து டன் இந்த விவகாரம் ஊடக விளம்பரத்திற்காக பயன்படுத்தப் படுகிறது. அதன் பெயரில் ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டு, வலிந்து கொண்டு வரப்பட்ட மேனாள் ராணுவவீரர் ஒருவர், ''தமிழ் நாட்டில் வெடிகுண்டு வைக்கும் சூழல் வரும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைமையை உருவாக்குவோம்'' என பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசவைக்கப்பட்டுள்ளார். 

இத்தகைய அரசியல் கண் ணோட்டங்களை புறந்தள்ளி, சட்டரீதியான உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்டுவரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத் தில் அரசியல் பார்வையுடன் பதிவுகளை இடுவது என்பது உள் நோக்கம் கொண்ட விஷமத்தன மான செயலன்றி வேறில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பதவியினை வகிக்கும் ஆளுநர் ரவி, அந்த பொறுப்புக்குரிய மாண்பை பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடிக் கொண்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். தனக்கான விளம்பரத்திற்காகவும், தன்னை பதவியில் நியமிக்க பரித் துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும், உலகத்தலைவர்களையும், தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும், அரசியல்வாதி போல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக்கொண்டு, வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் ஆளுநருக்குரிய வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும். 

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment