ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை

கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தது எதைக் காட்டுகிறது?

ஏழைகளுக்கு வஞ்சிப்பு - கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பா?

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது தொடர்வதா?

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தது எதைக் காட்டுகிறது? ஏழைகளுக்கு வஞ்சிப்பு - கார்ப்பரேட்டு களுக்கு இனிப்பா?  தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது தொடர்வதா? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த நடப்பாண்டிற்குரிய (2023-2024) ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதியன்று ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ளது  - மக்களால் மிகவும் அறிந்த தகவல் - ஆண்டுக்கு வருமானம் 7 லட்சம் ரூபாயாக இருந்தால், அவர்கள் வருமான வரி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்பதே!

அதைவிட அதை ஏதோ வெகுமக்களாகிய சாமானி யர்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்போல ஊடகங்களில் சிலராலும், பிரதமர் மோடி போன்ற கட்சித் தலைவர் களாலும் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் காட்சிகளும் அரங்கேறியிருக்கின்றன!

இப்போது உலகில் நடைபெறும் ஜனநாயக ஆட்சிகள் - மக்கள் நலப் பாதுகாப்பு ஆட்சிகள் (Welfare State) என்றே வர்ணிக்கப்படுகின்றன.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயக குடியரசு என்பதை மறக்கலாமா?

முன்பு, ஆதாவது 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத் திலும், ஆட்சிகள் பெரிதும் குடிமக்களைப் பாதுகாக்கும் சட்டம் - ஒழுங்கை மட்டுமே கண்காணிக்கும் ஆட்சி களே; மற்றபடி அவர்களது நலம் அது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை; அவர்களது நலவாழ்வுத் திட்டங்களை வகுப்பதோ, செயல்படுத்துவதோ அரசின் வேலை அல்ல.  Police State - என்றே நடத்தப்பட்டு வந்தன. பிறகு அது மாறிவிட்டது.

நமது அரசமைப்புச் சட்டத்தின்படி மக்களாகிய நமக்கு நாமே வழங்கிக் கொண்ட ஒன்றே இறையாண்மை மிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதாகும்.

ஏழைகள் வஞ்சிப்பு - கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பா?

எனவே, இது மக்கள் - வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், வளங்களைப் பாதுகாக்கவும் கடமைப் பொறுப்பேற்ற அரசு ஆகும்!

இதனை அடைய அரசின்பட்ஜெட் வரவு - செலவுத் திட்டம் - நிதிநிலை அறிக்கை ஒரு பொருளாதார இயந்திரம் போன்ற கருவியாகும்.

அது வெறும் வரவு - செலவுத் திட்டம் மட்டுமல்ல; அதைத் தாண்டிய கொள்கை அறிக்கையும்கூட!

மக்களாட்சி - குடியரசு இரண்டும் இணையும்போது, வாக்களித்த பெரும்பாலோராகிய சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனே முக்கியம்!

அவர்களது நலன் காக்கவேண்டிய தலையாய கடமை அரசுகளுக்குக் குறிப்பாக - ஒன்றிய அரசுக்கு உண்டு. அந்தக் கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்து பார்த்தால், 'பளிச்'சென எவர் கண்ணுக்கும் தென்படும் செய்தி ஏழைகள் வஞ்சிப்பா? கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இனிப்பா? பெரும் சலுகை கார்ப்பரேட்டுகளுக்குத்தானே!

அதேபோல், சாமானிய ஏழை மக்களுக்கான விலை வாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், இல்லத்தரசி களுக்கு இனிப்பான செய்திகள் முதலியவற்றை தேடினாலும் கிடைக்காத பரிதாப நிலைதான் உள்ளது!

கிராமப்புற மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு!

எடுத்துக்காட்டாக, கிராமப்புற மக்களிடையே வறுமை ஒழிப்புத் திட்டமான ''மகாத்மா காந்தி தேசிய கிராம நூறு நாள் வேலைத் திட்டம்'' என்ற முன்பு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) ஆட்சியின் போது, கிராமப்புற பெண்கள், ஆண்கள் வேலை செய்யும் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதி ஆண்டுக்கு ஆண்டு குறைக்கப்பட்டே வருவது எதைக் காட்டுகிறது?

சென்ற நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. (அரசியல் பார்வையா? வேறு காரணமா என்று புரியவில்லை).

சென்ற நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகை (இந்தியா முழுவதற்கும் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு) 73,000 கோடி ரூபாய்.

இவ்வாண்டு 60,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

2023-2024 திருத்தப்பட்ட மதிப்பீட்டுப்படி, 89,000 கோடி ரூபாயாகும்.

அதிலிருந்து 29 ஆயிரம்  கோடி ரூபாயைக் குறைத்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசினுடைய கிராம வளர்ச்சித் துறையே (Rural Development Ministary) பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி போதாது என்றும், இன்னும் அதிக நிதி தேவை என்றும் தெரிவித்திருக்கிறது.

சிறுபான்மையினரின் கல்வியில் கை வைப்பு!

கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய விவசாயக் கூலி வேலை செய்யும் மகளிர் நிலை உயர்ந்துவிட்டதா? வறுமை ஒழிந்துவிட்டதா? இல்லையே! அதிகமாக அல்லவா பெருகியிருக்கிறது! அதன்படி தொகையை சென்ற ஆண்டைவிட அதிகமாக அல்லவா ஒதுக்கி யிருக்கவேண்டும்?

'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைப் போன்று மற்றொரு செய்தி சிறுபான்மையினர் நலனில் - குறிப்பாக அந்த மக்களின் இளைஞர்கள் படிப்பிற்கு அளிக்கப்பட்ட உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) மற்றவை யும் குறைக்கப்பட்டுள்ளது!

38 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது!

இவ்வாண்டு அவர்களது கல்வி, அதிகாரமளித்தல் (Empowerment) இவற்றிற்காக ஒதுக்கப்படும் தொகை முந்தைய ஆண்டைவிட குறைவு.

முந்தைய ரூ.2,515 கோடியிலிருந்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.1,689 கோடி மட்டும்தான்.

அறிவிப்புகள் எல்லாம் 

'ஜூம்லா'தானா?

மற்றொரு எடுத்துக்காட்டு, 'ஆயுஷ்' துறை என்ற மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஆயுர்வேதத்திற்கு மட்டும் 150.13 கோடி ரூபாய். மற்ற படிப்பு மருத்துவத் துறைக்கு தமிழ், சித்த வைத்தியம், யுனானி வைத்தியம் இவை புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணி புரிகிறதா?

சமஸ்கிருதத்தின் ஆயுர்வேதா - சித்தா என்றால், வருண தரும அடிப்படையில் வேறு கண்ணோட்டம்! பேதம்தானே இது!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் - நிதி ஒதுக்கீடு இல்லை.

குறிப்பாக மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு உண்டா?

வடபுலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்த ஜே.பி.நட்டாவோ, 90 சதவிகித கட்டுமானப் பணிகள் முடிந்தன என்று கூறினார். அதையும் முந்தைய 'ஜூம்லா' பட்டியல் கணக்கில்தானே வரவு வைக்க வேண்டும்?

பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில், (இவ்வாண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில்) அதற்கு ஸ்பெஷல் அலாட்மெண்ட் நிதி5, 300 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளார்கள். ஏன் இப்படி ஓர் ஓரவஞ்சணை?

ஏழைகளுக்கு 

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்!

தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, வரவேண்டிய தொகையை (ஜிஎஸ்டி) கொடுக்காமல், எய்ம்ஸ் மருத்துவனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் அறிமுகப் படுத்திய தனி ஒரு செங்கல்லே தனிச் சின்னமாக இன்றும் தொடரும்நிலைதான் - இது கொடுமை - ஓரவஞ்சணை அல்லவா?

கார்ப்பரேட் கனவான்களுக்கு கோடி கோடி ரூபாயாக வாரி வாரி வழங்கும் அமைப்புகள், வங்கிகளை தனியார் மயமாக்கிவிட்டன - இதுபோன்றவை மேலும் அவர்களுக்கு வசதி! அதானிகள் பலூன் காற்று இறங்கிடத் தொடங்கிவிட்டதே!

எனவே, இது ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்; ''புண்ணுக்கு புனுகு பூசிய அறிவிப்புகள்'' என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

4.2.2023

No comments:

Post a Comment