பெரியார் மருந்தியல் கல்லூரி - திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ‘மருத்துவக் கல்வியும் சமூக நீதியும்' குறித்த ஒரு நாள் பயிலரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 23, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரி - திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ‘மருத்துவக் கல்வியும் சமூக நீதியும்' குறித்த ஒரு நாள் பயிலரங்கம்

திருச்சி, பிப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இணைந்து ‘மருத்துவக் கல்வியும் சமூகநீதியும்' என்ற மய்யக்கருத்தைக் கொண்ட ஒருநாள் பயிலரங்கம் 21.02.2023 அன்று கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது. 

இதன் துவக்கவிழா நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத் தலைவர் செல்வி இல. அனிதா வரவேற்புரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன் தமது தலைமையுரையில் மாணவர் கழகங்களுக் கெல்லாம் முன்னோடி கழகமாக, புரட்சிக் கழகமாக 1943இல் தொடங்கப்பட்டது திராவிட மாணவர் கழகம் என்றும், இரட்டைக் குவளை முறையை ஒழித்து சமூ நீதிக்கு வித்திட்ட இத்திராவிட மாணவர் கழகத்தில் இணைந்துள்ள மாணவர்கள் கல்வியுடன் சமுதாய உயர்வுக்கான சமூகநீதிப் பயணங்களிலும் ஒன்றிணைய வேண்டும் என்றும் உரையாற்றினார். 

மனிதநேய பணிகளை...

அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  தமது வாழ்த்துரையில் தமிழர் தலைவர் வழிகாட்டுதலில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களால் 2018இல் துவங்கப்பட்ட பெரியார் மருந்தி யல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகம் மூடநம் பிக்கை ஒழிப்பு கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சி கள், உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம்கள், சுற்றுச் சூழல் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மனிதநேயப் பணிகளாக இலவச மருத்துவ முகாம்கள், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருவதாகவும், இதுபோன்ற சமுதாய செயல்பாடுகளுக்கு இப்பயிலரங்கம் மேலும் வலுசேர்க்கும் என்றும், பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய இது போன்ற வாய்ப்புக்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதுடன் மற்றவர்களிடத்திலும் இப்பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துச் சென்று நலமான வளமான சமுதாயம் உருவாக பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

சமூகநீதிக்கு அடித்தளமிட்டது நீதிக்கட்சி

“மருத்துவக்கல்வியும் சமூகநீதியும்“ என்ற தலைப்பிலான பயிலரங்கத்தினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் “எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்“ என்பதுதான் சமூகநீதி. 

அத்தகைய சமூகநீதிக்கு அடித்தளமிட்டது நீதிக்கட்சி என்றும், பனகல் அரசர், முத்தையா முதலியோர் போன்றோரின் கடும் முயற்சியினால்தான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று கல்வி, வேலை வாய்ப்புக்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு உள்ளது என்றால்  அது நீதிக்கட்சியினால் கிடைத்த பலன் என்றும் உரையாற்றினார். தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அனைவருக்கும் தேநீர் கொடுக்க வேண்டும் என்றும், அண்ணல் அம்பேத்கர் அதனை ஒரே மாதிரியான குவளையில் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களோ தேநீரை அனைவருக்கும் ஒரே மாதிரியான குவளையில் ஒரே அளவில் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதுதான் சமூகநீதி. இன்று இந்தியா முழுமைக்கும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு சமூகநீதி வளர்ந்திருக்கின்றது என்றால் அதற்கு வித்திட்டவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்தான். காரணம். மண்டல் கமிஷன் அமைத்து மறைந்த மதிப் பிற்குரிய மேனாள் இந்திய பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பெருமுயற்சியினாலும்,, நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் போராட்டாங்களினாலும்தான் மண் டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டது என்ற வரலாற்றினை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பழங்கால சமூக நீதி, தற்கால சமூக நீதி, அதனை பெறு வதற்கான செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும்

முதல் பயிலரங்கமாக “தந்தை பெரியாரின் வாழ்வும் தொண்டும்” என்ற தலைப்பில் கழகப் பேச்சாளர் இரா. பெரியார் செல்வன், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும், தமது 94 வயதுவரை சமுதாய முன்னேற்றத்திற்கு அவர் பாடுபட்ட மாண்பினையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இரண்டாம் பயிலரங்கமாக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் “மருத்துவக் கல்வியும் சமூகநீதியும்”  என்ற தலைப்பில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப் படும் இடஒதுக்கீட்டின் அளவு, அதனைப்பெற்றுத் தர போராடியவர்கள் மற்றும் மருத்துவக்கல்வியில் பின்தங்கிய, ஏழை, எளிய மாணவர் கால்தடம் பதிக்க முடியாமல் நீட் என்ற நுழைவுத் தேர்வினை கொண்டு வந்தமைக் கான காரணங்கள், அதனை ஒழிக்க மாணவர்கள் கழகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மாணவர்கள் மத்தியில் விளக்கினார். நீட் என்ற நுழைவுத் தேர்வினால் அனிதா போன்ற ஆயிரம் அனிதாக்கள் உயிர் பழிவாங்கப்படுவதற்கு முன்னால் இதனை ஒழிக்க இளைய சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

பெரியாரின் பெண்ணியப் புரட்சி

மூன்றாவது பயிலரங்கமாக தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் மு.சு. கண்மணி “பெரியாரின் பெண்ணியப் புரட்சி” என்ற தலைப்பில் கற்பு என்பது ஆண், பெண் இருவருக்குமானது என்றும், திருமணம் என்பது ஆணுக்கு பெண் அடங்கி நடத்தல் என்ற பார்வையில் பின்பற்றப்படுகின்றது. இதனை மாற்றி வாழ்க்கை இணையேற்பு விழா என்று அறிவித்தது திராவிடர் கழகம் என்றும் உரையாற்றினார். மேலும் பெண்கள் அழகு பதுமைகள் அல்ல - பல புரட்சிகளையும் புதுமைகளையும் படைக்கக்கூடியவர்கள் என்பதனையும், மாணவ சமு தாயம் வரலாற்றினை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்தால்தான் நம்முடைய உரிமைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதனையும் விளக்கி மாணவர்கள் மத்தியில் பாலின சமத்துவம் குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.

அறிவை விரிவு செய்யும் அறப்பணியில் - ஆசிரியர்

நான்காம் பயிலரங்கமாக “அறிவை விரிவு செய்யும் அறப்பணியில் - ஆசிரியர்” என்ற தலைப்பில் கழக கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் க. அன் பழகன், தமிழர் தலைவரின் கொள்கைப்பணிகள், இயக்கப்பணிகள், கல்விப்பணிகள், விடுதலை ஆசிரியர் பணிகள் போன்ற சமுதாயப் பணிகளை  தம்முடைய 90 வயதிலும் இளைய சமுதாயம் பயன்பெற தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருப்பதை பயிலரங்கத்தின் வாயிலாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படுகின்றது என்று சொன்னால் அதற்கு பின்புலமாக திகழ்ந்தவர் நம்முடைய ஆசிரியர் என்றும், அத்தகைய தலைவரின் வழித்தடத்தை பின் பற்றி திராவிட மாணவர் கழகம் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

நாத்திகமும் மருத்துவமும்

அதனைத்தொடர்ந்து “நாத்திகமும் மருத்துவமும்” என்ற தலைப்பில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கவுதமன் மருந்தியல் மாண வர்களுக்கு பல அரிய வரலாற்று மருத்துவ நிகழ்வுகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒப்பிட்டு விளக் கினார். அம்மை, காலரா நோய் என்றால் கடவுள்களின் கோபத்தால் வருவது என்ற மூடநம்பிக்கைகளை மருத்துவ கண்டுபிடிப்புக்கள்  இவ்வுலகத்திற்கு விளக்கின. தற்போது கரோனா நோயினை கட்டுப்படுத்தி நம் அனைவரையும் இடைவெளியில்லாமல் சந்திக்க வைத்ததும் தடுப்பூசி என்ற மருத்துவ வளர்ச்சிதான் என்றும் உரையாற்றினார்.  நோய் என்பது கடவுள்களின் கோபம், பாவத்தினால் வருவது என்றால் அந்நோயினை தீர்க்கக்கூடிய ஒவ்வொரு மருத்துவரும் கடவுளின் செயலை எதிர்க்கும் நாத்திகர்கள்தான் என்றும் இதயத் தின் செயலை நிறுத்தாமல் அறுவை சிகிச்சை மேற் கொள்ளும் மருத்துவக் காட்சிகளை ஒளிப்படக் காட்சி களாக விளக்கினார்.

பகுத்தறிவான சமுதாயம் உருவாக...

அதனைத் தொடர்ந்து பயிலரங்கத்தின் நிறைவு விழா மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக இணைச் செயலர் ரெ. இலக்கியா வரவேற்புரையாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தமது வாழ்த்துரையில் கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த காலத்தில் அதனை பெறுவதற்காக குரல் கொடுத்தவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள். கல்வி வள்ளல் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோரின் பெருமுயற்சிகளினால் இன்று பாமரனும் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் சமஸ்கிருதம் படித்தால் பொறியியல் படிக்கலாம், ஹிந்தி திணிப்பு, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் வரவு போன்றவை அடித்தட்டு மக்களின் கல்வி நிலைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற அநீதிகளை எதிர்த்து தமிழ்நாட்டில் முதலில் குரல் கொடுப்பவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். தம்முடைய தொண்ணூறு வயதிலும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறார்கள். இத்தகைய தலைவரின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில் இணைந்திருப்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை அடைய வேண்டும்.  இப்பயிலரங்கத்தில் விதைக்கப்பட்ட கருத்துக்களை ஆல்போல் தழைக்கச் செய்து பகுத்தறி வான சமுதாயம் உருவாக்க மாணவர்கள் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்ட திராவிட மாணவர் கழக உறுப்பினர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரான திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் “இரண்டு நாட்கள் நடைபெறவேண்டிய பயிலரங்கத்தை கருத்துச் செறிவுடன் ஒரே நாளில் மிக அருமையாக நடத்திக்கொண்டிருக்கக்கூடிய பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும், மாணவர்களுக்கும் முதலில் தம்முடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த அரங்கத்தில் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலத் தில் பெண்கள் கல்வி பெற அவர்களின் கைகளிலுள்ள கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகங்களை கொடுக்கச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். பெண்கள் ஆண்களை போலவே உடை அணிய வேண்டும். பெயரில் கூட பாலினம் தெரியக்கூடாது என்று பெண் ணின் முன்னேற்றத்தின் உச்சத்திற்கே சென்றவர் அய்யா அவர்கள். அதனால் தான் அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தக்கூடிய குரூப் 1 தேர்வில் பெண்கள் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தந்தை பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த  வெற்றி. பெண்கள் அய்யாவிற்கு நன்றி செலுத்துவதன் பொருட்டு 1938இல் சென்னை பெண்கள் மாநாட்டில் அய்யாவிற்கு பெரியார் என்ற பட்டத்தை அளித்தார்கள். படிப்பு வேறு அறிவு வேறு என்று சொல்வார்கள். இன்று படித்தவர்களே மூடநம்பிக்கைகளிலும், கடவுள் நம்பிக்கைகளிலும் மூழ்கியிருப்பது வருத்தத்திற்குரியது. மாட்டின் கழிவுகள் என்று தெரிந்தே பார்ப்பனர் அளிக்கும் பஞ்ச கவ்வி யத்தை தெரிந்தே பக்தி என்ற பெயரால் அருந்துவது எதனை காட்டுகிறது? 

மகாமகக்குளத்தில் இலட்சக்கணக்கான மக்கள் புனிதம் என்ற பெயரில் மாசுகலந்த நீரில் குளித்து நோய் களுக்கு அடித்தளம் அமைப்பது எதை காட்டுகிறது? பழகு முகாமில் பங்கேற்ற அதிகமான குழந்தைகள் கைக ளில் கயிறு கட்டியிருப்பதை பார்த்தோம். அவர்களிடம் அனுமதி பெற்று அக்கயிறினை பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு ஆய்விற்கு அனுப்பி வைத்தோம். ஆய்வில் அதில் இருக்கக்கூடிய கிருமிகளையும், அதனால் வரும் நோய்களையும் நாங்கள் மாணவர்களிடம் தெரிவித்த போது அடுத்த நாள் அவர்களின் கைகளில் கயிறுகள் இல்லை. 

யார் சொல்வதையும் கேட்காதே!

பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு படிப்பும் பகுத்தறிவும் இணைந்திருக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். நியூட்டன் கீழே விழுந்த ஆப்பிளை பார்த்து பழம் ஏன் மேலே போகாமல் கீழே விழுந்தது என்று சிந்தித்ததன் விளைவுதான் புவி ஈர்ப்பு விதி. “யார் சொல்வதையும் கேட்காதே. அது நானே சொல்லியிருந்தாலும் உன் அறிவுக்கு சரி எனப்பட்டால் எடுத்துக்கொள். இல்லை என்றால் விட்டு விடு” என்று சொன்ன ஒரு தலைவரை உலக அளவில் காணமுடியாது. மனிதன் தானாக பிறக்கவில்லை அதனால் தனக்காக வாழக்கூடாது என்று சொன்ன மாமனிதர் தந்தை பெரியார்” என்று கூறி இன்று மாணவர்கள் பெற்றிருக்கின்ற அனைத்து உரிமைகளுக்கும் பின்னால் பல தலை வர்களின் உயிர் தியாகங்கள், போராட்டங்கள் இருக்கின்றன. அதனால் மாணவர்கள் பகுத்தறிவு கொண்டு சிந் தித்து அறிவார்ந்த சமூகம் உருவாக செயல்பட வேண் டும் என்று கூறி பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மாநில திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் வழங்கிய பெரியார் ஆயிரம் வினா விடை புத்தகங் களையும் வழங்கி சிறப்பித்தார்.

திராவிடர் கழக திருச்சி மாவட்டத் தலைவர் 

ஞா. ஆரோக்கியராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்         ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் திராவிட மாணவர் கழக செயலாளர் ப.செந்தில் நாதன் நன்றியுரையாற்றிய இந்நிகழ்ச்சியில் 213 திராவிட மாணவர் கழக உறுப்பினர்கள் (143 பெண்கள் மற்றும் 70 ஆண்கள்)  கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இந்நிறைவு விழா நிகழ்ச்சியில்  திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி உள்பட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக திராவிட மாணவர் கழகம் சார்பாக வீரமங்கை வேலு நாச்சியார் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்பயிலரங்க நிகழ்ச்சியினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன்,   மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment