பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

‘காஞ்சி பகவான்' தூக்கிப் பிடிக்கும் ஹிந்து மதம் என்பது என்ன?

மின்சாரம்

‘துக்ளக்' ஆண்டு விழா பொங்கலை ஒட்டி நடைபெறுவது வழக்கம். அதில் சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். ‘துக்ளக்' ஆசிரியர் நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். இதில் கவனிக்கப்பட வேண்டியது - கேள்விகள் நிகழ்ச்சியில் நேரடியாகக் கேட்கப்படுவதில்லை. முன் கூட்டியே கேள்விகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களை மட்டும் பெரும்பாலும் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள்.

‘துக்ளக்'குக்குப் பலதரப்பிலும் வாசகர்கள் உண்டு என்று தன் முதுகில் தம்பட்டம் கட்டி அடித்துக் கொள்வார்கள்.

தொடக்கத்தில் பொதுவெளியில் நடத்தப்பட்டதும் உண்டு. 

ஒருமுறை தஞ்சாவூரில் நடத்தப்பட்டபோது கேள்விகள் அனலாகப் பறந்தன. சோ.ராமசாமி வெளிறிப் போனார். வாலைச் சுருட்டிக் கொண்டு நடையைக் கட்டினார்.

அதோடு பொது வெளியில் நடத்துவது மூட்டைக் கட்டப்பட்டு விட்டது. அதற்குப் பின் அவாளின் நாரத கான சபாவில்தான் ஆண்டு விழாக்கள். 

கேள்விகள் எப்படி இருக்கும் என்பது தெரிந்ததே! சரி இவ்வாண்டுக்கு வருவோம். இந்திய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தான் சிறப்பு விருந்தினர்.

ஒரு கேள்வி: மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியை உயர்த்திப் பிடிக்கிறார். ஆனால் தேசிய அளவில் எந்தத் திட்டத்திற்கும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒரு பெயர் சூட்டியதில்லையே!

குருமூர்த்தி பதில்: மொழியின் பெயரைத் திட்டத் துக்குச் சூட்ட ஆரம்பித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய எண்ணம் எதிரொலிக்கும் - அது தவிர மற்றவர்களுக்கு என்ன வென்று புரியாது. அதனால் எல்லோருக்கும் புரிகிற வகையிலும் ஏற்றுக் கொள்கிற வகையிலும் தான் திட்டங்களுக்குப் பெயர் வைக்கப் படும்.

நமது பதிலடி: எல்லோருக்கும் புரிகிற வகையிலும் ஏற்றுக் கொள்கிற வகையிலும் தான் திட்டங்களுக்குப் பெயர் வைக்கப்படும் என்கிறாரே திருவாளர் குரு மூர்த்தி வாள்.

ஒன்றிய பிஜேபி அரசு சூட்டும் பெயர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைவருக்கும் புரிந்தவை தானா?

ஹிந்தியில் எடுத்துக் கொண்டாலும் அதிலும் பல்வேறு பிரிவுகள். போஜ்பூரி, மைதிலி, அவதி, பிரிஜ், கான்பூரி, மகத, கரிபோலி என்று விரியும் - பிரியும். ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாது. இந்த இலட்சணத்தில் எல்லோருக்கும் புரிகிற வகையிலும், ஏற்றுக் கொள்கிற வகையிலும் தான் திட்டங்களுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றனவாம்.

என்ன செய்வது! பிர்மா முகத்தில் பிறந்தவர்கள் சொன்னால் ஏற்றுத் தொலைத்துதான் ஆக வேண்டும் - அப்படித்தானே?

ஒரு நேயர் கேள்வி: இளைஞர்கள் நேரடியாக அரசியலில் பங்களிப்பு செலுத்தினால் அது நாட்டுக்குப் பயனளிக்குமா?

குருமூர்த்தி பதில்: இந்த நடிகர் அரசியலுக்கு வருவாரா அல்லது அவர் வருவாரா? என்று பேசுவதுதான் தமிழக அரசியலில் பேச்சாக இருக்கிறது. இது மாற வேண்டும்.

நமது பதிலடி: இதே குருமூர்த்தியும், இவரது குருநாதர் சோ இராமசாமியும், நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மண்டிக்கால் போட்டுக் கெஞ்சிக் கூத்தாடியது எல்லாம் மக்களுக்கு மறந்து விடும் என்ற நம்பிக்கைக் கொழுப்பா!

ரஜினியோ ‘உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே' என்று நாமம் சாத்தவில்லையா?

நம் கண்ணுக்கு எதிரே நடந்தவைகளைக் கூட எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்தால் நெருப்பைப் பஞ்சு போட்டு அணைக்க முயற்சிப்பார்கள்?

துக்ளக் கேள்வி பகுதி (8.2.2023)

கேள்வி: தமிழகம் முழுவதும் 764 கோவில்களில் 85 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறதே! பாராட்டுவீரா?

பதில்: கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதை நீங்கள் பாராட்டுவீர்கள் என்றால், கோவில் உண்டியல் பணத்தை எடுத்து, அன்னதானம் செய்வதை நான் பாராட்டுவேன். இரண்டுக்கும் ஒரு வித்தியாசம். கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பவருக்கு உதை விழலாம். கோவில் உண்டியல் பணத்தை எடுத்து அன்னதானம் செய்பவர்களுக்குப் பாராட்டு விழா நடக்கும்.

நமது பதிலடி: கோயில் சொத்து யார் அப்பன் வீட்டுச் சொத்தாம்? பொதுமக்கள் கொடுக்கும் காணிக்கைதானே! பொது மக்கள் கொடுக்கும் சொத்திலிருந்து ஒரு பகுதியை பட்டினியால் அவதியுறும் மக்களுக்கு அன்னதானம் செய்வது தவறா?

கருணையே உருவானவன் கடவுள் என்று சொல்லும் கூட்டம் தான் பசியால் வாழும் மக்களின் வயிற்றுக்கு உணவு கொடுப்பதை எதிர்க்கிறது.

கோயில் சாமிகளுக்கு ஆறு கால பூஜை நடத்து கிறார்களே, அந்த வகை வகையான உணவுகளும், அக்கார வடிசல்களும் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்படுகிறதாம்? அர்ச்சகப் பார்ப்பானுக்கும், மாமி களுக்கும், பூணூல் நண்டு - சிண்டுகளின் வயிற்றி லும்தானே தஞ்சம் புகுகின்றன.

எல்லாவற்றையும் ஆண்டவன்தான் படைக்கிறான் என்று சொல்லும் பார்ப்பனர்கள் இதற்குப் பதில் சொல்லட்டும். அந்தப் படைப்புக் கடவுளுக்குச் சொத்து ஏன்? டன் டன்னாக தங்கத்தை ரிசர்வ் வங்கி யில் அடைகாக்க வைப்பது ஏன்? ஏன்?

சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அறநிலையத் துறை வசம் கொண்டு வரப்பட்ட போது, கோயில் தீட்சதர்கள் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வரவு-செலவு என்ன?

ஆண்டு வருமானம் ரூ.37,199

ஆண்டு செலவு ரூ.37,000

நிகர லாபம் ரூ.199

என்று ‘பேட்டா' செருப்பு விலையைப் போல கணக்குச் சொன்னார்கள்.

அதே நேரத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் அந்தச் சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்டபோது அதன் வரவு என்னவாக இருந்தது? 15 மாத வருமானம் ரூ.25,12,485.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இடையில் சுரண்டிய பெருச்சாளிகள் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிய வில்லையா?

கோயில் கடைத் தேங்காயை உடைத்து பார்ப்பனர்களின் சமையலறைக்குப் போகிறதே - இதற்கு உதை கொடுப்பவர்கள் யாராம்?

கேள்வி: ஹிந்து மதத்தில் மட்டுமே பல அறிவுப் பூர்வமான விஞ்ஞான உண்மைகள் இருப்பது எப்படி?

பதில்: ஹிந்து மதத்தை எந்தக் குறிப்பிட்ட ஒரு மாமனிதரும் உருவாக்கவில்லை. படைப்பின் பேருண் மைகளை அவதார புருஷர்கள், ரிஷிகள், முனிகள், சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தொடர்ந்து காலத்துக்கேற்ப மக்களுக்கு எடுத்துக் கூறி, காட்டி வந்த வழிதான் ஹிந்து மதம் என்றார் காஞ்சி பெரியவர். அதுதான் அதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

நமது பதிலடி: காஞ்சி மஹான் சொல்லுவது இருக்கட்டும். உங்கள் ஹிந்து மதத்தின் யோக்கியதை எத்தகையது என்பதற்கு நாத்திகர்கள் விளக்கம் சொல்ல வேண்டாம். உங்கள் கோயில் தல புராணங்கள் போதுமே!

சேர்த்தி வைபவம் என்னும் 

மானம் கெட்ட விழா

 சிறீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதரை உறையூரில் இருக்கும் கமலவல்லி நாச்சியார் என்ற சூத்திரப்பெண் வீட்டுக்கு தூக்கி கொண்டு போய் இருவரையும் ஓர் அறையில் போட்டு சாத்திவிட்டு வெளியில் படுத்துக் கிடப்பார்கள் பார்ப்பனர்கள்.விடிந்ததும் ரங்கநாதரை தூக்கிக் கொண்டு வந்து சிறீரங்கத்தில் இருக்கும் அவன் மனைவியிடம் சேர்ப்பார்கள். மனைவி "நீ உன் வைப்பாட்டி வீட்டுக்கு போய் வந்ததால் திரும்பி வரக் கூடாது - அங்கேயே போய் விடு" என்று விளக்குமாற் றால் அடித்து விரட்டுவார். .அந்த இரண்டு பேரையும் மீண்டும் சேர்த்து வைப்பார்கள் பார்ப்பனர்கள்.  இப்படி செய்யும் வேலைக்கு என்ன வேலை - என்ன பெயர் என்பது மாமாமார்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த மானங்கெட்ட செயலுக்கு ‘சேர்த்தி வைபவம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வைப் பாட்டியிடமும் சேர்த்து வைப்பார்களாம், பொண்டாட் டியிடமும் சேர்த்து வைப்பார்களாம்.இதையும் ஒரு திருவிழாவாக நடத்துகிறார்கள். எதையாவது சொல்லி புரோகிதச் சுரண்டல் வேலை நடக்க வேண்டாமா? இதனால் ஒழுக்கம் வளருமா?  "பெரியார் இயக்கம்" வந்த பிறகுதான் நாட்டில் ஒழுக்கம் கெட்டு விட்டது என்று  பேசும் ஆரிய குருமூர்த்திக் குடுமிகள் கண் களுக்கு இதெல்லாம் தெரியாதா?

இதைக்கூட காசுபார்க்க கதைவிட்டுள்ளார்கள்

அதாவது "களத்திர தோஷம் பெற்று திருமணம் நடைபெறாமல் தடைபட்டு தவிப்பவர்களும், இந்த சுக்கிர ஸ்தலமான சிறீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால், களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களும் - களத்திர தோஷத்தால் பிரிந்து இருப்பவர்களும், வீட்டில் கணவன் மனைவி இடையே சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களும் இந்த சேர்த்தி சேவையை தரிசித்தாலோ, சேர்த்தி சேவை பற்றி படித்தாலோ சண்டை சச்சரவு இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்" என்று கதை விட்டுள்ளார்கள். அதாவது கணவன் முறைதவறி இருந்தாலும் அவனை அவன் வழியில் போகவிட்டு பிறகு அவன் வந்ததை "சேர்த்தி வைபவம்" என்று கூறி அதைவிழாவாக நடத்தி, அந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டுமாம். 

மலத்தில் பூ வைத்துக் கும்பிடுவதைவிடக் கேவல மாக இல்லையா? இவர்களின் ஹிந்து மதமும், அதன் கடவுள்களின் யோக்கியதையும் - இவற்றை முட்டுக் கொடுத்துக் காக்கும் குருமூர்த்திகளின் அறிவும் எத்தகைய நாராசமானது என்பது விளங்கவில்லையா?

No comments:

Post a Comment