கோதுமையும் - மைதாவும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

கோதுமையும் - மைதாவும்

- டாக்டர் பரூக் அப்துல்லா பொதுநல மருத்துவர், சிவகங்கை

எனது கிளினிக்குக்கு வரும் வயது முதிர்ந்த, நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்டிரில் பலர் தாங்கள் கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை உண்கிறோமோ அப்போதெல்லாம்  மூட்டுப் பகுதிகளில் வலி - முக்கியமாக முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டில் அதிகம் வலி எடுக்கிறது என்றனர். 

நான் கோதுமை உண்பதற்கும் வலிக்கும் தொடர்பு என்ன இருக்கப்போகிறது? என்றே நினைத்தேன். 

எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஒரு மாத காலமாக இடை விடாத வயிற்றுப்போக்கு. தினமும் காலை உணவு உண்டவுடன் வயிற்றுப் போக்கு வந்துவிடும் என்றார் .

நான் அவரிடம், “உங்கள் உணவில் கோதுமை தினமும் சேர்த்து வருகிறீர்களா?” என்றேன். 

“ஆம். தினமும் சப்பாத்தி எடுத்து வருகிறேன்” என்றார். 

அதை நிறுத்திப் பாருங்கள் என்றேன். 

சப்பாத்தியை நிறுத்திய அடுத்த நாளில் இருந்து வயிற்றுப்போக்கு நின்றதாகக் கூறினார். 

அண்மையில் என்னிடம் பேசிய நெருங்கிய நண்பர் ஒருவர், தான் தீராத மூட்டு வலியால்  (reactive arthritis ) பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும், கோதுமை குறித்த விழிப்புணர்வு தனக்கு ஏற்பட்டவுடன் கோதுமையை நிறுத்தி விட்டதாகக் கூறினார். 

அன்றிலிருந்து தனது மூட்டுகளில் இருந்த வீக்கம் குறைந்ததாகவும் ஸ்டீராய்டு உண்ண வேண்டிய நிலை இல்லாமல் போனதாகவும் தெரிவித்தார் (அவர் தானியங்களை முழுவதும் ஒதுக்கும் பேலியோ உணவு முறையில் இருக்கிறார்) 

கோதுமையில் உள்ள க்ளூடன், ஜெர்ம் அக்ளூடனின் போன்ற ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருள்கள் நமது குடலில் leaky gut syndrome  என்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் குடலில் இருந்து செரிமானம் ஆகும் உணவு மற்றும் கழிவு இரண்டும் குருதியில் கலக்கின்றன.

கோதுமையில் க்ளூடன் புரதம் - க்ளையாடின் மற்றும் க்ளூடெனின் ஆகியவை நமது குடலில் பாதகத்தை உண்டாக்கி இந்த தேவையற்ற புரதங்கள் குருதியில் கலக்க வழி செய்கின்றன. இதன் விளைவாக குருதியில் இந்த க்ளையாடினுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி (ஆண்ட்டிபாடி) உருவாகிறது. 

இந்த ஆண்ட்டிபாடிகள் க்ளையாடினை தாக்குவது போலவே அதைப்போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நமது உடலின் பல திசுக்களையும் தாக்குகின்றன. 

இதைத்தான் நாம் தன்னெதிர்ப்பு நோய்கள் என்று அழைக்கிறோம். இந்த இன்ப்லமேசன் எனும் உள்காயம் பல மூட்டுகளையும் தாக்குகிறது. இதனால் மூட்டு வாதம் போன்ற பல ஆட்டோ இம்யூன் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோதுமையை பாரம்பரிய உணவாக உண்ணும் வட இந்தியாவில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் தென்னிந்தியாவை விட அதிகம். குறிப்பாக குடல் சார்ந்த ஆட்டோ இம்யூன் வியாதிகள் அங்கு அதிகம். மேலும் நாமும் கடந்த இருபது ஆண்டுகளாக கோதுமை மைதா போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்துள்ளதால் நமக்கும் ஆட்டோ இம்யூன் வியாதிகள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கின்றன.   

அமெரிக்காவில் கோதுமையை உட்கொள்ளும் மக்களிடையே அதிகமாகக் காணப்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகளை சரி செய்ய க்ளூடன் இல்லா உணவுகளை பரிந்துரை செய்கின்றனர் (gluten free diet). ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கோதுமை மைதா ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆட்டோ இம்யூன் வியாதிகள் வரும் வாய்ப்பு உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

கோதுமை, மைதா இரண்டாலும் நமக்கு பல கேடுகள் உண்டாகின்றன என்பதைத் தெரிவிப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.

No comments:

Post a Comment