மதவாதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தால்...? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 17, 2023

மதவாதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தால்...?

கடந்த பிப்ரவரி 10-இல் துவங்கிய ஜமாத் உலாமா ஹிந்தின் 34-ஆவது மாநாடு டில்லியின் ராம் லீலா மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதங்களின் தலைவர்கள், குருமார் களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டி ருந்தனர். அந்த மாநாட்டில் பேசிய தலைவர் மவுலானா அர்ஷத் மதானியின் கருத்து சர்ச்சையானது.

இதில் மவுலானா மதானி பேசுகையில், ‘அல்லாவும், ஓம் இரண்டும் ஒன்றே. ராமரோ, பிரம்மரோ இல்லாத காலத்தில் மனு யாரை வணங்கி இருப்பார் என நான் மதகுருமார்களிடம் கேட்டேன். இதற்கு சிலர் ‘அவர் ஓம் எனும் உருவம் இல்லாததை வணங்கியிருப்பார்’ எனக் குறிப்பிட்டனர். இந்த ஓம் என்பதைத்தான் நாம் அல்லா என்கிறோம். பாரசீக மொழியில் இதை ஃகுதா என்கிறார்கள். ஆங்கிலத்தில் 'காட்' என்றழைக்கின்றனர். அதேபோல், அல்லாவின் முதல் இறைத்தூதர் ஆதம் ஆவார். இவரை ஹிந்துக்கள் மனு எனவும், கிறிஸ் துவர்கள் ஆதாம் என்றும் அழைக்கின்றனர். இம் மூன்றும் உள்ளிட்ட அனைத்து மதத்தினரின் முன் னோர், ஆதாம் ஆவார்’ எனத் தெரிவித்தார். 

இக்கருத்திற்கு இதர மதத் தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து அம்மாநாட்டிலிருந்து வெளி யேறினர். இவர்களில் ஒருவரான ஜைன மதத் தலைவர் ஜெயின் முனி லோகேஷ், மேடை ஏறி தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் மவுலானா மதானியுடன் தாம் பொது விவாதம் செய்யவும் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பேசும் போது ”இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஹிந்து என்பதால், இந்தியா ஒரு ஹிந்து நாடு. ஏனெனில், ஹிந்து என்பது எந்த ஒரு மதத்தையும், சமூகத்தையும் குறிக்கும் சொல் அல்ல. ஹிந்து தேசத்தை எவராலும் தவிர்க்க முடியாது. ஹிந்து என்பதை ஒரு ஜாதி, மதம் அடிப்படையில் புரிந்து கொள்ள முயல்வது தவறு. இந்தியா தொடர்ந்து ஒரு ஹிந்து தேசமாகவே இருக்கும். ஒவ்வொரு இந்தியனும் அதன் அரசமைப்பு சட்டத்தை உயரியதாக மதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

ஜனவரி 19 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ‘ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இருவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்’ எனக் கூறி இருந்தார். இவரது கருத்தைத்தான் மவுலானாவும் கூறியிருந்தார். அவர் கூறும் போது பேசாமல் இருந்து விட்டு இஸ் லாமிய மதகுரு கூறும் போதுமட்டும் சாமியார் முதல மைச்சர் ஆதித்தியநாத் விமர்சனம் செய்துவருகிறார்.

மதம் மனிதனுக்குப் பிடித்தாலும், யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து என்பது இதன் வழி- விளங்க வில்லையா? 

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் அதற்கு உருவம் வைத்தது ஏன்? மனிதர்கள் போல கடவுளுக்கும் குடும்பங்கள் எப்படி வந்தன?

அன்பே உருவானவன், கருணையே வடிவமான வன் என்று கூறுவோர், கடவுள் சண்டை போட்ட தாகவும், 'கற்பழித்ததாகவும்' எழுதி வைத்திருப் பானேன்?

கடவுளை நம்பாத நாத்திகர்களைவிட, கடவுளை நம்புவோர் தானே, இப்படிக் கடவுளை அசிங்கப் படுத்தியுள்ளனர்? ஆபாசமாகச்  சித்தரிக்கின்றனர்!

கடைசியாக ஒன்று. "இது ஹிந்து நாடு, மற்றவர் களுக்கு இங்கே என்ன வேலை" என்று கூறுபவர் - முதலமைச்சராக இருந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதிகள் - அவர்கள்  எடுத்துக் கொண்ட  பிரமாணத்திற்கு எதிரானது - அத்தகையவர் களுக்கு நியாயமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment