மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 17, 2023

மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம்! செய்யாறில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்!

செய்யாறு, பிப்.17  ராமர் பாலம் என்றவர்களே, அதனைக் கைவிட்டுவிட்டார்கள்! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தியே தீரவேண்டும்! மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எங்கள் பிரச்சாரப் பயணம் என்றார்  திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (16.2.2023) உத்திரமேரூர், செய்யாறில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்யாறில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

உங்கள் பயணத்தின் வெற்றி 

எந்த அளவிற்கு உள்ளது?

செய்தியாளர்: சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி உங்களுடைய பயணத்தைத்  தொடங்கியிருக் கிறீர்கள்; அந்தப் பயணத்தினுடைய வெற்றி எந்த அளவிற்கு இருக்கிறது?

தமிழர் தலைவர்: ராமன் பாலம் என்ற ஒன்று இருந்ததற்கான எந்தவிதமான ஆதார மும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்திலே சொன்ன பிறகு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் பரப்புரை பயணத்தை அறிவித்து, மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுக்கூட்டங்களில் உரையாற்றி வருகிறோம்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் எழுதிய ''தன் வரலாறு'' புத்தக வெளியீட்டு விழாவில், நம்முடைய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக அறிவித்தார்கள்; சட்டமன்றத்திலும் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்து தமிழ்நாடு அரசு சார்பாக, ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றும் விடுத்தார். அறிவித்தபடி உடனடியாக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறை வேற்றினார்.

அதில் ஒரு பெரிய வெற்றி என்னவென்றால், இதற்கு முன்பு அந்தத் திட்டத்தை எதிர்த்த எதிர்க்கட்சிகள், தற்போது எதிர்க்கவில்லை; இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.
ராமனைப்பற்றி பேசினார்களே என்றால், அ.தி.மு.க.வினராக இருந்தாலும், ஏன் பா.ஜ.க.வினர்கூட ராமன் பாலப் பிரச்சினை என்றுதான் சொன்னார்களே தவிர, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றுதான் சொன்னார்கள்.

இது திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி.
அதற்கடுத்தபடியாக ஒருமித்த கருத்துப்படி அந்தத் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே ஒன்றிய அரசில் கப்பல் துறை அமைச்சராக இருந்த நிதின்கட்காரி அவர்கள், தெளிவாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், ''வேறு பாதையை மாற்றிக்கூட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்'' என்று சொன்னார்.

ஆகவே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சொல்லி நிறைவேற்றாமல் இருக்கிறீர்களே என்பதை சுட்டிக் காட்டிதான், வலியுறுத்தித்தான் இப்பொழுது இந்தப் பரப்புரை பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
இப்பொழுது ராமன் பாலம் என்கிற பிரச்சினைக்கே இடமில்லாமல், அவை வெறும் சுண்ணாம்புப் பாறை கள்தான்; பவளப் பாறைகள்தான் என்று ஆகிவிட்டது. ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொண்டுவிட்டார்.
அத்திட்டம் நிறைவேற இன்னும் 23 கிலோ மீட்டர் அளவில்தான் பணிகள் மீதமிருக்கின்றன.

எனவே, மீண்டும் அந்தத் திட்டத்தைத் தொடங் கினால், ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக செலவழிக் கப்பட்ட பணமும் பயனுள்ளதாக ஆகும்; மக்கள் வரிப் பணமும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தெளிவாகும்.
ஆகவே, இதில் கட்சிக் கண்ணோட்டம் இல்லாமல், ஜாதி, மத கண்ணோட்டம் இல்லாமல், வளர்ச்சிக் கண்ணோட்டத்தை மட்டுமே பார்த்து, இதை அவர்கள் நிறைவேற்றவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
அதற்காக மக்கள் கருத்துகளைத் திரட்டுகின்ற அளவில்தான் எங்களுடைய பரப்புரைப் பயணம் அமைந்திருக்கிறது.

இதற்கு ''வெள்ளி முளைத்துவிட்டது'' என்பதற்கு அடையாளம்தான் - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்; அத்தீர்மானத்தை ஆதரித்த அத்துணை தமிழ்நாட்டுக் கட்சிகளும்.
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து ஆட்சிக்கு விரோதப் போக்காகவே செயல்படுகிறார் என்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், நீங்கள் ஆட்சி அமைக்க முடி யாது என்று, ராகுல் காந்தி அவர்கள், நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடியின் எதிரிலேயே பேசினார். 
இது அவர்களுக்கே தெளிவாகத் தெரியும்.

பா.ஜ.க.வை வளர்க்கிறோம்; மிஸ்டு கால் கொடுக்கி றோம் என்றெல்லாம் சொன்ன நேரத்திலும் அது வளரவில்லை என்பதற்கு அடையாளம் - ஈரோட்டில் அவர்கள் தனித்து நிற்பதற்குத் தயாராக இல்லை.  தனியாக நின்றால், அதன் முடிவு என்னவாகும் என்று அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்த காரணத்தினால் தான், யாருடைய கையையாவது பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இப்பொழுது அவர்கள் இருவரில், ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாக  எல்லோருக்கும் தெரியும்.

ஆகவே, அவர்களைப் பொருத்தவரையில், போட்டி அரசாங்கத்தை நடத்தி, இந்த அரசாங்கத்திற்கு இடை யூறுகளை ஏற்படுத்தவேண்டும் என்பதே குறிக்கோள்!
தேர்தல் மூலமாக நாம் ஆட்சியைப் பிடிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது; எதிர்மறையாகப் பேசி, சங்கடத்தை உருவாக்குவது; அதன்மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஆத்திரப்பட்டு, கலவரம் செய்யமாட்டார்களா? அந்தக் கலவரத்தின் மூலம் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற சாக்குப் போக்குச் சொல்லி, குறுக்கு வழியில் ஏதாவது செய்ய லாமா? என்ற ஒரு ஹிட்டன் அஜெண்டா - உள்ளார்ந்த ஒரு திட்டம்; இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குக் கைவந்த கலை - அதைத்தான் ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், இது பெரியார் மண் - அந்த நிலை இங்கு நடக்காது.  அவர்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டு மானால், ''அந்தப் பாச்சா இங்கு பலிக்காது.''
செய்தியாளர்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கும் - தி.மு.க.விற்கும் கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. இரண்டு தலைமையாகப் போட்டி போட்டு, அதில் ஒருவர் வாபஸ் வாங்கினார்; இப்பொழுது அ.தி.மு.க.வினுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும்?
தமிழர் தலைவர்: இரண்டு பேரில் ஒருவர் காணாமல் போய்விட்டார்; அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை; அவர்களே காணாமல் ஆக்கிவிட்டார்கள். சற்று முன் நான் பொதுக்கூட்டத்தில் சொன்னதுபோல, அ.தி.மு.க. என்பது அடமானப் பொருளாக இருக்கிறது; அந்த அடமானப் பொருளை மீட்பார்களா? மாட்டார்களா? என்பது சந்தேகம்தான். வட்டி மேலே  மேலே கூடிக்கொண்டே போகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர் களுடைய வெற்றி பிரகாசமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், தன் நிலை தவறி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவரும், மேனாள் முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடியார், ''மீசை இருந்தால், ஆணாக இருந்தால்'' என்றெல்லாம் சவால் விடுவதுபோன்று பேசியிருக்கிறார் என்றால், தன்னிலை தாழ்ந்து அவர் பேசக்கூடிய அளவிற்கு அவர் வந்ததற்குக் காரணம் என்னவென்றால், தேர்தல் தோல்வி என்பது அவர்களுக்கு உறுதியாகிவிட்டது; அதன் காரணமாக, அரசியல் ஜன்னி அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

செய்தியாளர்: அ.தி.மு.க. கட்சி அடமான கட்சியாகத்தான் செயல்படுமா?
தமிழர் தலைவர்: இப்பொழுது அ.தி.மு.க. என்றால், அண்ணா பெயரை எடுத்துவிட்டு, அடமானத் தி.மு.க. வாக இருக்கிறது. அதை மீட்பதற்குரிய வழிவகைகளை அவர்கள் செய்யவேண்டும்; ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கடும் தோல்வியை அவர்கள் சந்திப்பார்கள்.
நன்றி, வணக்கம்!
 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment