'திராவிட மாடல்' அரசைப் பின்பற்றும் ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

'திராவிட மாடல்' அரசைப் பின்பற்றும் ஒன்றிய அரசு

இளம் தலைமுறையினரிடையே கல்வியைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் ஊக்கம் கொடுக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்  அவர்களின் "நான் முதல்வன்" திட்டம் சிறந்து விளங்குகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித் துறைச் செயலர் கே.சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்

நிகழாண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்துள்ளது. இந்நிலையில், ஜி 20 கல்விக்குழு மாநாடு சென்னையில் பிப்.1, 2 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுக் கல்லூரி மாணவர்கள், சென்னை அய்அய்டி மாணவர்கள், பேராசிரியர்கள் என 

900-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் கல்வி சார் கருத்தரங்கம் மற்றும்  கண்காட்சி சென்னை அய்அய்டி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நடை பெற்றது.

இதில் ஒன்றிய உயர்கல்வித் துறைச் செயலர் சஞ்சய்மூர்த்தி, தேசிய கல்வி தொழில்நுட்ப வாரியத் தலைவர் அனில் சகஸ்ரபுதே, ஒன்றிய பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சஞ்சய்குமார் ஆகியோர் உள்பட ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வித் துறை செயலர்கள் சஞ்சய் மூர்த்தி (உயர்கல்வி), சஞ்சய்குமார் (பள்ளிக்கல்வி) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சிறந்த கல்வியை உலகம் முழுவதும் பரிமாறிக் கொள்வதற்கும், சவால்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வதற்கும், ஜி20 மாநாடு வழிகாட்டுதலாக அமையும். வருங்காலத்தில் கல்வித் துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும். கடந்த 15 ஆண்டுகளாக கல்வித் துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது சுணக்கமாக உள்ளது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும். கரோனாவுக்குப் பின் இடைநிற்றல் அதிகரித் துள்ளது. எனவே, இடை நிற்றலை குறைப்பது, பள்ளிக் கல்வியை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி தருவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் கல்வி மட்டுமல்லாது, மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து, தொழில் முனைவோராக மாற்றுவதற்கும் பயிற்சிகள் தரப்படவுள்ளன. அதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதுதான் வருங்காலச் சூழலாக இருக்கும். அதேபோல், அனைத்து மாநில மொழி களிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள் ளோம். தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன் திட்டம்" சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங் களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும்.

சென்னையை தொடர்ந்து புனே, அமிர்த சரஸ் போன்ற இடங்களிலும் கல்வி மாநாடு நடத்தப்படவுள்ளது" என்றனர்.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே 'திராவிட மாடல் அரசு' நடத்தும் தி.மு.க. தலைமையிலான அரசு முதலிடத்தில் கிரீடம் சூட்டிக் கொண்டு விட்டது. 

பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காட்டையும் கடந்து சாதனைக் கொடியைப் பறக்க விட்டுள்ளது. இப்பொழுது "நான் முதல்வன்" என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசின்மீது எப்பொழுதும் குற்றச் சாட்டுகளை அடுக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருக்கும் ஒன்றிய பி.ஜே.பி. தலைமையிலான அரசு, தமிழ்நாட்டில் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பீடு நடைபோடும் "திராவிட மாடல்" அரசு செயல்படுத்தும் "நான் முதல்வன்" திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இனி மேலாவது தேசியக் கல்வி, வெங்காயக் கல்வி என்று திணிக்க நினைக்கும் ஒன்றிய பிஜேபி அரசு, அதனைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment