நாடா - சுடுகாடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 22, 2023

நாடா - சுடுகாடா?

 ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் 15.2.2023 அன்று அதிகாலை தங்கள் காரில் ராஜஸ்தான் - அரியானா எல்லைக் கிராமத்தில் உள்ள ஜுனைத்தின் உறவினரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது, அரியானாவை சேர்ந்த பசுப் பாதுகாப்பு கும்பல் ஜுனைத்தும், நசீரும் காரில் பசு மாட்டை கடத்தியதாகக் கருதி அவர்களைத் தடுத்து நிறுத்தி, தாக்கியுள்ளனர். 

அரியானாவின் பெரோஷ்பூர் ஹிர்கா பகுதியை சேர்ந்த ரின்கு சைனி என்ற வாடகைக் கார் ஓட்டுநர் முதலில் ஜுனைத், நசீர் பயணித்த காரை பின் தொடர்ந்துள்ளார். பசு பாதுகாவலர்கள் அமைப்பை சேர்ந்த இவர் பின்னர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மொனு, மனீசர் என்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்கள் குழுவினருடன் இணைந்து ஜூனைத், நசீரின் காரை இடைமறித்து இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், ஜூனைத் மற்றும் நசீரை காருடன் கடத்திச் சென்ற பசு பாதுகாவலர்கள் கும்பல் இரண்டுபேரையும் உயிருடன் காருக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் இரண்டு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

அரியானாவின் பர்வாஸ் கிராமத்தில் காட்டுப் பகுதியில் கார் தீக்கிரையான நிலையிலும், அதனுள் 2 பேர் எரிந்த நிலையிலும் எலும்புக்கூடாக கிடப் பது குறித்தும் காவல் துறையினருக்கு 16.2.2023 அன்று தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

 இந்த விவகாரம் பெரிதான நிலையில், 2 பேரை உயிருடன் எரித்துக் கொன்றதில் தொடர்புடையதாக வாடகைக் கார் ஓட்டுநர்  ரிங்கு சைனியை ராஜஸ் தான் மாநில காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த அனில், சிறீகாந்த், ரிங்கு சைனி, லோகேஷ் சிங்லா, மோனு ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபரான மோனுவையும் காவலர்கள் தேடி வருகின்றனராம்.

என்றைக்கு பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு 2014இல் அமைந்ததோ,  அன்று முதல் இந்தியத் துணைக் கண்டத்திற்குப் பிடித்த கேட்டின் கொடிய நெருப்பு அணைந்த பாடில்லை; நாளும் நாளும் கொடுந்தீயாக, எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கிறது.

மனிதனைவிட மாடுதான் முக்கியம் என்பது காவிகளின் கேடு கெட்ட - கீழ்த்தரப் புத்தியாகும். அதுவும் உண்மைக்கு மாறாக சந்தேகத்தின் பேரில் கொலை!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை, இந்தியா வின் தலைநகரமான புதுடில்லியில் உயிரோடு வைத்துக் கொளுத்தி, அவர் உயிரைக் குடிக்கத் திட்டமிட்ட கூட்டத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் தானே ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையில் இன்னும் ஆழமாக, தீவிரமாக நாட்டையே உலுக்கும் வண்ணம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எடுத்துச் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாசிசத்தை ஒழிக்க மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இல்லையெனில் நாடு இருக்காது - சுடுகாடுதான் விஞ்சும்!

No comments:

Post a Comment