ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : அண்மையில் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறும் பொதுமக்களின் மனக் குமுறல் குறித்து...?

 - வ.வேல்முருகன், திண்டுக்கல்

பதில் 1 : காவல்துறையோடு பொதுமக்களும் ஒத்துழைத்து தங்களது இளைய சமூகத்தினைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.

இது ஒரு பன்னாட்டு மெகா மாஃபியாவின் ‘ஆக்டோபஸ்’ வேலை - ஒன்றிய அரசு துறைமுகங்களையும், வானூர்தி போன்ற விமான நிலையங்களையும், நாட்டின் எல்லைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

சிங்கப்பூர் நாட்டில் எப்படி இதனை மிகவும் உன்னிப்போடு தடுக்கிறார்கள் என்பதை நமது அரசும், காவல்துறையும் ஆராய்ந்து, பயன்படக் கூடியவற்றைப் பயன்படுத்த வேண்டும். “வேலிகளையும்” சேர்த்துக் கண்காணிக்க வேண்டும். 

---

கேள்வி 2 :  ரஷ்யா - உக்ரைன் போரின் முடிவு எப்படி இருக்கும்?

- அ. வீராசாமி, ஈரோடு

பதில் 2 : மிக மிக வேதனை. அய்.நா.சபை எதற்கு இருக்கிறது என்பதே புரியவில்லை! மிகப் பெரிய நாடுகள் - வளர்ந்தவை என்று முத்திரை குத்திக் கொண்டவை இதில் சிறு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம், சந்தை என்று கருதி "உள்ளே - வெளியே" நாடகம் நடத்துகின்றனர்.

இத்தனை மாதங்களா? இப்போது மக்களிடம் செய்தியாகக் கூட அது தெரியவில்லை. கொடுமையோ கொடுமை! போரற்ற புதுஉலகு எப்போதோ! அறியோம்!!

---

கேள்வி 3 : பள்ளிப் பேருந்து ஓட்டையின் ஊடாக விழுந்து கொல்லப்பட்ட 7 வயதுக் குழந்தை சுருதியின் வழக்கின் தீர்ப்பில் நீதி எங்கே?

- மு.வேணுகோபால், சைதாப்பேட்டை

பதில் 3 : ‘நீதிதேவன்கள்’ அடிக்கடி மயக்கம் போட்டுவிடுகிறார்கள்; கோயில், சொத்து என்றால் மண்டியிட்டு இடுப்பில் துண்டு கட்டி அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகக் கூட தீர்ப்பு எழுத அஞ்சுவதில்லை!

அறங்காவலர் பக்தராக இருக்க வேண்டும் என்பதைவிட ஒழுக்கம், நாணயம், தேட்டை போடாதவர்கள் - ஈரோட்டில் பெரியார் இருந்ததைப்போல இருந்தால் போதுமே!

---

கேள்வி 4 : அண்மைக் காலமாக உயர்நீதிமன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும், வழங்கிய தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் பல விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறித்து?

- பெ.கோவிந்தன், புதுச்சேரி

பதில் 4 : நீதிதேவதையின் கண்கள் மேல் மூடப்பட்ட திரைத் துணி அவிழ்த்து விடப்பட்டதன் அக்கிரமத்தின் எதிரொலிதான் அது!

---

கேள்வி 5 : பெற்றோர் என்ற ‘புனித’ மற்றும் ‘பொறுப்பு’ போன்றவற்றைத் தாண்டி, பிள்ளைகளே பெற்றோருக்கு மறுமணம் செய்து வைக்கும் நிலை குறித்து தங்கள் நிலை?

- செ.குணசேகரன், புதுச்சேரி

பதில் 5 : மானுடவியல் வெற்றி அடைகிறது! அதற்கு முன் மவுடீகம் மண்டியிட்டு தன் தோல்வியை ஒப்புக் கொள்ளுகிறது என்பதற்கான அடையாளம்!

---

கேள்வி 6 : ஆளுநர் மாளிகையை மருத்துவமனை யாக்கலாம் என்கிறாரே வைகோ.?

- பொ.வாசு, சேலம்

பதில் 6 : நல்ல யோசனை! அதில் ஒரு பகுதியை மனநலப் பிரிவுக்கும் ஒதுக்கினால் பழைய வரலாற்றை பதிவும் செய்ததாக இருக்கும்.

---

கேள்வி 7 : 74ஆவது குடியரசு நாள் விழாவில் தமிழ்நாடு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்ற வாசகத்தையும், முகப்பில் வரையப்பட்டிருந்த ‘தமிழ்நாடு’ என்ற கோலத்தையும் பார்த்த ஆளுநரின் மன நிலை குறித்து?

- த. மணிமேகலை, வியாசர்பாடி

பதில் 7 : ‘அடக்கிப் பார்’ தத்துவம் தோற்று ‘அடங்கிப் போ’ என்ற மக்கள் ஆணை வெற்றியின் நினைப்பு  வந்திருக்க வேண்டும்!

---

கேள்வி 8 : மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விடும் முயற்சியில் கருநாடக சிறப்பு நீதிமன்றம் இறங்கி இருப்பது பற்றி?

- ஆனந்தன், மதுரை

பதில் 8 : சட்டப்படி சரியான நடவடிக்கை! அவருக்கு, அவரது கட்சியினர் பெருமை சேர்க்கவில்லை - சேர்த்திருந்தால் அவர் சாவு குறித்து விசாரணைக் கமிஷன் போட்டிருப்பார்களா? முன்னதற்கு உள்நோக்கம் இல்லை  - பின்னதற்கு உள்நோக்கம் உண்டே! பிறகு அது மவுன ராகம் பாடிவிட்டது!

---

கேள்வி 9 :  பிரதமர் மோடியின் ஆப்த நண்பர் அதானியின் நிறுவனங்களால் இந்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களான எல்.அய்.சி. மற்றும் எஸ்.பி.அய்.க்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவைப் பற்றி இதுவரை மோடி வாய் திறவாததன் ரகசியம் என்ன?

- கா.தமிழ்வேந்தன், திருத்தணி

பதில் 9 : பார்லிமெண்டில் திருச்சி சிவா அவர்கள் பேச வைப்பார் என்று நம்புகிறோம்! உலகம் பேச ஆரம்பித்துவிட்டது! அதானி என்ன சாதாரணமான முதலாளியா? பிரதமர் செல்லும் விமானத்திலேயே செல்லும் பாக்கியம் பெற்றவராயிற்றே!

---

கேள்வி 10 :  அதானி குழுமத்தின் மோசடி குறித்து ஹிட்டன்பர்க் நிறுவனம் எழுப்பியுள்ள 88 கேள்விகளில் 66 கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் அதானி குழுமம் தட்டிக் கழித்திருப்பது எதைக் காட்டுகிறது?

- வே.சண்முகம், திருச்சி

பதில் 10 : மழுப்பினால் - குளறுபடிகள்  உண்டு என்றே பொருள். உண்மை ஒரு நாள் வெளியாகும்! அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்; - பலியான பிறகு உண்மைகள் புலியானால் அதிசயமல்ல!


No comments:

Post a Comment