அண்ணா மறைந்தார் அண்ணா வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

அண்ணா மறைந்தார் அண்ணா வாழ்க!

அறிஞர் அண்ணா அவர்கள் 60 ஆண்டு வயது ஆகும் முன்பே நம்மை விட்டு மறைந்தார் - ஆட்சிப் பொறுப்புக்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே கண் மூடினார்.

அவர் மறைந்து (3.2.1969) 53 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை.

திருப்பூரில் செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் கலந்து கொண்டு பேசினர். (20.5.1934)

அன்று முதல் தந்தை பெரியாரின் கரம்பற்றி, தன் பொது வாழ்வைத் தொடர்ந்தார் அறிஞர் அண்ணா.

அய்யாவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்புடன் கொண்டு சென்றவர் அண்ணா.

கம்ப இராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றைக் கொளுத்த வேண்டும் ஏன்? என்ற விவாதப் போரில் சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய பெரு மக்களுடன் விவாதப் போர் நடத்தி வெற்றி வகை சூடிய ஆற்றலாளர் அறிஞர் அண்ணா.

திராவிட நாடு, காஞ்சி ஹோம்லேண்ட்  முதலிய ஏடுகளை நடத்தினார். விடுதலை ஆசிரியராகவும் குறிப்பிட்ட கால அளவில் பணியாற்றியவர்.

1938இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறை ஏகியவர்.

இடையில் 18 ஆண்டு காலம் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்திருந்தாலும் 1967 ஆம் ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் முதலில் அவர் சந்தித்தது தந்தை பெரியாரைத்தான்.

நான் கண்ட - கொண்ட தலைவர் தந்தை பெரியார் என்று சொன்னதை அண்ணா அவர்கள் இறுதி மூச்சு அடங்கும் வரை கடைப்பிடித்தார். 'இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை!' என்று சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்தினார்.

தந்தை பெரியாரும் முதல் அமைச்சர் அண்ணாவும் தருமபுரி மாவட்டம் நாகரசம் பட்டி பெரியார் ஈ.வெ. ராமசாமி உயர்நிலைப் பள்ளி திறப்பு விழாவில் பங்கு கொண்டனர். அதில் உரையாற்றிய முதல் அமைச்சர் அண்ணா, "தந்தை பெரியாரிடம் ஒரு வேண்டுகோள்! நான் மீண்டும் தந்தை பெரியாருடன்இணைந்து பட்டி தொட்டிகளில் எல்லாம் சென்று பகுத்தறிவுப் பணியை மேற்கொள்ளவா? அல்லது ஆட்சிப் பொறுப்பில் தொடரவா? என்பதை தந்தை பெரியாரின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்" என்றாரே பார்க்கலாம்.

தந்தை பெரியார் சொன்ன பதில் அதைவிட முக்கியமானது.

"ஒரு நாள், ஒரு நிமிடம் மிச்சம் இருந்தாலும், முதல் அமைச்சர் பதவியிலிருந்து அண்ணா விலகவே கூடாது; சமுதாயப் பணியை நான் செய்து கொண்டே இருப்பேன்!" என்று தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் (19-12-1967).

அண்ணா அவர்கள் குறைந்த காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அந்தக் குறுகிய காலத்தில் அவரின் மூன்று முக்கிய சாதனைகள் முத்திரை பதித்தவை - காலத்தால் அழிக்கப்பட முடியாதவை. அதை அண்ணாவின் வாயாலேயே கேட்போம் (1.12.1968)

தாய்த் திருநாட்டிற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் வைத்திருக்கிறோம். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்திருக்கிறோம். இரு மொழிக் கொள்கை - தமிழ் - ஆங்கிலம் மட்டும்தான் - மும்மொழிக்கு இடமில்லை. இந்த முப்பெரும் சாதனைகளை மாற்றலாம் என்று நினைத்தால், அவர்களை அறியாமல் ஒரு அச்சம் தோன்றும், அந்த அச்சம் இருக்கின்றவரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறார் என்று பொருள் - என்றாரே மணிவாசகங்களாக!

இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முந்துகிறார்கள்.

இரு மொழிகொள்கைதான் தமிழ்நாட்டின் கொள்கை என்று அறிஞர் அண்ணா தீட்டிய சட்டம் என்ற தடுப்பணை  ஹிந்தியை தடுத்து நிறுத்திக் கொண்டுள்ளது. 1926ஆம் ஆண்டிலேயே "தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்" என்று 'குடிஅரசு' இதழில் (7.3.1926) கட்டுரை தீட்டினார் தந்தை பெரியார்.

இன்றைக்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றம் பற்றி சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள். அதனை சட்ட வடிவமாக்கியவர் அறிஞர் அண்ணா (14.1.1969). தமிழ்நாடு வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று சட்டப்  பேரவையில் முழக்கமிடச் செய்தவரும் அவரே!

இன்றைக்கு அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டி ருப்பவர்கள். அவர் உருவப் படத்தை கட்சியின் கொடியில் பொறித்துக் கொண்டு இருப்பவர்கள் அண்ணாவின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டனரே!

கடைப்பிடித்திருந்தால் இத்தகு அரசியல் தடுமாற்றப் படு குழியில்தான் வீழ்ந்திருப்பார்களா? தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்ல வாய்ப்பாக 'திராவிட மாடல்' அரசு வந்துள்ளது. அதனைப் பாதுகாப்போம்!

அண்ணா நினைவுநாளில் சிந்திப்போம்! அய்யா, அண்ணா யாத்த கொள்கையை இளைஞர்களிடம் கொண்டு செல்லுவோம்!

90 வயதில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அண்ணா நினைவு நாளில், அய்யா பிறந்த ஈரோட்டில் தொடங்கி 40 நாட்கள் பிரச்சார சுற்றுப் பயணத்தை கடலூரில் நிறைவு செய்ய உள்ளார். இதன் அருமையை அவசி யத்தை நம்மின மக்கள் உணர்வார்களாக! 

வாழ்க பெரியார்! 

வாழ்க அறிஞர் அண்ணா!! 

வெல்க திராவிடம்!!


No comments:

Post a Comment