கு.இராமகிருஷ்ணனின் இணையர் மறைந்த இரா.வசந்தி அம்மையார் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

கு.இராமகிருஷ்ணனின் இணையர் மறைந்த இரா.வசந்தி அம்மையார் படத்திறப்பு - நினைவேந்தல்

கலங்காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை 

ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன்!

படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சியுரை

கோவை, பிப்.11 கோவை கு.இராமகிருஷ்ணன் கலங் காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன் என்று நெகிழ்ச்சியுரையாற்றினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி அவர்கள்.

படத்திறப்பு - நினைவேந்தல்

கடந்த 5.2.2023 அன்று காலை கோவை புலியகுளம் சாலையில் உள்ள சுங்கம், விக்னேசு மகாலில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் அவர்களின் இணையர் மறைந்த  இரா.வசந்தி அம்மையார் படத்தினைத் திறந்து வைத்து - நினைவேந்தல் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது நினைவேந்தல் உரை வருமாறு:

ஊக்கப்படுத்துவதற்காக 

இந்த நினைவேந்தல் கூட்டம்!

மிகுந்த துன்பத்தோடும், துயரத்தோடும், கனத்த இதயத்தோடும் இந்த நினைவேந்தல் கூட்டம் பெரும் இரங்கல் கூட்டமாக, வீர வணக்கக் கூட்டமாக நடை பெறாமல், மீண்டும் இராமகிருஷ்ணன் தன்னுடைய பழைய உணர்வுகளை, துயரத்திலிருந்து வெளியே வந்து, அவருடைய அன்புச் செல்வங்கள் வெளியே வந்து, அம்மையார் - அவருடைய வாழ்விணையர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே நிறைந் திருக்கக் கூடியவராக ஆகிவிட்ட சூழ்நிலையில், எப்படி யெல்லாம் அவர் மீண்டும் தேர்ந்து, ஆறுதலடைந்து, தன்னுடைய நீண்ட கொள்கைப் பயணத்தைத் தொய்வின்றித் தொடரவேண்டும்  என்பதற்கு, அவரை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நினைவேந்தல் கூட்டம்.

உண்மைகள் எவ்வளவு தூரம் மறைக்கப்பட்டாலும், ஒருபோதும் வெளியே வராமல் இருக்காது; உண்மைகள் வெளியே வரும் - பொய்யும் புரட்டும் போகும் என்பதற்கு, 2ஜியிலிருந்து 5 ஜி வரைக்கும் வந்தாலும்கூட, அசைக்க முடியாத ஒருவராகத் திகழுகின்ற எங்கள் சகோதரர் மானமிகு மாண்புமிகு ஆ.இராசா - இப் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வின் தலைவர் அவர்களே,

என்றைக்கும் இரட்டையர்களாக இருக்கக்கூடிய அருமைத் தோழர் ஆறுச்சாமி!

இந்நிகழ்வில் மிகப்பெரிய அளவிற்கு ஏராளமானத் தோழர்கள் கலந்துகொண்டுள்ளனர்- நேரத்தின் நெருக் கடி இருந்தாலும்கூட.  அவருடைய தொண்டினுடைய சிறப்பு எவ்வளவு பேரை ஈர்த்திருக்கிறது என்பதற்கு இந்த மேடையே ஓர் அடையாளம்; எதிரே அமர்ந் திருக்கின்ற நம்முடைய தோழர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கை மாற்றம் என்பதையெல்லாம் கூட தாண்டி, மனிதநேயம், சுயமரியாதை, பகுத்தறிவு நம்மை இணைத்திருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கக் கூடிய அருமை நண்பர்கள் திரண்டுள்ள இந்நிகழ்வில் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய, இராமகிருஷ்ணன் அவர்களோடு இணை பிரியாத, என் றைக்கும் இரட்டையர்களாக இருக்கக்கூடிய அருமைத் தோழர் ஆறுச்சாமி அவர்களே,

அண்மையில், தமிழ்நாடு அரசின் ‘‘பாவேந்தர் விருது’’ தக்காருக்குக் கிடைத்தது என்று நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள கொள்கைச் செம்மல் செந்தலை புலவர் ந.கவுதமன் அவர்களே, 

எந்நாளும் திராவிட இயக்க உணர்வாளர் என்ற பெருமைக்குரிய அ.முகமது ஜியாவுதீன்!

இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மயூரா ஜெயக்குமார் அவர்களே, கோவை மாநகர துணை மேயர் வெற்றிச் செல்வன் அவர்களே, மேனாள் மாவட்ட நீதிபதியும், அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை கொள்கையால் மாறாத ஒருவராக இருக்கக்கூடிய - மேனாள் மாவட்ட நீதிபதி என்பதைவிட, எந்நாளும் திராவிட இயக்க உணர்வாளர் என்ற பெருமைக்குரியவராக இருக்கக் கூடிய அருமைச் சகோதரர் அ.முகமது ஜியாவுதீன் அவர்களே,

அவர் ஒன்றைச் சொன்னார், நான் ஆறுதல் சொல்லி விட்டுப் போவதற்காக வரவில்லை; இராமகிருஷ்ணன் அவர்களே, உங்களோடு திராவிட இயக்கத்தோடு ஒன் றாக இருக்கத்தான் மீண்டும் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொன்னார்.

நான் அருகிலிருந்த அருமை நண்பர் இராசா அவர் களிடம் சொன்னேன், ‘‘புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதுதான் சரியான முறை’’ என்று.

நாம் அனைவரும் ஆறுதல் - தேறுதல் சொல்ல வந்திருக்கின்றோம்!

மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் தோழர் இராமாத்தாள் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் தோழர் சிவசாமி அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் கலையரசன் அவர்களே, எஸ்.டி.பி.அய். மாவட்டத் தலைவர் முஸ்தபா அவர்களே, திராவிட தமிழர் கட்சித் தலைவர் தோழர் வெண்மணி அவர்களே, திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் நேருதாஸ் அவர்களே, சி.பி.அய். - எம்.எல். பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்களே, தமிழ்ப்புலிகள் கட்சிப் பொறுப்பாளர் இள வேனில் அவர்களே, தமிழர் விடியல் கட்சிப் பொறுப் பாளர் இளமாறன் அவர்களே, தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் ஸ்டேன்லி அவர்களே, தமிழக விவசாய அணியைச் சார்ந்த தோழர் மணிகண்டன் அவர்களே, தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் தோழர் விடுதலையரசு அவர்களே, நாமெல்லாம் அம்மையாருடைய - தோழர் வசந்தி அவர்களுடைய மறைவினால், மிகப்பெரிய துயரத்திற்கு ஆளாகி இருக்கிறோம் என்று சொன்னாலும், நேரிடையாக மீளமுடியாத ஒரு தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறவர்கள் தோழர் இராமகிருஷ்ணன் என்று சொன்னால், அதற்கு அடுத்தபடியாக, அல்லது ஒருபடி மேலாக நேரிடையாக துன்பத்திற்கும், துயரத் திற்கும் ஆளாகியிருக்கின்ற எங்கள் அன்புச்செல்வங்கள் அமுதினி வசந்தி அவர்களே, அருமைச் செல்வன் இந்திரஜித் அவர்களே, மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்ற திராவிடர் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயக்குமார் அவர்களே, கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் செந்தில் நாதன் அவர்களே, கோவை மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் சந்திரசேகரன் அவர்களே, திராவிடர் கழக கோவை மாவட்ட செயலாளர் கோவை வீரமணி அவர்களே, திராவிடர் கழகத் திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி அவர்களே, திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில துணைத் தலைவர் திருப்பூர் பாண்டியன் அவர்களே,  கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன் அவர்களே, இன்னும் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய இயக்கப் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே, நாம் அனைவரும் ஆறுதல் தேறுதல் சொல்லி, அந்தத் துயரத்திலிருந்து இந்தக் குடும்பம், இந்தக் கொள்கைக் குடும்பம் வெளியே வரவேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கின்றோம்.

எப்பொழுதும் ஈரோட்டிற்கு இணைத்துத்தான் பழக்கமே தவிர, பிரித்துப் பழக்கம் இல்லை!

இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தோழர் இராமகிருஷ்ணன் அவர்கள், எங்கள் பிள்ளை! எங்களுடைய விலை மதிக்க முடியாத கொள்கைப் பிள்ளை. இது ஒரு பெரிய கொள்கைக் குடும்பம். ஈரோடு எங்களை இணைத்தது; எப்பொழுதும் ஈரோட்டிற்கு இணைத்துத்தான் பழக்கமே தவிர, பிரித்துப் பழக்கம் இல்லை. அதுதான் எங்களை இணைத்தது - எங்களை மட்டுமா இணைத்தது; அதே ஈரோடுதான் இராம கிருஷ்ணனையும் - வசந்தியையும் இணைத்தது. அந்த இணைப்பு சாதாரண இணைப்பு அல்ல.

இன்றைக்கு என்னுடைய வாழ்விணையர் திருமதி மோகனா அவர்கள் நேரில் வர இயல வில்லை. இந்த சம்பவம் நடந்தவுடனே, ஏராளமான பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டோம், வீட்டில்!

பெரியார் தந்த புத்திக்கு 

சபலம் இருக்காது!

பொதுவாக நம்முடைய சமுதாயத்தில், இன்னமும் ஆணாதிக்கம் குறைந்துவிடவில்லை. அடிப்படையில் ஓர் ஆணாதிக்க சமுதாயமாகத்தான் இருக்கிறது. என்னுடைய துணைவியார் எனக்கு நல்ல அடிமையாக இருந்தால் மட்டுமே எனக்கு நல்ல வசதியாக இருக்கும் என்று தான் நானே நினைப்பேன். ஆனால், பெரியார் புத்தி வந்த பிறகு, அந்த எண்ணத்திற்கு இடமில்லை.

சொந்த புத்திக்கு வேண்டுமானால், அந்த சபலம் இருக்கலாம்; ஆனால், பெரியார் தந்த புத்திக்கு அந்த சபலம் இருக்காது; சமத்துவத்தைத்தான் நினைக்க வேண்டி இருக்கும்.

பெண்கள், எளிதில் எவரையும் 

சரியாக எடை போடுவார்கள்

என்னுடைய துணைவியார் நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னார்கள்,  ஆண்களைவிட, பெண்கள், எளிதில் எவரையும் சரியாக எடை போடுவார்கள்; ‘‘இராமகிருஷ்ணனை வசந்தி விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது; அவர்கள் இருவரும் ஒருவேளை வாழ் விணையராக ஆகக்கூடிய அளவிற்கு வரும்‘‘ என்று.

இது எனக்குத் தோன்றவில்லை; காரணம், நம்முடைய பார்வை வேறு; பெண்களுடைய பார்வை என்பது வேறு. இதை ஆணாதிக்க மனப்பான்மைதான் சுலபமாக அங்கீகரிக்க மறுக்கிறதே தவிர, நம்மைவிட ஆயிரம் மடங்கு ஆற்றல் உள்ளவர்கள் மகளிர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இராமகிருஷ்ணன் - வசந்தி மணவிழா நடந்த பிறகு என்னுடைய துணைவியார் தான் சொன்னதை நினைவுப்படுத்திச் சொன்னார், ‘‘பார்த்தீர்களா?’’ என்று.

வசந்தி அவர்களின் குடும்பம் திராவிடர் கழகக் குடும்பம் என்பது கூடுதல் தகுதி!

இராமகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்தவரையில், அவருக்குக் காதலிக்க நேரமில்லை; ஆனாலும் காத லித்தார்; பேதலித்த நிலையில் இருந்தாலும், காதலித்தார்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், வசந்தி அவர்களின் குடும்பம் திராவிடர் கழகக் குடும்பம் - இது ஒரு கூடுதல் தகுதி.

எனவேதான், எங்களை இணைத்த ஈரோடு அவர்களையும் இணைத்தது; சாதாரணமானது அல்ல. இராமகிருஷ்ணன் தங்களது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை இங்கே அவர் சொன்னார்.

கலங்காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை ஒரு தந்தையின் 

நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன்!

அப்போது கலங்காத எங்கள் பிள்ளை, இன்று கலங்கியதை நான் ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்துக் கலங்கினேன், மனதிற்குள். ஆனால், அதை வெளிப்படுத்தக்கூடாது; ஏனென் றால், ஒரு பகுத்தறிவுவாதி, ஒரு பெரியார் தொண் டன் - அதை மனதிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதினால்தான் அந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டிருக்கின்றேன். எவ்வளவு உறுதிபடைத்தவர் அந்த அம்மை யார் என்பதற்கு அடையாளம், கொள்கைப் பயணம், சிறைச்சாலையில் இருந்தபொழுது அவர் ஏற்ற துன்பங்கள், துயரங்கள் எல்லாம்  ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அதற்குமுன் நண்பர்களே, இவர் எவ்வளவு கொடுமையாளர் என்பதற்கு ஓர் அடையாளம் - அதை சொல்லுவதற்கு எனக்கு உரிமை உண்டு - 

10, 11 ஆண்டுகளாகவா ஒருவரை 

காத்திருக்க வைப்பது!

ஓராண்டு, ஈராண்டு அல்ல - காதலில் ஒரு அவகாசம் கொடுத்தால் - தவணை கொடுத்தால் - எனக்குக் காதல் பழக்கமில்லை; பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்; படித்திருக்கிறேன்; 10, 11 ஆண்டுகளாகவா காத்திருக்க வைப்பது ஒருவரை.

வசந்தி அவர்கள் எவ்வளவு சங்கடங்களைத் தாண்டி, உறுதியாக இருந்திருக்கிறார். நண்பர்களே, இந்த நேரத் தில் ஒன்றை உங்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

‘‘தமிழ்நாட்டில் காந்தி’’

அந்தக் காலத்து கலப்புத் திருமணங்களைப்பற்றி சொல்லுகின்ற நேரத்தில் காந்தியார் அவர்களுடைய மகன் தேவதாஸ் காந்தியும், இராஜகோபாலாச்சாரி யாருடைய மகள் லட்சுமி அவர்களும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

அதைக் கேள்விப்பட்டவுடன், காந்தியாரும் அதனை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆச்சாரியாரும் தயங்கினார்.

இதற்கிடையில், உறுதியாக இருந்தார்கள் மணமக்கள். 

இராஜாஜி அவர்கள் காந்தியாரிடம் சென்று, இந்தத் தகவலைச் சொல்லி நீங்களே அவர்களை அழைத்து விசாரியுங்கள் என்று சொன்னார்.

‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்ற புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன; வேண்டுமானால், அதை படித்துக் கொள்ளலாம்.

‘‘நீங்கள் ஒருவருக்கொருவர் விரும்புகிறீர்களா?’’ என்று காந்தியார் கேட்டார்.

‘ஆம்‘ என்றனர்.

‘‘நீங்கள் சொல்வது உறுதிதான் என்பதற்கு அடை யாளமாக  - இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நீங்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’’ என்று சொன் னார் காந்தியார்.

தாராளமாக நாங்கள் இரண்டாண்டுகள் காத்திருக் கிறோம் என்று சொல்லி, எனக்குத் தெரிந்த வரையில், அதிகபட்சமாக இரண்டாண்டுகள் இடைவெளியில்  திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால், அந்தத் திருமணத்தையே சாதாரணமாக்கிய பெருமைமிக்கத் திருமணம் இராமகிருஷ்ணன் - வசந்தி திருமணமாகும். காரணம், 11 ஆண்டுகாலம் அவர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய இழப்பு என்பதினுடைய அடையாளம் என்னவென்றால், ஒரு மனிதனுக்கு வாழ்க்கைத் துணை நலம் என்பது - வாழ்க்கை இணையர் என்று சொல் வதினுடைய பயன் என்று சொல்வது இருக்கிறதே - அதில் இரண்டு பருவங்கள் உண்டு.

முன்பருவம் - பின்பருவம் என்று வருகின்ற நேரத் தில், முன்பருவத்தைவிட, பின்பருவம்தான் மிக மிகத் தேவையான ஒரு பருவமாகும்.

ஏனென்றால்,  வயதான காலத்தில், அவர்கள் ஒரு வருக்கொருவர் துணையாக இருப்பது அவசியம்.

எப்பொழுதும் சூறாவளி போன்று 

சுழன்று கொண்டிருக்கக் கூடியவர்

வாழ்க்கை இணையேற்பு விழா என்று சொல்லும்பொழுது, அவர் உருக்கத்தோடு சொன் னார்; நாமும் அறிவோம். பொதுவாழ்க்கையில் ஒருவர், அதுவும் இராமகிருஷ்ணன் போன்ற வர்கள் எப்பொழுதும் சூறாவளி போன்று சுழன்று கொண்டிருக்கக் கூடியவர்.

அவர் இல்லத்தில் கழித்த நாள்களைவிட, சிறைச்சாலைகளில், போராட்டக் களத்தில் கழித்த நாள்கள் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இராமகிருஷ்ணனை வைத்துத்தான் திராவிடர் கழகத்தில் இளைஞரணியே உருவாகியது. அய்யா அவர்களுடைய காலத்தில் இளைஞரணி என்பது கிடையாது.

நம்முடைய இராமகிருஷ்ணன் அவர்கள் சுற்றிச் சுழன்றுகொண்டே இருப்பார்; அவர் ஓய்வெடுத்துப் பார்த்ததே கிடையாது.

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், இங்கே சில செய்திகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இராமகிருஷ்ணன் அவர்கள் கோவையில் இருக்கின்ற நேரத்தில்கூட சும்மா இருக்கமாட்டார்; திடீரென்று போராட்டத்தை அறிவிப்பார்;  சுவ ரொட்டி அடித்து, ஆட்களை சேர்ப்பார்.

காவல்துறை உயரதிகாரியின் வேண்டுகோள்!

பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகள் நேரிடை யாக என்னிடத்தில் பேசமாட்டார்கள். ஒருமுறை, நேரிடையாக எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது; அந்தத் தொலைப்பேசி யாரிடமிருந்து வந்தது என்றால்,  அன்றைக்கு காவல்துறை அதிகாரியாக இருந்த சிறீபால் அய்.பி.எஸ்., அவர்களிடமிருந்துதான். மிக மென்மையாக, நிதானமாகப் பேசக்கூடியவர்; பதற்ற மில்லாமல் பேசக்கூடிய காவல்துறை அதிகாரியாக இருந்து மறைந்தும் மறையாதவராக இருக்கிறவர்.

அந்தத் தொலைப்பேசி அழைப்பில் அவர்,

‘‘அய்யா, தலைவர்தானே பேசுகிறீர்கள்; உங்களிடம் ஒரு வேண்டுகோள்; உங்கள் இளைஞரணியில் இராம கிருஷ்ணன் என்பவர் இருக்கிறாரே, எப்பொழுது பார்த்தாலும் போராட்டம், போராட்டம் என்று அறிவித்து, எங்கள் காவல்துறையைத் தொடர்ந்து பணியாற்றும்படி செய்கிறார்; நீங்களாவது கொஞ்சம் அவரிடம் சொல்லி, எங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்பதற்காவது போராட்டத்தை நடத்தாமல் இருக்கச் சொல்லலாம் அல்லவா!’’ என்றார்.

போராட்டப் புயல் இராமகிருஷ்ணன்

எனவே, இராமகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்த வரையில், அவர் எப்பொழுதுமே போராட்டப் புயலாகத்தான் இருப்பார்.

நான் சொன்னேன், எங்கள் இளைஞர் எது தேவையோ, எது நியாயமோ அதற்காகத்தான் அவர் போராடுகிறார்; அவருக்காக அவர் போராடுவதில்லை. சொன்னால், கட்டுப்படுவார்கள் எங்கள் இளைஞர்கள்; கட்டுப்பாட்டைக் காப்பவர்கள்; ஆனால், அவர் நியாயத் திற்காகப் போராடும்பொழுது, நான் அதைக் கட்டுப் படுத்தினால், நான் நியாய விரோதி ஆகிவிடமாட்டேனா? என்று நான் அந்தக் காவல் அதிகாரியிடம் சொன்னேன்.

இன்னொரு தகவலை இங்கே பதிவு செய்கிறேன்.

இங்கே உரையாற்றிய நம்முடைய ஆ.இராசா அவர்கள் அருமையாகச் சொன்னார். அவரும் இப்படிப் பட்ட துயரத்திற்கு ஆளானவர்; அந்தத் துயரத்தை மறந்துவிட்டுத்தான், இன்றைக்குச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அந்தத் துயரத்திலேயே அவர் மூழ்கி விடக் கூடாது என்று, மோடி அரசுக்குக் கவலை யிருக்கிறது. அதன் காரணமாகத்தான், அவருக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர் இப்பொழுது மேனாள் அமைச்சராக மட்டும் இல்லை; பிரபல சட்ட நிபுணராக இருந்துகொண்டிருக்கக் கூடிய அளவிற்கு, பாராட்டக் கூடிய சட்ட நிபுணராக, வழக்குரைஞராக, மூத்த வழக்குரைஞராக, உச்சநீதிமன் றத்தில் அவருடைய வழக்கை அவரே வாதாடக்கூடிய ஆற்றல்மிக்கவராக இருக்கிறார்.

அஸ்திவாரம் என்றால் யார்?

எல்லோருமே தலைவர்களைப் பாராட்டிப் பழக்கப் பட்டு இருக்கிறார்களே தவிர, பொதுவாழ்க்கையில் யார் வெளிச்சத்தில் இருக்கிறோமோ அவர்களைப் பாராட்டி பழக்கப்பட்டு இருக்கிறார்களே தவிர, அதனுடைய அஸ்திவாரத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை. அஸ்தி வாரம் என்றால் யார்?

இராமகிருஷ்ணன் என்று சொன்னால், அஸ்திவாரம் வசந்தி அம்மையார் அவர்கள். அந்த அடிக்கட்டு மானத்தின்மீதுதான் அசையாமல் நிற்க முடிகிறது அவரால்.

95 வயது இளைஞர் நம்முடைய வழிகாட்டி தலைவர் தந்தை பெரியார் அவர்கள்

அதேபோன்று என்னுடைய வாழ்விணையர்; இன்றைக்கு 90 வயது. எனக்கு 90 வயது, 90 வயது என்று ஓர் இக்கட்டான உண்மையை வெளிப்படுத்திக் கொண் டுள்ளளார்கள். என்னைப் பொறுத்தவரை நான் 90 அய் நினைப்பதேயில்லை. நண்பர்கள்தான் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், 95 வயது இளைஞர் நம்முடைய வழிகாட்டி தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்தான் அண்ணா; அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்தான் ஈரோடு குரு குலத்தின் மாணவராக இருக்கின்ற நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 

வாழும்பொழுதே வாழ்விணையரைப் பாராட்டவேண்டும்!

ஆகவே, அவர்கள் எல்லாம் வாழ்நாள் முழு வதும் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். அப் படிப்பட்ட சூழ்நிலையில், அவரவர் வாழ்விணை யரைப் பாராட்டவேண்டும். வாழும்பொழுதே பாராட்டவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

மகளிரைப் பாராட்டவேண்டும்; அவர்கள் இல்லாவிட்டால், நமக்கு வாழ்க்கையே கிடையாது. இதை எத்தனை பேர் செய்திருக்கிறார்கள்?

உதகையில் தமிழரசன் அவர்கள் முயற்சியில் பகுத்தறிவாளர் கழக மாநாடு!

உங்களுக்குத் தெரியும், இதுவரையில் பெரியார் காலத்திலேயே அய்யா வாழ்ந்த காலத்திலேயே உதக மண்டலத்திலே இயக்கம் வந்தது கிடையாது. இன்றைக்கு இராசா அவர்கள் நாடாளுமன்ற உறுப் பினராக இருக் கிறார். அன்றைக்கு ஆசிரியராக பணிபுரிந்த மறைந்த தமிழரசன் அவர்கள் முயற்சியில் பகுத்தறிவாளர் கழக மாநாடு. அந்த மாநாடு நடந்தால், உதகையில் மழையே பெய்யாது என்று ஒரு புரளி கிளப்பினார்கள். உதகையில் மழையே பெய்யாது என்றால், அந்த மாநாட்டின் சக்தியை எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இப்படி ஒரு புரட்டை சொன்ன நேரத்தில், அந்த மாநாட்டிற்கு கோவூர் வந்தார். கோவூர், தந்திர வித்தை களைக் காட்டினார். அதேபோன்று நம்முடைய ஆறுச்சாமி அவர்கள். இவர் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவிற்குச் செய்வார்.

அங்கே அந்த மாநாடு நடைபெறக்கூடாது என்பதற் காக நண்பர்களே, 11 நோட்டீசை ஒரு தமிழராசிரியராக இருந்தவர் அச்சடித்துப் பரப்பினார்.

உதகை மாநாட்டை நடத்துவதற்குத் துணிவாக நின்றவர்கள் இரட்டையர்களான இராமகிருஷ்ணன் - ஆறுச்சாமி!

அந்த மாநாட்டை நடத்துவதற்குத் துணிவாக நின்று, இளைஞர்களைத் திரட்டியவர்கள்தான் இங்கே இருக்கக் கூடிய இரட்டையர்கள் - இராமகிருஷ்ணன் அவர்களும்; ஆறுச்சாமி அவர்களும்.

இதேபோன்று நிறைய செய்திகளை சொல்லலாம். இந்திரா காந்தி அம்மையாருக்குக் கருப்புக் கொடி காட்டிய நேரத்தில், எங்களோடு கைதானவர் கலைஞர், பேராசிரியர். நாங்கள் எல்லாம் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தோம்.

எனக்குக்கூட நிறைய  சிறைச்சாலைகள் பழக்க மில்லை; இராமகிருஷ்ணன் அவர்கள் அதிகமான சிறைச்சாலைகளைப் பார்த்தவராக இருப்பார்கள். அப்படிப்பட்ட பொதுவாழ்க்கை என்பது அவருக்கு மலர் படுக்கை அல்ல.

ரத்தத்தைவிட கெட்டியானது 

எங்கள் கொள்கை உறவுதான்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘‘நீரை விட ரத்தம் கெட்டியானது’’ என்று. ஆனால், பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில், பெரியாருடைய பணித் தோழர்களைப் பொறுத்தவரையில், நீரை விட கெட்டியானது ரத்தமாக இருக்கலாம்; ரத்தத்தைவிட கெட்டியானது எங்கள் கொள்கை உறவுதான் என்பது மிக முக்கியமானதாகும்.

அதனால்தான், இந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட துயரம், எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரம் போன்றது; இது வேறு குடும்பம்; எங்கள் குடும்பம் வேறு என்பதல்ல.

இங்கே சீனியரசு அவர்கள் உதாரணம் சொன்னார்கள். நாங்கள் பிரிந்திருந்ததுபோன்று தோற்றம் ஏற்பட்டதே தவிர, எப்பொழுதும் உள்ளத்தால் நாங்கள் பிரிந் திருந்ததே கிடையாது.

இன்னொரு பழமொழி உண்டு - ‘‘நீரடித்து நீர் விலகாது’’ என்று. நீரடித்தும் நீர் விலகாது; நீரடித்தும் நாங்கள் விலகமாட்டோம்.

அவருக்கு ஏற்பட்ட துன்பம் என்பதை, நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய துன்பமும், துயரமும் என்று சொல்கிறோம்.

எனவே, அருமை சகோதரர் இராமகிருஷ்ணன் அவர்களே, உங்கள் நலம், எங்கள் நலம். உங்களுடைய பொறுப்பு, நம் அனைவருடைய பொறுப்பு. 

எனவே, மறைந்தவர்; நம் நினைவிலே நிறைந்தவர். தந்தை பெரியார் ஓர் அருமையான சொற்றொடரைச் சொல்லுவார் - ‘‘இயற்கையின் கோணல் புத்தி’’ என்று.

தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பகுத்தறிவு!

இயற்கையின் கோணல் புத்திதான் - வசந்தி அம்மையாருக்கு என்னென்ன செய்யவேண்டுமோ அதனை அத்துணை வழிகளிலும் செய்து நீங்கள் முயற்சித்தீர்கள். பிறகு தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் பகுத்தறிவு.

அந்தத் துன்பத்திலே, துயரத்திலே வாடி நாம் ஒடுங்கிவிடக் கூடாது. தந்தை பெரியார் அவர்களுடைய நாகம்மையார் இரங்கல் செய்தி - ஓர் இரங்கல் இலக்கியம்.

தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த இரங்கல் செய்திகளே, ஓர் இரங்கல் இலக்கியம். இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஓர் இலக்கியம் வந்தது கிடையாது.

அதைத்தான், இங்கே உணர்ச்சிப்பூர்வமாக நம்மு டைய பிள்ளை இராமகிருஷ்ணன் பேசினார். அதை இங்கே இராசா அவர்களும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

பெரியாருடைய செயலை உற்றுநோக்கி அவருடைய வாழ்க்கையைப் பாருங்கள்!

இன்னொன்றை உங்களுக்குச் சொல்லவேண்டும்; இராமகிருஷ்ணன் அவர்களே, எங்கள் அருமைச் செல்வங்களே, நீங்கள் இந்தத் துயரத்திலிருந்து எளிதில் வெளிவர முடியாதுதான்; காலம்தான் மனப்புண்ணை மறக்க வைக்கும் என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அந்தத் துயரத்திலிருந்து நீங்கள் வெளியே வரவேண்டுமானால், பெரியாருடைய இரங்கல் செய்தியை மட்டும் படித்துவிட்டு நிறுத்தி விடாதீர்கள். அடுத்து, பெரியாருடைய செய்கைக்கு வாருங்கள்; பெரியாருடைய செயலை உற்றுநோக்கி அவருடைய வாழ்க்கையைப் பாருங்கள்.

அன்னை நாகம்மையார் அவர்கள், மே 10, 1933 ஆம் ஆண்டு மறைகிறார். அய்யா திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். வீட்டிலிருந்து அய்யா புறப்படும்பொழுதே, நாகம்மை யார் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அவர் இறந்துவிட்டார் என்று தந்தி வந்து சேர்கிறது.

நாகம்மையார் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதே - தந்தை பெரியார், சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று 6 மாதத்திற்கு மேலாக ஆனவுடன், இங்கேயே தங்கிவிடலாமா? என்று நினைக்கிறேன் என்று அய்யா அவர்கள் அறிக்கை கொடுத்தார்.

பெரியார் அங்கே இருந்தபொழுது, இங்கே பத்திரி கையை நடத்தியவர் நாகம்மையார் அவர்கள். ஆகவே, அந்தக் கவலையே அவருக்குப் பாதி.

நாகம்மையார் அவர்கள் மறைந்ததும் உருக்கமாக இரங்கல் அறிக்கை எழுதியவர்; அவரது உடலை எரியூட்டிவிட்டு, அடுத்த நாள் திருச்சிக்குச் சென்று, ஒரு கிறித்துவ மணவிழாவினை நடத்தி வைக்கிறார். அதற் காக பாதிரிமார்களால் புகார் கொடுக்கப்பட்டு, திருச்சி பாலக்கரையில் காவல்துறையினரால் கைது செய்யப் படுகிறார். இது நாம் அறிந்த வரலாறு.

முன்பைவிட, அதிகமாகத் தொண்டாற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய அன்பான கட்டளை!

எனவேதான், பொதுவாழ்க்கையில் அந்தத் துயரத்தை மறப்பதற்காக, முன்பைவிட, அதிக மாகத் தொண்டாற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய அன்பான கட்டளை; அன்பான வேண்டுகோள்!

ஆகவேதான், நீங்கள் அதிகமான சுற்றுப் பயணம் செய்யவேண்டும். 

இரங்கல் இலக்கியத்தைப்பற்றி சொன்னேன். அதை விட மிக முக்கியமான ஒன்று. பனகல் அரசர் மறைந்த பொழுது தந்தை பெரியார் அவர்கள் எழுதிய செய்தி என்பதும் ஓர் இலக்கியம்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மறைந்தபொழுது 

தந்தை பெரியார் எழுதிய இரங்கல் இலக்கியம்!

அதைவிட மிக முக்கியமானது திராவிடத் தளபதி, திராவிட லெனின் என்று குறிப்பிட்டது, சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களை. அவர் லண்டனில் பெரிய பொறுப்பை ஏற்பதற்காக, தந்தை பெரியார் போன்றவர் களால், சென்னையில் பெரிய தேநீர் விருந்து கொடுக் கப்பட்டு, அவர் அனிபால் விமானத்தின் மூலமாக, ஓமன் கடலின் மேல் செல்லுகிறபொழுது, அந்த விமானம் பழுதாகி, கடலில் விழுந்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த நேரத்தில், புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்கள் எழுதிய கவிதையையும் தாண்டி, தந்தை பெரியார் அவர்கள் இரங்கல் இலக்கியம் எழுதுகிறார்.

கொள்கை உறவு என்பது எவ்வளவு கெட்டியானது என்பதற்கு அடையாளம் - திராவிட இயக்க வரலாற்றை நீங்கள் படிக்கவேண்டும்.

‘திராவிட மாடல்’ - இந்த இயக்கத்தின் கட்டுமானம் அவ்வளவு பலமாக இருக்கிறது; எந்தக் கொம்பனாலும் இதை அசைத்துவிட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக ஒன்றைச் சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் சொல்கிறார்,

‘‘பன்னீர்செல்வம் எப்படி மறைந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ துயரத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பன்னீர் செல்வம் யார்? ரத்த உறவுக்காரரா? கிடையாது. 

என்னுடைய குடும்பத்துத் துன்பங்கள், துயரங்கள்

என் தாயார் 98 வயதிலே மறைந்திருக்கிறார்;  இவ்வளவு காலம் அவர் இருந்ததே அதிசயம்; அதனால், அவர் மறைந்ததால் வருத்தப்படவேண்டியதற்கு எதுவு மில்லை. என்னுடைய துணைவியார் நாகம்மையாரை நான் இழந்திருக்கிறேன்.

லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த என்னுடைய சகோதரருடைய மகன் - சம்பத் அவர்களுடைய அண்ணன். அவர் மிகப்பெரிய கெட்டிக்காரர். அவர் சிறிய வயதிலேயே சயரோகத்தினால் அவர் இறந்தார். இவையெல்லாம் என்னுடைய குடும்பத்துத் துன்பங்கள், துயரங்கள்.

ஆனால், இவையெல்லாம் என்னை பாதித்தது என்று சொன்னாலும், இவற்றைவிட பல மடங்கு என்னை பாதித்தது ஒன்று உண்டென்று சொன்னால், அது பன்னீர்செல்வம் அவர்களுடைய மறைவுதான்.

சமுதாயத்திற்குப் பெரிய நட்டம்!

காரணம், என் தாயார் மறைவு, என் துணைவியராக இருந்த அருமை நாகம்மையார் மறைவு; அதேபோல என்னுடைய அண்ணார் மகன், என்னுடைய பிள்ளை லண்டனுக்குச் சென்று படித்து வந்தவருடைய மறைவு - இவையெல்லாம் பெரும் துயரம்தான், இழப்புதான் என்றாலும், அது என்னைப் பொறுத்தது; எங்கள் குடும்பத்தைப் பொறுத்தது.

ஆனால், பன்னீர்செல்வம் அவர்களுடைய இழப்பு என்பது, இந்த சமுதாயத்திற்குப் பெரிய நட்டம் என்று சொல்லும்பொழுது, நான் இந்த சமுதாய நட்டத்தைப் பற்றிதான் அதிகம் கவலைப்படுகிறேனே தவிர, என்னு டைய குடும்பத்து நட்டத்தைப்பற்றி நான் கவலைப் படவில்லை’’ என்று சொன்னார்.

இரங்கலைக்கூட அப்படி அணுகுகிற பகுத்தறிவு வாதிகள் நாம்.

வார்த்தைகளால் 

வர்ணிக்க முடியாது நண்பர்களே!

எனவேதான் உங்களுக்குச் சொல்லுகிறோம்; நீங்கள் துணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; வேறு வழியில்லை. மருத்துவ சிகிச்சை முறைகளில் என்ன செய்ய வேண் டுமோ அத்தனையையும் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.  எந்த இலக்குக்காக அவர் உங்களை வாழ்விணையராகக் கொண்டார்களோ, அவர்களும் சேர்ந்து உங்கள் துன் பத்தைத் துயரத்தைப் பெற்றார்களே, அது சாதாரண மானதல்ல. அந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது நண்பர்களே!

நாங்கள் எல்லாம் மிசா கைதியாக இருந்த நேரத்தில், என்னுடைய துணைவியார் பரிதாபத்தோடு வந்து பார்த்தார்கள்; நேர்காணலில்கூட பேச முடியாத சூழ்நிலை அன்றைக்கு. பேசுவதற்குப் பயந்தார்கள். வீட்டிற்கு வருவதைக்கூட நிறுத்திவிட்டார்கள் பலரும். எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துக் கட்டுவதற்காக ஒருவரிடம் சொல்லி, பணிகள் தொடங்கின; மிசாவில் எங்களை பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்ற வுடன், அப்படியே அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன; ஓராண்டிற்குப் பிறகு நான் வெளியே வந்த பிறகுதான் அந்தப் பணி முடிக்கப்பட்டது.

நம்முடைய இலட்சியங்கள் 

என்றைக்கும் தோற்பதில்லை!

அந்த மிசாவையே சந்தித்தவர்கள்தான்; தடா வையே சந்தித்தவர்கள்தான்; பொடாவையே ஒழித்தவர்கள் இந்த இயக்கத்தவர்கள் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, நம்முடைய பயணம் எளிதான பயணமல்ல; நம்முடைய இலட்சியங்கள் என்றைக்கும் தோற்பதில்லை.

பயணங்கள் முடிவதில்லை -

இலட்சியங்கள் தோற்பதில்லை -

நாம் எதற்கும் பின்வாங்குவதில்லை!

எனவேதான், அன்புச்செல்வங்களே, நீங்கள் பயணத்தில் எங்களோடு வாருங்கள்; எங்களோடு இணையுங்கள்!

 ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் காப்போம் -அதற்குரிய தடைகளைத் தகர்ப்போம்!

இன்னுங்கேட்டால், நான் உரிமை எடுத்துக்கொண்டு அறிவிக்கிறேன்; என்னுடைய பரப்புரைப் பயணத்தில் இராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுவார் என்று சொல்லி, அதன்மூலமாக இந்தத் துன்பம், துயரம் விடை பெறும் என்பதற்கு வழி சொல்லி, நீங்கள் ஆறுதலோடு இருங்கள் - வசந்தி அம்மையார் இருந்தால், எதை இலக்காக வைத்து, எவற்றை அடையவேண்டும் என்று சொன்னார்களோ, அந்தப் பணி முடித்து, அதையே அவர்களுக்கு அர்ப்பணமாக - அதையே அவர்களுக்கு மலர்வளையமாக அடுத்த ஓராண்டிற்குள் வைப்போம் என்பதற்காகத்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் காப்போம் -அதற்குரிய தடைகளைத் தகர்ப்போம் என்று கூறி, அதையே உறுதிமொழியாகக் கூறி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறன். 

கொள்கை உண்டு, இலட்சியம் உண்டு, பயணம் உண்டு!

இராமகிருஷ்ணன் அவர்களே, நீங்கள் தனி யாக இல்லை; அருமைச் செல்வங்களே இந்த இயக்கம் உங்கள் பின்னால் இருக்கிறது. தமிழ் மக்கள் இருக்கிறார்கள்; போராளிகள் இருக் கிறார்கள்.

இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. கொள்கை உண்டு, இலட்சியம் உண்டு, பயணம் உண்டு.

வாழ்க பெரியார்!

வாழ்க தமிழ்நாடு!!

வளர்க மறைந்த வசந்தி அம்மையாருடைய புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  நினைவேந்தல் உரையாற்றினார். 

No comments:

Post a Comment