டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் சிந்தனை

பார்ப்பனரல்லாதார் கல்வி அபிவிருத்திக்கும், முதியோர் கல்விக்கும் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற மாணவர் விடுதியையும், சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்கிற நிறுவனத்தையும் டாக்டர் நடேசனார்   தன்னலமின்றி 1914 ஆம் ஆண்டில் துவக்கியவர்.

கவி ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனில் பல நாட்டுப் பண்பாளர்களையும் சேர்த்து ஒரு கல்விப் பண்ணையை ஏற்படுத்தியது போல், திராவிட இல்லம் பயன்பட்டது.

 மாணவர்கள் பலர் அங்குத் தங்கித் தங்கள் படிப்புகளைக் கவனித்துக் கொள்ளவும், பண்பாடு, ஒழுக்கம், நேர்மை இவைகளை நல்ல சூழ்நிலையில் வளரச் செய்யவும் இது பயன்பட்டது.

இந்த இல்லத்தில் பல்வேறு வருணத்தவரும் கூடிப் பழகினார்கள். பிரதி வாரமும் இளைஞர்கட்கு கல்வியாளர்களை கொண்டு அறிவுரையும், அறவுரையும் நல்க நடேசனார் ஏற்பாடு செய்தார்.  

டாக்டர் நடேசனாரின் தனிப்பட்ட இந்த முயற்சியைப் பாராட்டியவர்கள் பலர்.

இந்த இல்லம்  சென்னைத் திருவல்லிக்கேணியில், டாக்டர் நடேசனாரின் வீட்டின் அருகாமையிலேயே நடத்தப் பெற்றது. சமுதாயத்தில் பெரும்பாலோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கம் ஒன்றன்றி வேறு நோக்கம் இதற்கு இல்லை. 

நடேசனார்  பி.ஏ. படிப்புப் பூர்த்தியானவுடன்,  ஆர். வெங்கட்ரத்தினம் நாயுடு தலைமையில் நடந்து வந்த பித்தாபுரம் மாகராஜா கல்லூரியில், உடல்கூறு (Physiology) விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவப் பட்டம் பெற்றுப் பணி புரிந்தார். பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

திராவிடர் இல்லம் வளர்ச்சியில் சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், பனகல் அரசர் போன்ற பெரு மக்களும் ஈடுபட்டார்கள். முதலாண்டு நிறைவு விழாவுக்குச் சென்னை ஆளுநரே வருகை தந்தார்.

டாக்டர் நடேசனாரை ஊக்குவித்தவர்கள் அரசி யல்வாதிகள் அல்லர்.  பொறியாளர் வி.மாணிக்க நாயக்கர், தத்துவ மேதையும் சீர்திருத்தவாதியுமான டி.கோபாலச் செட்டியார்,  வழக்குரைஞர்கள் எத்தி ராஜ் முதலியார், சிவப்பிரகாச முதலியார், மதன கோபால நாயுடு முதலியவர்களே ஆவர்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்களில் பலர் நீதிபதிகளாகவும், ஆளுநர் சபை உறுப்பினர் களாகவும் கூடப் பிற்காலத்தில் ஆனார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற எல்லாப் பகுதிகளையும் குறிக்கும் ஒரே பண்பாட்டுச் சொல் திராவிடம் என்பது. பழைய நூல்களும் தென் னாட்டைத் திராவிடம் என்றே  கூறியது.

நடேசனார், தமது மருத்துவத் தொழிலில் ஜாதி, மத வித்தியாசமின்றி, எல்லோருக்கும் சேவை செய்து வந்தார். பலரும் மருந்துக்கும் சர்டிபிகேட்டுகட்கும் பணம் கேட்கப்படாமலே பெற்றுச் செல்வார்கள். ஆதாயத்திற்கோ, அரசியல் ஆதரவிற்கோ நடே சனார் அவ்வாறு செய்யவில்லை. சென்னை மாநகர சபையில் அங்கத்தினராகி, முக்கியமாகச் சுகாதாரம், கல்வி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் இவைகட்கு இடைவிடாது உழைத்தார்.

அக்காலத்தில் பெரும்பாலோர் கல்லூரிகளிலும், உத்தியோகங்களிலும், சட்டமன்றத்திலும் மக்கள் தொகைக்கேற்ற இடம் பெறாது, மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தனர். செல்வாக்கும் சிறப்புமின்றிப் பாதிக்கப்பட்டார்கள். பார்ப்பனர் மட்டும் கல்வி முன்னேற்றத்தாலும் குடும்ப ஆதரவினாலும் பல முக்கிய நிறுவனங்களில் இருந்து வந்தார்கள். மற்றவர்கள் தலையெடுக்க விரும்பிய காலத்தில், பார்ப்பனர்கள் இடம் தருவதற்கு முன் வரவில்லை.  

கல்வி, உத்தியோகம், சட்டமன்றத்தில் இடம் இவைகளில் வகுப்புவாரி உரிமை நல்க வேண்டு மென்று முக்கியமாகக்  குரல் எழுப்பி, ஆக்க வேலைகளில் தலைப்பட்டவர் டாக்டர் நடேசனார் என்பது வரலாற்று உண்மை.

டாக்டர் சி. நடேசனாரைப் போற்றுவோம்!


No comments:

Post a Comment