இலங்கை - 75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

இலங்கை - 75 ஆண்டுகளில் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை

- ரவி நாயர்

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 அன்று, இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அதிபர் ரனில் விக்ரமசிங்கே, மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதைக் காணத்தான் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் நாட்டைப் பிரிப்பதற்குத் தான் துணை நிற்கப் போவதில்லை என்றும்  தெரிவித்தார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் எதிர்கொண்டுள்ள தனித்துவமான பிரச்சினைகளைக் கையாள்வதற்கு அமைச்சரவை உப குழு (Cabinet sub-committee) ஒன்று நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அக்குழுவின் தீர்மானங்களும், அவை நடைமுறைப் படுத்தப்படுவதற்கான தேதிகளும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன. நிலங்களையும் கைதிகளையும் விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளோம். மேலும், ஒருமுக அரசில் (unitary state)  அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், இந்நாட்டைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார்.

இந்தப் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு யாரும் ஏமாறவில்லை - குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள். பிரச்சினை இனியும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது குறித்தத் தீர்மானமின்மை அல்ல என்பது வெளிப்படை. அது கிணற்றில் போடப்பட்டக் கல்லாக ஆகிவிட்டது.

இந்தியாவின் இரட்டை வேட நிலைப்பாடு

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக 1987 இல் இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அது, அந்தத் தீவு நாட்டில் மாகாண சபைகள் உருவாக்கப்பட வழிவகுத்தது.

13ஆவது திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் வலியுறுத்தின. ‘அய்க்கிய இலங்கை’யை உருவாக்கும் செயல்முறையானது, இரண்டு இனச் சமூகங்களுக்கும் இடையே நீண்ட காலம் நல்லிணக்கம் நிலவுவதற்கு, தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டியதை அவசியமாக்கியிருந்ததாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளிடம் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்குச் சென்ற இந்திய அதிகாரிகள் இவ்விவகாரம் குறித்து வெறுமனே பேசுவதோடு நிறுத்திக் கொண்டனர். கடந்த ஆண்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்புக்குச் சென்றபோது இவ்வாறு குறிப்பிட்டார்: “ஓர் அய்க்கிய இலங்கைக்குள், சமத்துவம், நியாயம், அமைதி, கண்ணியம் ஆகியவை குறித்துத் தமிழ் மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் சொந்த நலனுக்கு இன்றியமையாதது. அரசமைப்பின் 13ஆவது திருத்தம் உட்பட, அர்த்தம் வாய்ந்த அதிகாரப் பகிர்வு தொடர்பான விஷயத்தில் இது அரசாங்கத்திற்கும் பொருந்தும்.”

2021இல் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை களுக்கான அய்க்கிய நாடுகள் மன்றக் (UNHRC) கூட்டத்தில், 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்தியிருந்தது. நல்லிணக்க நடவடிக்கைகளைத் தொடர்தல், இலங்கை அரசமைப் பிற்கான 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துதல் ஆகியவை உட்பட, தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பேற்பு, மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பது தொடர்பாக அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மீதான கலந்துரையாடலின்போது குடிமக்கள் அனைவரின் அடிப்படைச் சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்படியும் அய்க்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அண்மையில் இலங்கையிடம் வலியுறுத்தினார். 

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, அனைத்து இந்திய அரசுகளும் இந்திய மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைத்து வந்துள்ளன. குர்னாம் சிங் ஆணைக்குழு, ராஜமன்னார் ஆணைக்குழு, சர்க்காரியா ஆணைக்குழு ஆகியவை இருந்தும்கூட! ஓர் இந்திய மாநிலத்திலுள்ள ஒரு மாவட்ட வளர்ச்சி சபையின் அதிகாரங்கள்கூட 13ஆவது திருத்தத்திற்கு இல்லை. இலங்கைத் தமிழர்கள்மீது இந்திய அரசு உண்மையிலேயே தீவிர அக்கறை கொண்டிருந்திருந்தால், இலங்கை அரசு திவாலாவதிலிருந்து அதைக் காப்பாற்றுவதற்கு அது வழங்கிய தாராளமான நிதியுதவியைப் பயன்படுத்தி, மொழி உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அது இலங்கை அரசை நெருக்கியிருக்கும். இலங்கை அரசின் அதிகாரபூர்வமான மொழிக் கொள்கைகளைப் பற்றி இலங்கை அரசாங்க ஊழியர்களுக்குத் தெரியாது என்பதும், சேவைகள் பெரும்பாலும் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.

அண்மைக் காலங்களில் அமைதி வழிப் போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்(The Prevention of Terrorism Act (PTA)) பயன்படுத்தப்பட்டு வருவது நம் எல்லோருக்கும் பரிச்சயமான விஷயம்தான்.

இலங்கையில் ஆபத்திலிருக்கின்ற ஆரிய கோயகாமா மங்கையை ஹிந்துத்துவாவின் ஆரிய வீரர்கள் போய் மீட்க வேண்டும்; இல்லாவிட்டால், சீன வில்லன் ஃபு மன்சூ தன் டிராகனில் வந்து அவளைக் கடத்திச் சென்றுவிடுவான் என்று நம்மிடம் சொல்லப்பட்டது. உண்மையில், இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) உத்தரவாதங்கள்மீது கையெழுத்திட சீனா தயங்கியது வெளிப்படையாகத் தெரிந்தது. 

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 2021இல் மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் மன்றத்தின் 46ஆவது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு,  இலங்கை தன்னுடைய 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அவர் தன்னுடைய கடிதத்தில், 40/1 தீர்மானத்தின் கீழ் மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் மன்றத்திற்கு இலங்கை வழங்கியிருந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அந்நாடு எவ்வாறு தவறியிருந்தது என்பதையும், தமிழ்ச் சமூகத்தின் மீது அது கட்டவிழ்த்துவிட்டிருந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பேற்று பன்னாட்டு அளவில் ஏற்றுக் கொள்ளப்ப ட்டுள்ள தரத்தின்படி அது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். மேலும், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக அந்நாட்டை விசாரிப்பதற்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (International Criminal Court (ICC)) விண்ணப்பிக்கும்படி இந்தியா உட்பட அய்க்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளுக்கு இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒருமித்தக் குரலில் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், துல்லியமாக இக்காரணத்திற்காக, இலங்கை அரசு தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இன வேறுபாடின்றி, தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழ்நாட்டு மக்களும் இலங்கைக்குத் தாராளமாக உதவிகளை வழங்கி வந்துள்ளனர். கூவம் ஆற்றுக்குள் நன்னீர் பாய்ச்சப்பட வேண்டியிருப்பதுபோல, சிங்கள அரசின் முரட்டுப் பிடிவாதத்திற்குக் கூட்டாட்சியமைப்பு எனும் மருந்தூசி போடப்பட வேண்டியுள்ளது.

தொடரும் போக்கு

விரும்பத்தகாத விடயங்கள்தாம் மீண்டும் தலை காட்டும் என்ற பழமொழியைப்போல, விக்ரமசிங்கேயின் பசப்புக் கூற்றும் பழைய கதைதான். 2012இல், தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழு (Parliamentary Select Committee (PSC)) அமைக்கப்பட்டது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance (TNA)) உட்பட, எந்தவோர் எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இலங்கை அரசு அந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்ததற்கான ஒரே நோக்கம், அதை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி, அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்திடமிருந்து தப்பித்து, அதிகமான கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்வதுதான் என்று கூறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் புறக்கணித்தது. 

வெறுமனே ஆணைக்குழுக்களை அமைப்பதும், தமிழ்ச் சமூகம் கேட்டுக் கொண்டிருக்கின்ற எதையும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் இலங்கை அரசின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. அவ்விடயத்தில் அது ஒரு குற்றவாளிதான். எடுத்துக்காட்டாக, 1990களில், தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது பற்றிப் பேசுவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தின் ஒரு மேனாள் உறுப்பினரான மங்கள முனேசிங்கேவின் கீழ் ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பல முறை சந்திப்புக்கூட்டங்களை நடத்திய போதிலும், அது தன்னுடைய அறிக்கைகளை நடைமுறையில் செயல்படுத்தத் தவறியது.

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு விவகாரம் தொடர்பாக அன்றைய அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் கீழ், வல்லுநர்களை உள்ளடக்கிய ‘அனைத்துக் கட்சிப் பிரதிநிதிக் குழு’ என்ற இன்னொரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழுவின் அறிக்கைகளும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பின்னர் 2010 இல், ‘கற்றுக் கொள்ளப்பட்டப் பாடங்கள் மற்றும் முரண்பாடுகள் நீக்குவதற்கான ஆணைக்குழு’ (Lessons Learnt and Reconciliation Commission (LLRC)) ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. இருப்பினும், இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகளும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. 2012 இல் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஏமாற்றத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவது இலங்கை அரசின் வாடிக்கை. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இது எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை.”

அய்க்கிய நாடுகள் சபை

உலகளாவிய காலாந்திர ஆய்வுக் குழு  (Universal periodic Review (UPR)) இலங்கையின் 4ஆவது காலாந்திர ஆய்வுக்காகக் கூடியது. வெளியிடப்படவிருக்கின்ற அறிக்கை வழக்கமான பல்லவியையே பாடும்.

கடந்த காலங்களில் நிகழ்ந்ததைப்போலவே, புதிய அரசமைப்பு வடிவமைப்பும் அரசியல் அதிகாரப் பகிர்வும் இலங்கையில் சிங்களச் சமூகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே சமரசத்தைக் கொண்டுவருவதில் ஒரு முக்கியக் காரணியாக அமையும் என்று மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகளின் உயர் ஆணையர் வலியுறுத்தியதாக அந்த அறிக்கை தெரிவிக்கும். முன்பு, “அனைத்து மக்களுக்கும் இடையே நல்லிணக்கம் உருவாவதற்கும் மனித உரிமைகளை அவர்கள் முழுமையாக அனுபவிப்பதற்கும் அரசியல் அதிகாரப் பகிர்வு இன்றியமையாதது,” என்று மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. பின்னர், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மேம்படுவதற்கு உயர் ஆணையர் பரிந்துரைத்துள்ள விஷயங்களில் ஒரு புதிய அரசமைப்பின் உருவாக்கமும் அதிகாரப் பகிர்வும் குறிப்பிடப்பட்டுள்ளன. இடைக்காலப் பரிகாரம் வழங்கலுக்கும் (transitional justice) நல்லிணக்கத்திற்குமான ஒரு சூழலை உருவாக்க உதவக்கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வு, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு, மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளான பாதுகாப்புச் சட்டங்கள், இராணுவமயமாக்கம், பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள், நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படுதல் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பது ஆகியவை உட்பட, தன்னுடைய அனைத்து வாக்குறுதிகளையும் இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியது.

சிறுபான்மையினருக்கான 

பன்னாட்டுச் சட்டமும் சுயாட்சியும் 

அய்க்கிய நாடுகளின் பொது மனித உரிமைகள் உடன்படிக்கைகள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான இன்றியமையாத வழிமுறைகளை நிறுவுகின்றன. அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடுகள் அனைத்தும் சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளைத்தான் வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்வது மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். வேலைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்காணிப்பதற்கு எட்டு மனித உரிமைகள் உடன்படிக்கைகளும் ஆணையங்களை அமைத்துள்ளன. அந்த எட்டு உடன்படிக்கைகள் பின்வருமாறு: பன்னாட்டுக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR); பன்னாட்டுப் பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை (ICESCR); அனைத்து வகை இனத்துவப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கை (ICERD); குழந்தைகளின் உரிமைகள் உடன்படிக்கை (CRC); சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கை (CAT); பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW); புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு உடன்படிக்கை (ICRMW); மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் (CRPD). சிறுபான்மையினருக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய சில உட்பிரிவுகள் பன்னாட்டுக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையிலும், குழந்தைகளின் உரிமைகள் உடன்படிக்கையிலும் இடம் பெற்றுள்ளன.

சிறுபான்மையினர் குறித்த அய்க்கிய நாடுகளின் பிரகடனம் பன்னாட்டுக் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 27ஆவது பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது. சிறுபான்மையினருக்காகச் சட்டப்படிக் கேள்விக்கு உட்படுத்தப்படக்கூடிய ஷரத்தாக அது கருதப்படுகிறது. அந்த 27ஆவது பிரிவு இவ்வாறு கூறுகிறது:

“இனரீதியான, மதரீதியான அல்லது மொழிரீதியான சிறுபான்மையினர் இருக்கின்ற மாநிலங்களில், அந்தச் சிறுபான்மையினர் தங்களுடைய குழுவின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து சமூகத்தில் தங்களுடைய சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும், தங்களுடைய சொந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும், தங்களுடைய சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட மாட்டாது.”

குழந்தைகளின் உரிமைகள் உடன்படிக்கையின் 30ஆவது பிரிவு, சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதே போன்ற தரநிலையை நிர்ணயிக்கிறது. அது இவ்வாறு கூறுகிறது:

“இனரீதியான, மதரீதியான அல்லது மொழிரீதியான சிறுபான்மையினரோ அல்லது பழங்குடியினத்தவரோ இருக்கின்ற மாநிலங்களில், அத்தகைய ஒரு சிறுபான்மையினத்தை அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன்னுடைய குழுவிலுள்ள பிற உறுப்பினர் களுடன் சேர்ந்து சமூகத்தில் தன்னுடைய சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும், தன்னுடைய சொந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும், தன்னுடைய சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்குமான உரிமை அக்குழந்தைக்கு மறுக்கப்பட மாட்டாது.”

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையும், குழந்தைகளின் உரிமைகள் உடன்படிக்கையும் மிகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தானாக வழங்கியுள்ள உறுதிமொழிகளின் விளைவாக, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சட்டபூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது. ஆனாலும், சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் மொழியையும் மதத்தையும் வெளிப் படுத்துவதற்கான சுதந்திரத்தைப் பெற்றிருப்பதுதான், பன்னாட்டுச் சமூகம் ஒப்புக் கொண்டுள்ள ‘சிறுபான்மையினருக்கான உரிமைகள்’ என்ற தாராளவாத ஜனநாயக யோசனையின் அதிகபட்ச வரம்பாகத் தெரிகிறது.

அதிகாரப் பகிர்வும் மோதல்களுக்குத் 

தீர்வு காணப்படுதலும்

சிறுபான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு வெற்றிகரமான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, நாட்டின் நிறுவனக் கட்டமைப்பு மாற்றப்பட்டாக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளின் ஊடாக, மிகவும் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ள மோதல்கள், ஒருவிதமான சுயாட்சியை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்புகளை இன்றியமையாதவையாக ஆக்கியுள்ளன. மோதலுக்குப் பிந்தைய சூழல்களில், உள்ளூர் அரசின் திறனையும், அதனோடு தொடர்புடைய பிற பரவலாக்க வகைகளையும் ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பரவலான உடன்பாடு நிலவுகிறது. ஓர் அரசாங்கம் உள்ளூர் அளவில் தன்னை வலிமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்கும் தன்னுடைய சட்டபூர்வத்தன்மையை வலிமைப்படுத்திக் கொள்வதற்கும், பொதுப்பணித் துறை ஊழியர்களைப் பணியமர்த்தவும், சிறப்பான சேவை வழங்குவதற்கு இன்றியமையாத உள்கட்டமைப்புத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கவும், நாடு முழுவதும் அதிக ஆற்றல்மிக்க விதத்தில் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளவும், சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பையும் தக்கவைத்துக் கொள்ளவும் அதிகாரப் பரவலாக்கம் வழிவகுக்கிறது. மோதல்கள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள சூழ்நிலைகளில், உள்ளூரில் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்ற நடவடிக்கைகள், பல்வேறு இன, கலாச்சார மற்றும் மதக் குழுக்களுக்கு இடையே தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் ஒருங்கிணைப்பும் உருவாக வழிவகுக்கின்றன. கோட்பாட்டளவில், உள்ளூர் ஆட்சிமுறையால், அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரங்களுக்கான உள்ளூர் உரிமைகோரல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மோதல்கள் முடிந்த நாடுகளில், கிராமப்புறங்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்களுக்கு, தேசிய அதிகாரக் கட்டமைப்புகள் பெரும்பாலும் பொருத்தமற்றவையாகவும் எட்டப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. மறுபுறம், உள்ளூர்வாசிகள் தங்களுக்கு முக்கியமான பிரச்சினைகளில் நேரடியாக ஈடுபடுவதற்கான ஒரு வழியை அவர்களுக்குக் கொடுப்பதன் மூலம், ஒரு மய்யத்தைச் சுற்றியே இயங்குகின்ற பாரம்பரியமான அமைப்புமுறையிலிருந்து எழக்கூடிய கோபத்தைக் குறைப்பதற்கு ஒரு பரவலாக்கப்பட்ட அதிகார மய்யத்தால் உதவ முடியும். உள்ளூர்வாசிகள் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு அதிகாரப் பரவலாக்கம் உதவுகிறது. அதே நேரத்தில், அடிப்படைச் சேவைகளின் பகிர்வு, குறைகளையும் மோதலுக்கான மய்யக் காரணங்களையும்கூடத் தீர்ப்பதற்கான ஒரு வழியை வழங்குகிறது.

வருங்காலப் பாதை 

எப்படி இருக்க வேண்டும்?

கூட்டாட்சி என்பது தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்கள், பிற சமூகங்கள் கொண்டிருக்கின்ற அதே அதிகாரங்களைப் பெற்றிருப்பதற்கும், ஒரே நாட்டில் ஒன்றாகச் சேர்ந்து இணக்கமாக வாழ்வதற்கும் வகை செய்கின்ற ஓர் அரசமைப்பு உடன்படிக்கையாகும். அய்க்கிய நாடுகள் சபையின் சார்பில் எழுதப்பட்டு 1999 இல் வெளிவந்த ‘நிர்வாகப் பரவலாக்கம்: வளரும் நாடுகளுக்கான உத்திகள்’ (Administrative Decentralization: Strategies for Developing Countries)  என்ற நூலின் ஆசிரியர்களான கோஹனும் பீட்டர்சனும், அதிகாரப் பகிர்வுக்குத் தேவையான 6 தரநிலைசார் தேவைகளைப் (Normative Requisites) பட்டியலிட்டுள்ளனர்:

1) நிறுவனத் தனியுரிமை அந்தஸ்தை வழங்குதல்; 2) தெளிவான அதிகார வரம்புகளையும் செயல்பாட்டு எல்லைகளையும் நிலைப்படுத்துதல்; 3) திட்டமிடுவதற்கும் தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும் குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்குதல்; 4) அரசு அமைப்புமுறையில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்திற்கான அடிப்படை விதிமுறைகளை உருவாக்கி நிலைப்படுத்துதல்; 5) சொந்தமாக மூல வருவாயை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தல்; 6) அதிகாரம் பகிரப்பட்டுள்ள பிரிவுகள் தம்முடைய சொந்த வரவு-செலவு அமைப்புமுறையையும், கணக்கீட்டு அமைப்பு முறையையும், மதிப்பீட்டு அமைப்புமுறையையும் நிறுவி அவற்றை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்குதல்.

ஆனாலும், மாகாணங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே தெளிவான பிரிவினை இல்லை என்பதை 13ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதிலிருந்து எவரொருவராலும் புரிந்து கொள்ள முடியும். இந்தத் தெளிவான பிரிவினையின்மை ஒரு பலவீனமான மாகாண சுயாட்சிக்கு வழிவகுக்கிறது. எந்தவொரு விவகாரத்தின்மீதும் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் இல்லை. உண்மையில், தேவை ஏற்படும்போது, அந்த மாகாண சபைகளின் தீர்மானங்களைப் புறந்தள்ளவும் அல்லது விவகாரங்களைத் தங்களுடைய சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளவும் நாடாளுமன்றத்திற்கும் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் உள்ளது.

13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவதற்குப் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வந்துள்ள போராட்டம், வெறுமனே இயந்திரத்தனமாக ஓதப்படுகின்ற வேத மந்திரத்தைப்போல சுரத்தின்றி ஓதப்படுகிறது. 

இலங்கையிலுள்ள தமிழர்கள் தங்களுடைய குரலையும் உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றனர்; இதனால் அவர்கள் மேலும் அதிகமாகப் புறந்தள்ளப்படுகின்றனர். ஒரு முறையான கூட்டாட்சிக் கொள்கையை அமல்படுத்தாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள அரசியல்ரீதியான பின்விளைவு இது. தமிழர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்படுதல், பாலியல் வன்கொடுமை, சித்திரவதை, தமிழர்களின் பூமியை இராணுவமயமாக்குதல், அரசு ஆதரவுடன்கூடிய காலனித்துவப்படுத்தும் திட்டங்கள் போன்றவை மோதலுக்குப் பிந்தைய இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளில் ஒரு சில மட்டுமே.

திராவிட முன்னேற்றக் கழகமும், இந்தியாவிலும் உலகம் நெடுகிலும் உள்ள சுயமரியாதைமிக்க ஒவ்வொரு தமிழனும் ஒரு கூட்டாட்சி இலங்கைக்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இலங்கை தமிழர்கள் கனேடிய மாகாணங்களின் அல்லது ஜெர்மானிய மாநிலங்களின் அதே அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். புது டில்லி அரசு உண்மையிலேயே நேர்மையாக இருந்தால், சென்னையுடன் முழுமையாகக் கலந்தாலோசித்து இலங்கைத் தமிழர் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

குறிப்பு: கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள் இவை.

No comments:

Post a Comment