பன்னாட்டு தாய்மொழி நாள் சிந்தனை: பிப்ரவரி 21 மொழிப் போராட்டங்களின் தேவை ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

பன்னாட்டு தாய்மொழி நாள் சிந்தனை: பிப்ரவரி 21 மொழிப் போராட்டங்களின் தேவை ஏன்?

- இறைவி

ஓர் இனத்தின் பண்பாட்டிற்கான தனிச்சிறப்பை உருவாக்குவதில் முதன்மையான ஊற்றுக்காலாக உள்ளது மொழியாகும். அதனைப் பேணி வளர்க்கத் தவறிவிட்டால் - நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வித் துறைகளில் அதற்கு உரிமை, மேன்மை, பயன்பாடு இல்லாமல் செய்து விட்டால் - அந்த இனத்தினரின் முன்னேற்றமும் பண்பாடும் சிதைந்து விடும்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 21ஆம் தேதி பன்னாட்டுத் தாய்மொழி நாளாகக் கொண்டாடுகிறார்கள். இது 2000ஆம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் உள்ளது. 

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அன்றைய ஆட்சியினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நாளே உலகத் தாய்மொழி நாளாக அய்க்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டுப் நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அறிவிக்கப்பட்டது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டு தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றிற்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதே இந்நாளின் நோக்கமாகும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் மதத்தால் ஒன்றுபட்டவர்களாக இருந்தாலும், தங்களின் தாய் மொழிக்கு உரிய உரிமை வழங்கப்படாதபோது வெகுண்டு எழுந்து போராடிய காரணத்தினால் உயிரிழந்த மாணவர்களின் நினைவாகவே இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தப் போராட்டம் அந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி ‘வங்காள தேசம்‘ என்ற ஒரு நாடு உருவாக முழுக் காரணியாக இருந்துள்ளது.

“மொழிகள் நம் அக-புற மரபைப் பேணி வளர்க்கும் திறன் வாய்ந்த கருவிகள் ஆகும். தாய்மொழிகளை மேம்படுத்தி, பரப்பி, தன்மயப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மொழிப் பன்மைத்துவத்தையும் பன்மொழிக் கல்வியையும் ஊக்குவிப்பதோடு மொழி, பண்பாட்டு மரபுகளுக்கான விழிப்புணர்வை வென்றெடுத்து உலக மக்களிடையே புரிந்துணர்வையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுக்கும்” என்பதையே பன்னாட்டு தாய்மொழி நாள் உருவாக்க காரணமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

1952இல் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் இப்படி ஒரு நாளாக உலக அளவில் பேசப்படும் பொழுது அதற்கு முன்னரே 1938களிலேயே

“சேனை ஒன்று தேவை! பெருஞ்சேனை ஒன்று தேவை! செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை!” என்று அழைத்து 1940 வரையிலும் மொழி உரிமை இயக்கம் நடத்தியும், அதற்குப் பின்னர், 1948, 1950, 1952, 1955, 1959 எனத் தொடர்ந்து, 1960 இல் இந்திய தேசப்படம் எரிக்கும் கிளர்ச்சி, 1963 இல் அரசியல் சட்டத்தின் ஆட்சி மொழி பற்றிய 17ஆம் பிரிவைக் கொளுத்திய போராட்டம், 1965 ஜனவரி 26 குடியரசு நாளைத் துயர நாளாக அறிவித்த போராட்டம், என இன்று வரை, பல ஆண்டுகள், பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்திய நம் நாட்டில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் ஆட்சி மொழி தமிழ்தான் என்றாலும், நடைமுறையில் இன்றும் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடைபெறக்கூடாது; சமஸ்கிருத கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதும், கல்யாணம் முதல் கருமாதி வரை சமஸ்கிருத ஆதிக்கமாகவும், ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்களில் ஹிந்தி ஆதிக்கமாகவும் தானே காணப்படுகிறது? 

இன்றும் தமிழன் கோவிலின் உள்ளே போனதால் தீட்டு ஆகிவிட்டதாகவும், தமிழ் மொழியினால் தோஷம் ஏற்பட்டதாகவும் கூறும் நிலை தானே உள்ளது?

இந்தக் கேள்விகளைக் கேட்கும் பொழுது நம்மைப் பார்த்து சிலர் ஜாதி, மதம், மொழி என்ற பெயரால் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முனைவதாக எண்ணிக் குரைக்கின்றனர். பேதைகள் சிலர் இப்படிக் குரைப்பவர்களை அறிவாளிகள் என நம்புகின்றனர். ஜாதி, மதம் என்பவை ஒழிக்கப்பட வேண்டிய நோய்கள்! ஆனால் மொழி என்பது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் உரிமை வாழ்வுக்கும் அடித்தளமாக இருப்பது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவை மூன்றையும் ஒன்றாக, சமமாக வைத்துக் கூறுவது என்பதே சூழ்ச்சியாகும்.

இந்தியாவின் ஒற்றுமையைப் பேண ஒரே மொழி என்ற போர்வையில் ஹிந்தியைப் புகுத்துவது; மற்ற மொழிகளின் வளர்ச்சியை, குறிப்பாகத் தமிழ் மொழியின் சிறப்பினைக் குலைக்க முயலும் முயற்சிகள், தமிழர்களை அரசியல் - சமூக - பொருளாதார அடிமைகளாக ஆக்கச் செய்யும் முயற்சிகள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் உண்மையான மக்களாட்சி நடைபெற வேண்டும் எனில் வேறுபட்ட மொழிகள் பேசும் இந்திய தேசிய இனங்கள் அனைத்திற்கும் சம வாய்ப்பு எல்லாத் துறைகளிலும் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை அளிக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளில் மொழிச் சமத்துவத்தை வலியுறுத்தாமல் இருப்பதே ஹிந்தி பேசாத மக்களுக்குக் கேடு விளைவிப்பதாகும்.

ஹிந்தி பேசாத மாநிலங்களாக இருந்த பீகார், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், அரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், காஷ்மீர், சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநில மக்கள் ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாக ஏற்றதால் தம் தாய் மொழிகளாக இருந்த போஜ்புரி, மய்திலி, பிரஜ் பாஷா, புந்தேல் கண்டி, பிரதாப்கர், ஆவ் தி, கண்ணோஜி, கடுவாலி, குமுனி, ஹரியான்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மாள்வி, நிமதி, அவதி, பகேலி, டோக்ரி, பாடி, லடாக்கி, சட்டிஸ்கரி, கோர்பா, ஜார்க்கன்ஷி, சந்தலி ஆகிய மொழிகள் கல்வி நிலையங்களிலோ, பொருளாதார முன்னேற்றத்திற்கோ பயன்படாத வகையில், இலக்கியங்களோ படைப்புகளோ உருவாகாமல் அழிந்தே போய்விட்ட நிலையில் உள்ளன.

இந்தியாவில் பாதிப் பேருக்கு மேல் ஹிந்தி தான் பேசுகிறார்கள் என்று சொல்லி, மக்களாட்சிக் கொள்கைப்படி பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியை பொது மொழியாக, ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக, வேறுபட்ட  சார்பு மொழிகளின் தனித்தன்மைகளை மறைத்து ‘ஒரே மொழி’ என்று செயற்கையாகக் காட்டுகிறார்கள் என்பதனை அறிஞர் பலர் தெளிவுபடுத்தி உள்ளனர். 

எப்படி ஹிந்து என்பதற்கு, யார் கிறிஸ்தவர் இல்லையோ, யார் இஸ்லாமியர் இல்லையோ, யார் பார்சி இல்லையோ, மற்ற அனைவரும் ஹிந்துக்கள் என்ற கருத்தினை அரசியல் சட்டப்படியே இவர்களால் உருவாக்க முடிந்ததோ அதேபோல பச்சாணி, கோசலி, பிகாரி, ராஜஸ்தானி, பஹாடி ஒன்று அய்ந்து மொழிகளையும் அவற்றின் கிளை மொழிகளான 16 க்கும் மேற்பட்ட மொழிகளையும் ஒன்றாக ஹிந்தி என்றே கணக்கிடுகிறார்கள்.

மேலும் ஒரு நாட்டில் ஒரே மொழி தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றோ அல்லது ஒரே மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை என்பதை நன்கு முன்னேற்றமடைந்த மேல் நாட்டினரிடம் இருந்து விளங்கிக் கொள்ள முடியும். 

எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் ஜெர்மன், பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று மொழிகள் சம வாய்ப்பு உடைய அரசியல் மொழிகளாகவும் இவற்றோடு ஒரே ஒரு விழுக்காடு மக்களால் பேசப்படும் ரோமனீஸ் என்ற மொழியும் தேசிய மொழியாகவும் இருக்கிறது. ஃபின்லாந்தில் மிகச்சிறுபான்மை மக்களால் பேசப்படும் சுவீடிஷ் மொழிக்கும், ஃபின்னிஸ் மொழியோடு சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளில் உள்ள மக்கள் ஒற்றுமையாக வாழவில்லையா?

உண்மையான குடியாட்சி நிலவ வேண்டுமானால் அரசியல் உரிமையோடு மொழி பண்பாட்டு உரிமையும் தேவை என்பதை மேல்நாட்டினர் உணர்ந்ததாலேயே, அதற்கேற்ப அரசியல் சட்டத்தையும் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள். ஆதலால் அமைதியான சூழலில் எவ்விதப் பொறாமையும் போட்டியும் அச்சமும் வெறுப்பும் இல்லாதவர்களாக, பொருளாதார முன்னேற்றத்திற்கான பணிகளைக் குழப்பமின்றி, தொடர்ந்து செய்கிறார்கள்.

பாகிஸ்தானில் உருது மொழியினை பொது மொழி ஆக்கிய காரணத்தினால் தான் வங்காள மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களால் வங்கதேசம் உருவாகியது. இலங்கையில், தமிழுக்கும் சிங்களத்திற்கும் சமநிலை அளிக்க மறுத்ததாலேயே இனச் சிக்கலும், போரும் உருவாகின என்பது கண் கூடு. நிறவெறி தாண்டவம் ஆடிய தென்னாப்பிரிக்காவில் கூட, ஆங்கிலமும் ஆப்பிரிக்கான்சும் சமநிலையைப் பெற்றுள்ளன.

ஒரு நாடாக ஒன்றுபட்டு வாழ்வோர் எல்லாம் ஒரே தேசிய ஆட்சி மொழியைக் கொண்டிருக்கவில்லை என்பது போல், ஒரு மொழி பேசுவோர் அனைவரும் ஒரே நாடாக வாழ்வதில்லை. 

கனடாவில் வாழும் ஆங்கிலேயர் அனைவரும் அமெரிக்காவில்  ஆங்கிலம் தான் பேசப்படுகின்றது என்பதற்காக அதனோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. அதேபோன்று, அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரே மொழியைக் கொண்டிருந்தாலும் ஒன்றுபட்டு ஒரே நாடாக நிற்கவில்லை. 

தென் அமெரிக்கா நாடுகளில் பிரேசில் தவிர மற்றவை ஸ்பானிய மொழி பேசும் நாடுகள்தாம்! அவை அனைத்தும் தனித்தனி நாடுகளாகவே உள்ளன.

எனவே, பல வேறுபட்ட தேச இனங்களைக் கொண்ட இந்த நாட்டின் ஒற்றுமை ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற போக்கினால் அமையாது. அத்தகைய எண்ணம் கொண்டிருப்போர் தலைகீழான விளைவையே சந்திக்க நேரிடும்.

1967லிருந்து தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பாளர்களையே தமிழர்கள் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும், 1938இல் எந்த ராஜாஜி ஹிந்தியைத் திணித்தாரோ, அவரே 1963இல் ஹிந்தித் திணிப்பின் மூலம் சமத்துவத்தை நாசமாக்கப் பார்க்கிறார்கள்; தேச அய்க்கியத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று கூற வேண்டி வந்தது என்பதையும், உலக மொழியாகத் திகழ்கின்ற - இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு உதவுகின்ற - ஆங்கிலத்தினை அதன் பயன் கருதியே தமிழ்நாட்டினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதையும் உணர வேண்டும்.

அறிவும், சுயமரியாதையும் உள்ள சமுதாயம், ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும்!

அரசியல் - பொருளாதார ஆதிக்கங்களைப் போன்றே மொழி, பண்பாட்டு ஆதிக்கமும்  தீமை விளைவிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளும்!

No comments:

Post a Comment