பெரம்பலூர்.பிப்.10 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 10, 2023

பெரம்பலூர்.பிப்.10 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் உரை

குடி தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது காட்டுமிராண்டித்தனம் அல்லவா?

ஆளுநர் மாளிகை ரகசியத்தை, அண்ணாமலை தெரிந்துகொண்டது எப்படி?

பரப்புரை பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் தமிழர் தலைவர் கேட்ட அதிரடிக் கேள்விகள்!

பெரம்பலூர்.பிப்.10 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் உரையாற்றினார்.



ஈரோட்டில் தொடங்கி கடலூரில் நிறைவு பெறும் பரப்புரை பெரும் பயணத்தின் 7 ஆம் நாளில் முதல் கூட்டம் பெரம்பலூரிலும், இரண்டாம் கூட்டம் திருவரங்கத்திலும் 9-02-2023 அன்று அந்தந்த பகுதி தோழர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் கூட்டம் பெரம்பலூர் காமராசர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசயேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, நகர் செயலாளர் ஆதிசிவம், வேப்பூர் ஒன்றிய தலைவர் அரங்கராசன், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சைப்பிள்ளை, வேப்பந் தட்டை ஒன்றிய தலைவர் இராசு, ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரையாற்றினார். 

உண்மை நம் பக்கம் இருக்கிறது!

நிறைவாக   கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  மக்கள் ஏராளமாக கூடியிருப்பதைக் கண்டு,  நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அடுத்த தொரு கூட்டத்திற்கு செல்ல வேண்டும். ஆகவே தோழர்கள் இங்கே புத்தகங்கள் இருக்கின்றன. வாங்கி பயன்பெற்று, பரப்புங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அடுத்து பெரம்பலூர் தொகுதி என்பதால் தானாகவே நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மாவட்டச்செயலாளரும் போக்கு வரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் பற்றி சில கருத்துகளை கூறினார். குறிப்பாக 2ஜி பற்றி, “நாங்கள்தான் சொன்னோம். பூஜ்யம், பூஜ்யம் என்று போட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, கடைசியில் உங்களுக்கு மிஞ்சப்போவது பூஜ்யம்தான் என்று சொல்லிவிட்டு, இப்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அதிலும் ஆ.ராசாதான் வெல்வார். ஏன்? உண்மை நம் பக்கம் இருக்கிறது. பொய் என்பது ஒப்பனை. அது ஒரு நாள் கலைந்தே தீரும்" என்று கூறியதும் மக்கள் உணர்ந்து கைதட்டினர்.

தமிழ்நாட்டில் கோட்டைவிட்ட பார்ப்பனர்கள்!

சமூக நீதி பாதுகாப்பு குறித்து பேசும்போது, எது திராவிட மாடல்? எது குஜராத் மாடல்? என்பதை சுருக்கமாக கூறினார். அதாவது, தமிழ்நாட்டில் பேருந்தில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் கட்டணம் இலவசம்! இது திராவிட மாடல்! 10% இட ஒதுக்கீடு உயர் ஜாதி ஏழைகளுக்கு? எல்லா ஏழைகளுக்கும் அல்ல? இதுதான் குஜராத் மாடல் என்று மக்களுக்கு எளிமையாக புரிய வைத்தார். தமிழ்நாட்டில் நீதிக் கட்சி காலத்திலிருந்து இடஒதுக்கீடு வரலாற்றை சுட்டிக்காட்டிப் பேசினார். குறிப்பாக, 3% இருக்கும் பார்ப்பனர்களுக்கு 16% இட ஒதுக்கீடு இருந்ததையும், 100% எங்களுக்கே வேண்டும் என்பதுபோல அவர்கள் நீதிமன்றம் சென்றதையும், தந்தை பெரியார் போராடி தற்போது பார்ப்பனரல்லாதாருக்கு 69% தமிழ்நாட்டில் இருப்பதையும் கோடிட்டுக் காட்டி, “தாயும், பிள்ளையும் ஒன்றானாலும் வாயும், வயிறும் வேறு வேறுதான்?” என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, “இதுதானே மாநில உரிமை? கேட்டால் தவறா? என்ற கேள்விகளை முன்வைத்தார்.

மூன்று பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி!

ஆகவே அடுத்து, சேது சமுத்திரம் பற்றி பேசினார். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சர். ஏ.ராமசாமி (முதலியார்) தொடங்கி, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடிய அறிஞர் அண்ணா, யு.பி.ஏ. கூட்டணியில் இடம்பெற்று தமிழ்நாட்டு இளைஞர்களின் இன்னல் தீர்க்க கப்பல் போக்குவரத்து துறையையே கேட்டுப் பெற்று, பொறியாளர் டி.ஆர்.பாலு மூலமாக சேது கால்வாய் பணிகளை முடுக்கி விட்ட முத்தமிழறிஞர் கலைஞர் வரை சுருக்கமாக எடுத்துரைத்தார். 2008 ஆம் ஆண்டு தமிழன் கால்வாய் என்று சுட்டப்பெறும் சேது கால்வாய்ப் பணிகள் முடிந்து கப்பல் வெள்ளோட்டம் விடப்படவிருக்கும் வேளையில், 2009 இல் வந்த பொதுத் தேர்தலில், தி.மு.க.விற்கு பெருமை வந்துவிடுமே; கலைஞருக்கு அந்த பெருமை வந்து சேர்ந்துவிடுமே; காங்கிரஸின் பெயர் வரலாற்றில் நிலைபெற்றுவிடுமே; இதனால் மக்கள் அவர்களுக்கு ஓட்டளித்து விடுவார்களே என்ற வெறும் அரசியல் காரணங் களுக்காக ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி, சோ.ராமசாமி ஆகிய மூன்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியதையும் எடுத்துரைத் தார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் லட்சக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்குமே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன் றத்தில் பி.ஜே.பி. உறுப்பினர், ராமன் பாலம் குறித்து கேள்வி எழுப்பிய தையும், அதற்கு துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், “ராமன் பாலம் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை” என்று சொல்லி விட்டதையும் சொல்லி அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் வேக வேகமாக நடந்ததையும் சொல்லி, மூடநம்பிக்கை எப்போதும் வெற்றி பெறாது; உண்மைதான் வெற்றி பெறும் என்பதையும் சேர்த்து சொன்னார்.

அழகிரியின் பிறந்த நாளும்! சமத்துவபுரங்களும்!

தொடர்ந்து கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றிருந்த நம்மை ஜாதிகளாக பிரித்துவிட்டதையும், அதன் தொடர்ச்சியாக இந்தக் காலத்திலும் நமது சகோதரர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்துவிட்டார்களே, இது காட்டுமிராண்டித்தனம் அல்லாவா? என்றும் காதலர் தினத்திற்குப் பதிலாக, பசுவை அரவணைக்கும் தினமாக ஒன்றிய அரசின் ஒரு துறையே அறிவிப்பு வெளியிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இது என்ன பிற்போக்குத்தனம்? என்றும் ஆவேசமாக கூறிவிட்டு, ”அழகிரி பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு சமத்துவபுரமும் சென்று அனைத்து ஜாதி மக்களையும் ஒன்றாக கண்டு அளாவளாவி சமத்துவத்தை வளர்த்தெடுப்போம்” என்று பசுவை அரவணைப்பதற்கு எதிர்வினையாக இது நடக்கட்டும் என்றார். இறுதியாக, ஆகவே இதுபோன்ற மூடநம்பிக்கைகளை புறந்தள்ளி  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தென்கோடியில் இருக்கும் இளைஞர்கள் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பயன்படக்கூடியது இத்திட்டம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, வி.சி.க. விவசாய அணி செயலாளர் வீர செங்கோலன், சி.பி.அய்.மாவட்ட  செயலாளர் ஜெயராமன், ப.ச.கட்சி மாநில செயலாளர் காமராசு, ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் வரதராஜன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன், மண்டல தலைவர் பொறியாளர் கோவிந்தராசு, மண்டல கழக செயலாளர் மணிவண்ணன், மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், வழக்குரைஞர் என்.ஆர்.இராஜேந்திரன்,ம.ம.க. மாவட்ட தலைவர் குதரத்துல்லா, ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் இராஜ்குமார், நகர் மன்ற துணைத்தலைவர் ஹரி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.  

சிறீரங்கம் 

பெரம்பலூரில் பேசிவிட்டு திருவரங்கம் வந்து சேர்ந்தார் தமிழர் தலைவர். சிறீரங்கம் மீன் சந்தை தேவி தெருவில் நடைபெற்ற திராவிட மாடல் பரப்புரை விளக்க பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். திருவரங்கம் நகர் தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மாநில திராவிட தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் அரிகரன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எது திராவிட மாடல் ஆட்சி?

அதிரடி க. அன்பழகன் பேசி முடித்ததும் தமிழர் தலைவர் பேசினார். மக்கள் கொட்டும் பனியில் காத்துக்கிடந்தனர். பேசும் போது இதைச் சுட்டிக் காட்ட ஒருபோதும் அவர் தவறியதில்லை. திருவரங்கம் என்பதால் பெரியார் சிலை குறித்து அனிச்சையாக சில கருத்துகளை சொன்னார். குறிப்பாக இங்கே  அமைக்கப்பட்டிருக்கின்ற பெரியார் சிலையை அகற்றுவதற்காக அவாள்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தோற்றதையும், தங்களை தவறாக புரிந்து கொண்டு இருப்பவர்கள் மீது கோபம் வருவதில்லை அனுதாபம் தான் வருகிறது என்று அதிகம் பேசாமல் சுருக்கமாக முடித்துக்கொண்டார். பெரியாரை விட்ட இடத்திலிருந்து தொட்டு, “சமூகநீதியை கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, வடநாட்டவர் பெற்றுக்கொள்வதற்கும் நாம் தான் காரணம்” என்று இந்திய சமூக வரலாற்றின் ஒரு முக்கியமான ஆய்வுக்கான குறிப்பை போகிற போக்கில் எடுத்து வைத்தார். தொடர்ந்து ஆளுநர் உட்பட பலரும் சனாதனம் பற்றி பேசிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, “சனாதனம் என்பது வேறொன்றும் இல்லை. வர்ணாஸ்மம்தான்; பாராமை, தீண்டாமை; நெருங்காமை எனும் வர்ண ஜாதி அடுக்குமுறைதான் என்பதை பளிச்சென்று புரியவைத்தார். மேலும் அவர், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு நிறைவேற 10 பிரதமர்கள் வந்தும் முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கேட்காமலேயே பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தி.மு.க. ஆட்சி அளித்துள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டு, இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

அரைவேக்காட்டு அண்ணாமலை!

மாநில உரிமை தொடர்பான உரையில் தவிர்க்க முடியாமல் ஆளுநர் வந்துவிட, இன்றைக்கு (9-2-2023) நாளேடுகளில் வந்த செய்தி ஒன்றை வாசித்துக் காட்டினார். அதாவது, நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி, ’20 மசோதாக்களை ஆளுநர் கையெழுத்து போடாமல் வைத்திருப்பதாக’ குற்றம் சாட்டிய செய்தியைப் படித்துக்காட்டி, “ஆளுநரைக் கேள்வி கேட்டால் ஆளுநர் தானே பதில் சொல்ல வேண்டும்? அரைவேக்காடு அண்ணாமலைக்கு என்ன வேலை?” என்று காட்டமாக கேட்டுவிட்டு, ”அண்ணாமலை பத்திரிகையாளர் களிடம் 20 மசோதா அல்ல, 15 என்று சொல்கிறார். இது எப்படி இவருக்குத் தெரிந்தது? ஆளுநர் மாளிகையின் ரகசியம் அண்ணாமலைக்கு தெரிந்தது எப்படி? ஆளுநருக்கும், அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு?” இதற்காகவே ஏன் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். சொல்ல வந்தது மக்களுக்கு புரிந்து விட்டதை அவர்களது கைதட்டல்களே எண்பித்தன. மேலும் அவர் சேது சமுத்திரத் திட்டத்தை பற்றி பேசும் போது, “எதற்கும் மதப்பார்வைதானா? என்று கேள்வி கேட்டார். காதலர் தினத்தைப் பற்றி இங்கும் தொட்டுக் காட்டினார். கூடுதலாக விவேகானந்தர் கோமாதா பாதுகாப்பு நிதி திரட்ட சென்ற சனாதனிகளிடம் பேசியதை, கையடக்க கணினி ’டேப்’ உதவியுடன், படித்துக் காட்டினார். அதில் "பட்டினியில் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்யாத உங்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இல்லை" என்பதை கோபத்துடன் சொன்னதைச் சொல்லி விவேகானந்தரின் இன்னொரு முகத்தை அறிமுகம் செய்தார். மேடையில் இருப்பவர்களுக்கே இந்தத் தகவல் புதிது என்பதை அவர்களது முக வெளிப்பாடுகளும், சொல்லி முடித்ததும் அவர்கள் எழுப்பிய கையொலிகளுமே மெய்ப்பித்தன. 

ஆகவே, மூடநம்பிக்கைகளை முறியடித்து, படித்த முடித்த எல்லாருக்கும் வேலை கிடைக்கவேண்டும். அதற்கு சேது சமுத்திரத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதில் ஜாதி இல்லை; மதம் இல்லை; அரசியல் இல்லை. வாழ்க பெரியார் வாழ்க தமிழ்நாடு என்று கூறி முடித்துக்கொண்டார். இறுதியில் இந்த பரப்புரை பெரும் பயணத்திற்கென தயாரிக்கப்பட்ட பாடலை எழுதிய அதிரடி க.அன்பழகனுக்கு ஆசிரியர் ஆடையணிவித்து மரியாதை செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் சோமி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் ராஜா, இ.யூ.மு.லீக் மாணவரணி செயலாளர் அன்சர் அலி, இ.யூ.மு.லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மகபூப் சாகிப், மருதம் மக்கள் கட்சி பொதுச்செயலாளர் செல்வம் , தி.மு.க.பகுதிக்கழக செயலாளர் செவந்த லிங்கம், இ.யூ.மு.லீக் பொறுப்பாளர் ஹபீப் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகர் செயலாளர் முருகன் நன்றி கூறினார். பயணக்குழு மறுபடியும் திருச்சி பெரியார் மாளிகைக்குத் திரும்பியது.

தமிழர் தலைவரின் மலைக்க வைக்கும் உழைப்பு!

நிகழ்ச்சி முடிந்தபிறகும் ஆசிரியருக்கு ஓய்வில்லை. இருபால் தோழர்கள் அவருடன் ஒளிப்படம் எடுக்கவும், அவரை அருகில் சென்று பார்த்து இரண்டொரு வார்த்தைகள் பேசிவிடவும் முண்டியடித்துக்கொண்டு மேடையேற முயலுவர். அத்தனைக்கும் அவர் ஈடு கொடுத்துக் கொண்டிருப்பார் என்பது வேறு செய்தி!. சில இடங்களில் தான் மேடை மேலே மூடப்பட்டிருந்தது. பல இடங்களில் திறந்தவெளி மேடைதான். மக்களைப் போலவே ஆசிரியரும் பனியில் உட்கார்ந்துதான் பேசு கிறார். அதானாலேயே அவரது குரல் பாதிக்கப்படுகிறது. ஆனால் அவர் அதையே, ”உங்களுக்கு பனி! எங்களுக்கு இதே பணி!”  என்று தமிழில் விளையாடி நகைச் சுவையாக்குவதும், எத்தனை பேர் மேடையேறி பயனாடையணிவிக்க வந்தாலும் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் எழுந்து, எழுந்து அதை ஏற்பதும், புத்தகங்கள் கொடுத்தால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் அதைப் புரட்டிப் பார்த்துவிட்டு பின்னால் கொடுப்பதும், இதையும் தாண்டிய பயணம், குறைந்தது ஒரு கூட்டத்தில் 50 நிமிடங்களுக்கு பேசுவது அதுவும் 90 வயதில்! இதை அவர் ஏற்பதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கிறது. தோழர்களை காணும் போதெல்லாம் கை கூப்பிய வணக்கம்! குழந்தையைப் போன்ற புன்னகை! குழந்தைகளைக் கண்டால் கூடுதல் அக்கறையுடன் அவர்களிடம் கல்வி தொடர்பாக நிகழ்த்தும் உற்சாக உரையாடல்! இவையெல்லாம் மேடையில்தான். சரி தங்கியிருக்கும் இடத்திலாவது ஓய்வெடுக்கிறாரா? என்றால், அதுவும் இல்லை தோழர்களே! காலையிலிருந்து கூட்டத்திற்கு புறப்படும் வரையிலுமாக தங்கியிருக்கும் இடத்தில், அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், தனிநபர்களின் ஓயாத சந்திப்புகள்... ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. அடேயப்பா! மலைக்க வைக்கும் உழைப்பு! ஆனால், இத்தனைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர் சொல்வதை அல்ல, எண்ணி யதையே செய்து முடிக்கும் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னா ரெசு பிராட்லா, தமிழ்செல்வன், அருள்மணி, ராஜராஜன், மகேஷ் ஆகிய வாகன ஓட்டுநர்கள், ஆசிரியருக்கு பாதுகாவல் பணி செய்யும் கருஞ்சட்டைப் படை..இந்த ரசாயன மாற்றம் எப்படி நிகழ்கிறது? அதையும் ஆசிரியரே சொல்லியிருக்கிறார்! என்ன அது? “இது ரத்த உறவல்ல, கொள்கை உறவு! பிறகு? இப்படை தோற்கின் எப்படை வெல்லும்! 



No comments:

Post a Comment