அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் : நிதிஷ்குமார் யோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் : நிதிஷ்குமார் யோசனை

 

பாட்னா, பிப்.19 நான் சொல்வதைக் கேட்டு எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால், அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்டு (மார்சிஸ்ட் லெனினிஸ்டு) ஏற்பாடு செய்த விழா ஒன்றில் மாநில முதல்-அமைச்சரும் அய்க்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித், துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஷ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்டு (மார்சிஸ்ட் லெனினிஸ்டு) பொதுச்செயலாளர் திபாங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பீகார் முதல் அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் எனது காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்பும் விடயம் ஒன்று உண்டு. அது, (ராகுல் காந்தி மேற்கொண்ட) இந்திய ஒற்றுமை யாத்திரை நல்லதொரு வெற்றி பெற்றது. அவர்கள், அத்துடன் நிறுத்திவிடக் கூடாது. பழைய பெருமைகளில் காங்கிரஸ் குளிர்காய்ந்து கொண்டு இருந்து விடக்கூடாது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பெற்ற வேகத்தை பயன்படுத்த வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க வேண்டும்.

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு நாங்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தனது பாதச்சுவடுகளை இந்த மாநிலத்தில் விரிவுபடுத்தும் முயற்சிக்கு திரை விழுந்துவிட்டது. நாம் இதே போன்று தேசிய அளவில் ஒன்றை சாதித்தாக வேண்டும். எனக்கென எந்தவிதமான எதிர்கால ஆசைகளும் இல்லை. எனது அறிவுரை கேட்கப்பட்டால், அது நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மேலாதிக்க வெப்பத்தைச் சந்தித்து வருகிற கட்சிகளுக்கும் நல்லது. எதிர்க் கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் கட்சி உருவாக்கி, அறிவிக்க வேண்டும். நான் சொல்வதை காங்கிரஸ் கட்சி கேட்டு நடந்தால், தற்போது மக்களவையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க.வை அடுத்த தேர்தலில் 100 இடங்களுக்குள் சுருட்டி விட முடியும்.

இவர்களிடம் இருந்து (பா.ஜ.க.) நாட்டை விடுவிப்பதற்கு மக்களவைத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். தேசப்பிரிவினையால் குருதி தோய்ந்த மரபு இருந்தாலும் கூட இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ்ந்த நாடு இது. தற்போது மதவாத பதற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நாட்டின் சுதந்திரத்தில் பங்களிப்பு இல்லாதவர்கள் இப்போது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்குவதற்கு புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment