சமூக நீதியும், பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் தரவரிசையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

சமூக நீதியும், பன்னாட்டு பல்கலைக்கழகங்களின் தரவரிசையும்

முனைவர் க. திருவாசகம் துணைவேந்தர்,   அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகம், சென்னை 

மேனாள் துணைவேந்தர்,  சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 

பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்  

vc@ametuniv.ac.in 

9566112211

கடந்த ஒரு மாதமாக உலகத்திலுள்ள உயர் கல்விக்கான பல்கலைக்கழகங்களின் தர வரிசையினை Q3 World University Ranking, Times Higher Education World University Ranking (THE), Academic Ranking of World Universities (ARWU),  மேலும் பிற 12க்கும் மேற்பட்ட உலகத் தரவரிசை   அமைப் புகள் வெளியிட்டு வருகின்றன. 

முதல்தர வரிசையில் Hardvard University (USA), Massachusetts Institute of Technology (MIT, USA), Stanford University (USA), University of California, Berkeley (USA), University of Oxford (UK), University of Washington, Seattle (USA), Columbia University (USA), University of Cambridge (UK), California Institute of Technology (USA), Johns Hopkins University (USA) ஆகிய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏறத்தாழ கடந்த பல ஆண்டுகளாக இதே பல்கலைக்கழகங்கள்தான் தொடர்ந்து முதல் பத்து இடங்களைப் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 1100 பல்கலைக்கழகங்களில் ஒரு பல் கலைக்கழகம் கூட முதல் நூறு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வரவில்லையே என்ற ஆதங்கம் பல்வேறு தரப்பினரிடையே உள்ளது.

குறிப்பாக பிரதம அமைச்சர் தொடங்கி, கல்வி அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியா ளர்கள் மற்றும் பொதுமக்கள், பல்கலைக்கழகங்களின் தரம் பற்றியும் இயலாமை பற்றியும் விமர்சனம் செய்வதோடு குற்றம் சாட்டுகின்றனர். 

இருப்பினும், அய்அய்டி மற்றும் ஒரு சில மத்திய பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட சில தரவுகளில் உலகத்தர வரிசையில் சமீப ஆண்டுகளில் இடம் பெற்றிருப்பது திருப்தி அளிக்கின்றது. 

Q3 World University Ranking 2023இல், ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகிய இந்திய பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசையில் இடம் பெற்றுள்ளன. 

Indian Institute of Science, Bangalore  முதல் 300 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் THE (Times Higher Education) World University Ranking™ இந்தியாவின் 75 பல்கலைக்கழகங்கள் முதல் 300 பல் கலைக்கழகங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள் ளன. இந்திய பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரத்தில் முன்னேற்றப்படவேண்டும், தரவரிசையில் முதல் நூறு பல்கலைக்கழகங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் இடம் பெற அனைத்து வகைகளிலும் நட வடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம்.

அதே வேளையில் பன்னாட்டு தர வரிசையின் அடிப்படையில்தான் பல் கலைக் கழகங்களின் தரத்தினை அடை யாளம் காண வேண்டுமா? அப்படியென் றால்,  தர வரிசையில் முன்நிற்கின்ற அமெ ரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளிலுள்ள பல் கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக் கழகங்களும் ஒரே நோக்கங்கள் கொண் டவையா?  அந்த நாடுகளின் கல்விக்கென, ஆராய்ச்சிக்கென ஒதுக்குகின்ற நிதி எவ்வளவு?   இந்தியாவைப் போல்,  அந்த நாடுகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு முறைகள் இருக்கின்றனவா?

நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், இன்று வரை, அரசால் அமைக்கப்பட்ட கல்வி மேம்பாட்டிற்கான குழுக்களும், உரு வாக்கப்பட்ட சட்டங்களும், சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துத் தரப்பினருக்கும் தரமிக்க கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. 

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையிலான பல்கலைக்கழக கல்விக்கமிசன் 1948, தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு 1965, தேசிய கல்விக் கொள்கை 1986, 1992, 2020, டாக்டர் சாம் பிட்ரோடா தலைமையிலான தேசிய அறிவுக் கமிசன் 2005, யஷ்பால் கமிசன் 2009 ஆகியனவற்றின் பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு ஒன்றிய கல்வி அமைச்சகமும், பல்கலைக் கழக மான்யக்குழுவும் இந்திய உயர்கல்வியின் நோக்கமே வேலைவாய்ப்பைத் தரும் கல்வி (Employable Education) அளித்தலே என்று வலியுறுத்தி யுள்ளன. அதே வேளையில், தரவரிசையில் முன்னி ருக்கின்ற மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்கள், தங்களின் நோக்கம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகள் பற்றிய அறிவை மேம்படச் செய்து உலகத்தில் மிகச் சிறந்த மனிதனாக உரு வாக்குவதாக இருக்கின்றன.

பன்னாட்டுப் பல்கலைக் 

கழகங்களும் சமூக நீதியும்

இந்தியாவின் கல்விக்கூடங்களான பள்ளிகள் முதல், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கிய கல்வி நிறுவனங்கள் வரை மாணவர் சேர்க் கையில் தாழ்த்தப்பட்டவர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (OBC), பிற பிற்படுத்தப்பட்டோர் (ளிஙிசி) என்று இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடை பெறுகின்றது மாணவர் சேர்க்கை. ஏதாவது ஒரு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், ஒதுக்கப்பட்ட அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லையென்றால்கூட காத்திருந்து, சேர்க்கை அனுமதிக்கப்படுகின்றது.

யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால், காத்திருப்பில் வைத்து, பின்வரும் காலங்கள்  (backlog vacancy) என்று அந்தப் பதவிகள் நிரப்பப்படுகின்றன.  இந்த ஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று பல நூறு வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பதிவு செய்யப்படுகின்றன. 

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்துப் படிப்பிலும் மாணவர் சேர்க்கை, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங் களில்,  இட ஒதுக்கீடு முறையில் தான்   அளிக்கப்படுகின்றன.  இதனைப் போலவே ஆசிரி யர்கள் நியமனத்திலும், அவர்களின் திறமை, கல்வித் தகுதி, அறிவு, ஆராய்ச்சி, ஈடுபாடு ஆகியவைகளையும் தாண்டி, இடஒதுக்கீடு அடிப்படையில்தான் ஆசிரி யர்கள் தேர்வு செய்து பணி செய்து வருகின்றனர். ஆதலால் இப்படியான மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு, படிக்க அனுமதியும் பணியும் அளிப்பது சமூக நீதிக்கு அளிக்கப்படுகின்ற அங்கீகாரம் மற்றும் ஆதரவு. இதனால்தான் பட்டி தொட்டிகளில் வாழ் வோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறு பான்மை சமூகத்தினர், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கல்வியும் பணியும் பெற்று, பொரு ளாதார மேம்பாடும் சமூக தகுதியும் பெற்று இந்தி யாவில் பல கோடி மக்கள் மேலோங்கி வருவதோடு, நாட்டின் உயர்விற்கும் பெரும் பங்கேற் பாளர்களாக வாழ்கின்றனர்.

உதாரணமாக உலகமே போற்றுகின்ற தமிழ்நாட் டினர் திருவாளர்கள்  ஏ.பி.ஜே. அப்துல்கலாம், சிவ் நாடார் போன்றோர் சமூக நீதி தந்த பயனால் உலகை ஆண்டவர்கள் மற்றும் ஆள்கிறவர்கள்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், மதிப் பெண்கள் மற்றும் ஆங்கில அறிவுத்தேர்வுச் சான் றிதழ்களின் (TOEFL, IELTS, GRE) அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள் கின்றனர். 

உலக தரத்தில் முதல் நூறு பல்கலைக்கழகங்களில் உலகளவில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் ஆராய்ச் சியாளர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்படு கின்றனர். அப்படி பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கும் பணி நிரந்தரம் அல்ல. ஒவ்வொரு ஆண் டும் மாணவர்கள் அளிக்கின்ற பின்னூட்ட கருத்துக் களின் அடிப்படையிலேயே அடுத்த ஆண்டு பணி தொடர அனுமதிக்கப்படுகின்றனர். அதே வேளை யில், இந்தியாவில் இரண்டு ஆண்டுக்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆசிரியர் எவ்வளவுதான் திறமை இல்லாதவர்களாக இருந்தாலும் பணியினை விட்டு வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத் தக்கது. 

உலகத்தர வரிசையில் பல்கலைக் கழகங்களுக்கு Q3 World University Ranking அமைப்புகள் கீழே தரப்பட்டவாறு பல்வேறு காரணிகளின் அடிப் படை யில் மதிப்பெண்கள் கணக்கிட்டு தேர்வு செய் கின்றன. பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்த மதிப் பெண்களை Academic Reputation  (கல்விசார் மதிப்பு) 40%, Employee Reputation  (ஊழியர்சார் மதிப்பு) 10%, Faculty Student Ratio (ஆசிரியர் மாணவர் விகிதம்) 20%, Citation per Faculty 20%, International Faculty Ratio (பன்னாட்டு ஆசிரியர் விகிதம்) / International Students Ratio  (பன்னாட்டு மாணவர் விகிதம்) 10% என்ற அளவில் கணக்கிடுகின் றனர். தரவரிசைகளை நிர்ணயம் செய்யும்போது, உட் படுத்தப்படுகின்ற உலகளவில் பல்கலைக்கழகங்களின் ஒப்பீட்டுக் காரணிகளின் (Comparative Variable) ஒன்றாக இருப்பது அவசியம். முதல் தரமான பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம், நூறாவது இடத்தை தாண்டியுள்ள இந்தியாவின் பல்கலைக் கழகங்களும், அடிப்படை காரணிகளில் (Variable) வேறுபட்டி ருக்கின்றன.

வேறுபட்ட காரணிகளைக் கொண்டுள்ள இரு வேறு பல்கலைக்கழகங்களை தர வரிசைப்படுத்துவது இயலாது ;  கூடாது. சமூக நீதிக்கு மதிப்பளித்து, இட ஒதுக்கீடுகளை அமல்படுத்தி,  கடைக்கோடியிலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவனுக்கு கல்வியில் சம வாய்ப்புக் கொடுத்துள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற பிற இந்திய பல்கலைக்கழகங்களும் உலகத் தரவரிசையில் முன் நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் ஏற்புடையது?

வேறுபாடும் மாறுபாடும்

உலகத்தரத்திலான உயர்கல்வி மேம்பாட்டிற்கு மிகச்சிறந்த உள்கட்டமைப்புகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மென்பொருட்கள், தேவையான ஆசிரி யர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நியமனம், குறிப்பாக பிறநாடுகளிலிருந்து ஆசிரியர்கள் நியமனம், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை, பட்ட தாரிகளை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனங் களின் reputationஆகியவற்றை உறுதி செய்வது அவசியமாகிறது. இவை அனைத்திற்கும் நிதி ஆதாரம் அளிக்க வேண்டியது அரசின் கடமை. 1966இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிசன் Gross National Product (GNP) இல் (மொத்த தேசிய உற் பத்தியில்) குறைந்தது 6% நிதியாவது கல்வி மேம் பாட்டுக்கு ஒதுக்கவேண்டும் என்று பரிந்துரை செய் துள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றும், இதுநாள்வரை குறைந்தபட்சம் 4% நிதிகூட அளிக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக உயர்கல்வி யின் ஆராய்ச்சிக்காக 2% கூட ஒதுக்கப்பட வில்லை. அதே வேளையில் தரவரிசையில் முதல் நூறு பல்கலைக்கழகங்கள் உள்ள நாடுகளான அமெரிக்கா, அய்ரோப்பா நாடுகள் சராசரியாக 6% ஒதுக்கி வருகின்றன. ஆராய்ச்சிக்கென்று 4% ஒதுக்கி வருகின்றன.

இந்தியாவின் பெரும்பான்மை அரசுப் பல்கலைக் கழகங்கள், போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க முடியாமல் நிதிச்சுமையில் இருக்கின்றன. டிசம்பர் 2022 ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்  புள்ளிவிபரத்தின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 (டில்லி பல்கலைக் கழகத்தில் மட்டுமே 900) மற்றும் மாநில பல்கலைக் கழகங்களில் 69,00,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய கட்ட டங்கள், செயல் முறைக்கூடங்கள், மென் பொருட்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. 

இப்படியான அத்தியாவசியமான நிதி ஆதாரமும் மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லாமல், எவ்வாறு வெளிநாட்டிலிருந்து ஆசிரியர்களையும் மாணவர் களையும் இந்திய பல்கலைக்கழகங்கள் வரவழைக்க முடியும். நாங்கள் நிதியும் தரமாட்டோம். ஆனால், நீங்கள் உலகத்தரவரிசையில் முன்னே வரவேண்டும் என்று, தம் குறையை பிறர் குறையாகச் சொல்வது எந்த வகையில் ஏற்புடையது?

என்ன செய்யவேண்டும்?

· தற்போது ஆட்சியாளர்களும், அறிஞர் களும், இந்திய கல்வி நிறுவனங்கள் உலகத்தர வரிசையில் முதல் 200 இடங்களில் இல்லையே என்று வருத்தப்படுவதை நிறுத்த வேண்டும். சாதாரண மாணவர்களுக்கும் சாமானியர் களுக்கும் உயர்கல்வி கொடுத்து, அவர்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மேம்பாடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைய வேண்டும்.

· அதே வேளையில், இட ஒதுக்கீட்டை மட்டும் காரணம் காட்டி, உலக அளவில், தர மதிப்பீடு பெறுவ தற்கான முயற்சி மற்றும் செயல்பாடுகளை குறைத்து விடாமல், நாங்கள் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் அளித்த பின்பும்கூட பிற உலக பல்கலைக்கழகங்களோடு போட்டி போட்டு தரவரிசையில் முன்னேறிவிடுவோம் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

· தேசிய கல்விக் கொள்கை 2020இன் படி 100 வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உருவாக அரசு அனுமதி அளிக்கவுள்ளது. அப்படி யான பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயம் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

· தர வரிசையில் முன் நிற்கின்ற பல்கலைக் கழகங்கள் தங்களது தாய்மொழிக் கல்வியின் மூலமே படிப்பையும் ஆராய்ச்சியினையும் மேற்கொண்டு வருகின்றனர். அதனைப் போல இந்திய தாய் மொழி களில் அனைத்து உயர்கல்விகளும் அளிக்கப்பட வேண்டும்.

· ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, கோத்தாரி கமிசன் மற்றும் தேசிய கல்விக்கொள்கை 2020இல் பரிந்துரைத் துள்ள 6% நிதி ஒதுக்கீட்டை அளிக்கவேண்டும்.

· வேலை நிரந்தரம் என்பதற்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பட்டம் பெறும் கல்வியும் மற்றும் வேலை தரும் கல்வியும் அளிப்பதோடு உலகளாவிய அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கான போட்டிகளில் மேலோங்கி விளங்க மாணவர்களை உருவாக்க வேண்டியது அவசியம்.


No comments:

Post a Comment